வியாழன், 15 ஜூலை, 2021

செலின் என்றொரு சேட்டு மயில்!

 


"எரும, எப்படிடா இருக்கே?"

ஏறத்தாழ இப்படித்தான் ஆரம்பிக்கும் அவள் ஃபோன் கால்கள் எல்லாமே!

வருஷக்கணக்கில் பேசாமல் இருந்து கூப்பிட்டாலும் ஏதோ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால பேசினதோட தொடர்ச்சி மாதிரிதான் பேச்சு ஆரம்பிக்கும்!

கால ஓட்டத்தில் பேர் சொல்லிக் கூப்பிடவே ஆட்கள் இல்லாமலே போய்விட்ட நிலையில்,அநேகமாக என்னை டேய்ன்னு கூப்பிடறது இந்த ஒரு ஜீவன்தான் இன்னும்!

அதே அதிகாரம்உரிமை, நட்பு எல்லாமே குறையாமல் இருக்கும் குரலில்!

ஆனால், இப்போ நான் பேசவந்தது ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த வேறொரு ஃபோனைப்பற்றி!

செலின்!

ஈரோடு மாதிரி ரெண்டும்கெட்டான் ஊருக்கு இந்தப் பேரே ரொம்ப அதிகம்!

போடெரிக் ப்ரூக்ஸீல்ட்ஸ் ரெண்டும் சரியான விகிதத்தில்  கலந்த ஆறடி உயர மெழுகுச் சிலை!

குஜராத்லருந்து மடி நிறைய பணத்தை கட்டிக்கிட்டு ஈரோட்டுக்கு மைக்ரேட் ஆகிவந்த சேட்ஜி, வட்டிக்கு விட்டு வந்த காசுல ஊட்டி வளர்த்த மயில்.

சேட்ஜி வட்டிக்கடையை உபதொழில் ஆக்கிட்டு, டெக்ஸ்டைல் ப்ராசஸிங் யூனிட் ஆரம்பிச்சு, ஈரோடு சேம்பர் ஆஃப் காமர்ஸ்ன்ற ஒன்றரையணா அமைப்புக்கு தலைவர்!

 சேட்டு நாசமாய்ப் போகட்டும். செலினைப்பத்தி பேசுவோம்!

செலின்-எங்க காலேஜுக்குன்னு ஆண்டவன் அனுப்பி வெச்ச ஆசீர்வாதம்.

7A நிக்கறதுக்கு முன்னாடியே குதிச்சு அப்படியே மெதந்து வரும்போது எல்லாப் பயலுக மூஞ்சியிலும் பல்ப் எரியும்!

காலேஜுக்கே ஒரு பிரத்தியோக வெளிச்சம் வந்தமாதிரி இருக்கும்!

'வாய மூடுங்கடா, நுழையப்போகுது' சொல்லிக்கிட்டே படியேறும்போது பசங்க மனசு மாதிரியே தளும்பி வழியும்!

சரியான அளவெடுத்துச் செஞ்ச அரபிக்குதிரை!

அரை அங்குலம் கூடக் குறைய இல்லாத ஆரியச் சிலை!

போதும்! விட்டா அஞ்சு பக்கத்துக்கு வர்ணிக்கலாம்!

அவ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு!

ஆனால், தான் அழகி என்ற நினைப்பே கொஞ்சம்கூட இல்லாத சகஜ பாவம்தான்அவள் பேரழகு!

ஏய், உண்மையாவே நீ அழகுடி!

சரி, அதுக்கென்ன இப்போ?

இதுதான் அவள் சொல்லும் பதிலாக இருக்கும்!

சாரி, சுடிதார், ஜீன்ஸ் குர்த்தி, எதுவுமே அவ்வளவு பாந்தமாகப் பொருந்தும் உடல் வாகு!

அதுவும், அந்த அபாயகரமான இடுப்பு வளைவுல, நழுவிடுமோன்னு தவிக்கவிடறமாதிரி அவள் சேலைக்கட்டு காலேஜ் பிரபலம்!

உன் இடுப்பு எனக்கு பயங்கர டிஸ்டராக்சன்டின்னு சொன்னா, உன்னை யார் நாயே அங்கே பார்க்கச் சொன்னதுன்னு சிரிச்சுட்டே தற்காலிகமா சரி செஞ்சுக்குவா! அந்த சேலைக்கட்டு கூட இயல்பாகத்தான் இருக்குமே தவிர, கவர்ச்சியாக இருக்காது!

செக்யூரிட்டில இருந்து, கேண்டீன் உன்னி, பிரின்சிபால் வரைக்கும் எல்லோருமே அவளுக்கு ஃப்ரெண்டுதான்!

ஒருதடவை ஆர்கானிக் கெமிஸ்ட்ரி நடத்தும்போது லெக்சரர் சக்திவேல் இப்படியா அடக்கமில்லாம உட்காருவேன்னு கேட்கப்போக, கோபிச்சுக்கிட்டு எழுந்துபோனவ, பிரின்சிபால் ரூம்ல போய் அந்த ஆள் என்னை ஏன் சார் அந்த இடத்தில் பார்க்கறார்ன்னு ஒரே ரகளை!

வேற வழியே இல்லாமல் அனந்தபத்மநாப நாடார் அலையாஸ் ப்ரின்ஸி, கிளாஸுக்கே வந்து மத்தியஸ்தம் செஞ்சு, சக்திவேல் சாரி சொல்லி...

இது ஒரு சோறு பதம்!

கண்டிப்பா குஷி படம் எடுக்கறதுக்கு முன்னால எஸ் ஜே சூர்யா செலினை எங்கேயாவது பார்த்திருப்பார்!

அறுந்த வாலு!

காலேஜ்ல அவ இல்லாம கல்ச்சுரல்சே இல்லை.

அந்த வருஷம் காலேஜ் எலெக்சன்ல முகமது அலி, எங்க கேண்டிடேட்!.

இப்ப மாதிரி காலேஜ் எலெக்க்ஷன்ல, அரசியல் எல்லாம் எட்டிப்பார்க்காத ஆரோக்கியமான சூழல்!

பிட் நோட்டீஸ்ல, வகைதொகையில்லாம வாக்குறுதி!

சில்க் ஸ்மிதாவ காலேஜ் டேக்கு வரவைப்பேன்”,

ஸ்போர்ட்ஸ் டே க்கு கபில்தேவ்”,

ஆண்டுவிழாவுக்கு கலைஞர்

இப்படி!

முகம்மது அலிக்கு, டஃப் ஃபைட் கொடுத்த கந்தசாமிய, வெறும் குப்பைத்தொட்டியை வைத்து தோற்கடித்தது வரலாறு !

ரெண்டுபேருக்கும் ரொம்ப நெருக்கமான போட்டி!

ஆர்ட்ஸ் பசங்க கந்தனுக்கு தீயா வேல செய்யறானுக!

பொண்ணுங்க ஓட்டெல்லாம் கந்துக்குத்தான்டா!இது செலின் கொடுத்த வாக்குமூலம்!

அவனோட வாக்குறுதி, “கல்ச்சுரல்ஸுக்கு கமலஹாசன்”!

என்னடீ பண்ணலாம், நீயே சொல்லுன்னு கேட்டா, தேவதைக்கும் பதில் தெரியல.

முந்தையவாரம் செலின் ஏறத்தாழ கண்ணீரோட பொலம்புன, அப்ப சின்னப் பிரச்னைன்னு பட்ட, ஒரு விஷயம் சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு!

அலி பாய்கிட்ட ஐநூறு ரூபாய வாங்கிக்கிட்டு, செலினும் நானும் ஒரு ஆட்டோல டவுனுக்கு கிளம்பிட்டோம்!

அப்பல்லாம் டூ வீலர் ரொம்ப கம்மி!

நேரா ஃபேன்சி ஸ்டோர் போனவங்க, நல்லதா மூடி போட்ட  ஒரு ஆறு குப்பைத் தொட்டி, காலில் மிதித்துத் திறக்கற மாடல், வாங்கிக்கிட்டு, நேரா காலேஜ்!

எல்லா லேடீஸ் டாய்லட்லயும் ஒன்னொன்னு!

கமலஹாசனா, கன்வீனியன்சியான்னு செலின் போட்ட கோஷம், முக்கால்வாசி பொண்ணுக ஓட்டு அலி பாய்க்கு!

நான், துரை, ரமேஷ், கார்த்தி, மோகன், செலின், உமா, காயத்ரி!

நம்ம எல்லோரும் ஃப்ரெண்டஸ், கடைசி வரைக்கும்!

இந்த லவ் கன்றாவியெல்லாம் வேண்டாம்!

ஜாலியா ஊர சுத்துனமா, படிச்சமா, அப்பா அம்மா சொல்ற கிறுக்கனையோ, கிறுக்கியவோ கல்யாணம் பண்ணுனமான்னு இருக்கணும்!

இதுதான் ஒப்பந்தம்!

கடைசி வருஷம் பாதிவரைக்கும் ஒழுங்காத்தான் போச்சு!

ஒருநாள் உமாதான் மெல்லச் சொன்னாள்!

"நானும் கார்த்தியும் லவ் பண்றோம்!"

வழக்கமான சினிமாக்காதல்!

யார் சொன்னதும் காதுல ஏறல!

கார்த்தி டேய், நீ ப்ராமின் மாதிரியே இருக்கேன்னு உமா சொல்றாடா!

காயத்ரிதான் கேட்டா, “ஏன்டா எருமை! அதுக்கு அவ ஒரு ப்ராமின் பையனையே கட்டிக்கலாமேடா!

அதத்தானே அவங்க அப்பாவும் சொல்லுவாரு!

தினமும் எலும்பு கடிக்கறவன் நீ, அவ ரொம்ப ஆசாரமான ஐயர் பொண்ணுஏண்டா இந்த பாவமெல்லாம்னா, ரெண்டும் கோரஸா, கல்யாணத்துக்கப்புறம் அட்ஜஸ்ட்

பண்ணிக்குவோம்!

அதுக்கப்புறம் எல்லாமே வேகமா நடந்துச்சு!

அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு உமா காலேஜ் வர்றது நின்னுச்சு!

பத்துநாளா, கார்த்தி வெறிச்சுப் பார்த்துக்கிட்டே ஹாஸ்டல் ரூமே கதி!

இந்த நிலைலதான் வீட்டு நம்பருக்கு உமா ஃபோன்!.

விஷயத்தக் கேட்ட துரை, மத்த எல்லோரையும் கூட்டிக்கிட்டு வந்தான்!

விஷயம் இதுதான்!

இன்னும் ரெண்டு நாள்ள உமாவ பொண்ணு பார்க்க வர்றாங்க!

செலின் ஒருத்திதான் தீர்மானமாய்ச் சொன்னாள்!

விடுடா, எல்லாம் மறந்துபோகும்!

சைலண்ட்டா உட்கார்ந்திருந்த கார்த்தியப் பார்த்து துரை அலற, என்னன்னு பார்த்தா, பிளேடு எடுத்து கைல தாறுமாறா அறுத்து, ரத்தமா சொட்டுது!

இப்ப என்ன சொல்றேன்னா, இரக்கமே இல்லாம செலின் சொல்றா, “இவன் சாகமாட்டான்!

நீ ஒரு எமோஷனல் இடியட்!

இப்ப எதுவும் இதுக்கு சாதகமா முடிவெடுக்காதே!

அவ பேச்ச அப்படியே ஒதுக்கி, “கார்த்தி, நீ அவள உங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப்போயிரு"!

ஐயோ, எங்க ஐயன் கட்டிவெச்சு தோல உறிச்சுருவாரு!

அப்ப மூடிக்கிட்டுப் போய் படிக்கற வேலையப்பாரு! - இது செலின்!

எப்படியாவது எங்கள சேர்த்தி வெச்சுருடா!

இல்லாட்டின்னா, நான் செத்துப்போயிருவேன்!

“Bullshit! கல்யாணம் ஆனாத்தான் மெச்சூரிட்டியே இல்லாத நீ செத்துப்போவடா முட்டாளே!” - இது செலின்

 இள ரத்தங்கள் செய்த முட்டாள்தனமான கல்யாண ஏற்பாட்டில், இரண்டு குடும்பமும் குலைந்தது

கல்யாணத்துக்குப்பின் வந்த திடீர் சுமையில் குறைகள், கலாச்சார முரண் எல்லாம் பெரிதாகத் தெரிய, ஓயாத சண்டையில்,மூன்றாவது மாதம், கார்த்தி விஷம் குடித்து செத்துப்போனான்.

உமா?

பெருந்தன்மையான அத்தை மகனை அடுத்தவருடம் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியா போனாள்!

இந்தக் கல்யாண ஏற்பாடு எதிலும் பட்டுக்கொள்ளாத செலின்தான் உமாவுக்கு தைரியம் சொல்லி கூட இருந்தா!

எல்லாவிஷயத்திலும் அந்த வயதிலேயே அத்தனை தெளிவு!

வருடத்துக்கு நான்கைந்துமுறை வெள்ளைத் துணி உடுத்தி, வாயில் வெள்ளை துணி கட்டிக்கிட்டு ஜெயின் துறவிகள் பாதயாத்திரையா வருவாங்க! திண்டல்ல இருந்து அவங்களோட ஒரு பெரிய நார்த் இண்டியன் கூட்டம் நடந்து வரும்! அதில் பக்திப்பழமா செலின்!

என்னடி, இது உன் கேரக்டருக்கே ஒட்டலையே?

என்னடா செய்ய, இல்லாட்டி சோறு கிடைக்காதே!

உங்க தமிழ் சினிமா காதல் மாதிரி இவங்க செய்யறதெல்லாம் அத்தனை கிரிஞ்மெட்டீரியல்!

என்ன செய்ய, பக்தி முகமூடி போட்டுக்கிட்டா எல்லா அபத்தமும் கேள்விக்கு அப்பாற்பட்டதுதானே?

ஊரெல்லாம்  கொண்டாடிய மரோ சரித்ராவை பிராக்டிகல் க்ளாஸ் கட் அடிச்சுட்டு போய் பார்த்தபோது க்ளைமாக்ஸ்ல செலின் சத்தமா சிரிச்சுக்கிட்டு அடிச்ச கமெண்ட்டை இங்கே சொல்லமுடியாது!

ஒருநாள் திடீர்ன்னு கேட்டா, டேய், பொண்ணுங்களுக்கு ஒரு சிகரெட் வந்திருக்காமே, MSன்னு, கெடச்சா ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா!

எதுக்குடி?

சும்மா, ட்ரை பண்ணிப்பார்க்கலாமே, அப்படி என்னதான் இருக்குஅந்த கருமம் பிடிச்ச சிகரெட்ல?

கேட்டது செலினாச்சே?

அலைஞ்சு திரிஞ்சு, காலேஜ் ஹவுஸ் பக்கத்துக்கு பெட்டிக்கடைல வாங்கிட்டு வந்து கொடுத்தா, ஒன்னை எடுத்து பத்தவச்சு ரெண்டுஇழுப்பு!

அவ்வளவுதான்!

எப்படிடா குடிக்கறானுக இந்தக் கருமத்தையெல்லாம்!

அன்னைக்கு முழுக்க பபுள்கம், பாக்கு, பீடா எல்லாம் மென்னு, டேய், வாயில சிகரெட் நாத்தம் வருதா பாரு!

இந்த பாக்கெட்டை என்னடி பண்ண?

ம், தொரைசாமிக்கு கொடு, நான் கொடுத்தேன்னு. சாமி படத்துக்கு பின்னாடி வெச்சு பூஜை பண்ணுவான்!

செகண்ட்இயர் படிக்கும்போது துரை தைரியமா அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணினான்!

செலின், லவ் யூ!

சரி, பண்ணிக்கோ!

என்னடி இப்படி சொல்றே?

வேறென்ன சொல்ல?

எனக்கு மீசையில்லாம மழுங்க செரைச்சுக்கிட்டு எவனாவது ஒரு பீடா சேட் குதிரைல வருவான்! அவனைத்தான் நான் கட்டிக்கப்போறேன்! நீ பாட்டுக்கு இப்படி ஓரமா உட்கார்ந்து என்னை லவ் பண்ணிக்கோ, எனக்கென்ன?

இப்படி கொடிமாதிரி இருக்கற சேட்டுப்பொண்ணுக கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி ஆவாங்கன்னு பார்க்கணுமா, என் வீட்டுக்கு வா, எங்க அம்மாவைப்பாரு!

நெய்யும் ஸ்வீட்டுமா உக்கார்ந்துக்கிட்டே தின்னு பீப்பாய் மாதிரி ஆயிடுவேன்! பரவால்லியா? வெறும் செகப்புத் தோலுக்கு ஏன்டா இப்படி வழியறீங்க!

மேற்கொண்டு பேச அவனுக்கென்ன பைத்தியமா?

ஒருநாள் தனியா இருக்கும்போது கேட்டா,

டேய், எனக்கு சிக்கன் பிரியாணி வாங்கித் தர்றியா?

வாங்கித் தர்றதா, வா, மரப்பாலம் மெஸ்ல போய் சூடா சாப்பிட்டுட்டே வரலாம்!

முட்டாக்கம்மினாட்டி, எவனாவது பார்த்தா என்ன ஆகறது?

எங்க வீட்ல வெங்காயம் பூண்டே ஆகாது! எங்க அப்பனுக்குத் தெரிஞ்சா, உயிரோட எரிச்சுடுவாரு!

சரி விடு, எங்க அம்மாவை செஞ்சு தரச் சொல்லி டப்பால எடுத்துட்டு வர்றேன்!

வந்து எல்லார் முன்னாடியும் பப்பரப்பேன்னு நீட்டித் தொலைக்காத!

அடுத்தநாளே காலேஜ் பிள்ளையார் கோவிலுக்குப் பின்னாடி உட்கார்ந்து ஒரு டப்பா பிரியாணியையும், கண்ணில் தண்ணி வர நைஸ், நைஸ் ன்னு சொல்லிக்கிட்டே தின்னு முடிச்சுட்டா!

அதுக்கப்புறம், வாரம் ஒருநாள் டிபன் பாக்ஸ் கொண்டுவந்து கொடுப்பது வழக்கமாய்டுச்சு!

ஒருநாள் அப்படி பிரியாணி சாப்பிட்டுட்டிருக்கும்போதுதான் சொன்னா

எப்படியாவது காலேஜ் முடிக்கறதுக்குள்ள ஒயினோ, ஜின்னா வாங்கி குடிச்சுப்பார்த்துடணும்! உங்க சுஜாதா சொன்ன மாதிரி, எதையும் ஒருமுறை!

எதையும்ன்னா, எதையுமேவா?

சாப்பிடறதை நிறுத்தி ஒரு நிமிஷம் உத்துப்பார்த்தாள்!

திங்க் யூ ஆர் ஸ்ட்ரைட் பெர்சன்! நீ கேட்க வந்தது அதுதான்னா, என் பதில் இதுதான்!

என் வரைக்கும் பிரியாணின்னா, நீ டப்பால கொண்டுவர்றதுதான்! பிரியாணி இப்படித்தான் இருக்கும்!

நாலு பக்கம் சாப்பிட்டுப் பார்த்து, வேறு ஏதாவது நல்லா இருந்து தொலைச்சு, அந்த பிரியாணிக்கு மனசு ஏங்கக்கூடாது!

என் பிரியாணி வரும்போது நான் சாப்பிட்டுக்கறேன் -அதுதான் பெஸ்ட்ன்னு. புரியுதா?

அவள் பிரியாணி குதிரைல வரும்போது நான் சென்னைல டெலிஃபோன் டைரக்டரி வெச்சு டோட்டல் போட்டு பழகிட்டிருந்தேன்!

எலிமென்டரி ஸ்கூல், ஹை ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஒவ்வொரு ஊர்ல! அதனால,பால்ய நட்புன்னு ஒன்னு இல்லவே இல்லை!

செலினையும் நான் ரொம்பல்லாம் மிஸ் பண்ணாத அளவு சென்னை என்னை எங்கேஜ்டா வெச்சுக்கிச்சுன்னுதான் சொல்லணும்!

அதுக்கப்புறம் ரெண்டு மூணு வருஷம் இருக்கும்!

ஒருநாள் லீவ்ல கோவை எக்ஸ்பிரஸ்ல மூணு மணிநேரம் லேட்டா ஈரோடு வந்து, வெறுத்துப்போய், ஊருக்கு பஸ் பிடிக்கறதுக்கு முன்னால, காலேஜ் ஹவுஸ்ல ஒருகாஃபி குடிக்க உட்கார்ந்திருந்தபோது, எப்படிடா இருக்கே ன்னு முதுகுல ஒரு அறை!

வடிவம் மாறாம அதே செலின்!

காலம் அவள்வரைக்கும் உறைஞ்சு போயிருந்துச்சு போல!

கொஞ்சம்கூட மாறல!

என்னடி புதுசா தலைல சீலையை இழுத்து விட்டுக்கிட்டு?

ஆனா, இடுப்பு தெரியுதுதானே? அதை அப்புறம் சொல்றேன், அதுக்கு முன்னாடி,

சொல்லு, உன் கணக்குப்பிள்ளை படிப்பெல்லாம் எப்படி இருக்கு?

அது நாசமா போகட்டும், நீ எப்படி இருக்கே?

பார்க்கறியே, அப்படியேதான் இருக்கேன்! ஒன்னரை வயசுல ஒரு பையன்!

எப்படி இருக்கார் உன் பிரியாணி?

சீ நாயே, அங்கே பார், நாலு டேபிள் தள்ளி நம்மளையே குறுகுறுன்னு பார்த்துக்கிட்டிருக்கே அதுதான்!

ஹாண்ட்ஸம்மா இருக்காரு. ஹிருத்திக் ரோஷன் மாதிரி! வா அங்கே போலாம்!

இருடா, கொஞ்சம் தனியா பேசிட்டு அப்புறம் போலாம்!

சரி, சொல்லு, எப்படி இருக்கே? சந்தோசமா இருக்கியா?

சந்தோஷமா? வசதியா இருக்கேன்! அதுதான் சந்தோஷம்ன்னா, சந்தோஷமாத்தான் இருக்கேன்!

என்னடி இப்படி சொல்றே?

உன்கிட்ட உண்மையைத்தான்டா சொல்லமுடியும்? நீதானே என் க்ரைம் பார்ட்னர்?

என் பெண்டாட்டி பஸ்ஸில் போகக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே  கார் வாங்கிட்டான்.

எல்லா வேலைக்கும் ஆளு! ஆனா என்ன, எனக்கு வாய்ச்சது அக்மார்க் சைவ பிரியாணி!

கல்யாணம் ஆன மறுநாளே, நீ ஏன் தலைக்கு சேலையை இழுத்து விடறதில்லைன்னு கேள்வி!

இடுப்பு தெரியலாம், மயிரு தெரியக்கூடாது! அப்படி ஒரு கல்ச்சர் எங்களுது!

ஹைலி ரிலிஜியஸ்!

ஒரு கோட்டுக்குள்ள ஓடிட்டேருக்கோம் செக்கு மாடு மாதிரி!

நீ சொல்லு! மட்றாஸ்ல எவகூட சுத்திட்டிருக்கே?

சொல்றேன், ஒருநாள்!

எழுந்துபோய் கைகுலுக்கி பேசியபோது ஹிருத்திக் ரோஷன் கண்ல  பெருசா சிநேகம் தெரியல!

சரி, கிளம்பலாம், ஒருநாள் கண்டிப்பா வீட்டுக்கு வாடா!

திருநகர் காலனிதானே?

எங்க ஆளுக வேற எங்க இருப்பானுக?

காரை எடுக்க அவர் போனதும், கையைப்பிடிச்சுக்கிட்டு மெதுவான குரல்ல சொன்னா,

பேசாம காலேஜ்ல யாரையாவது லவ் பண்ணி ஓடிருக்கலாம்!

டிட் ரியலி மிஸ்ட் சம்திங்?

போடா,  உன்னைமாதிரி ஒரு சென்டிமென்டல் இடியட் எனக்கு செட் ஆகாது!

அதுக்கு தொரைசாமியை கட்டிக்கிட்டு எருமைச்சாணி அள்ள போயிருக்கலாம்!

உன் காண்டாக்ட் நம்பர் கொடு!

அதுக்குள்ளே கார் வர, ஏறி டாட்டா காமிச்சுட்டு போய்ட்டா!

அப்புறம் ஏறத்தாழ ஒரு பத்து வருஷம் தொடர்பே இல்லை!

திடீர்ன்னு ஒருநாள், ஃபோன்ல, “டேய், குள்ள மோகன் எங்க ஏரியா போஸ்ட்மாஸ்டர்! அவன்தான் உன் நம்பர் கொடுத்தான், எப்படி இருக்கே? கல்யாண இன்விடேஷன் கூட கொடுக்கல ராஸ்கல்!

பத்து வருஷம் முன்னாடி ஹிருத்திக் ரோஷன் ஹார்ட் அட்டாக்ல இறந்துபோனதும் லேட்டாதான் தெரியவந்துச்சு, இடையில் அப்பப்போ போன்ல பேசறதோட  சரி, நேரில் பார்க்க வாய்க்கவே இல்லை.

ஆறு மாசம் முன்னாடி செலின் இறந்து போனதும் கூட, பத்து நாள் கழிச்சு மோகன் போன் பண்ணி சொல்லித்தான் தெரிஞ்சது!

செலின் செத்துட்டாடா! அவ பையன் போஸ்ட்டாபீஸ் அக்கவுண்ட்க்ளோஸ் பண்ண வந்தவன் சொன்னான். வீடெல்லாம் வந்தவிலைக்கு வித்துட்டு அமெரிக்காவுக்கே போய்ட்டான்!

ஒருவழியா அந்த இழப்புக்கும் மனசு பழகி மறக்க ஆரம்பிச்சபோது மூணு நாளைக்கு முன்னே, ஞாயித்துக்கிழமை ஒரு போன், ஏதோ வெளிநாட்டு நெம்பர்ல இருந்து! சுத்தமான அமெரிக்கன் உச்சரிப்பில்,

"அங்கிள், செலின் பையன் பேசறேன், அமெரிக்கால இருந்து!"

உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?

சொல்லுங்க தம்பி, நல்லா இருக்கீங்களா?

இருக்கேன் அங்கிள்,

அங்கிள், அப்பா இருக்கும்போதே அம்மாதான் எனக்கு எல்லாமே!

அப்பா போனதுக்கப்புறம், அவங்கதான் என்னை இந்த அளவுக்கு கைபிடிச்சு கூட்டி வந்தவங்க! இன்னைக்கு நான் இங்கே சிட்டிசன்ஷிப் வாங்கிட்டு செட்டில் ஆக அம்மா மட்டும்தான் காரணம்! அவங்க ஏதோ ஒரு மனக்குறையோடே இருந்ததா எனக்கு பட்டுக்கிட்டே இருந்துச்சு! எத்தனை கேட்டும் என்கிட்ட

எதுவுமே சொல்லாம போய்ட்டாங்க!

அம்மாவோட கொஞ்சம் புக்ஸ் டைரி எல்லாம் அவங்க நியாபகார்த்தமா எடுத்துட்டு வந்தேன்!

சம்திங் ஸ்ட்ரோக் மீ!

அதில் ஒரு டைரி முழுக்க, BS, I might 've told you அப்படின்னு எல்லாப்பக்கமும் நெருக்கமா ஒரு லட்சம் தடவைக்குமேல் எழுதியிருந்துச்சு!

எனக்குத் தெரிஞ்சு, உங்களைப்பத்தித்தான் அம்மா நிறைய சொல்லியிருக்காங்க, உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னுதான்!

யார் அந்த BS அங்கிள்? அம்மா மனசுல அப்படி என்ன உறுத்தல் இருந்திருக்கும்?

ஒரு நிமிஷம் யோசிச்சு பதில் சொன்னேன்!

அது வேற ஏதும் இல்லை! பால சரஸ்வதின்னு ஒருத்தி எங்க க்ளாஸ்ல இருந்தா, அவகூட உங்க அம்மா ஏதோகாரணத்துக்கு கோவிச்சுட்டு பேசறத நிறுத்திட்டா, அதுவாத்தான்இருக்கும்.

அவங்க இப்போ எங்கே இருக்காங்க அங்கிள், ஏதாவது காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா?

ஸாரிப்பா, அவங்க ஒரு கார் ஆக்சிடெண்ட்ல ரொம்ப வருஷம் முன்னாடியே இறந்துபோய்ட்டாங்க!

ஸாரி அங்கிள்,  உங்கள அனாவசியமா தொந்தரவு பண்ணிட்டேன்!

கீப் இன் டச்!

போனை வெச்சு வெகுநேரம் ஆகியும் அந்த போன்காலில் கேட்ட செய்தியை நம்பவே முடியல!

இந்த விஷயம் எனக்கே பெரிய அதிர்ச்சி!

இதை அவன்கிட்ட எப்படி சொல்ல?

காலேஜ் நாட்கள்ல Black Stallion, கறுப்புக் குதிரைன்னு  பேர் வச்சு, BS ன்னுதான் செலின் என்னைக் கூப்பிடுவான்னு இப்போ அவன்கிட்ட சொல்லி மட்டும் என்ன ஆகியிருக்கப்போகுது?