வியாழன், 14 அக்டோபர், 2021

ச்ச்ச்சக்க்கரவர்த்திடா…

இப்படித்தான் சொல்வார் ரஜினி
- நாற்பது வருடங்களுக்குமுன், கவிதாலயா தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தில்!
குரலில் அவ்வளவு குதூகலம், தன்னம்பிக்கை, அது தந்த திமிர்- எல்லாம் தெறிக்க!
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், படம் வந்தபோது பல வீடுகளில், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, பார்க்க அனுமதியில்லை -
பார்த்தாலே தீட்டுப் படும் என்ற மடிசார் மனநிலையில்! அப்படி ஒரு கதை!
கற்பு, பெண்ணுரிமை, ஒழுக்க நெறி இன்ன பிற ஹைகோர்ட் மெண்ட்டாலிட்டி ஆட்கள் மேற்கொண்டு படிக்காமல் விலகுவது உசிதம்!
ஏனெனில், நான் வரிக்கு வரி சிலாகிக்கப்போவது, அப்பா ரஜினி, சக்கரவர்த்தியை! அம்மாஞ்சி ராமச்சந்திரமூர்த்தி, மகன் ரஜினி சந்தோஷை அல்ல!
என்வரை, ரஜினியின் ஆகச்சிறந்த படப் பட்டியல்களில், முதல் மூன்று இடங்களுக்குள் வரும் படம் இது!
ஒருவகையில் அந்த சக்கரவர்த்தி மேல் எனக்குக் கொஞ்சம் பொறாமையும்கூட- இன்றுவரை!
ஒரு மிடில் ஏஜ் ப்ளேபாய் பாத்திரத்தை இப்படி கனகச்சிதமாய், ஒவ்வொரு ஃப்ரேமும் ரசிக்கும்படி ரஜினி தவிர வேறு யாராலும் செய்ய நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது!
அத்தனை பர்ஃபெக்‌ஷன்!
“சேலை கண்டபோதே 
வேலை கெட்டுப் போகும்! 
தாயுமில்லை, சேயுமில்லை, 
சட்டம் தர்மம் ஏதுமில்லை!”
பாடல் சொல்லும் சக்கரவர்த்தி கேரக்டரை!
அந்தப் பாடலிலும், சக்கரவர்த்திக்கான பின்னணி இசையிலும், ராஜாவின் வயலின் அத்தனை குறும்பு செய்யும்!
பாடலின் இடையே, ஒரு வினாடிக் காட்சியாய் ரிக்‌ஷாவில் போகும் மண்ணெண்ணெய் பேரல் - அல்ட்டிமேட்!
தட் தட் பீப்பிள், தட் தட் ப்ரைஸ்!
அலுவலகத்தில் எந்த உயரதிகாரியாலும் சாதிக்கமுடியாத விஷயத்தை, குறுக்குவழியில் சாதித்துவந்து, பேசும் டயலாக், அந்த உடல்மொழி… ரஜினி ஏன் இன்னும் பல மடங்கு கொண்டாடப்படவேண்டிய நடிகர் என்பதற்கு இந்தப் படம் முழுக்க காரணங்கள்!
மகன் ரஜினியிடம் உன் அப்பன்டா என்று எகிறுவது, சரிதாவிடம் ஹாங்க்காங்கில் பேசும் திமிர், அவரை மகன் திருமணம் செய்துகொண்டதாக அறிந்து குமுறும் ஆதங்கம்! 
படம் முழுக்க சக்கரவர்த்தி ராஜாங்கம்!
ஏய், திருட்டுத் தாலி என்று ஆற்றாமையோடு சீறுவது, ட்ரைவர் கவுண்டமணி மருதமலைக்கே போனதில்லை என்று சொன்னதும், நொடியில் தலைக்கேறும் தன்னம்பிக்கை, திமிர், மனைவி லட்சுமியிடம் அறைந்தே விஷயம் வாங்கும் லாவகம்!
மேனகா விஷயம் தெரிந்தபின் மகனை சதாய்த்துத் தள்ளும் உற்சாகம்! 
துள்ளிக்கொண்டு போகும் திமிர் நடை!
ரஜினி என்னும் மகாநடிகனை எப்படி வீணடித்திருக்கிறது திரையுலகம்!
ஆலமரத்தடி முளைத்த செடி மகன் ரஜினி! 
ஆனால், அப்பாவுக்கு அமைதியாக பதிலடி கொடுக்கும் காட்சிகளில் அன்யூசுவல் ரஜினி!
அதிலும் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய்க்கு பாட்டிலை டேபிளில் வைத்துவிட்டு சாந்தமாய் அப்பாவைப் பார்க்கும் விஷமப் பார்வை!
க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க படத்தை இப்படித்தான் முடித்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் சக்கரவர்த்திகள் திருந்தித்தானே தொலையவேண்டியிருக்கிறது! 
அந்தப் பத்து நிமிடம் தவிர, மீதி படம் ஒரு உற்சாகக் கலவை!
ஹீரோவை, அதிலும் ஒரு அப்பாவை, இப்படிக் காட்டுவதை இப்போதே தமிழ் கலாச்சாரக் காவலர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது! 
நாற்பது வருடங்களுக்கு முன்னால், இது ரொம்பவே அதீதம்!
இன்றும், நாற்பது ஆண்டுகள் ஓடியபிறகும், கலாச்சாரத் தடைகள், ஒழுக்கநெறி பாவனைகள் இல்லாமல் இந்தப் படத்தைப் பார்த்தால், அதிகாலை பூத்த நாட்டு ரோஜாவைப்போல் அத்தனை குளுமை!
படத்தை வெறும் ஜாலியாகப் பார்க்கத் தெரிந்த ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியைக் கொண்டாட இன்னுமொரு அழுத்தமான காரணி கிடைக்கும்!
இன்றைக்கு இந்தப் படத்தை மறு ஆக்கம் செய்தாலும் வேறு யாராவது, ரஜினி நடிப்பில் பத்து சதவிகிதம் செய்துவிட்டாலே அது மாபெரும் சாதனை!
வெறுப்பாளர்களுக்கும் இன்னுமொரு அழுத்தமான காரணி கிடைக்கும் - வேறு பார்வையில், கலாச்சாரப் போர்வையில்!
ஆனால், இந்தப் படத்தை எப்போது யார் பார்த்தாலும், இன்னொருவரை எல்லோருக்குமே பிடிக்கும்!
- இளையராஜா! 
வசதி வாய்ப்பு வந்தால் மொட்டைக்கு தங்கத்தில் ஒரு புல்லாங்குழல் செய்து தரவேண்டும்! 
பின்னணி இசை அத்தனை உயர்வு! 
இந்த ஆளுக்கு பாரத ரத்னா தந்தே ஆகவேண்டும் என்று ஒரு இயக்கமே ஆரம்பிக்கலாம்!
படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பார்த்துவிடுங்கள்!
பார்த்தவர்கள் என்போல் பலமுறை பார்ப்பீர்கள்!
அட, ரஜினியை பிடிக்காவிட்டால்தான் என்ன, இளையராஜாவையும், சக்கரவர்த்தியையும் உள்ளூர ரசித்துவிட்டு, குப்பை என்று மனதாறப் பொய் சொல்லிவிட்டால் போகிறது! 
பழகிய விஷயம்தானே!


1 கருத்து:

  1. விசு தான் இந்த படத்திற்கு கதை என்று தெரிந்த பிறகு தான் அதிகம் ஆச்சிரயப்பட்டது.

    பதிலளிநீக்கு