திங்கள், 12 ஜூலை, 2021

முரண்பாடுகளின் மூட்டை - இணையம்!

 


எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்று தெரிந்தே சில சமயங்களில் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

கருத்துரிமைக் காவலர்கள்தான் இதற்கு முதலில் கம்பு சுத்தி வருவார்கள். இருக்கட்டும், பரவாயில்லை!

இணையத்தில் இருந்துகொண்டு, விமர்சிக்காமல் ஒதுங்குவது நியாயம் இல்லை! எனவே, இப்போதைய தலைப்புச் செய்திகள் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம்!

முதலில் 

இணையத்தில் சாதி!

சாதி வெறி என்றாலே இரண்டு சாதிகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்! அல்லது கொங்கு மண்டலம் பற்றி - தமிழகத்தில் வேறு எங்கும், யாரிடமும் சாதியே இல்லை என்பதால்!

ஒருநாள் இணையத்தில் இருந்து பார்த்தாலே கொங்கு மண்டலத்தில் அந்தக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தோரைத் தவிர மாற்று சாதியினர் எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலைவதுபோல் ஒரு பிம்பம் உருவாகிவிடும்!

சாதிப்பெயரையே தலைவர் பெயராக வைத்து, அதற்கு வருடம் தவறாமல் குருபூஜை நடத்துவதும், அதற்குப் போட்டியாக இன்னொரு தலைவருக்கு நினைவுநாள் அனுசரிப்பதும் ஆண்டு தவறாமல் சாதி ஒழிப்பையே உயிர்மூச்சாய்க்கொண்ட எல்லா அரசியல்கட்சித் தலைவர்களும் இரண்டு விழாக்களிலும் கலந்துகொண்டு உருகுவதும் கொங்கு மண்டலத்திலா நடக்கிறது?

எந்த மண்டலத்தில் ஒரு சாதித்தலைவருக்கு அதிக சிலை இருக்கிறது? அது ஏன் பல இடங்களில் இன்னொரு  சாதியினருக்கு பயந்து கூண்டுக்குள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கப்படுகிறது? கொங்கு மண்டலத்திலா?

ஒவ்வொரு குருபூஜையும் நினைவுநாளும் பதட்டமும் எப்போது வன்முறை நிகழுமோ என்ற அச்சமுமாகவே கழிவது கொங்குமண்டலத்திலா?

உருட்டுக்கட்டையும், வீச்சரிவாளும் எங்கள் சாதிப்பெருமை என்று யார் பேசுவது? கொங்கு மண்டலத்தானா?

தான் சார்ந்த சாதிக்காரனை கதை நாயகனாக்கி, அந்த சாதிப்பெருமையை அவர் வாயாலேயே வசனமாய் சொல்லவைத்து படம் எடுத்தது எந்த சாதி இயக்குனர்? அவருக்கு இருப்பதற்குப் பெயர் சாதிவெறி இல்லையா?

அந்தப்படத்தில் இன்னொரு கேரக்டர்! செருப்புத் தைக்கும் செங்கோடன்!

அந்தக் கதாநாயகன் வரும்போதெல்லாம் துண்டைக் கக்கத்தில் இறுக்கிக்கொண்டு கையெடுத்துக் கும்பிடுவது சாதி காரணமாக இல்லை எனில், ஏன் படத்தில் வரும் வேறு எந்தக் கேரக்டரும் அந்த ஹீரோவை அப்படிக் கும்பிடுவதாய் காட்டப்படவே இல்லை?

இன்னொரு படமும் வந்தது!

தனுஷ் நடித்து கொங்கு மண்டலத்தில் சக்கைப்போடு போட்ட படம் ஒன்று - எல்லோருக்கும் நியாபகம் இருக்கும் என்று நம்புகிறேன் - உத்தமபுத்திரன்!

அதில் அந்தக் குறிப்பிட்ட சாதிப் பெயரைச் சொல்லியே அத்தனை காட்சியமைப்புகளும்- மானாவாரியாக!

ஒரு சின்ன முணுமுணுப்புக்கூட இல்லாமல் ரசிக்கப்பட்டது அந்தப்படம்!

ஏதாவது ஒரு புரட்சிப்படத்தில், வேறு ஏதாவது ஒரு சாதிவெறி இல்லாத சாதி பற்றி இப்படி காட்சியமைப்பு வைத்து ஒரு காட்சி மட்டும் எடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

காட்டை வித்துக் கள்ளுக் குடிச்சாலும் ... என்றொரு வசனம் மிகப் பிரபலம்!

எங்கே, அப்படி ஒரே ஒரு வசனம், வேறு எந்த சாதியைப் பற்றியாவது எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்?

நான் கொங்கு மண்டலத்தில் சாதி இல்லவே இல்லை என்று சாதிக்கவரவில்லை!

எல்லா இடத்திலும் பார்த்தீனியம் போலப் பரவியிருக்கிறது சாதி! அதில் கொங்குமண்டலமும் விதிவிலக்கல்ல!

மாதொருபாகன் விவகாரத்தில் பெருமாள் முருகனை அலைக்கழித்தது சாதிவெறி!  ஆனால், சுஜாதாவின் முதல் வரலாற்று நாவல் ஏன் நிறுத்தப்பட்டது என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா?  அன்றைக்கு சாண்டில்யன் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் நடந்துகொண்டவிதம் தெரியுமா?

அந்தக் கதையில் ஒரு உரையாடல்!

"டேய், நீ கள்ளச் ***தானே" என்று!

அந்தக் கதை நடந்ததாய் சொல்லப்பட்ட காலத்தில், அந்தச் சாதிக்கு அதுதான் பெயர்! இன்றைக்கு அழைக்கப்படும் *** என்பது இப்போது வந்த பெயர்!

அந்த உரையாடலை சுஜாதா தவிர்த்திருக்கலாம் என்பதுபோலவே, ஒரு குறிப்பிட்ட ஊரில், மாற்று சாதியைச் சேர்ந்த பெண்கள் எப்படிப் பிள்ளை பெற்றார்கள் என்று எழுதியதை பெருமாள் முருகனும் தவிர்த்திருக்கலாம்தானே? உடனே நான் அந்த சாதிவெறிக்கு சப்பைக்கட்டு கட்டுவதாய் எகிறிக்கொண்டு வரவேண்டாம்!

அதை கண்டித்த நான் இதையும் கண்டித்தேன்! பெருமாள் முருகனோ, சுஜாதாவோ, ஒரே தராசில் வைத்து பார்த்திருக்கலாமே என்று கேட்பது நடுநிலைமை!

உடனே நடுநிலை என்பதே ஏமாற்றுவேலை என்று கூவுவார்கள்!

அத்தனை செல்வாக்கு மிகுந்த சுஜாதாவை தொடரை நிறுத்த வைத்ததும், பெருமாள்முருகனை மன்னிப்புக் கேட்கவைத்ததும் ஒரே விஷயம்தான் - சாதிவெறி!

இதில் ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது என்பது இன்னும் கேடுகெட்ட சாதிவெறி!

பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்ததையும், சுஜாதாவுக்கு நேர்ந்ததையும் ஒன்றுபோல் விமர்சித்தவன் நடுநிலை. ஏதாவது ஒன்றில் கள்ளமௌனம் சாதிப்பவன் வேடதாரி! அவ்வளவே!

இங்கு பெரும்பான்மையும் உரக்கப் பேசுவதும்தான் நியாயம் என்றாகிவிட்டது!

ஆனானப்பட்ட இளையராஜாவையே இன்னும் சாதியைச் சொல்லித்தானே பேசமுடிகிறது பலராலும்?

ஒரு பிரபலம், தான் நினைத்தது ராஜாவிடம் நடக்கவில்லை என்றதும், ராஜாவின் சாதியை வைத்துத்தானே பேசினார் இணையதளத்தில்?

அன்று எத்தனைபேர் அதை விமர்சித்தீர்கள்?

ராஜா எப்படி உடுத்தவேண்டும், எந்த சாமியை கும்பிடவேண்டும், என்ன பாட்டுப் படவேண்டும் என்பதையெல்லாம் எதை வைத்து நிர்ணயிக்கிறீர்கள்? அவர் சாதியை வைத்துத்தானே?

தான் என்ன சாதி என்பதை அவர் சாகும்வரை மறக்கக் கூடாது என்று செல்வது சாதிவெறி இல்லையா?

தான் கருப்பாய் ஒரு பிண்டமாய் எந்த சாதிக்காரனுக்குப் பிறந்தேன் என்று பாட்டெழுதிய கவிச் சக்கரவர்த்தி ராஜாவை சாதி சொல்லி விமர்சித்தது ஊரறிந்த ரகசியம்! அதன்பின் நடந்த நாடகங்களும் அனைவரும் அறிந்ததே. இன்று இவர்களெல்லாம் சாதி ஒழிப்பு பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

உங்கள் கட்சித் தலைவரை உயர்சாதிக்காரன் பூரணகும்பம் வைத்து கும்பிடுவது கௌரவம் எனில், அதே சாதிக்காரன் இளையராஜாவுக்கு பட்டம் கொடுத்து கவுரவிப்பதும், அதை இளையராஜா ஏற்பதும் அதைவிட உயர்ந்த கௌரவம்! அது கொண்டாடப்படுவதும், இது தூற்றப்படுவதும் சாதிவெறியன்றி வேறென்ன?

சாதி இங்கு  எல்லாமட்டத்திலும் உபயோகித்துக்கொள்ளப் படுகிறது!

தன்னை விமர்சித்த எவரையம் சாதியைச் சொல்லி மட்டுமே விமர்சித்த ஒருவர் தன் வீட்டில் ஒரு மருமகள் தலித் என்று மேடை கிடைக்கும்போதெல்லாம் பேசியது சாதியை எப்படி உபயோகித்துக்கொள்ளலாம் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ எடுத்துக்காட்டு! அந்தப் பெண்மணிக்கு தான் என்ன சாதி என்பதை எல்லாவிடத்தும் உணர்த்திக்கொண்டே இருந்தது அவ்வகைப் பேச்சுக்கள் அல்லவா?

இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த யாராவது தங்கள் கருத்தை மறுத்துப் பேசினால், உடனே அவர்களின் சாதி அடையாளத்தை சொல்லி விளிப்பது சாதி வெறி இல்லையா? அவர்கள் அன்று செய்தார்கள் எனவே நான் இன்று செய்கிறேன் என்பது என்னவிதமான நியாயம்?

இதுபோல், வேறு யாரையும் சாதி அடையாளம் சொல்லி விளிக்கமுடியுமா? 

இன்றைக்கு கொங்கு ஈஸ்வரனும், ராமதாஸும் சாதியை உபயோகித்து இத்தனைதூரம் வளர, ஆரம்பத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து வளர்ந்துவிட்டது யார்?

எந்தெந்தத் தொகுதியில் எந்தெந்த சாதி வாக்குகள் அதிகம் என்று பார்த்து வேட்பாளரை தேர்வு செய்யும் சாமர்த்தியத்துக்கு சாதிவெறி என்று பேரில்லையா? இவர்கள்தான் சாதியை ஒழிக்கப் புறப்பட்டதாய் மார் தட்டுகிறார்கள்!

சாதி இங்கு பலருக்கு பிழைப்பு, இன்னும் சிலருக்கு கேடயம்!

யாரைப் பற்றி விமர்சிக்க முனையும்போதும், அவர்களின் சாதி அடையாளத்தை முதலில் பேசுவதும், தான் நியாயமான காரணங்களுக்காக நிராகரிக்கப்படும்போது, அதை, அதிலிருக்கும் நியாயத்தை, அப்பட்டமாய் மறைத்து, தன்னை தன் சாதி காரணமாகவே நிராகரித்ததாய் போலியாய் நீலிக்கண்ணீர் வடித்து அனுதாபம் தேடுவதும் கூட சாதி வெறியும் சாதியை சாதகமாய் உபயோகிப்பதும்தான்! அதில் பலரும் இங்கு நிபுணர்கள்!

இங்கு நான் ஒரு குறிப்பிட்ட இரண்டு சாதியை ஆதரித்துப் பேசுவதாய் தூற்றப்போகும் சிலருக்கு ஒரு சின்னத் தகவல்!

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் எனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதற்கும், கொங்கு மண்டலத்தில் எனக்கு ஒரு வீடு  வாடகைக்குத் தர மறுக்கப்பட்டதற்கும் காரணம், முறையே அந்த இரண்டு சாதியைச் சேர்ந்த ஒருவர்தான்! அவர்கள் செய்வது எத்தனை பிழையோ அதற்கு நிகரானதுதான் இவர்கள் செய்யும் பிழையும்! ஒன்றை மட்டும் விமர்சிக்க சம்மதமில்லை எனக்கு!

அடுத்து கட்சிவெறி!

கொள்கை சார்ந்து கட்சியை ஆதரிப்பவர்கள் மிகச் சிறுபான்மை! ஏனென்றால், இன்றைக்கு எல்லா கட்சிக்கும் கொள்ளை ஒன்றே லட்சியம்! இதில் போனால் போகிறது என்று சற்றே மக்கள் நலன் கலக்கக்கூடும்!

கண்ணை மூடிக்கொண்டு கோஷம் போடுவோர் இங்கே அறுதிப் பெரும்பான்மை!

ஒரு தலைவரை விமர்சிக்கும் அதே அடிப்படையில், அளவுகோலில் இன்னொரு தலைவரை விமர்சிப்பது இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டதே இல்லை!

என் தலைமை கடவுள் அவதாரம்! அது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று பேசுவோர் எல்லோரும் ஆதாயத்துக்கு பல்லக்குத் தூக்குவோர்! அவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மூடத்தனம்!

கட்சி,  அதன் கொள்கையை விமர்சிப்பதைவிட, அந்தக் கட்சித் தலைமையின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது இங்கே எளிது!

கண்ணாடி வீட்டுக்குள் இருந்தே இங்கு தேவையற்ற பல கற்கள் வீசப்படுகின்றன!

கொள்கை சார்ந்த விமர்சனங்களும் விவாதங்களும் கடந்த காலக் கனவுகள்! இன்று எல்லாமே கட்சிப் பார்வை கொண்டே!

வெகு சமீப உதாரணம் - கொங்குநாடு!

தாங்கள் ஆதரிக்கும் கட்சியை, "சட்டமன்றத் தேர்தலில் மட்டும்" ஆதரிக்காதவர்கள் சாதி வெறியர்கள், காட்டுமிராண்டிகள், வடக்கனுக்குப் பிறந்தவர்கள், கோமியம் குடிப்பவர்கள் என்று மிக கண்ணியமாக விமர்சித்து, அவர்களை அவிழ்த்துவிட்டுத் துரத்துவோம் என்று துடித்தவர்கள் இன்று பேசும் அரசியல் ஆச்சரியமானது! சென்னை தயவில்லாமல் எவனுமே வாழ்ந்ததில்லை, குறிப்பாக கொங்கு மண்டலத்தார் என்று கூச்சல்கள்!

தமிழ்நாட்டுத் தேர் நகர எல்லோருமே வடம் பிடித்தாகவேண்டும்!

குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் தொழில்துறை!

தமிழ்நாட்டின் தலைநகரம், சிங்காரச் சென்னையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளை முதலில் ஒழுங்காகச் செய்துமுடித்துவிட்டு, பிறகு மற்ற ஊர்களை இகழ்ந்து பேசுங்கள்! 

மக்கள் நலனுக்கு என்று ஒரு வார்த்தைகூட சொல்லமுடியாமல், ஒரு கட்சிக்கு பாடம் புகட்ட மாநிலத்தைப் பிரிப்பதாய் ஒரு தரம் கெட்ட பத்திரிக்கை ஜோதிடம் எழுதி அரிப்பைத் தீர்த்துக்கொண்டது கேவலம்! அதற்கு எதிர்வினையாற்ற மீண்டும் கொங்கு மண்டலத்தை அர்ச்சிக்கும் இவர்களும் அதற்கு சற்றும் சளைக்காதவர்கள்!

ஒரு விஷயம் நடக்கவே போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்தும் இருதரப்பும் வன்மச் சேற்றை வாரியிறைத்துக்கொண்டிருக்கின்றன!

எப்படியாவது தங்கள் இருப்பைக் காண்பித்துக்கொள்ள எல்லாப் படுகுழியிலும் இறங்கும் அசிங்கம் இது!

எஸ் ஆர் பாரதியைப்போலவே, நானும் அந்தப் பத்திரிக்கையை வாங்குவதுமில்லை, படிப்பதுமில்லை! எல்லாக் குப்பையையும் இணையம்தான் என்னிடம் அள்ளிக்கொண்டு வந்து போடுகிறது!

எதையோ மறைக்க, யாரோ கிளப்பி விட்டதுதான் இந்த கொங்குநாடு எனும் வெற்றுக்கோஷம்! அது சாத்தியமே இல்லாத விஷயம் என்று இரு தரப்புக்குமே தெரியும்!

அழும் பிள்ளைக்கு இப்போதைக்குக் கிடைத்த குச்சிமிட்டாய் கொங்குநாடு!

அடுத்து அணிமாறும் விளையாட்டு!

பெரியார் கட் அவுட்டுக்கு பக்கத்தில் நின்று ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும், சாதி, இடஒதுக்கீடு, ஊழல் பற்றி பேசியதெல்லாம் மறந்துபோகும்!

அதைப்பற்றி கருத்து சொல்லாமலாவது இருந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கு அவரையும் சிலாகித்தே ஆகவேண்டிய கட்டாயம், என்ன செய்வது?

எவ்வளவு அழகாக புடவை கட்டியிருக்கிறார் என்று வியந்து பாராட்டிவிட்டால் போச்சு! இத்தனை நாள் அவர் புடவையை கட்டத் தெரியாமல் உடம்பில் சுற்றிக்கொண்டு வந்தார் போல!

அரை வேக்காடு சட்டென்று முழு வேக்காடாய் மாற ஒரு தேர்தல் தோல்வி, அதன்பிறகான அணி மாற்றம் மட்டுமே தேவைப்படுகிறது.

அணி மாறுவது கொள்கையைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் என்றால் மகிழ்ச்சி!

ஆனால், குஷ்பு அணி மாறியபோது மட்டும் ஏனோ காட்சிகள் மாறி, அவரது ஒழுக்கம் இதே இடத்தில்தான் ஏலம் போடப்பட்டது! பெண் என்பது அவருக்கு இழுக்கு, இவருக்கு ஆயுதம்!

அண்ணா என்று ஒருவர் வாழ்ந்தார், அவர் கோடிக்கணக்கான தொண்டர்களுக்குத் தலைவர், அவரது சமாதி சென்னையில்தான் இருக்கிறது என்பதை இன்னொருவர் கண்டுபிடித்திருக்கிறார்.

மகிழ்ச்சி!

இனி அண்ணாவின் புகழ் பாரெல்லாம் பரவும்.

இன்னும் எத்தனைபேருக்கு ஞானஸ்நானம் பண்ணப்போகிறது கழகம் என்பது நமக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால், கட்சிக்குள் வந்ததும் புனிதர் பட்டம் கொடுத்து, தலைவர் வீட்டுக்குள் கூட்டிப்போகப்படுவது எத்தனைபேருக்கு சாத்தியம் என்பதை மட்டும் யோசியுங்கள் போதும்!

சில்லறை புரட்டும் வேகத்தில் ஜெயலலிதாவையே மிரளவைத்து இம்ப்ரெஸ் செய்தவர்தான் இன்றைக்கு கட்சிக்கே படியளக்கும் பெருமாள்! அதனால் என்ன, அவர் கொடுக்கும் காசில் மின்சாரமா பாய்ந்து கொல்லப்போகிறது? அதுபோல் இன்னொரு புரவலராக இவர் ஆவார் என்ற எதிர்பார்ப்பே இன்றைக்கான அவருக்கு சிகப்புக்கம்பள விரிப்பு!  

தாயுள்ளம் கண்டு வியந்துவந்த தோப்பு வெங்கடாசலமும் அந்த வகையில் நல்ல செயல் வீரர்தான்! கூடவே, இன்னொரு சாமர்த்தியசாலியும் புனிதர் ஆகும் சாத்தியம் இருப்பதாகச் சொல்கிறார்கள், பார்ப்போம்!

கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள்!

பட்டத்து இளவரசரை, அடுத்த முதல்வர் வேட்பாளரை, வருங்கால கட்சித் தலைவரை சிலாகிப்பதும் போற்றி பாடுவதும் தவறில்லை!

அதற்காக அவர் தொகுதியில் செய்யும் அதிரடி புரட்சிகளை வியந்து பாராட்டுவதும் தவறில்லை!

ஆனால், அந்த ஓட்ட அவசரத்தில் திராவிடப் பேரரசனை மிதித்துவிடாதீர்கள்!

அந்தத் தொகுதி 1977 முதல் இன்றுவரை கழகத்தின் கோட்டை! அதிலும்,1996லிருந்து 2011வரை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர். அப்போதைய காலகட்டத்தில் முதல்வரும் அவரே!

எனவே, ஏதோ சஹாரா பாலைவனம்போலவும், உத்திரப் பிரதேசத்துக் குக்கிராமம் போலவும் இருந்த தொகுதியை இளவரசர்தான் சீரமைத்துக்கொண்டிருக்கிறார் என்று லாவணி பாடாதீர்கள்

கலைஞரை ஒதுக்கவோ, மறக்கவோ, தூற்றவோ அவ்வளவு அவசரம் வேண்டாம்!

நான்காம் கலைஞர் வரும்போது கலைஞரை ஓரம் கட்டுவதைப் பார்த்துக்கொள்ளலாம்! அதுவரைக்குமாவது கொஞ்சம் யோசித்து, வாழ்த்துக்கோஷம் எழுப்புங்கள்!

ஆட்சி அமைத்த இவ்வளவு குறுகிய காலத்தில், சிக்ஸர் அடிக்கவோ, க்ளீன் போல்ட் ஆகவோ தேவையில்லை! முதலில் காலை ஊன்றிக்கொள்ள அவகாசம் எடுத்துக்கொள்ளட்டும்! 

இந்த அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க இது சரியான நேரமில்லை! அதற்கு இன்னும்அவகாசம் இருக்கிறது!

காலம் தன் ஏட்டில் எல்லாவற்றுக்குமான பாரபட்சமற்ற விமர்சனத்தை எழுதியே தீரும். அதுவரைக்கும் கல்லெறிவோரும், பூத்தூவுவோரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

பேரிடர் கால காட்டாற்று வெள்ளத்தையே இன்னும் கடந்தபாடில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக