வெள்ளி, 18 ஜூன், 2021

கூடவே ஒரு தன்னிலை விளக்கம் - நிறைவாக!

 

யாவருக்கும் நன்றி!  

முன்னோருக்கு முன்னோரெல்லாம் ...

இன்றோடு இந்தத் தலைப்பிலான என் பதிவுகள் அனைத்தும் முடிந்தன!

இதில் எத்தனை உங்களுக்கு படிக்க நேர்ந்தது என்று தெரியவில்லை!

படித்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் நன்றி!

அநேகமாக நான் சேர்ந்து வாழ ஆசீர்வதிக்கப்பட்ட என் மூத்த தலைமுறையைச் சேர்ந்த அனைவர் பற்றியும் பகிர்ந்துகொண்டுவிட்டேன் என்றுதான் நம்புகிறேன்!

எதற்கு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்லத் தோன்றியது என்பதற்கு என்னிடம் ஏதும் விளக்கங்கள் இல்லை!

விளையாட்டாக ஒரு காதல் கதை சொல்லப்போக, ஒவ்வொருவராக, இவரைப்பற்றி சொல்லலாமே, அவரைப்பற்றி பேசலாமே என்று தோன்ற, பார்த்தித்தீர்களா, எவ்வளவு அன்புமிக்க ஜீவன்களுக்கிடையே வாழ கொடுத்துவைத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ளும் சந்தோஷத்தில், தொடர்ந்து சொல்ல நேர்ந்தது!

என்னிடம் சிலர் கேட்டார்கள், இத்தனை பேரைப்பற்றி சொல்கிறாயே, அவர்களிடம் எந்தவித குறையுமே இல்லையா என்று!

குறை இல்லாத மனிதர்கள் யார்? குறை ஏதும் இல்லாவிட்டால், அவர்களை ஆற்றங்கரையில் கோவில் கட்டி உட்காரவைத்துவிட மாட்டார்களா?

ஒரு கூரை கூட எதிர்பார்க்காமல், ஆற்றங்கரை அரசமரத்தடியில், குளிரக்குளிர மொண்டு ஊற்றும் பச்சைத் தண்ணீரையும் சகித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரைப்பற்றிக்கூடத்தான் குறை சொல்ல முடிகிறது மனிதர்களால்!

சாப்பாடு கூட, இனிப்போடு காரமும், கசப்பும், துவர்ப்பும் சேர்ந்தால்தானே அறுசுவை என்று முழுமை அடைகிறது? நாமும் அப்படி, நிறைகளும் குறைகளும் கோபமும், மகிழ்ச்சியும் சிரிப்பும் அழுகையும் சேர்ந்த கலவைதானே!

இதில் நல்லன விடுத்து, அல்லன குறித்துப் பேசி ஆவதென்ன?

ஆனால், நல்லன என்று நான் சொன்ன எதுவுமே மிகை இல்லை - முழு உண்மை!

எதையுமே பெரிதாக குடும்ப வாட்ஸப் குழுவில் பகிராத நான் இதுபோன்றவற்றை மட்டும் பகிர ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறது!

என் முந்தைய தலைமுறை எப்படிப்பட்டது என்பதை என் பிந்தைய தலைமுறைக்கு கொஞ்சமாவது எடுத்துச் சொல்ல இது ஒரு வாய்ப்பு!

அவ்வளவே!

நான் சொல்ல மறந்த அல்லது நான் அறியாத சிலரைப்பற்றி, அந்தந்த வீட்டில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயலுவார்கள் எனில், அது என் நோக்கத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி!

அந்தக்காலத்தில், எங்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது பார்த்தீர்களா, இன்றைக்கு நீங்கள் இப்படி இல்லையே என்று குற்றஉணர்ச்சிக்கு குழந்தைகளை உள்ளாக்குவது இந்தப்பதிவுகளின் நோக்கம் அல்ல!

என் மடியேறி விளையாடிய பல குழந்தைகளின் இணைகளும், வாரிசுகளும் இன்றைக்கு எனக்கு அடையாளம் தெரியாது என்பது ஒரு கசப்பான உண்மை!

இதற்கு நான் என்னையன்றி வேறு யாரைக் குறை சொல்வது?

தகவல் தொழில் நுட்பமும், வேலை வாய்ப்புகளும் உலகத்தையே ஒரு ஒற்றை கிராமமாக சுருக்கிவிட்ட நிலையில், எல்லோருக்கும் எல்லா இடத்திலும் போட்டி என்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில், அன்றைக்கு இருந்த எங்கள் வாழ்க்கை முறையும் பிணைப்பும் இன்றைக்கு உங்களிடம் இல்லையே என்று இளைய தலைமுறையை குற்றம் சுமத்துவது வடிகட்டிய அயோக்கியத்தனம்!

உலகமே எந்திரமயமாக, வணிக நோக்கில், தான், தன் குடும்பம் என்று சுருங்கிக்கொண்டபோது, முந்தைய கூட்டுக்குடும்ப முறை எத்தனை உயர்வானது தெரியுமா என்று வெட்டிப்பேச்சு பேசுவது வீண் வேலை!

அது, நம் குழந்தைகளை நாமே, காலைக்கட்டி ஓடவிடுவதற்கு சமம்!

அப்படி ஒப்பீட்டளவில் பார்த்தால்கூட, எனக்கு முந்தைய தலைமுறையில் இருந்த ஒட்டும் உறவும், எங்கள் தலைமுறையிலேயே இருக்கவில்லை என்பது வெளிப்படை.

இப்போது மாற்றங்கள் வெள்ளமாகப் பெருகி வரும் நிலையில் அவர்களுக்கு சாதகமான வாழ்க்கைச் சூழலை அவர்கள் அமைத்துக்கொள்ள உதவுவதே நம் கடமை. அதைவிடுத்து, அவர்களைக் குறை சொல்லவோ, குற்றம் சாட்டவோ செய்யாதிருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி!

இன்றைய வாழ்க்கை முறை நமக்கு உவப்பானதாக அல்லது  புரிந்துகொள்ளும்படி இல்லை என்பதால் அது பிழையானதாகாது. கால ஓட்டத்துக்கு எதிர் திசையில் நீந்துவது அறிவுடைமை அல்ல என்பதைவிட ஆபத்தானதும்கூட!

என்ன, எங்களுக்கு முந்தைய தலைமுறை ஒருவகையில் கொடுத்துவைத்தது! அவர்கள் இந்த புயல்வேக மாறுதலை எதிர்கொள்ளுமுன் முதிர்ந்து கனிந்து ஒதுங்கிவிட்டார்கள்!

அடுத்த தலைமுறையோ, பிறந்ததுமுதல் இந்த வேக ஓட்டத்துக்கு பழகிப்போய்விட்டார்கள்!

எங்கள் தலைமுறைதான் திரிசங்குபோல், இரண்டிலும் ஒட்டாமல் தொங்கிக்கொண்டிருக்கிறது!

மாற்றம் என்னும் பேரலை ஆரம்பிக்குமுன்பிருந்த வாழ்க்கை முறையையும் இன்றைய புயல்வேக ஓட்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தவர்கள்! இதில், அனுசரித்து ஓடிப் பழகுவதோ, அல்லது ஒதுங்கி நிற்பதோதான் எங்கள் தலைமுறைக்கு இருக்கும் சாய்ஸ்!

இதில், திண்ணைக் கிழவி போல, எங்கள் வாழ்க்கை முறைதான் உயர்வானது என்று புலம்பிக்கொண்டிருப்பது வீண் வேலை!

கிளைகள் எங்கே நீண்டாலும், வேர்களை மறக்காதிருக்க சொல்லிக்கொடுப்பது மட்டுமே நம் கடமை!

ஆலமரங்கள் வாழும் புவியில், ஆகாயத் தாமரைக்கும் இடம் இருக்கவே செய்கிறது!

நன்றி!