பாண்டியனின் ராஜ்ஜியத்தில் ....
இதை படிக்க ஆரம்பிக்குமுன்
ஒரே ஒரு கேள்வி.
ப்ரேக்ஃபாஸ்ட்க்கு
நீங்க என்ன சாப்பிடுவீங்க?
கேசரி, ஜாமூன், இட்லி, தோசை, கிச்சடி, பூரி, சட்னி, சாம்பர், உருளைக்கிழங்கு மசாலா,
மெதுவடை, வாழைக்காய் பஜ்ஜி இதில் எதெல்லாம்?
இதைப்பற்றி பிறகு
பேசுவோம்!
இப்போ, முதலில் பாண்டியன் சித்தப்பா!
இவரைப்பற்றி சொல்லும்போதே
யாருக்கும் குரலில் ஒரு உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். அத்தனை ஸ்வாரஸ்யமானது அவரது இளமைக்காலம்!
ஒருவகையில்,
மறைமுகமாக என்னைச் செதுக்கியவர்களில்
முக்கியமானவர்!
குடும்பத்தில் கடைக்குட்டி!
நாலு அக்கா, மூணு அண்ணன் என்று
ஏழுபேருக்குப் பின்!
ஆரம்பத்திலிருந்தே தன் மனம் சொன்னபடி வாழ்ந்து பார்த்தவர்!
எல்லோருக்கும் பாண்டியன்,
ஆயாவுக்கு மட்டும் கடைசி வரைக்கும்
ஜெகநாதன்! ஏனென்றால், அது அவர் வைத்த பெயர்,
இது இவர் வைத்துக்கொண்ட பெயர்!
மூத்தவர்கள் மூன்றுபேரும்
கெட்டியாகப் பிடித்துக்கொண்ட படிப்பைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்ந்து
பார்த்தவர்!
ஜெகநாதனில் ஆரம்பித்து,
பாண்டியனாக மாறி, மீசைத் தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கும்
இவரிடம் சொல்ல ஏராளமான சுவாரஸ்யமான கதைகள் உண்டு!
சின்ன வயது சினிமா,
நாடகக் கனவுகள், பவர்லூம், விவசாயம், ஃபைனான்ஸ், வெல்ல வியாபாரம், தியேட்டர் கேண்டீன்,
காகித ஆலை காண்ட்ராக்ட்,
சென்னையில் வாழைக்காய் மண்டி
என எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்! எனக்குத் தெரியாததும் விட்டுப்போனதும் இன்னும்
இருக்கலாம்! ஒரு காட்டாறு போல ஓடிக் களைத்தவர். ஜெயித்தாரா என்றால், கண்டிப்பாக ஆமாம் என்றுதான்
சொல்லவேண்டும்!
வாழ்க்கைப் போக்கில் எல்லோரும் போக, தன் போக்கிற்கு வாழ்க்கையை
வளைக்கப் பார்த்தவர்! இதுதான் இவரிடம் எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு!
எல்லோரும் ஒரு வட்டத்துக்குள்
பாதுகாப்பாக விளையாடிக்கொண்டிருந்த வாழ்க்கை விளையாட்டை, ஒரு ஜாலியான பயண அனுபவமாக மாற்றி அனுபவித்தவர் - அதற்கான விளைவுகளையும்!
பத்து வயது வரை அம்மாயி,
சித்திகள் என்று பெண்களால்
பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்டு, எதைக் கண்டாலும் பயம்
என்று வாழ்ந்தவனுக்கு பாண்டியன் சித்தப்பா ஒரு அதிசயம்!
புல்லட் பாண்டி என்று
அவருக்கு ஒரு பெயர் இருந்தது அப்போது!
அந்த வண்டிக்கும்
அவருக்கும் அப்படி ஒரு பொருத்தம்!
அவ்வளவு பாந்தமாக
இருக்கும் அவர் அந்த வண்டியில் வருவது! வயதாகித் தளரும்வரைக்கும் அதே கம்பீரத்தோடே
வாழ்ந்தவர்!
அவரைப்பார்த்து வண்டி
கற்றுக்கொள்ள ஆசைப்பட்டபோது, உடனே ஒரு ஆளை ஏற்பாடு
செய்து எனக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் வண்டி கற்றுக்கொடுத்தவர்! அப்போதிருந்தே அவருக்கு
எங்கள் இரண்டுபேர் மேல் ஒரு தனி பிரியம். அண்ணன் மகன்கள் எல்லோருமே தன் மகன்கள்! அதில்
இந்த இரண்டுபேரும் கொஞ்சம் அதிக ஸ்பெஷல்!
முரட்டு மீசை வைத்திருந்த
அன்புக்குழந்தை அவர்!
ஏனென்றே தெரியாமல்
இடையில் கொஞ்சம் விலகல் வந்தபோதும், எப்போது, எங்கு பார்க்க நேர்ந்தாலும்
கையைப்பிடித்து, பேச ஆரம்பிக்கும்போதே,
கண்களில் நீர் முட்டும்,
குரல் தழுதழுக்கும்!
யாருக்கு என்ன பாதிப்பு
வந்தாலும் மனம் தாங்காது- ஆனால் அதை வெளியே காண்பித்துக்கொள்ள வெட்டி வீம்பு இடம் தராது!
அக்கா, அண்ணன் எல்லோர் மேலும் வெளிச்சம்
போட்டு காட்டிக்கொள்ளாத அன்பு!
முரண்பாடுகள் இருந்தாலும்
அதை ஒருநாளும் அவ்வளவு நெருக்கமாக
இருந்த என்னிடம்கூட வாய்விட்டு சொன்னதில்லை!
நாமாக தெரிந்துகொள்ளக்
கேட்டாலும், அதை விடுடா,
என்ன சாப்பிடறே என்று பேச்சை
மாற்றுவாரே ஒழிய, இன்றுவரை யாரைப்பற்றியும்
ஒரு வார்த்தை அவர் வாயால் குறை சொன்னதில்லை! பிடிக்காமல் விலகிப் போனாலும்,
பாசம் கொஞ்சமும் குன்றியதில்லை.
எதுவுமே நடக்காததுபோல, ஏதோ நேற்று விட்டுப்போன
உரையாடலைத் தொடர்வதுபோல் இருக்கும் அவர் பேசுவது!
குழந்தைகளோடு இறங்கிவந்து
பேசுவது ஒருவகை. அது எல்லோரும் செய்வது. குழந்தையாகவே மாறி அவர்களோடு விளையாடுவது இன்னொருவகை! சித்தப்பா
இரண்டாவது வகை! குழந்தைகளோடு பேசும்போது ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார்!
எப்போது பேசினாலும்
உற்சாகமாகப் பேசவும், செய்டா பார்த்துக்கலாம் என்று
தட்டிக்கொடுக்கவும் தெரிந்த ஆத்மா!
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ஒரே நாளில் அனைத்தையும் உதறி, சைவப்பழமாக மாற பெரிய மனோதிடம் வேண்டும். அது அவரிடம்
இருந்தது!
எந்த வரையறைக்குள்ளும்
அடங்காத நவீன ஓவியம் அவர்!
வாழ்க்கையில் தொடர்ந்து
தோல்விகள், இடர்கள் வந்தாலும்,
அடுத்து என்ன என்று கடந்துபோகும்
அந்த மனோதிடம் அவரிடம் நான் கற்றது!
யாரோ ஒருவரை ரோல்மாடலாக
எடுத்துக்கொள்ளும் பதின்ம வயதில் பெரும்பாலும் அப்பா அம்மா தவிர, அவரைப் பார்த்து வளர்ந்ததால்
அவர் குணங்கள் என்னுள் விதைக்கப்பட்டது தவிர்க்க இயலாதது!
ரொம்ப நாளாக ஒரு கவலை
இருந்தது எனக்கு. சென்னையில் பல குடும்ப நிகழ்ச்சிகளில் சூழ்நிலை காரணமாக கலந்துகொள்ள
முடியாது போனது, மேலும் சித்தப்பா
சித்தி, தம்பிகள் என்று பலரையும்
பார்த்து பலநாட்கள் ஆகிவிட்டிருந்தது என!
என்றாவது எல்லோர்
வீட்டுக்கும் ஒரு விசிட் போய்வரவேண்டும் என்று உறுத்திக்கொண்டே இருந்தது! அதற்கான காரணம்
ஏதும் கிடைக்காத நிலையில், இந்தக் கொரோனா வந்து
உலகத்தை முடக்கிப்போடுவதற்கு சில மாதங்கள் முன்பு, திடீரென்று ஒரு ஞாயிறு சென்னை புறப்பட்டுப் போய்
எல்லோரையும் பார்த்துவிட்டு வரத் தோன்றியது.
என் எல்லாக் கிறுக்குத்தனங்களுக்கும்
எனக்கென்று அகப்பட்ட தமிழ்செல்வனிடம் இந்த யோசனையைச் சொன்னபோது,
எதுக்கு இப்போ திடீர்ன்னு?
நான் மட்டும் போகல,
நீயும்தான் வர்றே
என்ன காரணம்?
சும்மா, எல்லோரையும் பார்த்து வருடக்கணக்கில்
ஆச்சு. அதனால் ஒரு ஃப்ளையிங் விசிட்! சனி இரவு புறப்படுவோம், நேராக மாரிஸ் போய் குளிச்சு
பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு, அங்கேயே ஹவர் பேசிஸ்ல
ஒரு வண்டி எடுத்துப்போம்! கரெக்ட்டா ஒன்பது வீடு, வீட்டுக்கு அரை மணி, ட்ராவல் டைம் எல்லாம் கணக்குப் போட்டாலும்,
இரவு ட்ரெயின் பிடிச்சு வந்துடலாம்!
எதுக்கு வந்தீங்க
இவ்வளவு டைட் செட்யூல்லன்னு யாராவது கேட்டால்?
உண்மையைச் சொல்லுவோம்,
உங்களையெல்லாம் பார்க்கனும்போல
இருந்துச்சு, அதுதான் வந்தோம்ன்னு!
வேறு வழி?
சரி என்று சொன்ன தமிழ்செல்வனிடம்,
நாம் வருவதைப்பற்றி யாருக்கும் சொல்லவேண்டாம்! தேவையில்லாத
சமையல், சிரமங்கள் எதற்கு?
சரி, சரி என்று சொன்னவன்,
சித்திக்கு மட்டும் போன் பண்ணி
சொல்லியிருக்கிறான்.
மறுநாள், எனக்கு அழைப்பு, ப்ரோக்ராம்ல ஒரு சின்ன மாறுதல்
செஞ்சுக்கலாமா?
நம்ம வீடு இருக்க,
ஹோட்டல்ல ஏன் தங்கணும்,
நேரா வீட்டுக்கு வந்துடுங்க,
இங்கே குளிச்சு, சாப்பிட்டுட்டு கிளம்பிடலாம்ன்னு
சித்தி சொன்னாங்க!
அவங்களுக்கு எதுக்கு
சிரமம்?
இப்படியெல்லாம் ஃபார்மலா
பேசமுடியும்னா எதுக்கு போகணும்?
சரி! செய்வோம்,
அங்கே கொஞ்ச அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்.
இப்போ, முதலில் கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லுங்க!
ப்ரேக்ஃபாஸ்ட்க்கு
நீங்க என்ன சாப்பிடுவீங்க?
அன்றைக்கு சித்தி
வீட்டில், சத்தியமாக,
அந்த லிஸ்டில் இருந்த
அத்தனையும், கூடவே கொதிக்கக் கொதிக்க
ரெண்டு டோஸ் ஃபில்டர் காஃபியும் நாங்கள் போய் இறங்கிய அந்த அதிகாலை நேரத்தில் தயாராக
இருந்தது!
அதில் ஏதாவது சொல்ல
விட்டுப்போயிருக்கலாம், ஆனால், அந்த லிஸ்டில் இருந்த எல்லாம்,
வயதை மறந்து, பசங்க வர்றாங்க அப்படின்ற
ஒரு சந்தோஷத்தில் தன்னந்தனியே சுடசுட செய்து வைத்திருந்தார்கள் சித்தி!
வேலூர் வீட்டில் வேண்டாம்
வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல தட்டில் அடுக்கிய குணம் இத்தனை வருடம் கழித்தும் மாறவில்லை!
இதையெல்லாம் இந்த
வயதில் பெருமைக்கு செய்யமுடியாது - அதுவும் மகன்களுக்கு! ரொம்ப நாள் கழிச்சு மகனுக
வர்றாங்க அப்படின்ற உணர்வு இயக்கியிருக்கிறது அவர்களை!
பல் தேய்த்து வந்ததும்,
எனக்குப் பிடித்த சூட்டில், அளவில் காஃபி!
தங்கம், முதல்ல காஃபி குடிச்சுட்டு,
சித்தநேரம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்துட்டு,
குளிச்சுட்டுவாங்க,
தோசை மட்டும் சூடா ஊத்தித்தர்றேன்!
எனக்கு நினைவு தெரிந்து,
இன்றைக்கும் அந்தத் தங்கம்ன்ற
வார்த்தை மாறியதில்லை!
உள்ளூரில் இருந்த
மருமகப்பிள்ளைக்குக்கூட ஒரு வேளைக்கு இத்தனை செஞ்சு போட்டிருக்க மாட்டார்கள்!
அந்த அன்பும்,
அக்கறையும் சொன்ன ஒரு முக்கியமான
சேதி, நடுவில் எத்தனை பக்கங்கள்
காணாமல் போனாலும், என் இடம் கொஞ்சம்கூட அவர்கள் மனதில் இறங்கவில்லை என்பதுதான்!
சித்தப்பா திரு. VM
கூட, வாரம் ஒருமுறையாவது அலைபேசியில்
பேசிவிடுவது என் வழக்கம்!
அவருக்கு எப்போதுமே
மாமா KS அவர்கள்மீது பெரிய
மரியாதையும் உயர்வான அபிப்ராயமும் உண்டு.
போனவாரம் பேசிக்கொண்டிருக்கும்போது
எதேட்சையாக சொன்னார்! “பாண்டமங்கலம் மாமாவை
நினைக்கும்போதெல்லாம், அவர் பொண்ணுக நியாபகம்
வராம இருக்கறதில்லை! அப்படி வளர்த்திருக்கிறார் அவங்களை,அத்தனை கரிசனமும், சாமர்த்தியமுமாக!”
(அவர் மேற்கொண்டு குறிப்பாக
ஒருவரை சிலாகித்து சொன்னதை அவர் அனுமதி இன்றிப் பகிரமுடியாது)
அவரோடு பழகியோருக்குத்
தெரியும், முகஸ்துதிக்கு அவர்
எதுவுமே பேசமாட்டார்! He always calls a spade a spade. That is it. அப்படிப்பட்டவர் வாயிலிருந்து
வந்த வார்த்தைகள் உண்மையாக மட்டுமே இருக்கமுடியும்
அத்தனைபேரும் அப்படியே
சின்னத்தையின் மறுவடிவம்! அதில் இவர் எனக்கு சித்தி என்பது இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா
அன்பு!
அத்தையிடமும்,
ஆயாவிடமும் கற்றுக்கொண்ட சடங்கு
சம்பிரதாயங்கள். இன்றைக்கும் குடும்பத்தில்
எந்த விசேஷத்திலும் என்ன சந்தேகம் வந்தாலும், கீதாவைக் கூப்பிடு என்ற சத்தம்தான் கேட்கும். எல்லாக்
கேள்விகளுக்கும் பதிலும் விளக்கமும் அவரிடம் இருக்கும்.
தாத்தாவின் இறுதி
மாதங்களில் அவர் காட்டிய கனிவும் அன்பும் பொறுமையும்
அக்கறையும் போற்றுதலுக்குரியவை!
இத்தனை வருடங்களில்
எத்தனை இணக்கமும், பிணக்குகளும் குடும்பத்துக்குள்
இருந்தாலும், எவ்வளவு கோபம்,
ஆதங்கத்தோடு பேசினாலும்,
என் பையன்தானேடா நீ என்ற வார்த்தையை
சொல்லாமல் பேசியதில்லை சித்தி!
வேலூரில் எனக்குப்
பிடித்தது என்னவென்று எடுத்து ஒளித்துவைத்தாவது கொடுத்த அந்த நேசம் இன்றைக்குவரை ஒரு
துளியும் மாறவில்லை என்பது மறுக்கமுடியாத நிஜம்!
கொரோனாவின் போன அலையில்,
ஏறத்தாழ முடிந்து மீண்டபோது,
யார் மூலமாகவோ கேட்டு,
போனில் அவர் அழுத அழுகை,
அந்த நிமிடம்வரை அந்த விஷயமே
தெரியாமல் இருந்து, சித்தி பேசும்போது
போனைப் பிடுங்கி சித்தப்பா விட்ட கண்ணீர் இதெல்லாம்தான் எனக்கு மிகப்பெரிய சொத்து!
பள்ளி விடுமுறைக்கு
வேலூர் போனால், கடைசி நாளில் வேறு
வழியில்லாமல் ஊருக்குக் கிளம்பும்போதும், சித்தி கையைப் பிடித்துக்கொண்டு தயங்கித் தயங்கி நிற்பதுபோல்தான்
அன்றைக்கும் ஆனது, இனி என்றைக்கு போனாலும்
ஆகும்! ஏனென்றால், சிலருடைய அன்புக்கு
விளக்கங்களும், காரணங்களும் தேவையே
இல்லை!
மூன்று பெண்களையும்
கரையேற்றி, பேரன் பேத்திகளுக்கே
கல்யாணம் ஆகிவிட்ட போதும், சித்திக்கு இன்னும்
நான் தங்கம்தான்! சித்தப்பாவுக்கு நெருக்கமான பிள்ளைதான்!
அந்த அன்பு, முடிந்தால், ராத்திரி போறதுக்கு முன்னால் வந்து சாப்பிட்டுட்டுப்
போங்க ரெண்டுபேரும் என்ற அன்பான குரலில் இன்னும் காதுக்குள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது!
❤️😎👍🙏
பதிலளிநீக்குYou deserve a clear and lively writer sir, b"cos you write with love and we lively feel it.
பதிலளிநீக்கு