திங்கள், 14 ஜூன், 2021

பள்ளி ஆண்டுவிழாவும்- மொத்தமாகப் புரட்டிப்போட்ட ஒற்றை சூறாவளிக்காற்றும்!ஸ்போர்ட்ஸ் டே!

ட்ரில் மாஸ்டர் என்கிற பிடி சார் வர்றதுக்குள்ள கொஞ்சம் கதைச் சுருக்கம்!

கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் ஊரு!

அங்கே இருந்த ஒரே பள்ளிக்கூடம், அரசினர் உயர்நிலைப்பள்ளி!

எண்ணெய் வழிய வழிய தலை சீவி, தாவணியை நொடிக்கொருதரம் இழுத்து விட்டுக்கிட்டு கிளியோபாட்ரா ரேஞ்சுக்கு சீனைப்போட்டுக்கிட்டு பெரும்பாலும் சைக்கிளை தள்ளிக்கிட்டு வர்ற பொண்ணுங்க! இன்னைக்கு அதில  ஒருத்தியையாவது லவ் பண்ணியே ஆகணும்ன்ற தீர்மானத்தோட மூஞ்சில ஒரு இன்ச்சுக்கு பாண்ட்ஸ் பவுடர், கட்டம்போட்ட கர்சீஃப்ல அரைக்கிலோ கோகுல் சாண்டல் பௌடரோட தெருமுக்குல ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்து மூணுநாள், அஞ்சுநாள்ன்னு ஓயாம சைக்கிள் ஓட்டறவன் வித்தை காட்டற ரேஞ்சுக்கு அந்த ரோட்ல சைக்கிள்ல சுத்தற பசங்க!

இதுல அட்லீஸ்ட் ரெண்டுபேரையாவது உறிச்சுத் தொங்கவிடுற ட்ரில்மாஸ்டர்! அந்த ஆள் எங்க இருக்காரு, எப்போ நம்மள பார்த்தாரு, ஒரு எழவும் தெரியாது! ஆனா, கரெக்ட்டா கேப்பாரு, இன்னைக்கு நிர்மலாவை கிராஸ் பண்ணும்போது விசிலடிச்ச கடன்கார நாயி ஒழுங்கா எந்திரி!இந்த சினிமால காட்டுவாங்களே போலீஸ் ஸ்டேஷன்னு, அதெல்லாம் என்ன அடி, இதில பெரிய பிரச்னை என்னன்னா, பொண்ணுங்க முன்னாடி அழுகவும் முடியாது! தீ வெச்சமாதிரி எரியற கையை பின்னாடி வெச்சு, அங்கேயும் ரெண்டு இழுப்பு இழுத்திருப்பாரு, எரிச்சலை அடக்க முடியாம அழுகறதுக்கே பாத்ரூமுக்கு ஓடுவானுக! அப்படி ஒரு கலாச்சார காவலர் ஆறுமுக வாத்தியார் அலையாஸ் ட்ரில்மாஸ்டர்!

பிடி பீரியட் வந்துட்டாலே ரவிக்கும், துரைசாமிக்கும் கைகாலெல்லாம் உதற ஆரம்பிக்கும்! துரைசாமி ஸ்பெஷலா அதுக்குன்னு இன்னொரு காக்கி டவுசரை பையில வெச்சிருப்பான்! ரெண்டு டவுசரையும் தாண்டி பின்னாடி எரியும், அப்படி விழும் அந்த அடி!

முதல்ல குறைஞ்சது அஞ்சு புல்அப் எடுத்தே ஆகணும், எல்லோரும் ஈஸியா பத்து, இருபதுன்னு எடுப்பாங்க! ரவி, ரெண்டாவது எடுக்கும்போதே, வௌவ்வால் மாதிரி தொங்க ஆரம்பிச்சுடுவான்! கையெல்லாம் நடுங்கும்! என்ன முக்கினாலும் மூணாவது முறை தம் கட்டி காற்றில் உந்தும்போது, பொத்துன்னு கீழே விழறதும், பொண்ணுங்க சைட்ல இருந்து க்ளுக்ன்னு ஒரு சிரிப்பு சத்தம் கேட்பதும் வாராந்திர வாடிக்கை!

என்ன, ரவிக்கு நல்லாப் படிக்கிற பையன்னு ஒரு  சலுகை!

உங்க அப்பா ஸ்டேட் பிளேயர் - நீ எப்படிடா இவ்வளவு சொங்கியா இருக்கேன்னு கேட்டுட்டு, போய்த்தொலை, நீ அடிவேற தங்கமாட்டே, போய் க்ரவுண்ட்ல இருக்கற புல்லெல்லாம் புடுங்கு, கல்லெல்லாம் பொறுக்கி, ஒரு ஓரமா போடு, நான் வந்து பார்ப்பேன்னு துரத்தி விட்ருவாரு! மொட்டை வெய்யில்ல, மத்தவன்லாம் கிரிக்கெட், வாலிபால், கபடின்னு விளையாடும்போது குந்தவெச்சு உட்கார்ந்து கல்லு பொறுக்கணும்! கண்டிப்பா, ஏதாச்சும் ஒரு புள்ளை க்ராஸ் பண்ணும்போது, சரியா உட்காரு ரவி, நாய் வந்து புடுங்கிட்டுப் போய்டப்போகுதுன்னு தொரைசாமின்னு ஒருநாய் கேட்டுத்தொலையும்! எத்தனைதடவை நாக்கை பிடுங்கிக்கிட்டு சாகமுடியும், முட்டும் கண்ணீரை தோள்பட்டைல தொடச்சுக்கிட்டு தன்னோட டர்ன் வர காத்திருப்பான்! கண்டிப்பா கிளாஸ் ரூம்ல மாட்டுவான்!

இந்த ஹவுஸ் பிரிக்கும்போதெல்லாமா ரவி எங்க ஹவுஸுக்கு வந்துடக்கூடாதுன்னு எல்லாப்பயலும் ஒத்துமையா வேண்டிக்குவானுக. கடைசியா சொத்தை கத்தரிக்காய் வாங்கற பாவனைல எதோ ஒரு இளிச்சவாய் ஹவுஸ்ல தூக்கிப்போடுவாரு சார்! ரவியும் ஒன்னும் பெருசா அலட்டிக்கமாட்டான்! தூங்குமூஞ்சி மரத்தடில உட்கார்ந்து பொண்ணுக கபடி விளையாட்றத சுவாரஸ்யமா பாத்துக்கிட்டிருப்பான்!

இங்கிலீஸ் க்ராமர் பீரியட் கம்பேரட்டிவ் அண்ட் சூப்பர்லேட்டிவ் அட்ஜெக்டிவ்ஸ், நெஞ்சு ஒடைய கத்திக்கத்தி சொல்லிக்கொடுத்தார் குமரவேல் வாத்தியார்!

டேய், கண்டிப்பா இந்த ஆள் என்னைத்தான் கேள்வி கேட்பான், எதாச்சும் ஒரு செண்டன்ஸ் சொல்லிக்கொடுடா,

தொரைதான்!

எப்போதுமே, இங்கிலீஸ் க்ளாஸ்ன்னா ரவிதான் ஹீரோ! அதுனால, எப்படியாச்சும் கெஞ்சி அவன் பக்கத்துல உட்கார்ந்துக்குவான் தொரை!

போடா, பன்னி! பிடி பீரியட்ல என்ன சொன்னே, சாவு!

ஆயா கடைல குச்சிக்கெழங்கு வாங்கித்தர்றேன் ப்ளீஸ்,

விட்டா கால்லயே விழுவான்!

நெனச்ச மாதிரியே,

துரைசாமி, ஒரு செண்டன்ஸ் சொல்லு!

ரவி எழுதிக் காட்டியதை உருப்போட்டு வெச்சிருந்த துரை, சத்தமா சொன்னான் யுவர் சன்டேஸ் ஆர் ஆல்வேஸ் லாங்கர் தேன் மன்டேஸ் ஸார்!

பொண்ணுக சைடுல இருந்துதான் சிரிப்பு ஆரம்பிச்சுது!

கைவெச்ச பனியன் எப்போதுமே சாரோட சட்டைக்குக் கீழ தொங்கிட்டிருக்கும்! அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டே பாடம் எடுப்பாரு!

அர்த்தம் புரியாம பெருமையா சொல்லித் தொலச்சது சனி!

ஒரே அறைதான் விட்டாரு! ஒருவாரம் காதுக்குள்ள ட்ரெயின் ஓடற சத்தம் மட்டும்தான்டா கேக்குது மாப்ளன்னே சொல்லிக்கிட்டு திரிஞ்சான் பாவம்!

இதுல பெரிய சம்பவமே, அடுத்த பிடி பீரியட்ல நடந்ததுதான்! இங்கிலீஸ் ஸார் ஸ்டாஃப் ரூம்ல வத்தி வைக்க, புல்லப் பார்ல தொரையனை தொங்கவிட்டு உரிச்சு எடுத்தாரு பிடி ஸார்! ஆனால், மகராசன் ரவியை காட்டியே கொடுக்கலையே!

மனசு தாங்காம, ஆயா கடைல சோடா வாங்கிக் கொடுத்தபோது கேட்டான், ஏன்டா அத்தனை அடிக்கும் நான்தான் சொல்லிக் கொடுத்தேன்னு சொல்லல?

அந்த தாடி முளைக்காத சசிகுமார் சொன்னான் ஏன்னா, நீ என் நண்பேன்டா!

அடுத்த ஒரு மாசம் ரெண்டுபேரும் தேவா சூர்யா ரேஞ்சுக்கு சுத்துனாங்க! வில்லங்கம் வந்தது ரேவதி ரூபத்துல!

அந்த ரேவதி டென்த் பி. அந்த ஊருக்கு கொஞ்சம் எக்ஸ்டரா வளப்பம்! காவேரி ஆத்துல ஓடற மீன் மாதிரி மூஞ்சில பாதிக்கு இருக்கும் கண்ணு ரெண்டும் அலையும், கூடவே பானுப்ரியா மாதிரி கொஞ்சம் ஸீன் வேற போடும்!

இல்லாத ஊருக்கு கொஞ்சம் தாராளமான இலுப்பைப்பூ!

நேத்தைக்கு அட்மிஷன் ஆன ஆறாங்கிளாஸ் பையனுக்கு முதற்கொண்டு அந்த அக்கா பேரு மாத்திரம் கண்டிப்பா தெரியும்!

அல்மோஸ்ட் எல்லாப்பயலுக நோட்லயும் கண்டிப்பா ஒரு இடத்துல ஃப்ளேம்ஸ் போட்டுப்பாத்திருக்கும்! இதிலும் ரவி மாதிரி கள்ளப்பயலுக இனிஷியல், ஃபுல்ஸ்டாப் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு எப்படியாவது லவ்ல கொண்டுபோய் நிறுத்திடுவானுக!

கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு கனவு ராணி!

தொரையனுக்கு அந்தப்பொண்ணு மேல ஆசை வந்தது ஒன்னும் பெரிய தப்பில்லை! ஆனா, அந்த மூதேவி அதுக்கு ரவிகிட்டயா ஐடியா கேட்கணும்?

ரவி தமிழய்யா பொண்ணுக்கு அப்புறம் ரேவதியைத்தான் லிஸ்ட்ல வெச்சிருந்தான்! போதாக்குறைக்கு போனவாரம்தான் ரேவதிக்கு  ஒரு கொழந்தை பொறந்திருந்தது கனவில் நடத்துன குடும்பத்துல!

அவன்கிட்ட போய் லவ் லெட்டர் கொடுக்க அட்வைஸ் கேட்டிருக்கு! விதி!

அடுத்தவாரம் புதன்கிழமை (பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுடா) லெட்டர் குடுக்க நாள் குறிச்சாச்சு!

கண்ணு ரெண்டும் மீனா, வார்த்தையெல்லாம் தேனான்னு குன்ஸா கவிதை மாதிரி ஒன்னை எழுதி, வேணும்ன்னே ரவி சொன்ன , எல்லாம் மாத்திப்போட்டு ஒரு பக்கத்துக்கு ஒரு லெட்டர் தேத்தியாச்சு!

சரி, எப்படி கொடுக்க?

மாட்டிக்கிட்டா பிடி தோலை உரிச்சுடும்!

பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் டாய்லெட் வேற வேறன்றதுல ஒரு லாஜிக் இருக்கு! சைக்கிள் ஸ்டான்ட், சாப்பிடுற இடம், எல்லாமே தனித்தனி! இதில் எங்கேபோய் லெட்டரை கொடுக்க?ரேவதிக்கு ஒரு வினோத பழக்கம்! ரீசஸ் டைம்ல கட்டில் கடை கிழவிகிட்ட ஜவ்வுமிட்டாய் வாங்க தனியாத்தான் போவா, அதுவும் ஸ்டாஃப் ரூம் வழியா சுத்திக்கிட்டு!

அதுதான் சரியான இடம்!

சரி, என்ன சொல்லிக் கொடுக்க?

அதுக்கும் ரவிதான் வழி சொன்னான் - பின்னாடி இருந்து கூப்பிடு, இந்தப் பேப்பர் உன்னுதா, கீழ கிடந்துதுன்னு சொல்லி நீட்டு, வாங்கினவுடனே ஓடி வந்துடுன்னு!

எல்லாம் கரெக்ட்டாத்தான் செஞ்சான், ஆனா கீழ நல்லா கேபிடல் லெட்டர்ல டி துரைசாமின்னு கையெழுத்து போட்டு வெச்சிருக்கான்!

அன்னைக்கு யாருக்கு நேரம் நல்லா இருந்துச்சோ இல்லையோ துரைக்கு ரொம்ப நல்லா இருந்திருக்கு!

ஸ்டாஃப் ரூம்ல நல்லவேளையா சக்திவேல் சார்தான் இருந்திருக்கார்! கொஞ்சம் என்ன கொஞ்சம், ரொம்பவே நல்ல மனுஷன்! பசங்களை அப்போதே வாங்க, போங்கன்னு கூப்பிடுவார், அன்பா பேசுவார்!

சரி, இதை யார் கிட்டையும் சொல்லாதே, அவனை வரச்சொல்லு, நான் பேசறேன்னு சமாதானம் சொல்லி அனுப்பிட்டாரு!

போன வேகத்துல அவர் வாயைத் திறக்கறதுக்குள்ள நேரா காலுக்கே பாஞ்சு பிடுச்சுக்கிட்ட துரை, ஐயோ, இனிமேல் இப்படி செய்யமாட்டேன்னு டோட்டல் சரண்டர்!

திட்ட நினைச்ச மனுஷனுக்கு சிரிப்பே வந்துடுச்சு! உட்காரவெச்சு, இதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்கு அப்படி இப்படின்னு ஒரே உபதேச ரத்தின மாலை! அடி விழாது, மேலும் வேற பெருசா டேமேஜ் எதுவும் ஆகாதுன்னு புரிஞ்சு சந்தோஷத்துல துரை மாடு மாதிரி தலையாட்டி சந்தோஷமா கேட்டுட்டு கிளம்ப, அதோட விடல விவேகானந்தர்! லெட்டர்ல இருந்த முப்பது சொச்சம் மிஸ்டேக்கை பட்டியல் போட்டு காமிச்சிருக்கார்! தமிழையாவது ஒழுங்கா எழுதிப்பழகுன்னு!

அத்தனையும் ரவி வாண்டடா சொன்ன கரெக்சன்!

ஒதுக்குப்புறமா மரத்தடிக்கு இழுத்துக்கிட்டுப்போய் பழி சண்டை!

என் வாழ்க்கையையே கெடுத்துட்டே பாவி, உனக்கு கல்யாணமே ஆகாதுன்னு சாபம் வேற!

இதுல பெரிய ஜோக், அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் இல்லைன்னா ரேவதி அடுத்த முகூர்த்தத்துல அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்திருப்பா அப்படின்னு சாதிச்சதுதான்!

அப்போ இருந்து உள்ளுக்குள்ளே கருவிக்கிட்டே இருந்திருக்கறான்!

ஸ்போர்ட்ஸ் டே ஆரம்பிச்சு, நீராரும் கடலுடுத்த.. ரெக்கார்ட் கூடவே பொண்ணுங்க எல்லாம் கீச்சுக்கீச்சுன்னு கோரஸ் பாட, அன்னைக்கு வைபவம் சிறப்பா ஆரம்பிச்சுது!

டவுசர் பாக்கெட்ல, கட்டில் கடை கிழவிகிட்ட அக்கவுண்ட்ல வாங்கின தாளிச்ச பொட்டுக்கடலையோட, பொண்ணுங்க பக்கமா இடம் தேடி உட்கார்ந்துட்டான் ரவி! மைக்செட் கண்ட்ரோல் துரை!

வழக்கம்போல சீப் கெஸ்ட், சி , கூடவே அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர்! அதென்னவோ, ஸ்போர்ட்ஸ் டே அப்படின்னாலே, இன்ஸ்பெக்டர் கெஸ்ட் அப்படின்றது மாறாத சம்பிரதாயம்!

முதல்ல நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் பெண்கள் பிரிவு, ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுல!

சூப்பர் சீனியர்ல ரேவதி தளும்பத் தளும்ப ஓடி ஃபர்ஸ்ட் வந்தப்ப விசிலும், கைதட்டலும் ஓய பத்து நிமிஷம் ஆச்சு!

சி கண்ணை சிமிட்டாம வழிஞ்சுட்டிருந்தார்!

அடுத்து ஆண்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்!

ஜூனியர், சீனியர்லாம் முடிஞ்சு, சூப்பர் சீனியர்!

தென்னரசு பேரை மைக்கில் சொன்னதும், பழிக்குப்பழி! பொண்ணுக சைட்ல இருந்து விசில் பறக்குது!

பள்ளிக்கூடத்து ஹீரோ தென்னரசு! ஓட்டப்பந்தயத்துல ஆரம்பிச்சு, ஒவ்வொரு ஈவண்ட்லயும் அவன்தான் ஃபர்ஸ்ட். அதிலும் லாங் ஜம்ப், போல்வால்ட் ரெண்டிலும் மன்னன்! டிஸ்ட்ரிக்ட் சாம்பியன், ஸ்டேட் ரன்னர் அப்!

பிடி சாரோட ப்ரவுட் ப்ராடக்ட்!

கூட ஓட வழக்கம்போல ஒரு ஏழெட்டுப்பேரு! போட்டி என்னவோ, ரெண்டாவது மூணாவது இடத்துக்குத்தான்!

எட்டாவது பேரை மைக்கில் படிச்சபோது மயான அமைதி! எஸ். ரவி, டென்த் !

எல்லோரும் ஏதோ கெட்டவார்த்தை காதில் விழுந்ததுபோல் முழிக்க, பதட்டத்துல எழுந்த ரவி, உள்ளேன் ஐயா!

இஸ்பெக்டருக்கு சிரிப்பை அடக்கமுடியாம பொறையேறிப்போச்சு!

டேய், நீ எதுக்குடா பேரு குடுத்தே,

சார், நான் பேரே கொடுக்கல சார்,

இல்ல சார், நேத்து சாயங்காலம் இவன்தான் வந்து பேர் கொடுத்தான் சார், பாருங்க, எட்டா நம்பர் ஷூ கூட எடுத்து தனியா வெச்சிருக்கறான் - சமயம் பார்த்து பழி தீர்த்த துரை!

வாத்தி தீவிழி விழிக்க, சட்டையை கழட்டிட்டு பனியனோட உட்கார்ந்து ஷூவை மாட்டும்போது மைக்கை ஆஃப் பண்ணாம சொல்றான், மாப்ள, நீ ஓடற திசைலதான் காத்தடிக்குது, எண்ட்ல போய் பத்தரமா இறங்கிக்கடா!

ரேவதி சிரிப்பு மட்டும் தனியா கேட்டுச்சு!

அப்புறம் என்ன சொல்ல இருக்கு, எல்லோருக்கும் ஓடி முடிச்சு பேர் கொடுத்துட்டிருக்கும்போது, குறுக்கால நடந்து வந்தான் ரவி!

அப்ளாஸ் அள்ளுது! கண்ணே தெரியாத அளவு கண்ணீர் கொட்டுது!

தென்னரசு, தென்னரசுன்னு கோரஸ். ஜாவிலின் த்ரோ, லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் ஒரே பேருதான், தென்னரசு! அதிலும் அந்த போல்வால்ட், பதினோரு அடியை அலட்சியமா காத்துல மிதந்து தாண்டும்போது இன்ஸ் எந்திரிச்சு நின்னு கைதட்ட, அந்த இடமே சூனியமா தெரிஞ்சது ரவிக்கு!

பாக்கெட்ல இருந்த பொட்டுக்கடலை தீர்ந்துபோய் வாய் வேற நமநமங்குது. அப்படியே போய் ஏதாவது வாங்கிட்டு வரலாம்ன்னு ரவி சத்தம்காட்டாம எழுந்திருச்சு போன வழியிலதான் காம்பவுண்ட் வேலிக்கு அந்தப்பக்கம் ஒரு பாழும் கிணறு!

இவன் அழுதுக்கிட்டிருந்ததை பார்த்த ரேவதி தற்செயலா ரொம்பநேரம் கழிச்சு திரும்பிப்பார்க்க, வேலியோரம் நடந்து போய்க்கிட்டிருந்தான் ரவி!

தபதபன்னு பின்னாடி சத்தம் கேட்டு, ரவி திரும்பறதுக்குள்ள, ரேவதி அப்படியே அவன் மேல பாய்ஞ்சுட்டா!

ரெண்டுபேரும் கீழ விழுந்து புரண்டு எழுந்திருக்கும்போது, கையை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு, என்ன முட்டாள்தனம் பண்ணப்பார்த்தே ரவி, இதுக்கெல்லாமா சாகப்போவாங்க?

கதைவசனம் புரியவே அஞ்சு நிமிஷம் ஆச்சு ரவிக்கு!

தமிழ், இங்கிலீஸ், மேத்ஸ் எல்லாப் பாடத்திலும் நீதானே ரவி எப்போமே ஃபர்ஸ்டு? உனக்கென்ன குறைச்சல், ஹெட்மாஸ்டர் உன்னை கொண்டாடுறார். பள்ளிக்கூடமே நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கு, இந்த சமயத்தில் இதென்ன கோழைத்தனம்?

உனக்காக நான் தினமும் சாமிகிட்ட வேண்டிக்குவேன் ஆண்டுவிழால அத்தனை கைதட்டலும் உனக்குத்தான் விழணும்ன்னுஇந்த தென்னரசு எல்லாம் ஓடவும் குதிக்கவும்தான் லாயக்கு ரவி! புத்திசாலித்தனம், படிப்பு, அறிவு இதெல்லாம் யார்கிட்ட இருக்கு? வாழ்க்கைல ஜெயிக்க அதுதானே ரவி முக்கியம்? அப்படிப் பார்த்தால் நீதான் ரவி சூப்பர் ஹீரோ!

வேலு நாச்சியார் ரேஞ்சுக்கு ரேவதி உணர்ச்சிவசப்பட்டு மூச்சுவாங்க வசனம் பேச, தலையைக் குனிஞ்சுக்கிட்டு ரவி பார்த்த இடம் அப்படி ஒன்னும் சிலாக்கியமானதில்லை! பாவம், கள்ளத்தனம் புரியாம பேசி முடிச்ச ரேவதி, இன்னும் அவன் தலை குனிஞ்சு நிற்கறதை பார்த்து, என்ன ரவி, நான் இவ்வளவு சொல்றேன், அப்படின்னு இழுத்து ஆறுதலா அணைச்சுக்கிட்டப்போ, துரைசாமிக்கு மனசுக்குள்ள கோடி நன்றி சொல்லி முடிச்சிருந்தான் ரவி!

கட்டில்கடையை ஏறத்தாழ ரெண்டுபேரும் காலி செஞ்சுட்டு, மிச்சம் இருந்த ஒரே எலந்தவடையை ஆளுக்குப்பாதி கடிச்சுக்கிட்டு வரும்போது, மைக்செட் கதறிக்கிட்டிருந்தது - சூப்பர் சீனியர், பெண்கள் முதல் பரிசு ரேவதி!

இன்னொருமுறை ஓடிப்போய் ப்ரைஸ் வாங்கிய ரேவதிக்கு இன்னொரு ரவுண்டு விசில்!

கைகொள்ளாத மெடலும், கோப்பையுமா தென்னரசு!

எல்லோரும் ஆவலா எதிர்பார்த்த மறுநாள் லீவு அனௌன்ஸ்மெண்ட்க்கு ஜோரா கைதட்டிட்டு கும்பலா கிளம்பும்போது ரேவதி, ரவி, கொஞ்சம் இரு நான் உன்கூட பேசணும்!

ரெண்டுபேரும் சைக்கிளை தள்ளிக்கிட்டு மெதுவா நடக்கும்போது அடுத்த கட்ட ஆறுதலும் உபதேசமும்!

இந்த வருஷ ஆண்டுவிழா பேச்சுப் போட்டிலயும் கவிதைப்போட்டிலயும் நீதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கறே, சரியா ரவி, சொல்லிட்டு கன்னத்தை தட்டிட்டு ரேவதி போக, நிஜமாலுமே மிதந்துதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரவி!

அடுத்தவாரம் முழுக்க தீயா வேலை செஞ்சான் ரவி! சனிக்கிழமை நடந்த கட்டுரைப்போட்டில எழுதித்தள்ள ஸ்கூல் லைப்ரரில கிடைச்ச பாரதி, பாரதிதாசன், அறிஞர் அண்ணா, முவன்னு கைல கிடைச்சதிலெல்லாம் பாயிண்ட் எடுத்து எழுதிக் குவிச்சுட்டான்! வழக்கம்போல தான்தான் முதலாவதா வருவேன்னு எழுதும்போதே தெரிஞ்சது ரவிக்கு!

ரேவதி வேற, குறுக்கே வரும்போதெல்லாம் கட்டைவிரலை உயர்த்தி காட்டி உற்சாகப்படுத்திக்கிட்டிருந்தா!

எதிர்பார்த்த ஆண்டுவிழாவும் வந்தது - அடுத்த புதன்கிழமை!

கவிதைப்போட்டி மட்டும் ஆண்டுவிழா அன்னைக்குத்தான் சீஃப் கெஸ்ட் முன்னாடி நடக்கும்!

தலைப்பு பதினைந்து நிமிஷம் முன்னாடிதான் கொடுப்பாங்க!

ரவி, கணேசன், கோமதி, இன்னும் சில படிப்ஸ் மட்டும் கலந்துக்குவாங்க! ஒட்டடைக்குச்சி கோமதிக்கா சோடாபுட்டி ரவிக்கா, யாருக்கு முதலிடம்ன்னு பட்டிமன்றமே நடக்கும்!

மேடைல சீஃப் கெஸ்ட் கலெக்டர், சி , தமிழய்யா, ஹெச் எம்!

முன்வரிசைல டீச்சருங்க, அவங்க குடும்பம்! சரியா போடியத்துக்கு நேரா, அலைகள் ஓய்வதில்லை ராதா மாதிரி ஒரு செம ஃபிகர்! ரைட்டு, ரவிக்கு நாக்கு பசைபோட்ட மாதிரி மேலண்ணத்துல ஒட்டிக்கிச்சு! கூட்டத்துல ரேவதியவேற காணோம்!

ஓரளவுக்கு எதிர்பார்த்து ரெடி பண்ணிவெச்ச எந்தத் தலைப்பும் இல்லாமல், சமுதாய முன்னேற்றமும், மாணவர் பங்கும்ன்னு ஒரு வழிசல் தலைப்பு!

கிழிஞ்சுதுபோன்னு இருந்துச்சு ரவிக்கு!

கோமதிவேற முஷ்டியை உயர்த்தி ஏதோ ஜான்சிராணி ரேஞ்சுக்கு கூவி, பலத்த கைதட்டல்! ஓயறதுக்குள்ள மேடையேறிய ரவிக்கு தூரத்திலிருந்து ஒரு தம்ப்ஸ் அப்! ரேவதிதான்!

கொஞ்சம் தெம்பா மைக்கைப் பிடித்தால், எதிர்ல ராதா!

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!

கவியரங்க மரபுப்படி,ஒவ்வொண்ணையும் ரெண்டுரெண்டுதடவை நிறுத்தி நிதானமா சொல்ல, கலெக்டர் முகத்தில் புன்னகை!

அப்போதான் சனிபகவான் மெதுவா சிரிச்சிருக்கார்! ரவிக்கு அது கேட்கல!

சிகரங்கள் என்பதே என்றாவது ஒருவன் கரங்கள் தொடத்தானே தோழி, அப்படின்னு முத்தாய்ப்பாய் சொல்லி, மரபுப்படி ரெண்டாவதுதடவை அதையே நிறுத்தி நிதானமாகச் சொல்லி கீழிருந்த ராதாவைப் பார்த்து புன்னகைக்க, அப்போதான் அந்த ஓப்பன் ஏர் ஆடிட்டோரியத்துல சரியான காத்தடிச்சு அந்த பொண்ணோட தாவணி கலைஞ்சிருக்குது!

சோடாபுட்டி கண்ணாடிக்குப் பின்னாடி தெரிஞ்ச முட்டைக்கண்ணும் பெரிய கவியரசன் மாதிரி நினைச்சுக்கிட்டு வழிஞ்சு கோணல் புன்னகையும் யாருக்குப் புரிஞ்சுதோ இல்லையோ, எப்போவும் எதுவும் புரியாத துரைசாமிக்கு மட்டும் விபரீத அர்த்தத்தில் புரிய, விசிலும் கைதட்டலும் காட்டுக்கூச்சலுமா அந்த சூழ்நிலையே தலைகீழா மாறிப்போச்சு!

அந்தப்பெண் விருட்னு எழுந்துபோக, தமிழய்யா ரவி சட்டையை இழுத்து போதும் நிறுத்துன்னு உறும, ஏறத்தாழ மேடைல இருந்து தூக்கி எறியப்பட்டான் நம்ம கவியரசன்!

வழக்கம்போல நடந்தது அவனுக்கு லேட்டா புரிய, கோமதிக்கு முதல் பரிசு, கணேசனுக்கு இரண்டாம் பரிசு, உளறிக்கொட்டிய மூர்த்திக்கு ஆறுதல் பரிசு.

அன்னைக்கு ஹெச் எம் ரூமில் வெச்சுத்தான் தெரியும் ஹெச் எம் திருமால் சாருக்கு அத்தனை கெட்டவார்த்தை தெரியும்ன்றதே!

சொல்ல மறந்துபோச்சே, அந்த ராதா, ஈரோடு காலேஜ்ல படிக்கற, திருமால் சாரோட பொண்ணு!

அந்த வருஷமே நல்லவேளையாய் அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் வர, வேற ஊர், வேற ஸ்கூல்!   

அன்னைக்கு மூஞ்சியைத் திருப்பிக்கிட்டுப் போன ரேவதியை அதுக்கப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் பவானி பஸ் ஸ்டாண்ட்ல கைல குழந்தையோட பார்த்தான் ரவி!நல்லா இருக்கியா ரவின்னு முதுகில் தட்டியது யாருன்னு பார்த்தால், கையில் பால் புட்டியோட ஆறடி உயரத்துக்கு வாட்டசாட்டமாய்,

தென்னரசு!

  

படங்கள்: இளையராஜா! நெஞ்சார்ந்த அஞ்சலிகளும் நன்றிகளும்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக