கோவை ஏர்போர்ட்டை விட்டு வண்டி வெளியே வந்து அரைமணிநேரம் ஆகிவிட்டது.
இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை லலிதா.
சரவணம்பட்டி தாண்டும்போது ரவிதான் கேட்டான், ஃப்ளைட்ல ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா?
இப்போவாவது தோணுச்சே கேட்கணும்ன்னு! ஆறுமணி ஃப்ளைட் பிடிச்சு வந்திருக்கேன். பசிக்குதான்னு ஒருவார்த்தை கேட்காம ஏதோ ட்ரைவர் மாதிரி ஓட்டிக்கிக்கிட்டுப்போறே.
KTC பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட். ஒன்னும் பேசாமல் மெளனமாக வண்டியை நிறுத்தினான் ரவி.
எனக்கு ஒருசெட் இட்லி வடை, காஃபி, உனக்கு?
எனக்கு வெறும் காஃபி போதும் - வித்தவுட் சுகர்!
ஓ! குடும்பஸ்தன் இல்ல, ஒய்ஃப் கையால சாப்பிட்டு வந்திருப்பே!
வயசு ஆக ஆக உன்னோட இன்செக்யூரிட்டி உன்னை எவ்வளவு சினிக்கலா மாத்தியிருக்குன்னு புரியுதா? இந்தக் கோபம், வெறுப்பு எல்லாம் யார்மேல? இன்னைக்கு கொஞ்சம் வலிச்சாலும் பரவாயில்லை. உண்மைகளை பேசிடலாமா? ஏன்னா இன்னொரு சந்திப்பு நடக்காமலும் போகலாம் இன்றைய சூழலில்!
நானும் அதுக்குத்தான் வந்தேன் ரவி. திஸ் மே பி அவர் லாஸ்ட் மீட் அலைவ்.
மறுபடியும்... சரி, சாப்பிட்டு முடி. ஆனைகட்டி தாண்டி ஒரு சின்ன ஓடைக்கரை இருக்கு. கொஞ்சம் இண்டீரியர்! அங்கே போய் நம்ம சண்டையை ஆரம்பிக்கலாம்! அதுவரைக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. அமைதியா ஜன்னல்வழி வேடிக்கை பார்த்துட்டு வா!
காரை முடிந்தவரை ஓரமாய் நிறுத்தி, நடந்துபோய் ஓடைக்கரையில் உட்காரும்வரை வேறு பேச்சில்லை!
வாவ். என்ன ஒரு ரம்மியமான இடம்! எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சே ரவி?
நம்மை சுற்றி நிறைய இப்படி சர்ப்ரைஸ் இருந்துட்டுத்தான் இருக்கு . நாமதான் கண்டுக்காம போறோம்.
யப்பா சாமி இன்னைக்கு உன்னோட ஃபிலாசஃபி மூட்டையெல்லாம் ஓரம் கட்டி வெச்சுட்டு நேரிடையான பேசு ப்ளீஸ்!
பேசறேன்! பேசத்தானே வந்தோம். நான் ஏன் திடீர் திடீர்ன்னு வண்டியை
எடுத்துட்டு காடு மலைன்னு சுத்தறேன்? உன்னைப்பத்தி, எனக்கே தெரியாம உனக்கு நான்
செய்த அந்த கொடுமையைப்பத்தி, நினைக்கும்போதெல்லாம் என்னால் மனுஷங்க மத்தில இருக்க முடியறதில்லை!
மனம் நிலைப்படும்வரை அலையும்போது கண்ல படறதுதான் இந்தமாதிரி இடங்கள்!
ஓகே. சொல்லு, நீ ஏதோ சொல்லணும்ன்னுதானே வந்தே, பேசு. லெட் மீ ஜஸ்ட் லிசன்!
ரவி, எனக்கு போதும்ன்னு தோன ஆரம்பிச்சுடுச்சு. ஓடிஓடி அலுத்துப்போச்சு. கைதட்டல், கைகுலுக்கல் எல்லாம் முடிஞ்சு வந்து அக்கடான்னு படுக்கும்போது, இந்த வெறுமை பயமுறுத்துது! இத்தனை வருஷம் எதுக்குன்னு தெரியாமலே ஓடிக்கிட்டிருந்திருக்கிறேன்! ஐம் ஃபீலிங் ஜஸ்ட் டயர்ட் ஆஃப் எவ்ரிதிங்.
சொல்லு, நான் குறுக்கே பேசல!
ரவி, என்னோட சொத்தையெல்லாம் உன் பிள்ளைகளுக்கு எழுதிவெச்சுட்டு ஏதாவது ஹோமில் போய் சேர்ந்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அதை சொல்லிட்டுப்போலாம்ன்னுதான் வந்தேன்!
க்ரேட்! இத்தனை வருஷத்தில், இது ஒன்னையாவது சொல்லிட்டு செய்யணும்ன்னு தோணுச்சே!
ஆனா, இது உன் முட்டாள்தனத்தில் எல்லாம் சிகரம்!
இப்போ ஏன் நூற்றுக்கிழவி மாதிரி பேசிட்டிருக்கே? உனக்கு தொழில்ரீதியா இருக்கும் நல்ல பெயர் எனக்குத் தெரியும். இன்னும் உன்னால குறைஞ்சது பத்துவருசம் ஆக்டிவா இருக்கமுடியும். அண்ட் கீப்பிங் ஆக்குபைட் இஸ் குட் ஃபார் யுவர் மெண்டல் ஹெல்த்.
இல்லை ரவி. நான் முடிவு பண்ணிட்டேன்!
நல்லது- எங்கே மாறிட்டயோன்னு பார்த்தேன்!
முடிவு பண்ணிட்டு அதை டெக்ளேர் பண்ண எதுக்கு மெனக்கெட்டு இவ்வளவுதூரம் வந்தே? ஒருதடவையாவது, யார்கிட்டயாவது பேசி, டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கணும்ன்னு தோணுதா உனக்கு?
ஓகே. இத்தனை வருசத்துக்கு அப்புறம் உன்னை மாத்திக்குவேன்னு நினைக்கறது பைத்தியக்காரத்தனம்!
அஸ் யூஸுவல் டூ வாட்எவர் யூ வாண்ட். பட் நெவர் டூ தட் ஸ்டுப்பிடிடி ஆஃப் ரைட்டிங் எ வில் ஆர் வாட்எவர்.
ஏன் ரவி,என் உழைப்பும் சொத்தும் உன் பிள்ளைகளுக்கு சேரக்கூடாதா?
நெவர் மை டியர்! இது அபத்தம்! அப்படி ஏதாவது நீ செய்தால், அதை உடனடியாக ஏதாவது ஆசிரமத்துக்கு எழுதிவைக்க நான் ஒரு நொடிகூட யோசிக்க மாட்டேன்! அந்த ரெட்டை செலவுக்கு, நீயே அதெல்லாம் நேரடியா ஏதாவது ஆசிரமத்துக்கு எழுதிவெச்சுடு!
ஏன், அவங்களுக்கு கொடுக்க எனக்கு உரிமை இல்லையா?
ஒரு முழு நிமிடம், அவளையே உறுத்துப்பார்த்த ரவி சொன்னான் - இல்லை, நிச்சயமா உனக்கு அந்த உரிமை இல்லை! நீ யார்ன்னு அவங்க கேட்டா என்ன சொல்ல? என் ஃப்ரண்ட் அப்படின்னா?
ஏன், அவங்க பெரியம்மான்னு சொல்லு!
ஒரு பொம்பளையா இருக்கறது எவ்வளவு அட்வான்டேஜ், இல்ல?
இதையே உனக்குக் கல்யாணம் ஆகி, நான்என்னை பெரியப்பான்னு சொல்லுன்னு சொல்லியிருந்தா எப்படி ரீயாக்ட் பண்ணிருப்பே?
ரவி, உளறாதே, என்ன இருந்தாலும் அவளுக்கு முன்னாடி உன் வாழ்க்கைல வந்தவ நான்!
ரைட்டு, திஸ் இஸ் எக்ஸ்சாட்லி ஐ வாண்டட் டு டாக். இப்போ நீயே ஆரம்பிச்சுட்டே, தேங்க்ஸ்.
முதல்ல, இந்தக் கம்பேரிசனே தப்பு. அவ என் பெண்டாட்டி. நீ என் ஃப்ரெண்ட். இந்த அடிப்படையை முதல்ல புரிஞ்சுக்கோ, நீ இன்னும் நூறு வருஷம் எஸ்டாபிளிஷ் பண்ண நினைச்சாலும், ஐ வாஸ் நாட் இன் லவ் வித் யூ தி வே யூ வாண்ட் டு போர்ட்ரைட்.
உன்னுடைய முட்டாள்தனத்தாலே, நாம் இழந்தது எத்தனைன்னு உனக்கு என்னைக்காவது புரிஞ்சுதா முட்டாளே?
உன்னோட இந்த அபத்தமான பிடிவாதத்தை தயவுசெஞ்சு க்ளோரிஃபை பண்ணாதே! எவ்வளவு புத்திசாலி நீ, ஆனால், அந்த அளவுக்கு முட்டாள் பிடிவாதம். ஒரே ஒருநாள், கொஞ்சம் நிதானமாக யோசிச்சிருந்தா இத்தனைபேர் வாழ்க்கையை சிக்கலாக்கியிருக்கமாட்டே.
அழாதே, அண்ட், டோண்ட் ட்ரை டு ஸ்டாப் மீ டாக்கிங்.
எவ்வளவு அழகான நட்பு நம்மோடது?
ஒரு கிராமத்து வளர்ப்பு, ஏறத்தாழ ஒரு புது உலகம் சென்னை எனக்கு. அப்போது, இறைவனோ, தற்செயலோ, என் வாழ்க்கையில் வந்த நல்ல தோழி நீயும், சுதாவும்! வாழ்க்கையின் அவ்வளவு ரசனையான பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவள் நீ!
ஆனால், அந்த வாழ்க்கையை பெரும் சுமையாய் சுமக்க வைத்ததும் நீங்க ரெண்டுபேரும்தான்!
ஸ்டாப் இட் ரவி, இதுல அவளை ஏன் இழுக்கறே?
இன்னைக்கு எல்லாமே பேசத்தான் போறேன் லல்லி! உன்னை, உன் பிடிவாதத்தை என்னால் என்றைக்காவது மன்னிக்க முடியும்.
ஆனால், சுதா?
நோ.
அவள் ஒருத்திக்குத்தான் உன்னிடம் பேச அத்தனை உரிமையும் வாய்ப்பும் இருந்தது. உன் முரட்டு முட்டாள்தனத்தை ரொமாண்டிசைஸ் பண்ணி வளர்த்துவிட்டது அவதான்! இத்தனை வருசத்துல ஒருமுறையாவது பளார்ன்னு ரெண்டு அறைவிட்டு உன்னை மாற்றி, ரியாலிட்டியை யோசிக்கவைத்திருக்க வேண்டாமா அவள்?
வயது உங்க ரெண்டுபேருக்குமே ஒரு முதிர்ச்சியையே தராதது கொடூரம்!
நிறுத்து ரவி, உன் பெண்டாட்டி மட்டும் என்ன செஞ்சா? அவ பிடிவாதம் ஜெயிச்சதால அது நியாயமா படுது உனக்கு!
முதல்ல, உன்னைப்பற்றி பேசலாம் லலி, அப்புறம் அவளுக்கு வருவோம்!
உன்னை நான் லவ் பண்ணறேன்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா?
கையைப்பிடித்துக்கொண்டு பேசுவதும், சின்ன அணைப்போடு வரவேற்பதும், விடை கொடுப்பதும் என் பழக்கம்! வார்த்தைகள் சொல்லாத நேசத்தை ஒரு தொடல் சொல்லும்ங்கறது என் அபிப்ராயம்! சந்தோஷமான தருணங்களில் நெற்றியில் முத்தம் கொடுப்பதும்!
அப்படிப் பார்த்தால், நம்ம இன்ஸ்டிட்யூட் லைப்ரரியனுக்குத்தான் நான் அதிகம் முத்தம் கொடுத்திருக்கிறேன் - நான் கேட்ட புத்தகமெல்லாம் தேடி எடுத்துக் கொடுத்ததுக்கு - அப்போ, அந்த ஆளையும் நான் லவ் பண்ணுனேன்னு அர்த்தமா?
அதனாலே அதை ஒரு காரணமா நீ சொல்லமாட்டேன்னு நம்பறேன்! ஏன்னா, என் எந்த அணைப்பிலும் காமம் இருந்ததில்லைன்னு நம்ம மொத்த சர்க்கிளுக்கும் தெரியும்!
ஓகே! பைக்கில் சுத்தியதும், சினிமா பீச் எல்லாம்ன்னு சொன்னா, அதே காரணம் சுதாவுக்கும் இருந்தது! இன்ஃபேக்ட் அவ கூட நான் தனியா சுத்தினது அதிகம்!
அல்லது, நான் ஏதும் சொல்லத் தயங்கிய ஆளா? தோன்றியதை, தோன்றியபடி ராவா சொல்ற பழக்கம் எனக்கு எப்போதுமே உண்டு தாயே! நான் முதல்முதலா ஐ லவ் யூ சொன்ன ரெஜினா, இன்னைக்கும் என் குடும்பத்துக்கு நல்ல ஃபிரெண்ட்.
ஆனா, என் நேசமான, நெருக்கமான தோழி நீ! இன்னைக்கு ஒரு திருடன் மாதிரி உன்னை சந்தித்துப் பேசும் நிலை! இதுக்கு யார் காரணம்? உனக்கு தோன்றியதை காலம் கடந்து சொல்லத் தோன்றிய உனக்கு ஏன் முன்பே சொல்லத் தோணல?
இது ஒரு டெஸ்ட்ரக்டிவ் பொஸசிவ்னெஸ்! அதை காதல்ன்னு நீயா தப்பா கற்பிதம் பண்ணிக்கிட்டே!
என்னோட முட்டாள்தனமும் இதில் இருக்கு! வெறுத்துப்போய் மெட்ராஸை விட்டு வந்த நான் ஏறத்தாழ பத்து வருடம் உங்க யாரையுமே, சந்திக்கவோ பேசவோ முயற்சிக்காமல் ஒதுங்கிப் போனது என் தவறு! அந்த பெரிய காலகட்டத்தில் எல்லாமே மாறியிருக்கும்ன்னு நான் உறுதியா நம்பினேன்!
உன்னை தற்செயலா இன்ஸ்டிட்யூட்ல சந்திச்சபோதுகூட நான் அதைத்தானே கேட்டேன்? உன்னுடைய இந்தப் பிடிவாதக் காத்திருப்பு எனக்குப் பேரிடி!
நாம் இருவரும் அதே நட்போடு தொடர்ந்திருந்தால், எவ்வளவோ சாதித்திருக்கலாம்! இன்றைக்கு என் மனைவியின் கல்லூரித் தோழர்கள் அதே நட்போடு தொடருவதை பார்க்கும்போது எத்தனை ஏக்கமாக இருக்கும் தெரியுமா?
நம்முடைய நெருக்கமான நட்பே, வேறு யாரையும் என் வட்டத்துக்குள் வரவிடவில்லை! ஒரே நண்பன் சுந்தர்ராமனும், கனடா, அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்துவிட்டான்! பிராக்டிஸ் செய்யாத காரணத்தால் மற்ற யாரோடும் தொடர்பே இல்லாமல் போனது! தப்பித்தவறி யாரையாவது சந்திக்க நேர்ந்தாலும் கேள்விகள் எல்லாமே உன்னைச் சுற்றியே!
அதனாலேயே நிறைய விஷயங்களை தவிர்க்கப்போய் இன்றைக்கு தனியா நிற்கிறேன்!
நீயும் ஒரு கல்யாணம் குழந்தை குட்டி என்று செட்டில் ஆகியிருந்தால், எவ்வளவு சந்தோஷமா, என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டுன்னு உன்னை என்னால் என் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்க முடியும்?
மறுபடி மறுபடி இதைத்தான் சொல்லவேண்டியிருக்கு. உன் பிடிவாதம், முட்டாள்தனத்தால், எல்லாமே தலைகீழ்! வருத்தப்பட்டே செத்துப்போன உன் அம்மா, விஷயமே புரியாம எவ்வளவு சாபம் கொடுத்திருப்பாங்க எனக்கு?
சுதா கணவர் உயிருக்கு போராடிக்கிட்டிருந்தபோது சுதாவோடு நான் மொபைலில் பேசியபோது, அவளோடு நீ கூட இருந்தது இன்னொரு விதிவசமான தற்செயல். இல்லைன்னா, நாம் மறுபடி இப்படி பேசிக்கிட்டே இருந்திருக்கமாட்டோம்.
என்ன, அதற்குப்பிறகான இத்தனை வருஷத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை சந்தித்திருப்போமா? அதிலும், போனதடவை பார்த்ததை சந்திப்பு என்று எப்படிச் சொல்ல? ஒரு வார்த்தை பேசாமல் மணிக்கணக்காய் உட்கார்ந்து எழுந்து போனதை சந்திப்புன்னு சொல்லமுடியுமா என்ன?
என் குடும்பத்துக்குத் தெரியாத ரகசியங்களே என்கிட்டே இல்லை! நான் எது செய்தாலும், என் மனைவிக்கோ, மகளுக்கோ சொல்லாமல் இருந்ததே இல்லை - அலுவலக, பொருளாதாரக் கவலைகள் தவிர்த்து!
ஆனால் , உன்னுடைய போன் கால், மெசேஜ் இது மட்டும்தான் நான் அழித்து மறைப்பது - என்வரைக்கும் ஏதும் தப்பு செய்யாதபோதும்!
நான் ஏன் பிராக்டிஸ் செய்யலைன்ற காரணத்தை என் மகளுக்கு சொல்லி பலநாள் ஆச்சு. ஆனால், உன்னை சந்திப்பதை என்னால் சொல்ல முடியவில்லை - அதுவும் வீட்டுக்கு வரமாட்டேன் என்ற உன் பிடிவாதம், என் மனைவி மீதான உன் வெறுப்பு இவை காரணத்தால்!
இப்படி, நான், நீ, உன் சொந்தம் எல்லோரும் வருந்தியே வாழும் நிலைக்கு உன் பிடிவாதம் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா லல்லி?
ட்ரிபியூனலில் நீ ஒரு சிங்கம்போல் வருவதை, வாதம் செய்வதையெல்லாம் சுந்தர்ராமன் சொல்லும்போது மகிழ்ச்சியாய் இருக்கும். நீ ஏதோ ஒரு இடத்தில் சாதித்துக்கொண்டு இருக்கிறாய் என்பதால்!
ஆனால், சமீபகால உன் இன்செக்யூரிட்டி தரும் அழுத்தம் எனக்கு பயமாக இருக்கிறது லல்லி!
இதோ, இப்போது வந்து நிற்கிறாய் ஏதாவது ஹோமில் போய் சேர்ந்துகொள்கிறேன் என்று!
இது எத்தனைதூரம் என்னை உறுத்தும் என்பது தெரிந்தும்! இன்னும்கூட நான் செய்யாத தவறுக்கு என்னை தண்டிக்கும் வேகம் அடங்கவில்லையா உனக்கு?
இந்த உன் பிடிவாதம் சாதித்த நல்ல விஷயம் ஒன்றாவது இருக்கிறதா லல்லி?
உன் பிடிவாதம், உன் பிடிவாதம்ன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லத்தெரிஞ்ச உனக்கு உன் பெண்டாட்டியின் பிடிவாதம் ஏன் கண்ணில் படவே இல்லை ரவி? என்ன இருந்தாலும் சொந்தக்காரி இல்லையா?
அவள் பிடிவாதம் ஒன்றும் குறைந்தது இல்லை லல்லி, ஆனால், அதை சொல்லும் தைரியமும் நேர்மையும் அவளிடத்தில் இருந்தது!
பெண்களின் பிடிவாதம் ஆண்களின் நிலைமையை என்றைக்கு நினைத்துப்
பார்த்திருக்கிறது? எல்லாப் பெண்களுமே அந்த விஷயத்தில் சுயநலவாதிகள்தானே! உங்களுக்கு நீங்கள் ஜெயிப்பது ஒன்று மட்டும்தானே முக்கியம்!
என் கல்யாணத்துக்கான காரணிகளை இப்போது அலசுவது வீண் வேலை! ஆனால், நிச்சயமாக ஒரு வெறுப்போடு அவளை நான் கைபிடிக்கவில்லை என்பது நிஜம்!
இருபத்தைந்து வருட நெருங்கிய நண்பனை பகையாளியாக்கிய ஒன்றைத் தவிர நான் இழந்தது ஏதும் இல்லை அவள் பிடிவாதத்தால்!
ஒத்த ரசனை இல்லை என்பது மறுதலிக்க ஒரு பெரிய காரணம் இல்லை. என் கிறுக்குத்தனம் எல்லாம் சகித்துக்கொண்டதுதான் அவள் பிடிவாதத்துக்கான ஆயுள் தண்டனை அவளுக்கு!
ஆயிரம் குறைகள் இருந்தாலும், இன்னோரு ஜென்மத்திலும் அவளே எனக்கு மனைவியாக வருவது கூட எனக்கு ஓகேதான்! அவள் பிடிவாதத்துக்கு என்மீதான நேசம்தானே காரணம்?
உடனே, என்னுடைய நேசம் என்று ஆரம்பிக்காதே! நல்ல நட்பை முட்டாள்தனமாகக் கொன்றவன் நீ! அதன் காரணமாக நீ இழந்தது மொத்த வாழ்க்கையையும்! அதற்கு ஏதோஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ நான் காரணி என்பதால்தான், நான் உனக்கு செய்துகொடுத்த சத்தியத்தை காப்பாற்றிக்கொண்டு வருவதும், இனி பாக்கியிருக்கும் ஒரு கடமையையும் காலம் அனுமதித்தால் செய்வேன் என்பதும்!
ஆனால், சொல்ல வருத்தமாக இருந்தாலும் சொல்லித்தான் ஆகவேண்டும்!
இப்படி நாம் ரகசியமாய் சந்திப்பது அவ்வளவு நல்லதில்லை லல்லி! உடல் தேவைக்காக என்ற காரணத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டோம்! அப்படி ஒரு செயலை நாம் இருவருமே இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது நம் வளர்ப்பின் பலன்.
ஆனால், இப்படி சந்திப்பது நம் வாழ்க்கையை ஒருநாள் கேள்விக்கு உள்ளாக்கிவிடும். கொஞ்சம் பிசகினால் இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபேர் என்று புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு அதிகம். அது தரப்போகும் அவப்பெயர், நம் இருவருக்குமே மாறாத களங்கம். ஒரு தவறும் செய்யாமல், நாம் அனுபவிக்கும் தண்டனைகள் போதும். இன்னொரு தவறான களங்கத்தை தவிர்ப்பது நமக்கு நல்லது. இந்த ரகசிய சந்திப்புகளுக்கு ஒரு நல்ல விளக்கம் என்னால் தர முடியாது.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை - உன் பிடிவாதம் தளர்த்தி, என் வீட்டுக்கு திறந்த மனதோடு வரமுடியும் என்று சொல், சந்தோஷமாக வீட்டுக்குக் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைக்கிறேன் என் உயிர்த்தோழி என்றும், என் உயர்வுகள் எல்லாவற்றுக்கும் காரணி என்றும்! அது உன்னால் முடியாத பட்சத்தில், இதுவே இப்படியான நம் கடைசி சந்திப்பாக இருப்பதுதான் எல்லோருக்குமே நல்லது.
குரூரமானவன் என்று நீ புரிந்துகொண்டாலும் இதுதான் நல்லது!
இதை நான் முன்பே எதிர்பார்த்தேன் ரவி, உனக்கு எந்தக்காலத்தில் என் தரப்பு புரிந்திருக்கிறது?
யூ ஆர் ஆல்வேஸ் ஸெல்ஃப் சென்டர்ட்தானே ரவி!
இதற்கு நான் பதில் சொல்வது வீண் வேலை லல்லி.
லெட் மீ பீ வெரி க்ளியர் - நீ எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வரலாம், என் தோழி என்ற வகையில் மட்டும் - எந்தவிதமான வெறுப்பும், யார் மீதும் இல்லாமல்! அது உன்னால் முடியாது எனில், இந்தவகை சந்திப்புக்கள் வேண்டாமே ப்ளீஸ்!
இல்லை ரவி, என்னால் அவள் இருக்கும் வீட்டுக்குள் வரமுடியாது! நீ சொல்வது
நியாயம்தான். இப்படி திருட்டுத்தனமாய் சந்திப்பது தேவையில்லாத அசிங்கமான கெட்டபெயருக்கு
வழி வகுக்கும் - பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைத்தான் குடித்தோம்ன்னு ஊருக்கு விளக்கம்
சொல்ல முடியாது.
சரி, சொத்து விஷயமாக நான் சொன்னதற்கு என்ன பதில்? இத்தனை காலம் நான் ஓடி ஓடி
உழைத்து சம்பாதித்தது ஏன் யாருக்கோ போகணும்? கொஞ்சம் மாறியிருந்தால் அவர்கள் என் பிள்ளைகளும்தானே?
லல்லி, நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்!
உன்னிடமிருந்து ஒற்றை ரூபாய் நான் வாங்கிக்கொண்டாலும் அது உன்
பிடிவாதத்தை நான் அங்கீகரித்ததற்கு சமம். உன் வாழ்வைக் குலைத்து, உன் சொத்தையெல்லாம் வாங்கிக்கொண்டான்
என்ற பழி எனக்கு வேண்டாம்! மேலும், உன் வசதியும் பணமும் என்னை எந்தக்காலத்திலும் ஈர்த்ததில்லை.
இது உனக்கும் தெரியும்!
இத்தனை காலம், நான் சம்பாதித்ததும், அழித்ததும் எல்லாமே என் சொந்த சம்பாத்தியம்! நான் ஒரு சுயம்பு
என்பதுதான் என் ஒரே பெருமை.
இந்த வசதிகள் எனக்குப் போதும், உண்ண ஒரு வயிறு, உறங்க ஒரு படுக்கை, ஒண்ட ஒரு நிழல் - இது போதும்
எனக்கும் என் பிள்ளைகளுக்கும்.
நான் சொல்வதைக்கேள், உன் வீடு, அலுவலகம் தவிர, மீதி எல்லா சொத்தையும் விற்று ஒரு அறக்கட்டளை ஆரம்பி. அதற்கு
உன் அப்பா அம்மா பெயரை வை. உனக்கு எல்லா மட்டத்திலும் உதவ உன் தோழியும், அவங்க கணவரும் இருக்காங்க!
உனக்குத் தோன்றிய நல்ல காரியங்களைச் செய்! சந்தோஷமாக உன் உடலும்
மனமும் ஒத்துழைக்கும்வரை பாடுபடு!
வயதான காலத்தில் நீயேகூட ஒரு ஹோம் கட்டி அங்கே வசிக்கலாம்! இது
எல்லாவற்றுக்கும் மேல், இன்னொரு விஷயம்!
இதை நான் உன்கிட்ட சொல்லியே ஆகணும்!
சுந்தர்ராமனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ரவி, இப்போ எதற்கு அவனைப்பற்றி?
இதுவும் ஒரு பகிராத ரகசியம்தான். சொல்லு லல்லி, அவனைப்பற்றி என்ன நினைக்கிறாய்?
நினைக்க என்ன இருக்கிறது? நமக்கு ஒரு நல்ல நண்பன், என்ன, கொஞ்சம் குடி அதிகம்! ஆனால்
திறமையான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்!
பசங்க ரெண்டுபேரும் கனடால செட்டில் ஆகிட்டாங்க!
ஒய்ஃப் போய்சேர்ந்து அஞ்சு வருஷம் ஆச்சு. பெசண்ட் நகர் வீட்ல
தனியாத்தான் இருக்கான்! வேறென்ன?
அவ்வளவுதானா?
வேறென்ன ரவி?
இது இன்னொரு முடிச்சு லல்லி! ஹீ வாஸ் மேட்லி இன் லவ் வித் யூ!
ரெண்டுபேரும் ஒரே ஜாதி வேற! உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ண வந்தபோதுதான், நம்ம விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு!
அதுக்கப்புறம் அவனும் கல்யாணம், பிள்ளை, குட்டின்னு செட்டில் ஆகி ஆனாலும்
உன்னை மறக்காம தவிச்சிருக்கான்!
இதை ஒருதடவை, ஒரு சனிக்கிழமை ராத்திரி முழு போதைல என்கிட்டே ஒரு கன்ஃபெஷன்
மாதிரி சொன்னான்! நீ இப்படி ஒண்டிக்கட்டையாய்
அலைவது அவனுக்கு உறுத்தலாகவே இருந்திருக்கு!
போனமாசம், என்னைப்பார்க்க வந்தான்!
ரவி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்ன்னு ரெசிடென்ஸில ரூம் போட்டு தங்கிட்டு
கூப்பிட்டான்!
இன்னும் எத்தனை காலத்துக்கு லலிதா இப்படி தனியா சுத்தப்போறா?
எனக்கும் எந்த உறவும் இல்லாம போச்சு. இனி பசங்க இந்தியாவுக்கு
வர வாய்ப்பே இல்லை! சொந்தபந்தமெல்லாம் ஒட்டாமலே வாழ்ந்துட்டேன்! காமாட்சியும் போய்சேர்ந்துட்டா!
இப்போ, எனக்கும் ஒரு துணை தேவைப்படுது. ஏன் நாங்க ரெண்டுபேரும் இந்த
வயசுலயாவது ஒன்னு சேரக்கூடாது?
யூ நோ தட் தேர் கென்னாட் பீ ஃபிஸிக்கல் ரீஸன்ஸ் பிஹைண்ட். ஒரு
நல்ல தோழமையோடு நாங்க ஏன் ஒண்ணா வாழக்கூடாது - ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா?
ஓ! அதுக்கு நீ என்ன சொன்னே ரவி?
எனக்கு இதில் ஏதும் தப்பு இருக்கறதா தெரியல லல்லி. அவனுக்கு
இருக்கும் வசதிக்கு, உன் சொத்துக்கு ஆசைப்படறான்னு சொல்லமுடியாது. வெறும் உடம்பு
தேவைன்னா, அது இந்தவயசுல அபத்தமான காரணம்!
அவனுக்கு உன்மேல இருக்கறது உண்மையான நேசமும் அக்கறையும்!
அதனால?
நான் உன்கிட்ட பேசி, நல்ல பதில் சொல்றேன்னு சொன்னேன்!
மை ஃபுட்! இதுக்குத்தான் என்கிட்டே பேசணும்ன்னு வரச்சொன்னியா?
இப்போ நீ செய்யற வேலைக்கு என்ன பேர் தெரியுமா ரவி?
இவ்வளவு கொச்சையாய் பேச வேண்டாமே லலிதா? வயசானபிறகு உனக்கு ஒரு நல்ல
துணையா அவன் இருப்பான்னு நான் நம்பறேன்
எத்தனை அழகா என்னைக் கைகழுவிவிட நினைக்கிறே ரவி? மனசுக்குள்ள ஒருத்தரை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தர்கூட படுக்கையில்
புரள நான் ரவி இல்லை.
இந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கல லலிதா! ஐ தாட் தட் யூ வேர்
மெச்சூர்ட் இனாஃப் டு கன்சீவ் திஸ் இன் ரைட் வே!
அண்ட், நான் ஒன்னும் உன்னை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தி கூட வாழலை!
ஏன்னா, நான் உன்னை அப்படி நினைச்சதே இல்லை - அதுதான் உனக்கும் தெரிஞ்ச
நிஜம்! ஒரு தோழியை நினைச்சுக்கிட்டு மனைவியைத் தொடவேண்டிய அவசியம் எனக்கில்லை லல்லி!
ரொம்ப சீப்பா இறங்கிப் பேசாதே ப்ளீஸ்! அது உன் தகுதிக்கு குறைச்சல்!
சாரி ரவி. உணர்ச்சிவசப்பட்டுட்டேன்! சாரி!
ஆனால், உன் ஐடியா முழுக்க ரப்பிஷ்!
நானே சென்னைக்குப் போனதும் சுந்தரை கூப்பிட்டு சொல்லிடறேன்!
அது முடியாது, நடக்காது! தட்ஸ் இட்.
வேற ஏதாவது பேசு ரவி, என் சொத்து உன் குழந்தைகளுக்கு வேண்டாம்! ஃபைன்!
ஆனால், நம்ம சொத்து ஒன்னு இருக்கு நியாபகம் இருக்கா?
படிக்கற காலத்துல நாகர்கோவில்ல கார்த்தி கல்யாணத்துக்குப் போனப்போ, சேர்த்து வச்ச ஸ்டைஃபண்ட் பணம், ஷேரில் சம்பாதித்தது என ஒரு
லட்சம், கூட ஐ ஓ பியில் லோன் நாலு லட்சம்ன்னு
போட்டு. வாங்கினோமே, நூற்றி இருபது ஏக்கர் ரப்பர்
எஸ்டேட்? ஏறத்தாழ ஒரு முழு குன்று!
அது இப்போ எப்படி இருக்குன்னு தெரியுமா, அதோட மார்க்கெட் வேல்யூ எத்தனை
கோடின்னு தெரியுமா? அது, உன் காசிலும் சேர்த்து வாங்கியது! அதையாவது எடுத்துக்கோ ப்ளீஸ்!
இல்லை லல்லி, அதை உன் பேரில்தான் ரிஜிஸ்டர் செஞ்சோம்! அதுக்கப்புறம் அதை இத்தனை
நாள் பராமரித்தது நீ! அது நியாயமா என் சொத்தே இல்லை! அதையும் வித்து, அறக்கட்டளைல சேர்த்துக்கோ!
சுந்தர், கணவனாகவோ, ஒரு நல்ல தோழனாகவோ உனக்குத் துணை இருப்பான்!
தயவுசெய்து என் பெயரை எதிலுமே சேர்த்துவிடாதே! நிச்சயம் நான்
அதை அனுமதிக்க மாட்டேன்!
ஏதாவது உன் பெயர் நிலைக்கும்படி ஒரு நல்ல காரியத்தை செய்!
தனிப்பட்ட முறையில், சுந்தர் ப்ரொபோசல் எனக்கு மிக நல்ல விஷயமாகப் படுது! டோண்ட்
சே நோ இம்மீடியட்லி.
திங்க் அண்ட் டிசைட் ப்ளீஸ்! இந்தத்தடவையாவது உணர்ச்சிவசப்படாமல்
ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடு!
எல்லோருமே, இனி இருக்கும் கொஞ்ச காலத்துக்காவது குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ இல்லாமல் கழிப்போம்!
இல்லை ரவி! அது ஸ்ட்ரைட் நோ! வேறு ஏதாவது பேசு!
ஓகே. இனி பேச ஏதும் இருக்கிறதா என்ன?
நாம் இருவருமே அவரவர் பார்வைகளை, பிடிவாதங்களை மாற்றிக்கொள்ளப்போவதில்லை!
போய்ட்டு வா! அடுத்தமுறை வர நினைத்தால், நேராக வீட்டுக்கு வா - எப்போது
வேண்டுமானாலும்!
இல்லைன்னா, யாரோ ஒருவர் போனபின், கடைசியாக முகம் பார்க்க இன்னொருவர் வருவோம்!
கிளம்பு! போலாமா?
இல்லை ரவி. இன்னைக்கு நிறைய வலிக்க வலிக்க பேசிட்டோம்! இதில் சுந்தர் கதைவேறு இன்னொரு அதிர்ச்சி! ஃப்ளைட்டுக்கு
இன்னும் ஆறு மணி நேரம் இருக்கு! கொஞ்சநேரம் இப்படியே உட்கார்ந்திருப்போமே ப்ளீஸ்!
யுகமாய், விநாடியாய் கழிந்த சில மணி நேரங்களுக்குப்பிறகு,
போலாம் ரவி
காரில் மெதுவாக மலையைவிட்டு இறங்கும்போது கேட்டாள்
ரவி,ஒரு பாட்டுப்பாடேன் ப்ளீஸ்! நமக்குப் பிடித்த, பூங்காற்று, உன் பேர்சொல்ல..
மெதுவாக ரவி பாட, இயல்பாய் இடையில் இணைந்துகொண்டாள்!
வழக்கமான அணைப்போடு விலகிப்போனவளை சுமந்துபோன விமானம் கண் மறையும்வரை
காத்திருந்த ரவிக்கு ஏனோ இதுதான் தங்கள் கடைசி சந்திப்பு என்று பட்டது!
கொஞ்சம் நிம்மதியாக, கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்த ரவி, மெதுவாக காரைக் கிளப்ப, மீண்டும் ஒரு தனிமைப் பயணம் மலை நோக்கி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக