செவ்வாய், 8 ஜூன், 2021

தீக்குள் விரலை வைத்தால் .... பாரதீ!

 


1921 செப்டம்பர் 11ம் தேதி!

முன்னிரவு நேரம்!

விழிப்புக்கும் உறக்கத்துக்கும், இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஊசலாட்டம்!

இன்று நேற்றல்ல, இது பல காலமாகவே  நடந்துவரும் ஒரு பெரும் போராட்டம்!

இன்றைக்கு வயிற்றுப்போக்கால் படுக்கையில் வீழ்ந்தபிறகு வெளிப்படையாகத்  தெரிகிறது. அவ்வளவே!

அன்றைக்கு அந்த யானை தள்ளிவிட்ட நாளிலேயே சட்டென்று போயிருக்க வேண்டிய உயிர் இது.

அன்றைக்கு யார் என்னைத் தடுத்து நிறுத்தியது? என் தாய் காளியா, இல்லை குரு மாதா நிவேதிதாவா அன்றி என் செல்லம்மாவின் மாங்கல்ய பலமா?

ஹூம். மாங்கல்யம்! அதுதானே அந்தப்பெண்ணை இந்தப் புயலிடம் சிக்கவைத்தது!

இன்றைக்கும் அந்த நாள் தெளிவாக நியாபகம் இருக்கிறது!

1897, ஜூன் மாதம், கிள்ளைக் குறுகுறுப்பில், அந்தப் பெண்ணை மணக்கச் சம்மதித்த என் முட்டாள் சுயநலம் அவள் வாழ்க்கையில் எப்படி நெருப்பை அள்ளிப் போட்டிருக்கிறது!

என்ன செய்ய, செல்லம்மா என்னைக் கைபிடித்தபோது நான் அறிந்திருக்கவில்லை, நான் முன்பே வறுமையை இன்னும் அழுத்தமாக கைபிடித்திருந்தது!

குழந்தைப் பருவத்திலேயே தாயைத் தின்றேன், அன்பே உருவான சிற்றன்னை அபயம் தந்தார்!

கொஞ்ச நாளில் தங்கையைத் தொலைத்தேன். இன்னொரு தம்பியை, தங்கையை அன்னை தந்தார்!

அள்ளக்குறையா அறிவை காளி தந்தாள்!

நல்லதோர் வீணை செய்தனள், ஆயின் ஏன்  இப்படி நலம்கெடப் புழுதியில் எறிந்தனள்?

அறிவுச் சுடர் முதலில் எரித்துச் செரிப்பது வளமையைத்தானோ?

எத்தனை கௌரவமாக வாழ்ந்திருக்கலாம், கொஞ்சம் வளையத் தெரிந்திருந்தால்?

எட்டயபுர சமஸ்தானத்தின் ஆஸ்தான கவி!

எப்பேர்ப்பட்ட பதவி!

கலவி சாத்திரங்களை காமரசம் சொட்டச் சொட்ட மன்னனுக்கு விவரிப்பதும், தானே ரசித்துக் கிறங்கிக் கிடப்பதும்தான் ஆஸ்தான வித்துவானின் அன்றாட கடமை! ஒரு தாசியும் செய்வாள் இதை!

நான், மகாகவி! காளியின் மைந்தன்! படைக்கப் பிறந்தவன்! படைப்பின் வலி ருசிப்பவன்! பணம் படைத்தவனின் காமந்திர அரிப்பைச் சொறிந்துகொடுத்து வரும் தனமும், உயர்வும் காலனையே மிதிக்கத் துணிந்த என் கால் தூசுக்கு சமம்!

நினைவுகளின் அழுத்தத்தில் நடுங்கித் தவித்தது பாரதியின் உடல்!

பராசக்தி, என் மனம் போடும் கூச்சல் உனக்குக் கேட்கவில்லையா?

சட்டென்று ஒரு குளிர்க்கரம் தன்னைத் தொடுவதை உணர்ந்தான் பாரதி. அறை முழுக்க மின்னலைப்போல ஒரு ஒளி பளிச்சிட, தலைமாட்டில் உட்கார்ந்த வாக்கில் அலுத்து அயர்ந்திருந்த செல்லம்மாவின் உடல் ஒரு கணம் சொடுக்கி அடங்கியது.

சொல் மகனே, உனக்கென்ன குறை?”

தாயே, நீயா, இது என்ன கனவா அன்றி பிரமையா அல்லது விண்ணகம் புகுந்துவிட்டேனா தாயே உன்மடி தேடி?”

இல்லை மகனே! உன் இறுதிப்புறப்பாட்டுக்கு இன்னும் நாழிகை இருக்கிறது!

உன் விசாரங்கள் உன்னை உண்ணுமுன் உன் ஐயம் தீர்க்க வந்தேன் என் தலைமகனே!

பராசக்தி, நீ வருவாய் என எனக்குத் தெரியும். எப்படியும் என்னைக் கைபிடித்து கூட்டிச்செல்லவாவது என் தாய் வந்துதானே ஆகவேண்டும்?

விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன், அந்தக் குறைந்தபட்ச வேண்டுதல் கூட நிறைவேற்றித்தர முடியாதவளா நீ? இப்படி கிழிந்த நாராய் படுக்கையில் கிடத்திவிட்டாயே, சிங்கம் கிடக்கவேண்டிய கிடையா இது?

இந்த ஞானச் செருக்குதான் மகனே உன்னை யாரோடும் ஒட்டாது அடித்தது!

உன் வேண்டுதல் எதனை நான் நிறைவேற்றவில்லை?

உனக்கென்ன குறை மகனே? ஏழு வயதிலேயே விளையாட்டாய் கவி எழுதும் ஞானம் எத்தனை பேருக்கு வாய்க்கும்?

பதினோரு வயதில் புலவர்கள் கூடிய சபையில் எத்தனை பரீட்சைகளில் வென்று பாரதி என்ற பட்டம் பெற்றாய் நீ! சரஸ்வதி என்று பொருள்படும் பட்டத்தை வாங்கிய உன்னோடு சரஸ்வதி தேவியே இத்துனை நாளும் பயணிக்கவில்லையா?

உன் திருமணம் போல் யாருக்கு நடந்தது? பதினான்கு வயதுப் பாலகனுக்கு நடந்த மணவிழாவில் நான்கு நாட்களும் கொண்டாட்டங்களும் ஊர்வலங்களும்! தங்க நாதஸ்வர வித்வான் ரத்தினசாமி வாசிப்பு ஒருநாள், திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கேளிக்கை! ராமநாதபுர ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன்கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும் பட்டு பீதாம்பரங்கள், சால்வைகள் மோதிரங்கள், முத்துமாலைகள் எனக் குவிந்த விலையுயர்ந்த அன்பளிப்புக்களும் என, உன் கவித் திறனுக்கு காணிக்கைகள் குவியவில்லையா? அதை வைத்தே நீ கேட்ட காணிநிலம் போல் எத்தனை வாங்கியிருக்கலாம்?

பெற்ற தாய்கூட மதிக்காத மகன் வீட்டில் வாசம் செய்ய விரும்புவதில்லை! நீ எந்தக் காலத்தில் பணத்தை, பொருளை நேசித்தாய், உன்னோடு லட்சுமிதேவி வாசம் செய்ய?

காக்கை குருவி எங்கள் ஜாதி என்று இருந்த பிடியரிசியையும் முற்றத்தில் இறைத்துவிட்ட உன்னிடம் எப்படி அலைமகள் ஒன்றியிருப்பாள்?

உன் மனைவி எவ்வளவு பெரிய பாக்கியவதி, உன்போல் ஞானியைக் கைபிடிக்க? ஆனால் அதே அளவு அபாக்கியவாதி உன்போல் பித்தனைக் கூடிவாழ!

தூஷனை செய்யாதே தாயே, அவளுக்கு நான் என்ன குறைவைத்தேன்? இன்னும் நூற்றாண்டு கடக்கினும் கிட்டாப் பெண் விடுதலையை இப்போதே நான் அவளுக்கு வழங்கவில்லையா?

தோள்மீது கைபோட்டு தோழனாய் நடக்கவில்லையா? ஆண்களின் சமூகத்தில், அவளை உட்காரவைத்து, அருகில் நின்று புகைப்படம் எடுத்துப் பெருமிதப்படவில்லையா? எத்துனைபேர் தூற்றினும், ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று வாழ்ந்து காட்டவில்லையா? 

உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறது மகனே! காலத்தை விஞ்சி சிந்திப்பதே கொடும் தண்டனை, இதில், காலத்தை விஞ்சி வாழத் துணிந்தவன் நீ!

திருமணம் முடிந்து கணவன் முகம் பார்த்துப் பேசவே பல ஆண்டுகள் பிடிக்கும் அந்தக் காலத்தில் நீ என்ன செய்தாய்?

பலரும் கூடிய சபையில்

"தேடக்கிடைக்காத சொர்ணமே" என்று விளித்து, காதல் ரசம் சொட்ட கவிபாடி, அதை

"கட்டியணைத்தொரு முத்தமே தந்தால் கை தொழுவேன் உனை நித்தமே" என்று முடித்தனை!

ஏழுவயதுச் சிறுமிக்கு அது எத்தனை வெட்கக்கேடென்று யோசித்தாயா?

எனக்கே இன்னும் அந்தக்கவி படிக்கும்தோறும் குறுகுறுப்பைத் தருகிறது! இது போதாதென்று எங்கு சென்றிடினும் அவளை இணையாக நடத்திச் செல்வதும், தோள்மீது கைபோட்டு தழுவி நடப்பதும் என்று எத்தனை கால, ஜன வழக்க விரோத காரியங்கள்! அந்தப்பெண் உன்னோடு வாழ்க்கைவழி நடக்க எத்தனை சிரமப்பட்டிருப்பார்?

செல்லம்மா, இங்கே வா மகளே! நீயும் வந்து எங்கள் உரையாடலில் கலந்துகொள்! இது அநேகமாக என் மகனோடான உன் கடைசி உரையாடலாக இருக்கும்! இப்போதும் அவன் ஸ்தூல சரீரத்தோடு பேசவில்லை! இது நமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அசரீரி உரையாடல்! இதை பிறர் கேட்கவும், அறியவும் இயலாது! உன் உள்ளக்கிடக்கையை உன் துணைவன் அறியக்கூறு!

 


நான் சொல்ல என்ன இருக்கிறது தாயே?

காக்கை குருவிக்கெல்லாம் இறைவன் பாடியளப்பான், தன் துணைவிக்கும் குழவிகட்கும் தானன்றி யாருளர் என்று எண்ணாத குழந்தை என் கணவர்!

அவர் ஒரு ஆத்மஞானி!

எல்லாவுயிர்களிடத்தும் அன்பாயிருப்பதை நடத்திக்காட்டினார்! பார்ப்பவர்களுக்கு அது பித்தனின் செய்கையாகத் தோன்றலாம்! ஒரு பிராமணன், கழுதைக்குட்டியின் அழகை சிலாகித்து முத்தமிடுவது சாஸ்திரவிரோதமன்றோ? ஆனால்,

வேதம் படித்த அந்தணனிடத்தும், மாமிசம் தின்னும் புலையனிடத்தும், பசுவினிடத்தும், நாயிடத்தும் சமநோக்கு உடையவன் ஞானி என்ற கீதையின் வாக்குக்கு உதாரணமாய் வாழ்ந்தவர் அவர்!

அவர் நிழலில் பயணிக்க வாய்த்த அற்புத வரம் எனக்குக் கிடைத்தது பெரும்பேறு தாயே! எங்கள் அன்பு சூழ் இல்லறத்துக்கு சாட்சியாக இரு பெண் மகவை கொடுத்த வள்ளல் அவர்!

அதிலும், அவர் கலந்துகொள்ளவே கூடாதென்று தடைபோட்டு  நடத்தத் துணிந்த அவர் மூத்த மகள் திருமணத்தில், அழையா விருந்தினனாக வந்து, அத்தனை சாத்திர சம்பிரதாயங்களையும் நெறிப்படி நடத்தி, கூடியிருந்த அத்தனை பிராம்மணோத்தமர்களும் வாயடைக்க வேதம் சொன்ன அந்தக் கணமே, எனக்கான எல்லாக் கடனையும் செய்து முடித்துவிட்டார் தாயே!

இந்த புரட்சிக்காரனின் மனைவி என்பது தவிர எனக்கு வேறெதற்கு சொர்ணமும் மணியும்?

குறையொன்றும் இல்லை தாயே என் வாழ்வில்!

என்னை நினைத்து அந்த ஆத்மா அவதியுற வேண்டாம்!

போதும்!

இப்புவி அந்த ஜீவன் வாழத் தரமற்றது!

அவரை உம்மோடு இன்றே அழைத்துச்செல்லுங்கள் தாயே!

என் காலம் கழிந்ததும், அங்குவந்து அவர் தோளில் நான் கைபோட்டு நடப்பேன் - உளநிறை பெருமிதத்தோடு!

 ஒரு கணம் இமைக்காது அவளை உற்றுப்பார்த்தான் பாரதி!

சபாஷ் செல்லம்மா! இத்துனை காலம் நான் ஊட்டிவளர்த்த அறிவு வீண் போகவில்லை! உனக்கு என் இறுதி முத்தமும் வாழ்த்தும்! இந்திரன் சபையில் என் பக்கத்து இருக்கையை உனக்கெனக் காத்திருப்பேன் சகி! இப்போதெனக்கு விடைகொடு! என் தாயோடு இன்னும் சற்றே உரையாடல் மீதமுண்டு!

சொல் மகனே!

நீயே சொல்லிவிட்டாய் என்னைக் காலம் கடந்து வாழ நினைத்தவன் என்று! என் காலம் கடந்து தமிழ் உலகம் என்னை எப்படி நினைவுகூரும் என்று அறிய ஆவல் தாயே!

உண்மை சுடும் மகனே! பரவாயில்லையா?

என் வாழ்க்கை சுடாததா தாயே?

என் தமிழ்ச் சமுதாயம் என்னை எப்படிக் கொண்டாடித் தீர்த்தது என்பதை நான் அறியக்கூடாதா?

 உன் கவி பற்றி மதிப்பீடு செய்யும் அருகதை எனக்கே இல்லை மகனே!ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் ஆங்கிலக்கவி வடிவமான ஸானட் என்ற 14 வரிப் பாடலை தமிழில் இயற்றிய புதுமைக்காரன் நீ! யாப்பிலக்கணம் மாறாக்கவிதைகள், காவடிச்சிந்து, வசனகவி, புதுக்கவிதை என்று தமிழ்த்தாய்க்கு அத்தனை ஆபரணங்களையும் அணிவித்துப் பார்த்தவன் நீ! உன்னைப் பெற்றதால் சீர் பெற்றாள் தமிழன்னை!

அதை விடுத்து பிறவற்றில் நீ எதிர்பார்ப்பதுபோல் உன்னைக் கொண்டாடித் தீர்க்கவில்லை இத்தமிழ் கூறும் நல்லுலகம்!

உன் சமூக சீர்திருத்தக் கருத்துக்களால், இருதரப்புக்கும் வேண்டாது போனவன் நீ! ஊருக்கு மட்டும் உபதேசம், என் மனையாளின் மூடத்தனம் அவள் சுதந்திரம் என்று நழுவத்தெரியாமல், உபதேசிப்பதை செய்யத் துணிந்தவன் நீ! அதனால்தான் எல்லாவற்றிலும் சாதி பார்க்கும் தமிழ்ச்சாதி உன்னை பிறப்பால் பிராமணன் என்று துவேஷித்தது! நீ பிறக்க நேர்ந்த பிராமண குலமோ, உன்னை சாதிப்பிரஷ்டம் செய்து சந்தோஷித்தது!

நீ எழுதித் தள்ளிய கவிதைகளில் முன்னும் பின்னும் உள்ளன விலக்கி, ஒற்றை வரியை துண்டித்து எடுத்து அதற்கொரு வண்ணம் தீட்டி வன்மம் கொட்டியது உன் நாடு!

உதாரணத்துக்கு ஒன்று - "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று பாரதி சொன்னான் என்று சொல்லிக் கைதட்டல் வாங்கும் எந்தப் பேரறிஞனுக்கும் அதை யாருடைய கூற்றாய் நீ சொன்னாய் என்பது சுட்டுப்போட்டாலும் தெரியாது! அதை படித்துத் தெரிந்துகொள்ளும் அவசியமும் அவர்களுக்கு இல்லை!

உனக்கானதில்லை இப்புவி!

பூணூலை அறுத்தெறிந்து கீழிறங்கி வரவில்லை நீ! கடை நிலை உழன்றவனை முப்புரி நூல் பூட்டி உயரத்தில் தூக்கிவைத்துக் கொண்டாடியவன் நீ! பிறப்பால் வருவதல்ல உயர்வென்று உள்ளிருந்தே கலகம் செய்பவனை எப்படிப் பிடிக்கும் யாருக்கும்?

உப்பாய் இருக்கிறது சமுத்திரம் என்று உமிழ்ந்து விலகாது, துளைத்து முக்குளித்து, முத்தும் பவளமும் உள்ளடங்கி இருக்கிறது என்று கொண்டாடிய உன்னை இருதரப்பும் ரசிக்காததில் வியப்பென்ன? வெறுத்து விலகாது, உள்ளிருந்து மாற்றம் விதைத்தவன் நீ! இந்து சமுத்திரம் பெற்ற உயர் முத்து நீ!

வங்கத்திலோ அன்றி இப் பூவுலகின் வேறு எங்கேனுமோ நீ பிறந்திருந்தால், உன்னை தலைமீது தாங்கிக் கொண்டாடியிருப்பார்கள் பாரதி! ஆனால் என் செய்வது? ஒரு இணையற்ற பேரரசிக்கே ஏற்ற நவரத்ன மகுடம் நீ! எனவே உனைத் தாங்கும் சிரம் தமிழுக்கன்றி யாருக்கு?

காலம் உன்னை யாசிக்கத் தூண்டினாலும் கட்டளையிட்டே உதவி வேண்டியவன் நீ! உன் ஞானச்செருக்கே உன் வரமும் சாபமுமானபின், உன் பனைமர நிழல் ஒதுங்க இடமற்றுப் போனது மகனே!

உன்போல் ஞானக்கிறுக்கனுக்கு லௌகீக வாழ்க்கை காலைக் கட்டிய விலங்கு! தனித்திருக்கும் வாழ்க்கை சார்புகள் அற்றது பாரதி!

மனைவி குழந்தைகளுக்கு வறுமையை மட்டுமே ஊட்டி வளர்க்க விதிக்கப்பட்டவன் நீ!

சேர்த்த செல்வத்தைக் காத்துக்கொள்ள சாத்திரத்துக்கும் தான் போதிக்கும் நெறிகளுக்கும் விரோதமான எந்தப் பாதகத்தையும் மகிழ்ந்து செய்வோனையும், தன் தலை காத்துக்கொள்ள வெள்ளையன் ஆள்வதே நாட்டுக்கு நல்லதென்று போற்றியும், விடுதலை வீரர்களை தூஷித்தும் பேசியும் எழுதியும் வந்தோரை புரட்சிக்காரர் என்றும், வீரரென்றும் போற்றும் தமிழ்ச்சாதி, நீ வெள்ளையனுக்கு மண்டியிட்டு மன்னிப்புக் கடிதம் தந்தவனென்று தூஷிக்கும்!

ஆதாரம் ஏதென்று அவர்களை யாரும் கேட்கவியலாது பாரதி!

உன் இந்தக் கடிதம் மன்னிப்பை யாசிப்பதாய் எதைவைத்து புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை கேட்பதற்கே யாருமற்றுப்போனார்கள்!

என் அரசியல் நிலைப்பாட்டில் எந்தவொரு மாறுதலும் இல்லை, என் மீது என்ன குற்றம் கண்டீர்கள் என்று வாதிடும் இந்தக் கடிதம் மன்னிப்புக் கடிதம் என்றே சாதிக்கப்படுகிறது!

உரக்கப் பேசுபவனுக்கு சாட்சிகள் தேவையில்லை என்பது உலகப் பொதுவிதி பாரதி!

உன் வாழ்க்கை சரிதம் ஆவணப்படுத்தப் படாதது அவர்களுக்கு சாதகமாகப் போயிற்று!

கடற்கரை கூட்டத்தில் அரவிந்தரை மீறி இடிபோல் முழங்கியவன் நீ!

ஒற்றை சந்திப்பில் உன்பால் ஈர்க்கப்பட்டு, உன்னைப்பற்றி விசாரித்தறிந்து "பத்திரமாய் பாதுகாக்கப்படவேண்டியவன் நீ" என்று சொன்னார் காந்தி! அவரையே தூஷிக்க ஒரு கூட்டம் இருக்கும்போது நீ எம்மாத்திரம்?

சுதேசமித்திரன் ஏடும், நீ ஆசிரியனாய் இருக்கவென்றே துவக்கப்பட்ட மாதர் மாதப்பத்திரிக்கை சக்கரவர்த்தினியும், தடையின்றி நடைபெறவேண்டும், உன் சமுதாய சீர்திருத்தக் கருத்துரைகள் தடையற பரவல் வேண்டும் என்ற நோக்கத்தில், பிடியாணை இல்லாத நிலையிலேயே, உன்னை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து ஃப்ரென்ச்  அரசாங்கம் இருந்த புதுவைக்கு அனுப்பிவைத்தது நண்பர்குழாம்! இதையும் வர்ணம் பூசி கெக்கலி கொட்டியது வீணர் கூட்டம்!

ப்ரிட்டிஷ் ராஜ்ய துவேஷி என்று முத்திரையிடப்பட்ட உனக்கு புதுவையில் நிகழ்ந்த இன்னல்கள் வரலாறு கண்டுகொள்ள மறுத்த கறுப்புப் பக்கங்கள்!

கையறுநிலையிலும், புதுவையில் இந்தியா, விஜயா, கர்மயோகி மூலம் சமூகச் சீர்திருத்தம் பரப்பியவன் நீ! காங்கிரஸின் விடுதலை வேண்டிய தீவிர நிலைப்பாட்டை பகிரங்கமாகத் துணிந்து ஆதரித்து எழுதிவந்தாய்! ஆனால், ஆயுதமேந்திய தீவிரவாதத்தை எந்நாளும் ஆதரித்தவன் இல்லை நீ! தனிநபர் கொலை இந்தியப் பண்பாட்டுக்கு ஏற்றதில்லை என்பதே உன் நிலைப்பாடு என்றென்றும்!

புதுவைக்குப் போகுமுன்பே, சுதந்திரதாகக் கவிகளைக் குறைத்து, சமூகச் சீர்திருத்தக் கவிமழை பொழிந்தவன் நீ!

சீர்பட்ட சமூகமே சுதந்திரத்தை பேணிக்காக்கும் வல்லமை படைத்தது என்பதை இப்போது நீ சொல்கிறாய்! இது எத்துனை உண்மை என்பதை இன்றிலிருந்து சரியாக நூறாண்டு கழித்து 2021ஆம் ஆண்டிலும் உணரப்போவதில்லை உன் தமிழ் சமூகம்!

ஆறு மாதம் புதிய பிரசுரங்களை அனுமதி பெற்றே வெளியிடுவது என்ற ஒப்பந்தம் அடிமை சாசனம் ஆகாது பாரதி! உன் நிலையினும் பன்மடங்கு உயர் செல்வமும் செழிப்பும் வாய்த்தோர் விடுதலை வேண்டாம் என்று பிரசங்கம் செய்து வயிறு வளர்க்கத் துணிந்த சூழலில் நிமிர்ந்து நடந்த சிங்கம் நீ!

புதுவை விட்டுத் தமிழகம் வந்த நீ கைது செய்யப்பட்டு கடலூர் சிறையிருந்த நேரம், இன்னும் ஆறு மாதங்களுக்கு அரசு அனுமதி பெறாது எந்தப் புது பிரசுரமும் வெளியிடுவதில்லை என்று எழுதிக்கொடுத்துவந்து எத்தனை பேரிடம் கம்பீரம் குலையாமல் யாசித்தாய், தங்கள் நிலைக்கு வெள்ளையரால் ஆபத்து  வருமென்று உனக்கு பதிலும் சொல்லாது அஞ்சி ஒதுங்கியோர் எத்தனைபேர்? நெஞ்சு நிறைய கனல் இருந்தபோதும் பசித்தீ சுட்ட வயிறு உன்னை முடக்கிப்போட்டது! அப்போதும் யாசிக்கவோ, மண்டியிடவோ செய்யாத ஞானச் செருக்கன் நீ!எட்டயபுர மன்னனுக்கு எழுதிய கடிதத்தில்கூட அவரை ஆசீர்வதித்தே வேண்டுகிறாய் - இறைஞ்சுதல் என்பது உன் இயல்பிலேயே இல்லை!

கொஞ்சமே கொஞ்சம் மன்னரை, நாடாள்வோரை இந்திரன் சந்திரன் என்று பூசித்து, முதுகு வளைத்து யோசித்திருந்தால், வைரமும் முத்தும் பொன்னும் மணியும் குவிந்திருக்காதா உன் புலமைக்கு? ஞானச் செருக்கும், தன்னம்பிக்கைத் தலை நிமிர்வும் செல்வச் செழிப்புக்கு ஆயுட்பகை பாரதி! நீ முன்னதை உபாசித்தவன் அதனால்தான் உன் வளையாத முதுகு செல்வபாரம் சுமக்க தகுதியற்றதானது பாரதி!

என்ன செய்ய, பாரதி? செல்வத்தை உபாசிப்போருக்கு எந்நிலையிலேனும் முதுகெலும்பு வளைதல் என்பது அடிப்படைத் தகுதி!

நீ நாணலுமல்ல, மூங்கிலுமல்ல, வளையத் துணியா ஆலமரம்! நீ என் வரம் வாங்க இயலாத செல்லப்பிள்ளை பாரதி! உனக்கான பொன்னும் மணியும் உன் ஞானவனத்தில் புதைந்துபோனது!

துறவிகளோடும், சாமியார்களோடும் கஞ்சா அடித்துத் திரிந்தாய் என்று தூற்றத் தெரிந்த கூட்டம் கண்ணம்மா என்று உனக்கொரு காதலி இருந்ததாகக்கூட கூப்பாடு போட்டுப் பார்த்தது!

 என்ன செய்ய?

தன்னை உரைகல்லாய் வைத்தே யோசிக்கத் தெரிந்த சமூகம் இது! இதற்கு ஞானவெளிச்சக் கூச்சம் தாங்கமுடியாதது!

எத்தனை சேறு இறைத்தபோதும் ஒளிமங்கா வைரம் நீ! உன்னைக் கொண்டாட ஒரு கூட்டம் எப்போதும் உண்டு பாரதி - அதற்கு சாதியில்லை, மதமுமில்லை சர்க்காரால், ஆளுவோரால் ஆகும் காரியம் ஏதுமில்லை! அந்தச் சிறு கூட்டம் இருக்கும்வரை உன் புகழ் நிலைக்கும் பாரதி! அது போதும் உனக்கு! துதிபாடும் கூட்டம் உன்னை விலக்கி வைப்பதே உனக்குப் பெருமை மகனே!

உன் கதை முழுமையும் பேச இன்றைய இரவு போதாது!

புறப்படும் நேரம் வந்தது மகனே!

தங்களிடையே ஒரு மகாபுருஷன் வாழ்ந்தான் என்பதை இக்காலத்து சமூகமும் அறியவில்லை, இனிவரும் சமூகமும் உணரவில்லை! இது தமிழனின் சாபத் தலையெழுத்து பாரதி!

செல்லம்மா, உனக்கு என் மகனிடம் உரைக்க யாதுமுண்டோ?

நீ நிதியத்தை விட்டுச் செல்லவில்லை பாரதி! மறக்கவொண்ணா நினைவுகளை விட்டுச் செல்கிறாய்! நீ என் வரம் ப்ராணநாதா! அமைதியாகப் போய்வா! உன் நினைவுகள் என் மீதி நாட்களைக் காத்துநிற்கும்! உன் தோளில் என் கை போட்டு சொர்க்கலோகம் சுற்றிவரும் நாள்வரை என் அன்பைச் சுமந்து போ!

கவிதையும் ஓவியமும் புரியாதவனுக்கு வெறும் சொற்சிதறலும் கிறுக்கல்களும்தான் பாரதி!

எனக்கு இன்றைக்காவது ஞானக்கண் திறக்க வந்தாள் கலைமகள்! போய்வா என் காதல் கணவனே, வேறொரு லோகத்தில் சந்திக்கும்வரை உன் அன்பைச் சுமந்து வாழ்வேன்!

சட்டென்று அந்த அறையின் வெளிச்சம் குன்றி இருண்டது!

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து உலுக்கியதுபோல் விழித்த செல்லம்மாவின் கண்கள் பாரதியின் உயிரற்ற உடலைக் கண்டபோது நள்ளிரவு சரியாக ஒருமணி முப்பது நிமிடம்!பின் குறிப்பு:

வெறும் நாற்பது கிலோவுக்கு குறைவாக இருந்த அந்த கவிராஜனின் பூவுடலை நெல்லையப்பர், லக்ஷ்மண அய்யர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹர ஷர்மா, ஆர்யா ஆகியோர் சுமந்துசெல்ல, வெறும் இருபதுக்கும் குறைவானோர் குழுமியிருக்க, திருவல்லிக்கேணி மயானத்தில் ஹரிஹர ஷர்மா சிதைக்குத் தீ மூட்டும் பெருமை பெற்றார்!

அப்போது பாரதிக்கு வயது 38 வருடம், 9 மாதங்கள்! ஒரு யுகத்துக்கான வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அந்தப் பேராத்மாவை, அக்னிதேவன் ஆசையோடு அள்ளிக்கொண்டு விண்ணகம் சேர்த்தான்!நன்றிகளுடன்: 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 கருத்துகள்: