சனி, 21 ஆகஸ்ட், 2021

நயன்தாராவை ஏன் நான் வியந்து பார்க்கிறேன் என்றால்…

Why she is so adorable !
அவர் இருந்தது, இருப்பது மீடியா வெளிச்சம் எந்த நேரத்திலும் எதிர்பாராத விதத்திலும் துரத்திக்கொண்டே இருக்கும் ஷோ பிஸினஸில்! 
இங்கு இமேஜ்தான் எல்லாமே!
புனித பிம்பம் எந்நேரமும் காப்பாற்றித் திரிவது அடிப்படைக் கட்டாயம்! 
கையில் ஒரு கேமராவோ, மைக்கோ, ஒரு மொபைலோ இருந்தால், உங்கள் அந்தரங்கத்தில் தங்குதடையின்றி உரிமையோடு புக தாங்களாகவே சுதந்திரம் எடுத்துக்கொண்ட கலாச்சாரக் காவலர்கள் உலவும் இடம் இது. 
இந்தத் துறையில் மன்னாதி மன்னர்களாக கோலோச்சிக்கொண்டிருந்த ஆண்களே, தங்கள் அந்தரங்கங்களை, சின்னச் சின்ன அபிலாஷைகளைக்கூட ரகசியமாய் மறைத்துப் பொத்திப் பாதுகாப்பதுதான் நூற்றாண்டு வழக்கம்!
பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சாதாரணமாக தன்னோடு பணிபுரியும் சக ஆணோடு தனியே உட்கார்ந்து சிரித்துப் பேசினாலே அவர் கற்பு காற்றில் பறந்ததாய் கதைத்து மொத்தமாக எதிர்காலமே காலியாகும் இடம்!
யாரையோ காதலிக்கிறார் என்று ஒரு வதந்தி பரவினாலே போதும் ஃபீல்ட் அவுட் ஆக!
இந்த சூழலில் தனித்து நிமிர்ந்து நின்றவர் இவர்!

அடுத்தடுத்து சில காதல்கள்!
அது என் சொந்த விஷயம் என்ற தெளிவு! 
கேள்வி கேட்டபோது மறைக்கவோ மழுப்பவோ செய்யாமல் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று புறம் தள்ளி நகர்ந்த கம்பீரம்!

ஒவ்வொரு உறவு முறிவின்போதும், தான் ஏமாற்றப்பட்டதாய் பெட்டைப் புலம்பலோ குற்றச்சாட்டோ ஏதுமில்லை. 

காதலித்து பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய பெண்களின் கதைகளே உலாவும் இடத்தில், ஒரு மிகப்பெரும் விதிவிலக்காய் தன் சம்பாத்தியத்தில் தான் நேசித்த ஆண்களுக்கு வாரியிறைத்து, விலகிப்போனபோதும் குற்றம் சாட்டாத முதல் பெண்மணி. 
உண்மையான காதலில் மட்டுமே இப்படி ஒரு பெருந்தன்மை சாத்தியம்!
A real Alfa female.

இந்த ஏமாற்றங்கள் போதாதென்று இண்டஸ்ட்ரி வழக்கப்படி, மொத்தமாக ஃபீல்ட் அவுட்!
இனி அவர் அவ்வளவுதான் என்று எல்லோரும் முடிவு செய்திருந்தபோது, ரீ எண்ட்ரி!
கம்பேக் என்பது ஒரு படமோ ரெண்டு படமோ, பின் அண்ணி, அக்கா, சீரியல் என்று ஓரம் கட்டப்படுவதே இன்றுவரை வழக்கம்!
அதை ஒட்டுமொத்தமாக மாற்றினார். 
அடுத்தடுத்து, பெண்ணை, கதாநாயகியை மையப்படுத்தி படங்கள்!
அத்தனையும் சூப்பர் ஹிட்!
சக போட்டியாளர்கள் வியந்தும், எரிந்தும் பார்க்க, உச்சத்தில் ஓர் சிம்மாசனம்- அதில் அசைக்கமுடியாமல் கம்பீரமாக உட்கார்ந்தவர் இன்றுவரை கீழிறங்கவில்லை!
விமர்சனங்களும் வெற்றுக் கூச்சல்களும் இவர் சுண்டுவிரல் நகத்தைக்கூட தொட முடியவில்லை!

சீதை ரோலில் இவர் நடிக்கக்கூடாது என்று ஒரு ஆர்ப்பாட்டம். 
ஏதோ ஒரு அரசியல் வாரிசு எங்கோ தற்கொலைக்கு முயன்றதற்கு இவர் காரணம் என்றொரு அபத்தக் கிசுகிசு! 
எதற்கும் அசரவில்லை அவர்!
இரண்டாவது வாய்ப்பில் எத்தனை ஜாக்கிரதையாக இருப்பார்கள் எல்லோரும்?
தன்னை வைத்து படம் தயாரித்த ஒரு பெரிய இடத்து நடிகரை மேடையிலேயே வைத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி கேள்வி கேட்ட திண்மை!
முப்பதுகளின் பிற்பாதியில் இருக்கும்போதும், இன்றும் தன்னை மையப்படுத்தி எடுக்கப்படும் அடுக்கடுக்கான வெற்றிப் படங்களின் நாயகி.
இப்போதும், தன் மனம் கவர்ந்தவரை எந்த ஒளிவு மறைவுமின்றி தன் உழைப்பால் ராஜாவைப்போல் பார்த்துக்கொள்ளும் ராணித் தேனீ!
துறையில் அறியாத இளம் பெண்ணாக நுழைந்து, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள லேடி சூப்பர்ஸ்டார்.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும், தன் நெஞ்சறிவது பொய்யற்க என்பதற்கு பேருதாரணம் இவர்!
அழகு என்பது அகம் சார்ந்தது என்பதை அழுத்தமாக நிரூபித்தவர்!
பொதுவாக பெரியோரை வியத்தலும் இலமே என்ற கொள்கை உள்ள என்னை வியந்து நிமிர்ந்து பார்க்கவைத்த உண்மையான இரும்புப் பெண்மணி!
பேராண்மை என்ற பதத்துக்கு வாழும் உதாரணங்களில் ஒருவர்!
டயானா மரியம் குரியன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக