வியாழன், 17 ஜூன், 2021

முன்னோருக்கு முன்னோரெல்லாம் .... நாமக்கல் மாமா, அத்தை

 


நம் மூளைக்குள் ஆழமாக பதிந்துபோன, ஒரு மனிதனின் வெற்றி என்பது பணம் சம்பாதிக்கும், அதை காப்பாற்றிவைக்கும் திறமை மட்டுமே என்ற கார்ப்பரேட் அளவீடுகளை வைத்துப்பார்த்தால், இவர் கொஞ்சம் தோற்றுப்போனவர்தான்!

ஆனால், இதற்கு முன்பிருந்த அளவுகோல்கள் வேறு  வகையானவை! அன்பு, ரசனை, குடும்ப நெறிமுறைகள், பிள்ளைகள் வளர்ப்பு - இந்த அளவீடுகளின்படி, மிகப்பெரிய வெற்றியாளர் இவர்!

சில தோற்றுப்போன தொழில் முயற்சிகள் மட்டுமே ஒரு  மனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படும் கமர்ஷியல் சித்தாந்தம் பொருட்பால் பட்டது. அறத்தின், அன்பின் அளவுகோல்கள் இதற்கு நேர் எதிரானவை!

ஒரு மிகச் சிறந்த மனிதன், தன் ரசனைகளுக்கும், கடமைகளும் இடையே கொஞ்சம் அல்லாடுதல் இயல்பு!

அது இந்த இடத்தில் விரிவாய் விவாதிக்கவேண்டாத விஷயம்!

S.R.

அப்படி அழைக்கப்படுவதுதான் அவருக்குப் பிடிக்கும்!

வேர்க்க விறுவிறுக்க கையில் ஒரு பை, அதில் நிரம்பி வழியும் தீனி என்று வேகநடை போட்டு வரும் கறுத்த உருவம் தூரத்திலிருந்து பார்க்கும்போதே மாமா வருகிறார் என்று தெரியும். வந்ததும்,  இயல்பாய் தானே ஃபேனை போட்டு உட்கார்ந்து கேட்கும் முதல் கேள்வி, S.S ஊர்லதானே?

மாமன் மைத்துனர்களுக்குள் அப்படி ஒரு இணக்கம்!

கொண்டுவந்துதரும் தண்ணீரை பல் படாமல் குடித்துவிட்டு, கமலம், சூடா ஒரு காஃபி போடேன்,

சாப்பிடும்போது ஏதாவது ஒரு ஐட்டம் சுவையாக வந்திருந்தால், அதை உடனே பாராட்டி இன்னொருமுறை வாங்கி சாப்பிடுவர், கூடவே, ரசத்தில் உப்பு தூக்கல் என்று குறையையும் சொல்லும் வெள்ளந்தி ரசனைக்காரர்.

மைத்துனர் வரும்வரைக்கும் எங்களோடு சரிக்குசரி உரையாடுவார். நீங்க சின்னப்பசங்க என்ற தோரணையே இருக்காது!

ஆங்கிலத்தில் பேசுவதில் அத்தனை ஆர்வம் அவருக்கு - ஏதோ நிறைவேறாக்கனவின் ஏக்கம் போல!

இடையிடையே சில வாக்கியங்களைச் சொல்லி தமிழ் அர்த்தம் கேட்பார், சரியாகச் சொன்னால், அப்படி முகம் மலர்ந்து பாராட்டுவார்!

அதோடு விடாமல். அப்பா வந்ததும், முதல் வார்த்தையே, சபாஷ் SS, மாப்பிள்ளை இங்கிலீஷ்ல புலியா இருக்கான்.

ஓயாமல் பாராட்ட ஒரு உயர்வான மனம் வேண்டும்- அது அவரிடம் அபரிமிதமாக இருந்தது!

அதேசமயம், சாப்பிட உட்கார்ந்தவனை அதட்டி எழுப்புவார்- போய் கைகால் கழுவிட்டு வந்து சாப்பிடு!

இந்தக் கண்டிப்பும், ஒழுக்கமும்தான் அவரை எல்லோரிடத்தும் ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்லேயே வைத்திருந்தது போல!

சரி, நான் கிளம்பறேன் அப்படின்னு பையை எடுக்கப்போகும்போது, இருங்க மாமா ப்ளீஸ், லட்சுமி தியேட்டர்ல மிருதங்கச் சக்கரவர்த்தி, நைட் ஷோ கூட்டிட்டுப்போங்க.

எத்தனை முக்கியமான வேலை இருந்தாலும், சரி மாப்ள என்று ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு ராத் தங்கிவிடுவார்!

சினிமா, அதுவும் சிவாஜின்னா அவருக்கு உயிர்!

படம் பார்ப்பது மட்டுமல்ல, அதை அணு அணுவாய் சிலாகித்து விமர்சிப்பதில் மன்னன்!

நாமக்கல் போனாலும் இதே கதைதான்!

அத்தையிடம் சொல்லிக்கொண்டு ஊருக்குக் கிளம்பி பஸ்ஸ்டாண்ட் போற வழில மெடிக்கல் ஷாப்ல மாமாகிட்ட சொல்லிட்டுப் போலாம்ன்னு வருவோம்!

கல்லாவிலிருந்து இறங்கிவந்தவரிடம், மாமா, ஊருக்குப் போய்ட்டுவர்றேன்,

உனக்கு திங்கட்கிழமைதானே ஸ்கூல்? இப்போ என்ன அவசரம்? வீட்டுக்குப் போ! நான் சாயங்காலம் வர்றேன் பேசிக்கலாம்!

இன்னொருநான் இருந்துவிட்டே கிளம்பணும். வேறு வழியே இல்லை!

அவருடைய உண்மையான வெற்றி அவருடைய குழந்தை வளர்ப்பு!

இன்னும் ஒரு விஷயம், பசுமையாக நியாபகம் இருக்கிறது

நாமக்கல் க்ளப்பில் சீட்டாட வந்த யாரோ, போலிஸைப் பார்த்தோ என்னவோ, குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துபோன கட்டுப்பணம், அவர் மூத்த மகன் கையில் கிடைக்கிறது! அன்றைய காலகட்டத்தில் அது மிகப்பெரிய தொகை! அந்த வயதில்,  கொஞ்சம்கூட யோசிக்காமல் அதை அப்படியே போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு கொடுத்து வந்த நேர்மை - அவர் சொல்லிக்கொடுத்து வளர்த்தது!

இன்றைக்கு கடமைகள் எல்லாம் முடித்து, நிம்மதியாக, அமைதியாக வசிக்கும் செல்வத்தின் அந்த சிஸ்டமும்கூடவஅவர் சொல்லிக்கொடுத்ததாகத்தானே இருக்கும்? - அது எனக்கெல்லாம் கனவில்கூட வராது!

சந்தோஷ் கல்யாணத்தில் குழந்தைகளோடு கூத்தடித்துக்கொண்டிருந்த என்னை கூப்பிட்டு செல்வம் சொன்னது " தங்கா, நீ இன்னும் வளரவே இல்லை" உண்மைதான் செல்வம்! 😄 இதற்கான காரணம் என் அடுத்த பதிவில்!

அவர் வாரிசுகளுக்குள் இருக்கும் அந்த சிஸ்டம், ஒழுக்கமுறைகள், எளிமை, சட்டென்று நெகிழ்த்தும் அன்பு  இவைதான் அவர் சேர்த்துவைத்த அழியாப் பெரும் சொத்து!

ஆனால், வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பாராட்டு அவரிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கிறது!

அவருக்கு அப்பாவை எல்லோரையும்விட கொஞ்சம் அதிகம் பிடிக்கும்! S.S. என்றழைத்து அவர் பேசும்ம” தொனியிலேயே அது வழியும்!

என்னை ஒரு வயதுக்குமேல் S.Tன்னுதான் கூப்பிடுவார்! என்னை அப்படிக்கூப்பிட்ட ஒரே ஜீவன் அவர்தான்!

ஏனோ, மைத்துனன் மேல் வைத்த அன்பை அப்படியே என்மேல் காட்டுவார், அடிக்கடி அவர் சொல்வது, " SSக்கு அப்புறம் அதே அன்பும் பாசமும் ST கிட்டத்தான் இருக்கு!

இதை என் காதுபடவே பலரிடமும் சொல்லியிருக்கிறார்! என் வாழ்நாளில் நான் பெற்ற வெகு உயரிய பாராட்டு, SR மாமாவிடமிருந்துதான்!

இவருக்கும், அப்பாவுக்கும்,  அடுத்ததாக நான் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளப்போகும் இன்னொருவருக்கும் மூவருக்குமான ஒரு ஒற்றுமை,  தங்கள்  வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத, அல்லது முயலாத, கொஞ்சம் கற்பனாவாதிகள்! அன்பைக்கூட முழுமையாய் எக்சிபிட் செய்யத் தெரியாதவர்கள்!

மாமாவைப்பற்றி  சொல்லிவிட்டு, அந்த அன்புருவைப்பற்றி சொல்லாவிட்டால் எப்படி?


என்
தகப்பன், பெரியப்பா, சித்தப்பாக்கள் வாங்கிவந்த வரம் மிகப்பெரியது!
எங்களைப் பொறாமைப்பட வைக்கும் பெரும் சொத்து அது!

ராமாயம்மாள் இன்னுமே செத்துப்போகவில்லை! தன் கண்டிப்பையும், நிர்வாகத் திறமையையும், உள்ளுறை அன்பையும் மூத்த மகளுக்குக் கொடுத்துவிட்டு அன்பையும் அக்கறையையும் மற்ற மகள்களுக்கு பிரித்துக் கொடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்!

ஃபோனை கையில் வாங்கியதும் சொல்லாயா, நல்லா இருக்கியா?”ன்னு கேட்கும் தொனியிலேயே மனம் நெகிழ்ந்துபோகும்! கூடப் பிறந்தவர்கள், அவர்கள் வாரிசுகள் மீது அத்தனை பாசம்! எனக்கும் எல்லா அத்தைக்கும், இருந்த பிணைப்பு கொஞ்சம் ஸ்பெஷல்! கையைப்பிடித்துக்கொண்டு, நல்லா இருக்கியா சாமி என்று கேட்கும் அந்த வார்த்தைக்கே அவர் இன்னும் நூறு வருஷம் எங்களோடு  இருக்கணும்!

சிரிக்கும்போது மூக்குத்தியும் கூடவே சிரிக்கும் பேரழகி எங்க அத்தை. அண்ணன் தம்பிகள்ன்னா உயிர். மற்றவர்கள் எல்லோருமே கொஞ்சம் கம்மிதான்!

அப்பா படுத்த படுக்கையாக இருக்கும்போது, இங்கே வந்து தங்கியிருந்த நாட்களில், எந்நேரமும் அண்ணன் கையை எடுத்து கைக்குள் வைத்துக்கொண்டே உட்கார்ந்திருப்பார். அம்மாவுக்கு அவ்வப்போது ஆறுதலாக அவர் கூடவே போவார், அண்ணனுக்கு சரியாயிடுமல்ல சாமின்னு உண்மை தெரிந்தும் ஏக்கமாய் கேட்பார், நம் முன்பாக கண் கலங்கமாட்டார், தூரத்தில் போய் கசியும் கண்ணை துடைத்துக்கொண்டு நகர்வார்!

அண்ணனுக்கும் தங்கைக்கும் பேசாமலே ஒரு  உரையாடல் கண்வழி நடக்கும். அரைத்தூக்கத்தில் எழுந்து பார்க்கும்போது அண்ணன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பார்!

நடுராத்திரி ஆச்சு அத்தை, வாங்க, தூங்கப்போலாம் என்று வலுக்கட்டாயமாக ரூமில் கொண்டு விட்டால், அரைமனசாக எழுந்து வருவார்! காலை  முதல்வேலை, எழுந்து வந்து அண்ணன் முகம் பார்ப்பது!

பாண்டமங்கலத்தில், சின்னஅத்தையோடு உட்கார்ந்து கேலியும் கிண்டலுமாக பேசி சிரிக்கும்போது அத்தனை மகிழ்ச்சி வழியும் அந்த முகத்தில்- சிணுங்கலும் சந்தோஷமுமாக

இத்தனை வருடத்தில், யாரைப்பற்றியும் எந்தக் குறையும் இதுவரை சொன்ன்னதில்லை. கொஞ்சம் வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தாலும் யாரைப் பார்த்தாலும் முகம் மலர புன்னகையோடு வா சாமி என்று கூப்பிடும்போது  வருத்தம் காணாமல் போய்விடும்!

அதிர்ந்து பேசத் தெரியாத அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்குள் முழுக்க நிரம்பியிருப்பது கனிவும் பொறுமையும்

சமீபத்தில் உடல் நிலை சற்றே பாதிக்கப்பட்ட அவரை வீடியோ காலில் பார்க்கும்போது  கொஞ்சம் சுருக்கென்று குத்தியது

லாக் டவுன் அச்சுறுத்தல்கள் முடிந்ததும் முதலில் அத்தையைப் போய் பார்த்துவரவேண்டும் - இது இப்போதைக்கு இன்னொரு பிரசவ வைராக்கியம்! 

இன்னும் உங்களோடு உட்கார்ந்து கதைக்கவேண்டியது ஏராளம் இருக்கிறது அத்தை, மரியாதையாக உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்!🙏🏻🙏🏻கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக