சனி, 27 நவம்பர், 2021

அடுத்தது என்ன?

1.
ஒன் சி ஆகும். முதல்லயே கொடுத்தால்தான் வேலையை ஆரம்பிக்கமுடியும்! 
என்னங்க இது அநியாயமா இருக்கு? இதுக்கு ஒரு கோடி அதிகம் இல்லையா? 
எது அநியாயம்? இப்போ நடந்திருக்கறது ரொம்ப நியாயமா? ஒரு கொலைங்க! 
சார், அது தற்கொலை! 
இருக்கட்டுமே, அதற்கு தூண்டியது யார்? மேலிருந்து கீழ் வரைக்கும் செலவாகும், அப்புறம், டாக்டர், வக்கீல், ஜட்ஜ் இப்படி எல்லோருக்கும் வெட்டவேண்டியத வெட்டினால்தான் வேலை சக்ஸஸ்ஃபுல்லா முடியும். யோசிங்க, இல்லைன்னா, சட்டம் தன் கடமையை செய்யட்டும். இதே நீங்க மேலிடத்திலிருந்து ப்ரெஸ்ஸரோட வந்ததால! இல்லைன்னா ரெண்டுக்குக் கீழே பேச்சே ஆரம்பிச்சிருக்காது! ஏற்கனவே ஸ்கூல் பேரு நாறிப்போச்சு! 
இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அரெஸ்ட் காமிக்கலேன்னா எங்கள உரிச்சுடுவாங்க! 
சரி, இப்போ இருபத்தஞ்சுதான் கொண்டுவந்தேன். இதை வாங்கிக்கங்க, சாயங்காலம் மீதியை கொடுத்தடறேன்! 
சரி, சாயங்காலம் நான் சொல்ற எடத்துக்கு அந்த வாத்தியோட வந்துடுங்க! 
சார், அவர் எதுக்கு? 
ம்ம், மடில படுக்கவெச்சு சோறூட்ட! என்னம்மா பேசறீங்க, அரெஸ்ட் காமிச்சு, கஸ்டடி எடுத்து, எல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சுத்தான் சூட்டை தணிக்க முடியும்! 
சாயங்காலம் பணம் கொண்டுட்டு அவரையும் கூட்டிட்டு வந்துடுங்க! 
நாங்க சொல்லிக்கொடுக்கற மாதிரி நடந்துக்கிட்டீங்கன்னா போதும்! காப்பாத்திடலாம்! கண்டிப்பா இன்னைக்கே அரெஸ்ட் பண்ணனுமா சார்? அட, கூட்டிட்டு வாங்கம்மா, அடிக்கவெல்லாம் மாட்டோம்! சொல்லிக்கொடுக்கற வாத்திக்கு இந்த புத்தி இருந்திருக்கு, ரெண்டு தட்டு தட்டினால்தான் என்ன? 
போங்க, ஆறு மணிக்கு நீங்க வரவேண்டியிருக்கும்! 
சார், ஐயா லைன்ல ... 
ஐயா சொல்லுங்கய்யா, நீங்க சொல்லணுமா, நான் பார்த்துக்கறேன்! விடுங்க. இதுக்கெல்லாம் நீங்க போன் பண்ணனுமா? 
2. 
தோழரே, அங்கே நிலவரம் எப்படி இருக்கு? 
இன்னும் யாரையும் அரெஸ்ட் பண்ணல! பசங்க அங்கே கூட்டமா நின்னு போராட்டம் பண்ணிக்கிட்டிருக்காங்க! உங்க சோர்ஸ் என்ன சொல்றாங்க? 
இன்னைக்கு சாயங்காலம் அந்த வாத்தியாரை அரெஸ்ட் காட்டிடுவாங்க போல! அந்த ப்ரின்சிபாலை ஒரு ரெண்டுநாள் கழிச்சுத்தான் தூக்குவாங்கலாம்! தாயோலிங்க, அரசாங்கமா நடத்தறானுக? இதுக்கு வேற தொழிலுக்குப் போலாம்! 
என்ன தோழர், இன்னும் இப்படியே இருக்கீங்க? இன்னைக்கு இதெல்லாம் சின்னவிஷயம் ஆகிடுகிச்சு! ஏதுய்யா சின்ன விஷயம்? செத்துப்போனது ஒரு சின்னப்பொண்ணு! எல்லோரும் சேர்ந்து அதை தற்கொலை செய்ய கார்னர் பண்ணி அநியாயமா கொன்னுருக்காங்க! நடுவீதில வெச்சு நாலுபேர்த்துக்கு பிதுக்கிவிட்டாத்தான் அடங்குவானுக! 
சரி, இதுக்கு நாம் கத்தி என்ன செய்ய? 
சொல்லுங்க, என்ன பண்ணப்போறோம்? 
இன்னைக்கு சாயங்காலமே, நம்ம வக்கீல் சென்னைல இருந்து வந்துடுவார்! வழக்கம்போல இங்கே, நம்ம ஆபீஸ்லயே ஒரு ஓரமா படுத்துக்குவார்! ட்ரெயின் சார்ஜ் மட்டும் கொடுத்தா போதும்! மெஸ்ல நாலு இட்லி, ரெண்டு வேளை டீத்தண்ணி.
இந்தக்கேஸ் அவருக்கு தண்ணி பட்ட பாடு! நிச்சயம் தண்டனை வாங்கிக்கொடுத்துடுவாரு! 
சரி, போய் அங்கே பசங்களோட இருங்க! மறக்காம டேபிள்ல என் சம்பளக்கவர் இருக்கு, அதை எடுத்துட்டுப்போய் அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட கொடுத்துடுங்க! அவசர செலவுக்கு ஆகும்! கட்சில இருந்து ஒரு அம்பதாயிரம், நாளைக்கு தலைவர் கொண்டுவந்து தருவார். 
ஒரு கலெக்சன் வேணுன்னா பண்ணிக் கொடுத்தரலாமா தோழரே, ரொம்ப கஷ்டப்படற குடும்பம்! 
வேண்டாம் தோழர், வசூல்ன்னு ஆரம்பிச்சா நம்ம கட்சி பேர் கெட்டுப்போய்டும். அதுக்கெல்லாம் வேற கூட்டம் இருக்கு. வசூல் பண்ணி, பாதியை எடுத்துக்கிட்டு, பாதியைக் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்க! அது நமக்கு ஆகாது! 
நம்ம நிதி தரமுடியாது, நீதிதான் போராடி வாங்கித்தர முடியும்! பார்த்து! பெரிய இடம்! காலைலயே வெய்ட்டா கவனிச்சிருப்பாங்க! 
கொஞ்சம் உன்னிப்பா பார்த்துக்கோங்க!
இனி, சம்பவ இடத்துக்குப் போய் சில நாட்களாக நாடகங்களை பார்ப்போமா? புரிதலுக்காக இருதரப்புப் பேச்சுவார்த்தையும் அடுத்தடுத்து.
ஐயா, உட்காருங்க. 
அதெல்லாம் இருக்கட்டும்யா, நாங்க கேள்விப்படறது எதுவுமே நல்லா இல்லையே. எதுக்கு அந்த இயக்கத்து ஆளுங்களையெல்லாம் கூப்பிட்டு வாசல்ல உட்கார வெச்சிருக்கீங்க? 
ஐயா, அவங்களா உதவி செய்யறேன்னு வர்றாங்க! எங்க குழந்தைய பறிகொடுத்துட்டு உட்கார்ந்திருக்கறோம்! அவங்கதான்யா எங்களுக்கு இப்போ ஆறுதலும் தைரியமும்.
ஏன்யா, போலீஸ் உங்களுக்கு தைரியம் இல்லையா? கண்ட கூட்டத்தையும் நம்பி கேட்பார் பேச்சைக் கேட்டு ஏமாந்துபோகாதீங்க! 
ஐயா, அவங்க அப்படியான ஆளுக இல்லைய்யா. என்னவோ பண்ணித்தொலைங்க! 
அந்த வாத்திய அரெஸ்ட் பண்ணியாச்சு. தனி இடத்துல வெச்சு மேலதிகாரிங்க விசாரிச்சிட்டிருக்காங்க! 
ரொம்ப சந்தோஷம். அப்படியே அந்த ப்ரின்சிபாலையும் பிடுச்சுட்டீங்கன்னா .. 
ஏன், அதுவரைக்கும் பாடியை வாங்க மாட்டீங்களா? உங்களையெல்லாம் ரெண்டு வெளு வெளுத்தாத்தான்யா அடங்குவீங்க! 
இல்லைங்கய்யா, இயக்கத்துக்காரங்க பிரின்சிபால் அரெஸ்ட் ஆகாம பாப்பாவை வாங்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க! நீங்க அவங்ககிட்ட பேசிக்கங்க! அவ்னுங்ககிட்ட நான் எதுக்கு பேசணும்? விசாரணைல உங்க புள்ள மேலதான் தப்புன்னு தெரிய வரட்டும், அப்புறம் இருக்குது கச்சேரி! 
ஐயா, போலீஸ் என்ன சொல்லிட்டுப் போறாங்க? பாப்பாவை வாங்கி அடக்கம் செய்யச் சொல்றாங்க! தப்பு பாப்பா மேலன்னு தெரிஞ்சா உரிச்சுடுவோம்ன்னு மெரட்டிட்டுப் போறாங்கய்யா! 
அழாதீங்க பெரியவரே, நாங்க பார்த்துக்கறோம்! நாளைக்கு இன்னும் கொஞ்சம் ஃபோர்சா வருவாங்க! நீங்க மட்டும் பயப்படாம இருங்க, நம்ம வக்கீல் எல்லாம் பார்த்துக்குவார்! 
தைரியமா இருங்க! 

அடுத்த நாள்: 
யோவ், ப்ரின்சிபாலையும் அரெஸ்ட் பண்ணியாச்சு! ரொம்ப டிராமா பண்ணாம, பாடியை அடக்கம் பண்ணிட்டு வாங்க, நாளைக்கு காலைல உங்களைக் கொஞ்சம் விசாரிக்கணும்! புள்ளைய வளத்திவெச்ச லட்சணத்துக்கு நாளைக்கு இருக்குடி உனக்கு!
ஐயா, என்னய்யா போலீஸ் இப்படி சொல்லிட்டுப் போறாங்க?
கவலைப்படாதீங்க, ஏழைன்னா மோழையும் பாயும்ன்னு தெரியாமலா சொன்னாங்க? நாங்க இருக்கோம் தைரியமா இருங்க! 

மறுநாள்: 
யோவ், நாங்க கேட்கறதுக்கு உண்மையான பதிலை மட்டும் சொல்லணும்! எவனாவது சொல்லிக்கொடுத்து பொய் சொன்னீங்க, லத்தி பிஞ்சுரும் பார்த்துக்க! 
அந்த வாத்தியாருக்கும், உங்க பொண்ணுக்கும் எத்தனை நாள் பழக்கம்? 
தெரியாதுங்கய்யா, சிறுக்கி மவ எங்ககிட்ட எதுவுமே சொல்லலையே! 
என்னய்யா ஓவரா நடிக்கிறீங்க? அவங்களுக்குள்ள எல்லாமே இங்கதான் நடந்திருக்கு, நீங்க புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும் வாசல்ல வெளக்குப் புடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தீங்களா? 
ஐயா, என்னங்கய்யா இப்படிப் பேசறீங்க, நாங்க அப்படிப்பட்டவங்க இல்லைய்யா! 
அப்புறம் எப்படிய்யா, அந்த வாத்தியாரை உங்க புள்ள இங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தா? 
ஐயா, ரொம்ப அபாண்டமா பேசாதீங்க ஐயா! 
இந்த அழுது டிராமா போடறதெல்லாம் அவனுக கிட்ட வெச்சுக்க! உண்மையை எப்படி வெளிய கொண்டுவரணும்ன்னு எங்களுக்குத் தெரியும்! 
பைக்குல ஏறிக்கிட்டு, உன்வீட்டு வாசலுக்கே வந்திருக்காரு, உன் பொண்ணுதான் அவரை கையைப் பிடுச்சு உள்ளே கூட்டிட்டுப் போயிருக்கா. நீங்க புருஷன் பொண்டாட்டி எங்கே போனீங்க? 
இந்த பேச்சைக் கேளுங்க, இது உங்க பொண்ணு அந்த வாத்தியாருக்கு போன் பண்ணிப் பேசுனது! 
ஐயா, சத்தியமா அந்தப்புள்ள வாத்தியார்ன்னு நம்பித்தான்யா வண்டியில கூட வந்திருக்கு. நாங்க ரெண்டுபேரும் தள்ளுவண்டி யாவாரத்துக்குப் போய்ட்டோம், அந்த நாய்தான் தண்ணி கேட்டு உள்ளே வந்திருக்கான். இந்தப்பொண்ணும் வாத்தியார்தானேன்னு உள்ளே வர விட்டிருக்கு! 
சரி, நடந்தது தப்புன்னு அந்தப்புள்ள நெனச்சிருந்தா, உங்ககிட்ட சொல்லியிருக்கலாமே? எதுக்கு திரும்பத் திரும்ப அந்த வாத்தியாருக்கே போன் பண்ணி பேசுச்சு? பிரின்சிபால் கேட்டதுக்கு, நான் சத்தம் போடல, சார் வைஃப் டீச்சர்கிட்டையும் சொல்லலைன்னு சொல்லியிருக்கு! 
இந்த வயசுல உடம்பு கேட்டிருக்குது உன் புள்ளைக்கு! உள்ள கூப்பிட்டு எதைக் காமிச்சுதோ, அந்த ஆள் விழுந்துட்டான்! 
நல்லவேளை, அந்தப்புள்ள இன்னைக்கு உசுரோட இருந்தா விபச்சாரக் கேஸ்ல உள்ளபுடிச்சுப் போட்டிருப்போம்! உங்க நல்ல நேரம் அது செத்துப்போச்சு! 
ஐயா, நாக்குல நரம்பில்லாம பேசாதீங்கய்யா அது பச்சைமண்ணு. 
அதுனாலதான் வாத்தியாரை வீட்டுக்குள்ள கூப்பிட்டு கதவை சாத்துச்சா? 
இந்த போன்ல பேசுனது உங்க புள்ள குரல்தானே? ஆமாங்கய்யா 
ஏய், சும்மா அழுது மாய்மாலம் பண்ணாத! 
ரெண்டுபேரும் சம்மதிச்சு நடந்தது ரேப் ஆகாது. அதை மொதல்ல தெரிஞ்சுக்க! அவங்களுக்குள்ள என்ன சண்டையோ, அது அந்த ஆளை பிளாக்மெயில் பண்ணப் பாத்திருக்கு! 
மரியாதையா, நாளைக்கு நாங்க சொல்றமாதிரி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கற வழியைப்பாரு! நாங்க அதுக்குள்ளே அந்த டீச்சரையும், அந்த ப்ரின்சிபாலையும் விசாரிச்சுட்டு வர்றோம்! 
ஐயா, என்ன சொல்லிட்டுப் போறாரு போலீஸ்காரர்? ஏன் அழறீங்க? 
ஐயா, எங்க குடியே முழுகிப்போச்சுங்கய்யா. என் பொண்ணு பேசுனதை நாங்க கேட்டோம்ய்யா. அதுதாங்கய்யா அந்த வாத்தியாருக்கு போன் பண்ணி பேசியிருக்கு! இப்படி எங்க தலைல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டுப் போய்ட்டாளே படுபாவி! 
தோழரே, மொதல்ல அழறத நிறுத்துங்க. போலீஸ்காரங்க அப்படித்தான் பேசுவாங்க. நீங்கதான் சுதாரிப்பா இருக்கணும்! மொதல்ல ரெண்டுபேரும் கண்ணைத் தொடச்சுக்கிட்டு இந்த டீயைக் குடிங்க! இப்போ, நான் சொல்றத பொறுமையா கேளுங்க! நாங்களுக்கும் அந்த வாட்ஸப் ஆடியோவை கேட்டோம். அதில் உங்களுக்கு ஒன்னு புரியுதா, அந்த வாத்தி, தான் ஒரு மன்மதக் குஞ்சுன்னு நெனச்சுக்கிட்டு சுத்தியிருக்கான்! பிள்ளைகளுக்கு வாத்தியார் மேல வர்ற இயல்பான ஈர்ப்பை, காதல்ன்னு, மயக்கம்ன்னு அவங்க நினைக்கறமாதிரி திட்டம்போட்டு காய் நகத்தியிருக்கான். 
ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணுமேல பொறாமை வர்றமாதிரி ஒரு இமேஜை கிரியேட் பண்ணி, எல்லோரையும் ஒரு மயக்கத்திலேயே வெச்சு குளிர் காஞ்சிருக்கான். இது திட்டம் போட்ட அயோக்கியத்தனம்! அதில், அன்னைக்கு உங்க பொண்ணு தனியா இருந்ததை பயன்படுத்திக்கிட்டான்! 
ஐயா, எங்க புள்ளையும் அதுக்கு சம்மதிச்சு உடன்பட்டிருக்குதானே! இந்த அவமானத்தை நாங்க எப்படித் தங்குவோம்! 
ஐயா, கொஞ்சம் நாங்க சொல்றதை காது கொடுத்து கேளுங்க! அந்தப்பெண், அப்படி ஒரு முடிவெடுக்கற வயசுக்கே வரல! சின்னப்பிள்ளையை சபலப்படுத்தி இணங்க வெச்சிருக்கான்! மைனர் பொண்ணை, சம்மதத்தோட தொட்டாலுமே அது சட்டப்படி ரேப்புதான்! உங்களுக்கு இது புரியுதா? 
ஒரு சின்னப்பிள்ளைக்கு எதிர்க்கவோ யோசிக்கவோ சக்தி இல்லாதப்போ, அதை தப்பா வழிநடத்தி உபயோகிச்சுட்டிருக்கான் அந்த அயோக்கியன்! நீங்க நாளைக்கு அந்த போலீஸ்காரர் மெரட்டற மாதிரி பேசுனா ஒரு சத்தம் கொடுங்க, நான் உள்ளே வந்து பேசிக்கறேன்! மனசைப் போட்டு குழப்பிக்காம ரெண்டுபேரும் தூங்குங்க!
அடுத்தடுத்த நாட்களில்:  
அந்தப் பிரின்சிபால் உங்க பொண்ணுகிட்ட இனிமேல் இந்தமாதிரி தப்பு செய்யாதேன்னு எவ்வளவோ புத்திமதி சொல்லியிருக்காங்க. உங்கப்பொண்ணுதான் திரும்பத் திரும்ப அந்த சாருக்கு போன் பண்ணியிருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சா மனசொடிஞ்சு போய்டுவீங்களே அப்படின்னு, டாக்டரை வெச்சு கவுன்சிலிங் எல்லாம் கொடுத்திருக்காங்க! அந்த சாரோட வைஃப் டீச்சரும் உங்க பொண்ணுக்கு போன் பண்ணிப் பேசியிருக்காங்க! 
சார் தப்பு செஞ்சிருந்தா ஓங்கி அறைஞ்சிருக்கலாமேன்னு கேட்டதுக்கு உன்பொண்ணு சொன்ன பதிலைக் கேட்டியா? அதெப்படி சாரை அறையமுடியும்ன்னு கேக்குது! 
கரெக்ட்தான்ங்கய்யா, வாத்தியாரே தப்பு செய்யும்போது புள்ள மெரண்டு என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிருக்குங்கைய்யா! 
அடிக்க முடியாது, ஆனா படுக்க முடியுமோ உன் புள்ளைக்கு? 
ஐயா, இப்படியெல்லாம் பேசாதீங்க, நாக்கு அழுகிடும்! என்னடி, எனக்கே சாபம் குடுக்கறயா, உன் பொண்ணு அதுக்கு முன்னாடி சின்ன வயசுலயே ரெண்டு மூனுபேருகிட்ட படுத்து எந்திருச்சிருக்கா, இப்படி ….த்தனம் பண்ற பொண்ணை பெத்துவெச்சுட்டு எனக்கு சாபம் விடறயா, உண்மையை சொல்லு, அங்க மாட்டிக்கிட்டு மானம் கெட்டதுக்கப்புறம்தானே இங்கே குடி மாறி வந்தீங்க? வாத்தியாரை மயக்கச் சொல்லி நீதானே சொல்லிக்கொடுத்தே? 
ஐயோ, ஐயா, 
யோவ், யாருய்யா நீ? விசாரணை நடக்கற எடத்துக்குள்ள நீ பாட்டுக்கு வர்றே? 
மரியாதையா பேசுங்க கான்ஸ்டபிள் சண்முகம், நான் ஹைகோர்ட் வக்கீல்! 
நீங்க விசாரணை நடத்தற லட்சணத்தை வெளிய இருந்து கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். எத்தனை பணம் வாங்குனீங்க எல்லோரும்? 
விசாரணை நடத்த பொம்பளை போலீஸ் எங்கய்யா? இன்ஸ்பெக்டர் ரேஞ்சுக்கு கீழ உள்ள அதிகாரி இந்தமாதிரி கேசில் விசாரணை நடத்தமுடியாது. தெரியும்ல? மரியாதையா வெளிய போங்க! இன்னொருதடவை லத்தியைத் தூக்கிக்கிட்டு இந்தப்பக்கம் வந்தா மரியாதை கெட்டுடும். 
அதிகாரியை வந்து விசாரிக்க சொல்லுங்க. அத்து மீறுனீங்கன்னா எல்லாரையும் கோர்ட்ல வெச்சு நாறடிச்சுடுவேன். வெளியே போய்யா. 
காச வாங்கிக்கிட்டு, இல்லாதவன் வீட்ல வந்து பொறுக்கித்தனம் பண்ணுவியா? 
நான் இப்போவே போய் கமிஷனரையும் கலெக்டரையும் பார்க்கறேன்! உங்க பொறுக்கித்தனத்துக்கு வேற ஆளைப்பாருங்க! 
ரொம்ப நன்றிங்கய்யா, நாங்க ரொம்ப பயந்துட்டோம். எப்படி அசிங்கமா பேசறார் பாருங்கைய்யா. 
விடுங்க, அவன் தரம் அவ்வளவுதான். நாளைக்கு அதிகாரிங்க யாராவது வந்தால் மட்டும் பேசுங்க. இல்லைன்னா நீங்க பதில் சொல்ல வேண்டியது இல்லை. நாளைக்கு நானும் கூட இருக்க பர்மிஷன் வாங்கிடுறேன். தைரியமா இருங்க! 

மறுநாள், வழக்கறிஞரையும் கூட வைத்துக்கொண்டு உயரதிகாரிகள் நடத்திய விசாரணையின் சினாப்ஸிஸ்: 

மன்னிச்சுக்கங்க. நேத்து நடந்த சம்பவத்துக்கு போலீஸ் சார்பா நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம். அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது. 
பரவாயில்லை, நீங்க கேளுங்க, நான் தேவைப்படும்போது தவிர, தலையிடாமல் உட்கார்ந்திருக்கிறேன் 
இட் ஈஸ் வெரி அன்ஃபார்ச்சுனேட். ஒரு சின்னப்பெண்ணோட உயிர் அநியாயமா போயிருக்கு, அதுக்கு போலீஸ் சார்பா எங்க ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனாலும், நாங்க விசாரிச்சவரைக்குமான உண்மைகள் தப்பு ரெண்டு சைடும்தான்னு காட்டுது. 
எதைவெச்சு அப்படி சொல்றீங்க சார்? 
இட் இஸ் எவிடண்ட் தட் தி கர்ள் வாஸ் நாட் இன் ஸ்டேபிள் மைண்ட். 
சார், தமிழ்லயே பேசுங்க, அவங்களுக்கு புரியணுமே!  ஐயா, நான் அந்த வாத்தியார் மேல தப்பில்லைன்னு சொல்லல, உங்க பொண்ணும் சபலப்பட்டு, உடன்பட்டிருக்கு, சொல்லப்போனா, சம்பவமே உங்க வீட்டில் வெச்சுத்தான் நடந்திருக்கு. 
இல்லை சார், பள்ளிக்கூடத்திலேயே நிறைய அத்துமீறல் மிரட்டியே நடந்துருக்கு. 
ட்ரூ, இருக்கலாம், ஆனால் உடல்ரீதியான முழுமையான குற்றம் இங்கேதான் நடந்திருக்கு! அதுக்கு அந்தப்பொண்ணும் உடன்பட்டிருக்கு. அதனால, இது ரேப்பில் வராது. 
தப்பா சொல்றீங்க சார். மைனர் பெண்ணோடு சம்மதத்தோடு உடலுறவு வெச்சுக்கிட்டாலும் அது கற்பழிப்பில்தான் வரும். ஐபிசி என்ன சொல்லுதுன்னு நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை! 
கரெக்ட். ஆனால், சம்பவத்தன்னைக்கு, அந்தப்பெண் அவரோட பைக்ல வந்திருக்கு, வீட்டுக்குள்ள கூப்பிட்டிருக்கு. சபலம், ரெண்டுபேரையுமே உணர்ச்சிவசப்பட வெச்சிருக்கு. நான் அவருக்கு வக்காலத்து வாங்கல. ஆனால், தான் செய்ததோ, உடன்பட்டதோ தப்புன்னு அந்தப்பெண்ணுக்கு பட்ட உடனே, அது பேரண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கலாம், அல்லது, தன்னுடைய தோழிகள் கிட்ட சொல்லியிருக்கலாம், 
ஆனா, ஒரு பையன்கிட்ட இதை சொல்லி அழுதிருக்கு. டோண்ட் யூ ஃபீல் திஸ் ஈஸ் ஸ்ட்ரேஞ்? அந்தப் பொண்ணுக்கும், பையனுக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தம்? 
இன்னைக்கு அந்தப்பையனை தூக்கிட்டு வந்து விசாரிச்சா, அவங்க ரெண்டுபேரும் காதலிச்சதாகவும், இந்த சம்பவம் தெரியவந்து தான்தான் அந்தப்பெண்ணிடம் கேட்டு உறுதி செஞ்சுக்கிட்டதாகவும் சொல்றான், அதுமட்டும் இல்லாம, இதை உங்ககிட்ட சொல்லச்சொல்லி வற்புறுத்தியிருக்கறான். 
அநேகமா, அவனையும் தற்கொலைக்கு தூண்டியதா இந்தக் கேஸ்ல சேர்க்கவேண்டிவந்தாலும் வரும். 
சார், நீங்க என்ன, இன்டைரக்ட்டா பயமுறுத்த ட்ரை பண்றீங்களா? 
நாட் அட் ஆல். 
அந்தப்பொண்ணு ரெண்டு காதலுக்கு நடுவே அல்லாடியிருக்கு. 
 ஐ அப்ஜெக்ட். இது காதல் அல்ல, திட்டம் போட்ட செடேசன். 
ஓகே, அப்படியே இருக்கட்டும், நான் அந்த வாத்தியாருக்கு சப்போர்ட் பண்ணல. அவர் விஷயத்துல சட்டம் தன் கடமையை உறுதியா செய்யும். ஆனா, அந்த பிரின்ஸிபால்? 
அவங்க செய்தது என்ன தப்பு? 
அந்தப் பொண்ணும் உடன்பட்டு நடந்த சம்பவம் என்பதால, உங்களுக்குத் தெரியவந்து, அதோட படிப்பை நிறுத்தி, அதோட எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாதுன்ற நல்ல எண்ணத்தோட, புத்திமதி சொல்லி தானே ஒரு கவுன்சிலிங்குக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க! இதில் அவங்களை உடந்தைன்னு பேசுவதோ குற்றம் சாட்டுவதோ நியாயம் இல்லைதானே? 
பொண்ணோட எதிர்காலம் கருதியா, இல்லை, பள்ளியோட எதிர்காலம் கருதியா? 
இருக்கலாம்! ரெண்டுமே இருக்கலாம்! 
ஆனால், ஒரு தாய் செய்யவேண்டியதை அந்த பிரின்சிபால் செஞ்சிருக்காங்க! அது கொஞ்சம் அவங்க அதிகார வரம்புக்கு மீறிய செயலாக இருந்தாலும்! 
சார், தயவு செஞ்சு பூசி மெழுகாதீங்க! சுத்தி வளைச்சு நீங்க எங்க வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. அந்தப் பிரின்சிபால் மீதான கம்பளைண்ட்டை வாபஸ் வாங்க வாய்ப்பே இல்லை. உங்க நேரத்தை விரயம் செய்யாதீங்க. இனி, கோர்ட் சொல்லட்டும்! 
சரிங்க, அதுக்கு மேல, உங்க இஷ்டம்! 
நான் கொஞ்சம் இவங்களோட தனியா பேசணும், வக்கீல் இல்லாம. 
சட்டம் அதை அனுமதிக்குதுன்னு நினைக்கிறேன், சரிதானே, கூடவே ஒரு லேடி ஆபீஸரும் இருக்காங்க! 
ஓகே, நான் வெளியே வெய்ட் பண்றேன்! 
அம்மா, ஐயா, நீங்க தைரியமா பேசுங்க, பார்த்துக்கலாம்! 
தாங்க்யூ!
ஐயா, நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வர்றேன்! இவங்க பேச்சை கேட்டுக்கிட்டு ஆடாதீங்க, உங்களுக்காக போராடறதா வந்த எல்லோரும் நேத்தே, ஒரு சினிமாக்காரன் பின்னாடி போயாச்சு! 
அவங்க யாரும், காலத்துக்கும், ஏன், கேஸ் முடியற வரைக்கும்கூட உங்ககூட நிக்கப்போறதில்லை! அவங்களுக்கு இது ஒரு நாலுநாள் பரபரப்பு. அவ்வளவுதான்! 
 நடந்தது ஒரு மிகப்பெரிய இழப்பு. அதில் சந்தேகம் இல்லை, ஆனா தப்பு ரெண்டுபேரு மேலயும் இருக்கு. கோர்ட்டுக்குப் போனா, எதிர்க்கட்சி வக்கீல் கேட்கற கேள்விக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும், அதை உங்க வக்கீல் தடுக்க முடியாது. என்ன மாதிரி கேள்வி வேணும்னாலும் கேட்கலாம், அவங்க கட்சிக்காரரை காப்பாத்தறது அவர் கடமை! 
ஒரு முன்னாள் முதலமைச்சர், இறந்துபோய் இத்தனை வருடம் கழித்தும், அவர் மீது ஆயிரம் நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு இருந்தும், அவரை விமர்சிக்க அவரது ஆண் நண்பர்கள், ஒழுக்கம் இதைப்பற்றித்தான் படித்தவர்கள் இருக்கும் தளத்திலும் பேசுகிறார்கள்! இது, இந்த நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபம்! 
அதுதான் உங்க பொண்ணுக்கும் நடக்கும்! 
கோர்ட்ல உங்க பெண்ணோட ஒழுக்கம் தாறுமாறா விமர்சிக்கப்படும், பத்திரிக்கை, டிவி எல்லாத்திலும் அதுதான் ஓடும். இன்னைக்கு உங்க பொண்ணுக்கு ஆதரவா பேசற எல்லோரும் அன்னைக்கு வேறுமாதிரி பேசுவாங்க, ஏன்னா அவங்களுக்கு பத்திரிக்கை விற்கணும், டிஆர்பி ஏறணும். அவ்வளவுதான்! ஃபோஸ்கொ சட்டத்தில் கைது செய்தும், நேத்தைக்கே அந்த ப்ரின்சிபாலுக்கு ஜாமீன் கிடைச்சாச்சு. அடுத்த வாரம், அந்த ஆசிரியர் ஜாமீன் மனுவுக்கு, நாங்க ஆட்சேபணை சொல்லமுடியாது. அவங்க பெரிய இடம். எங்களுக்கு மேலிடத்து இன்ஸ்டரக்சன்! கீழ்கோர்ட்ல உங்க வக்கீல் முக்கி முக்கி தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், அப்பீல் வரும்போது நாங்க கையை தூக்கிடுவோம், அந்த ஆள் வெளியே வந்துடுவார்! இதுதான் நடக்கப்போகுது! 
பிராக்டிகலா யோசிங்க, அதனால உங்களுக்கு என்ன லாபம்? கோர்ட், கேஸுன்னு அலைஞ்சு, பொழைப்பும் போயி, பொண்ணு பேரும் கெட்டு நாறி, நீங்க சாதிக்கப்போறது என்ன? 
நான் உங்கள அப்படியே விட சொல்லல, நான் அவங்ககிட்ட பேசி, ஒரு அஞ்சு லட்சமோ, ஆறு லட்சமோ வாங்கித் தர்றேன்! 
மிச்சமிருக்கற காலத்தையாவது ஒரு சின்னக்கடை சொந்தமா போட்டு, கௌரவமா காலத்தை ஓட்டுங்க, வேணும்ன்னா வேற இடத்துக்கு வீட்டை மாத்திக்கங்க, நானே ஏற்பாடு செய்து தர்றேன். தப்பு யார் செஞ்சிருந்தாலும், கடவுள் பார்த்துக்குவார். தண்டிக்கறதும் மன்னிக்கறதும் அவர் வேலை! 
ஒரு சகோதரன் மாதிரி சொல்றேன், தெய்வமா போன உங்க பொண்ணு உங்களுக்கு கொடுத்த ஒரு சின்ன அன்பளிப்பா இதை எடுத்துக்கிட்டு பீஸ்ஃபுல்லா இருங்க. என்ன சொல்றீங்க? 
ஐயா, நீங்க பெரிய ஆபீஸர், ரொம்ப தன்மையா, நிதானமா நியாயம் பேசறீங்க! எங்க பொண்ண பொதச்ச மண்ணுகூட இன்னும் ஈரம் காயல! கை நீட்டி எங்களை காசு வாங்கச் சொல்றீங்க! ஒரே ஒரு கேள்வி, உங்க மனசாட்சிக்கு பொதுவா பதில் சொல்லுங்க! உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, அதுக்கு இப்படி நடந்திருந்தா, நீங்க பத்து லட்சமோ, பத்து கோடியோ வாங்கிட்டு விட்ருவீங்களா? 
உண்மையை சொல்லணும்ன்னா, இந்த யூனிஃபார்ம்ல இருக்கும்போது சொல்லமுடியாது! 
மேலிடம் சொல்றதை மனசாட்சி, மண்ணாங்கட்டி எல்லாம் பார்க்காம செய்யவேண்டியது ட்யூட்டி! 
ஒன்னு மட்டும் சொல்றேன்! இந்த அமைப்புல ஏழையா, எந்தஒரு பக்கபலமும் இல்லாதவனுக்கு சட்டமும் நீதியும் எந்தக்காலத்துக்கும் மறுக்கப்பட்ட விஷயம். இதை அவங்க விடப்போறதில்லை! நான் இல்லைன்னா வேற ஒருத்தர் வருவார். எதிரித்து நின்னு தோத்துப்போறதோட, கேவலமும் படவேண்டியிருக்கும்! ஒரு சின்ன பெனஃபிட்டோட வளைஞ்சு கொடுத்துப்போங்கன்னுதான் சொல்றேன்! இன்னைக்கு ஏத்திவிடற யாரும் உங்ககூட நிற்கப்போறதில்லை! யோசிங்க, இப்போ முடிவு சொல்லவேண்டாம். நாளைக்கு பதில் சொல்லுங்க.
நான் காலைல ஃபோன் பண்றேன்! 
சாரி. ரெண்டுபேரும் கண்ணை தொடைச்சுக்கங்க! எனக்கு ஏவப்பட்ட வேலையை நான் செய்றேன்! 
என்னை மன்னிச்சுக்கங்க! 
 நாளைக்கு காலைல ஃபோன் பண்ணும்போது யோசிச்சு நல்ல பதில் சொல்லுங்க. 

ஐயா, நான் அவங்க பேசுனது எல்லாமே வெளியே நின்னு கேட்டேன். 
எல்லாமே அபத்தம்! மைனர் பெண்ணை ஏமாற்றி கெடுத்திருக்கார், அதுவும் புனிதமான ஆசிரியர் வேலைல இருக்கறவன்! 
இதில் பொண்ணு உடன்பட்டதுன்னு சொல்றது கதை! அந்த டீச்சர், ஃபோனில் அப்பட்டமா உங்க பொண்ணை மிரட்டியிருக்காங்க! 
அந்தப் பொண்ணும், பையனும் காதலிச்சாங்களா அப்படின்றது இந்தக் கேஸுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்! 
ஆனால், அந்த ஆசிரியர் மேல உங்க பொண்ணுக்கு வந்தது எல்லோருக்கும் அந்தப் பருவத்தில் வர்ற ஈர்ப்பு! அதை பயன்படுத்திக்கிட்டு, உங்ககிட்டக்கூட சொல்லவிடாம மிரட்டி, பிரஷர் தாங்க முடியாம உங்க பொண்ணு தற்கொலை பண்ணிக்க மறைமுகமா தூண்டியிருக்காங்க! 
இது ஒரு கூட்டுக்கொலை, நம்பிக்கை துரோகம்! 
பழி வாங்கறதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகுதுன்னா, இந்த நாட்டில் இனிமேல் இப்படி ஒரு தப்பை இன்னொருத்தன் செய்ய யோசிப்பான் - அதுதான். 
இனி தப்பே நடக்காதுன்னு நான் சொல்லல. அவர் சொன்னது ஒரு விஷயம் உண்மை. எந்த வயசா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும், ஒரு பெண்ணை விமர்சிக்க அவங்களோட ஒழுக்கத்தை கையில் எடுக்கும் கேவலமான இந்த சமூக அமைப்பு மாறவரைக்கும், பொம்பளைன்னா போகத்துக்கு மட்டும்தான், எந்த வயசா இருந்தாலும், அவளோட கால் சந்துக்குள்ள நுழையறதுனான் ஆம்பிளைக்கு அழகுன்னு நினைக்கற அளவு புள்ளைகளை வளத்தற வரைக்கும், நாய் வாயை வெச்சுட்டதால நாம் நாசமாய் போய்ட்டோம்ன்னு ஒரு பொண்ணு நினைக்கிறவரைக்கும், அதை பகிரங்கமா பெத்தவங்ககிட்டக்கூட பேசமுடியாத இந்த எழவெடுத்த அமைப்பு இருக்கறவரைக்கும், அவர் சொல்றதுதான் உண்மையான நடைமுறை. 
ஆனா, மாற்றம்ங்கறதை நாம் ஏன் நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கக் கூடாது? 
அவங்களோட விமர்சனம் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, நேர்மைக்குப் போராடற உறுதி ஏன் நமக்கு வரக்கூடாது? 
பணம் வாங்கி உங்க பொண்ணோட மரணத்தை கேவலப்படுத்திடாதீங்க. சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. பணம் காசு என்னைக்கு வேணும்ன்னா, யார்கிட்ட வேணும்ன்னாலும் வரும், போகும். காலத்துக்கும் கூட வர்றது நாம் வாழ்ந்த விதம்தான். அந்த மொத்த கூட்டத்துக்கும் சாகறவரைக்கும் ஆயுள் தண்டனை வாங்கித் தர்றது என் பொறுப்பு. அதுக்கு ஒத்தை ரூபாய் நீங்க தரவேண்டாம். 
நீங்க வாங்கித்தரப்போற நீதி, உங்க பொண்ணு சாவுக்கல்ல, இதுமாதிரி, நம்ம கண்ணுக்கு தெரியாம இப்போதும் நடந்துக்கிட்டிருக்கற அநியாயங்களுக்கு பயந்துபோய் உடன்படற பாவப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு நீங்க வாங்கித்தர்ற தைரியம். 
அது உங்க காலத்துக்கும் கூட வர்ற சொத்து. ஆரம்பத்துல அந்தக் கான்ஸ்டபிள் அதட்டிப் பேசுனதும், இன்னைக்கு இவர் அன்பா பேசுனதும் ஒரே விஷயம்தான், 
ரெண்டுபேரும் அவங்களுக்கு கொடுத்த வேஷத்தை சிறப்பா செஞ்சுட்டுப் போறாங்க, அவ்வளவுதான். இன்னும் அது வேற வடிவத்துல தொடரத்தான் செய்யும். நாங்க பெருசா நிதி எதுவும் தர முடியாது. ஆனா, கண்டிப்பா உங்க பொண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்யமுடியும்! 
ஆனா, அதுக்கு நீங்க பணத்துக்கோ, மிரட்டலுக்கோ மாறாம உறுதியா நின்னாத்தான் முடியும். 

ஐயா, உங்ககிட்ட ஒரேயொரு கேள்வி! நீங்க எங்களை மாதிரி ஏழை ஜென்மமா, ஆதரவில்லாம இருந்து, இப்படி உங்க மகளுக்கு நடந்திருந்தா என செய்வீங்க?  
இதுக்கு பதில் சொல்றது கஷ்டம் ஐயா. 
கற்பனைல எப்படி வேணும்னாலும் நடக்கலாம். ஆனா, நீங்க எடுக்கப்போற எந்த முடிவும், காலத்துக்கும் உங்கள உறுத்தாத மாதிரி எடுங்க. உங்க மனசாட்சி என்ன சொல்லுதோ, அதை செய்யுங்க. 
பணம் வாங்கிக்கிட்டு கஷ்டப்படாம இருந்திருக்கலாம்ன்னோ, போராடி ஜெயிச்சிருக்கலாம்ன்னோ பின்னாடி வருத்தப்படாதீங்க. 
எந்த முடிவெடுத்தாலும் அதை நேர்மையா என்கிட்டே சொல்லுங்க. ஏன்னா, எல்லாரோட நேரத்தையும் விரயம் செய்ய வேண்டாமே? 
நீங்க என்ன முடிவெடுத்தாலும், என்னால புரிஞ்சுக்க முடியும்! 
 உங்க பொண்ணு விஷயத்தில் நீதி கிடைக்கறதாலோ, கிடைக்காததாலோ எதுவுமே மாறப்போறதில்லை. இது இன்னும் தலைமுறை கடந்ததும் நடக்கப்போற போராட்டம்! 
நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் தப்பா நினைக்கபோறதில்லை. உங்க வாழ்க்கை, உங்க முடிவு, அதை விமர்சிக்கவோ பாராட்டவோ எனக்கு உரிமை இல்லை. 
ஆனா, எதா இருந்தாலும், நாளைக்கு உங்க முடிவை சொல்லிடுங்க. 
ரெண்டுபேரும் நல்ல யோசிங்க, நாளைக்கு நான் போன் பண்றேன். உங்க முடிவை சொல்லுங்க! 

இரவு முழுவதும் அந்த இரண்டு ஜீவனும் தூங்கவே இல்லை. 
விடியவிடிய சாதக பாதகம் பற்றி பேசி, அழுது அரற்றி, தெளிந்தபோது, 
 ஃபோன் அடித்தது!

1 கருத்து: