திங்கள், 20 டிசம்பர், 2021

எல்லோரும் ஒட்டுமொத்தமாய் தோற்றுப்போனோம்!

இன்னொரு தற்கொலை என்ற அளவில் கடந்துபோகப் பழகிவிட்டோம்!

காரணம் யாரென்று பெயர் சொல்லியிருந்தால் போராளிகளுக்காவது பயன்பட்டிருக்கும்!

பொதுவாக குமுறியிருக்கிறது அந்தக் குழந்தை!

“என் கனவுகள் அத்தனையும் சிதைந்து போய்விட்டன. பாதுகாப்பே இல்லை இந்த பாழும் சமுதாயத்தில்,

உறவுகள், ஆசிரியர்கள், யாரையுமே நம்பமுடியவில்லை” என்று அடிக்கோடிட்டு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறது ஒரு பள்ளிக் குழந்தை!

இது இப்போது ஒரு வழக்கமான வாராந்திர நிகழ்வு என்று ஆகிவிட்டது!

கட்சி அரசியலும் சினிமாவும் போடும் காட்டுக்கூச்சலில் இது ஒரு முனகலாகக்கூட கேட்காமல்போய்விட்டது!

ஒரு திரைப்படம் வெற்றியா தோல்வியா என்ற விவாதம் பெற்ற வெளிச்சத்தில் நூற்றில் ஒரு பங்கும் இதற்குக் கிடைக்கவில்லை!

கோவை பள்ளி மாணவி தற்கொலையில் நமக்கு குற்றம் சாட்ட ஒரு உருவம் இருந்தது வசதியாகப் போய்விட்டது!

அந்த ஆசிரியர், பள்ளி முதல்வர்தான் காரணம் என்று அடுத்தவனை விரல் நீட்டிப் பேச வாய்ப்பு கிடைத்தது!

நல்லவேளை, நாம் தப்பித்தோம் என்ற சந்தோஷத்தில், நம் குரலும் ஓங்கி ஒலித்தது!

அதிலும், இதிலும், இடையில் இதுபோல் சிறு அதிர்வுகளை மட்டுமே ஏற்படுத்திய கரூர் சிறுமி தற்கொலையிலும், குற்றவாளிகளின் கூட்டாளிகள் நாமும்தான் என்பது ஏனோ நமக்கு உறுத்தாமலே போய்விட்டது!

நடந்தது நம் வீட்டில் இல்லை என்பதால், நாம் மறுநாளே திருவாதிரையோ, தீபாவளியோ கொண்டாடப் போய்விட்டோம்!

இது நம் வீட்டில் நடக்கவில்லையா? நம் குழந்தைகள் அவர்கள் ஆணோ, பெண்ணோ பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா? “நமக்குத் தெரியாது” என்பதுதான் உண்மை!

மொத்தமாக, ஒரு சமுதாயமாக நாம் தோற்றுப்போய்க்கொண்டிருக்கிறோம்!

எத்தனை வீடுகளில் குழந்தைகள் தோழமையோடு அணுகப்படுகிறார்கள்

தங்களுக்கு நேர்வதை, தாங்கள் சந்தேகமாகவோ, சங்கடமாகவோ உணர்வதை பெற்றோரிடம் வந்து 

நேரிடையாக சொல்லுமளவு எத்தனை குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்கப்பட்டிருக்கிறது?

மாதா, பிதா, அடுத்த இடத்தில் இருக்கும் குரு இந்த மூன்றுபேரும் எந்த அளவுக்கு அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்?

துரதிர்ஷ்டவசமாக, குரு என்ற இடத்தில் இருப்போரே முதல் குற்றவாளிகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்!

ஏன் இப்படி?

குடும்ப உறவுகளுக்குள் கொடுக்கல் வாங்கலில்கூட, ஒரு குழந்தைதான் கொன்று வீசப்படுகிறது! அதுவும் தவறாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே கொலை செய்யப்படுகிறது!

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒருவேளை, ஃப்ரீ செக்ஸ் அனுமதிக்கப்பட்டால் இதெல்லாம் நடக்காதா?  மூலைக்கு மூலை சாராயக்கடைகளை திறந்ததுபோல பாலியல் விடுதிகள் திறக்கப்பட்டால், இப்படியெல்லாம் செய்யமாட்டார்களா? 

நிச்சயமாக இல்லை!

பெண் என்பவளே காலை விரித்துப் படுக்கவைக்கப்படவேண்டிய ஒரு பண்டம்! பெண் என்பவள் ஒரு உடல்! அவளுக்கு ஆறு வயதானாலும், அறுபது வயதானாலும், தன் தேவையைத் தணிக்க ஒரு ஓட்டை! அதை அடைவதே ஒரு ஆணின் அதிகபட்ச ஆளுமை! 

ஒரு பெண்ணை அவமானப்படுத்த, அவள் உடலைத் தொட்டாலே போதும்! அப்படித் தொட்டதை ஒரு பெரிய அவமானம், இழப்பு என்று உணரவைத்தே அவளை மிரட்டவும் முடியும், இனி வாழ்க்கையே போச்சு என்று அவளை நம்பவைக்கவும் முடியும்! 

எவ்வளவு பெரிய லைசென்ஸ் ஆண்களுக்கு?

Stalking எவ்வளவு glorify செய்யப்படுகிறது நம் கதைகளிலும், படங்களிலும்?

கட்டாய உறவு கொண்டவன் திருந்திவந்தால் அவனையே ஏற்றுக்கொள்வதால், காணாமல்போன கற்பு காப்பாற்றப்படும் என்பது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதமும் அதிர்ஷ்டமும்!

கோவலனை திரும்ப ஏற்றுக்கொண்ட கண்ணகிதான் கற்புக்கு அரசி! 

கண்ணகி ஒரு மாதவனோடு அலைந்து திரிந்து வந்து, காத்திருந்து ஏற்றுக்கொண்டிருந்தால் கோவலன் கற்புக்கு அரசன் ஆகியிருப்பானா?

காவியங்களிலிருந்து, புராணத்திலிருந்து, பெண்தான் புனிதத்தை தீக்குளித்தோ, கல்லாய்க் கிடந்தோ நிரூபித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது!

ஆண் அலம்பிக்கொண்டு போனால் போதும்!

இதைப் பேசினால் நீண்டுகொண்டே போகும்!

நடந்த கதைக்கு வருவோம்!

நட்பு, உறவு, ஆசிரியர் என்று எவ்வளவு நம்பிக்கை மோசடிகள்?

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமுதாயம் என்று பொதுப்படையாய் கையைக் காட்டுவதைவிட, முதலில் தோற்றுப்போனவர்கள் பெற்றோர்கள்!

அந்தப் பெண் வீட்டில் வந்து முதல்நாளே சொல்லியிருந்தால், பெரும்பாலும் என்ன ஆகியிருக்கும்?

நீ என்ன செய்தாய் என்பதுதான் முதல் கேள்வியாய் இருந்திருக்கும்!

பாதிக்கப்பட்ட குழந்தைக்கே கட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கும்! படிப்பு நிறுத்தப்பட்டு வீட்டோடு முடக்கப்பட்டிருக்கும்!

லட்சக்கணக்கில் கட்டணம் கட்டி சேர்த்த பள்ளியை பகைத்துக்கொள்ளவோ, வேறு பள்ளி மாற்றவோ எத்தனை பெற்றோர் தயாராக இருப்பார்கள்? அதைவிட குற்றம் சொல்லும் குழந்தையையே குறை சொல்வது சுலபம்தானே?

இதைவிட அடிப்படையான விஷயம், 

கற்பென்ற ஒரு கற்பிதத்தை பெண் குழந்தைகளின் கால் சந்தில் ஒளித்துவைத்து, அதை புனிதம் என்றும், அதை காக்கவேண்டிய முழுப் பொறுப்பும் அந்தப் பெண்ணின் தலையில்தான் என்றும் நம்பித் திரிவது!

தனக்கு என்ன நேர்கிறது, அதை எப்படித் தடுப்பது, இதை யாரிடம் முறையிடுவது என்பதுகூட தெரியாத குழந்தைகள் அறியாமல் இழக்கும் ஏதோ ஒன்றுதான் கற்பு. 

ஜெயகாந்தன் நாவலில் ‘கெட்டுப்போய்’ வரும் பெண் தலையில் தண்ணீரைக் கொட்டி நீ சுத்தமாயிட்டடீ என்று சொல்லும் அம்மா பாத்திரம் அன்றைக்கு ஒரு கலாசார அதிர்ச்சி!

கெட்டுப்போக பெண் ஒரு பண்டமில்லை! அந்நேரத்தில் தலையில் தண்ணீர் கொட்டுவதே அதீதம்! நாய் காலைத் தூக்கிவிட்டுப் போனதென்றால் காலையா வெட்டிக்கொள்ள முடியும்? கழுவிக்கொண்டு போவதுதான் உத்தமம்!

விரும்பி உடன்படாமல் வலுக்கட்டாயமாக நடப்பது உறவுமல்ல! விரும்பியே உடன்பட்டு நடந்திருந்தாலும், இனி வேண்டாம் என்று மறுதலிக்கும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டுதானே?

விருப்பம் இன்றி புணரவரும் ஆணை தற்காப்புக்காக கொல்லவும் சட்டம் அனுமதிக்கிறது! 

ஆனால், சமூகம்?

அவள் துப்பட்டாவை ஒழுங்காகப் போடவில்லை என்பதுதான் குற்றத்தின் ஆரம்ப காரணி என்று கதைக்கும்!

கெட்டுப் போனவள், கெடுக்கப்பட்டவள் என்ற வார்த்தைப் பிரயோகங்களே மிகப்பெரிய அநீதி! 

பெண் என்பவள் போகப்பொருள் அல்ல என்பதை ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்! 

பெண் குழந்தைகளிடம், தன் பயங்களை, எதிர்கொள்ளும் விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளும் தோழமையோடு இருங்கள்!

குழந்தைகள் யாரைப்பற்றி, அவர்கள் கடவுள் ஸ்தானத்தில் இருந்தாலும், எது சொன்னாலும் நம்பிக்கையோடு காது கொடுத்துக் கேளுங்கள்!

இதில் பயப்படவோ, அவமானப்படவோ, மறைத்துவைக்கவோ ஏதும் இல்லை என்பதை குழந்தைகளோடு நீங்களும் உணருங்கள்!

எது நடந்தாலும் நம் பெற்றோர் நமக்குத் துணையிருப்பார்கள் என்ற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் விதையுங்கள்!

குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால், இந்த உலகத்தையே புரட்டிப்போடும் வேலை இருந்தாலும், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முதலில் அதில் கவனம் செலுத்துங்கள்! 

அக்கறையோடு நம்பிக்கையோடு விசாரித்து, சின்ன விஷயமாக இருந்தாலும் உதாசீனப்படுத்தாமல் கேளுங்கள்!

நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பது எது என்பதை சொல்லிக்கொடுங்கள்!

தவறு என்று தெரிந்தால், செருப்பைக் கழற்றி அடிக்கச் சொல்லுங்கள்! அத்துமீறினால் அறுத்து வீசினாலும் தவறில்லை என்று சொல்லுங்கள்!

நாலுபேருக்குத் தெரியவந்தால் அசிங்கம் அந்த மிருகத்துக்குத்தான் என்பதை உணரச் செய்யுங்கள்!

குழந்தைகள் யாரைக் குற்றம் சொன்னாலும், அவர்களுக்கே ஆதரவாய் நில்லுங்கள்!

அந்த விஷயத்தில் உங்கள் குழந்தையைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்.

இப்போதைக்கு இது போதும்! அவரவர் குழந்தைகளை அவரவர் காப்பதும், துணை நிற்பது அவசியம் என்பதை பெற்றோர் முதலில் உணருங்கள்!

இது முதல் படி!

சமுதாயத்தை மாற்ற பல படிகள் கடக்கவேண்டும்! அதை வேறொருநாள் பேசுவோம்!புதன், 15 டிசம்பர், 2021

இன்றைக்கும் ஒரு குருதிக் கொடை!

நேற்று மதியம் டப்பா சாப்பாட்டை தின்னுட்டு, பிடுங்க எந்த ஆணியும் இல்லாம சமந்தா வீடியோவை பார்த்து சொல்லலாமா, ஓஓ சொல்லலாமான்னு யோசிச்சுட்டிருக்கும்போது பதட்டமா வந்தார் பார்ட்னர்!

சார் நீங்க ப்ளட் டோனர்தானே?”

ஆமா!”

பாசிட்டிவ்தானே?”

ஆமா!”

கடைசியா எப்போ டொனேட் பண்ணீங்க?”

என்னது, பிஸினஸ் பார்ட்னரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாரு, நாமவேற பழக்கதோஷத்துல ஆமா ஆமான்னு சொல்லிட்டிருக்கோம்?

என்ன சார் பிரச்னை? தூக்கம் வரலயா?”

இல்ல சார், அவசரமா ப்ளட் வேணும்! ஃப்ரண்டோட அம்மாவுக்கு நாளைக்கு காலைல ஓப்பன்ஹார்ட் சர்ஜரி! நாலு யூனிட் ப்ளட் வேணும்!”

அதுக்கென்ன, பேஷா கொடுத்துட்டாப்போச்சு!

எப்போ வேணும்?”

உங்களுக்கு எப்போ முடியும்?”

இங்க உட்கார்ந்து சேரை தேய்ச்சுட்டிருக்கறதுக்கு, அங்க போனா சேச்சிகளையாவது பார்த்துட்டிருக்கலாமேன்னு ரெட்டை ரெடியா, “ஏன், இப்போவே போறேனே?”

இல்ல சார், ஏதோ வேலை செஞ்சுட்டிருக்கீங்க, சாயங்காலம் போனாகூட போதும்!”

லேப்டாப்ல ட்விட்டரை நோண்டிட்டிருக்கறதுகூட தெரியாத ஆளெல்லாம் பிஸினெஸ் பார்ட்னரா வெச்சுட்டு எங்கே உருப்பட?

இல்ல, இதை எப்போ வேணும்னா பண்ணிக்கலாம், சேச்சி, சே.. சர்ஜரி முக்கியம்

எந்த ஹாஸ்பிடல்?”

அவர் சொன்ன ஹாஸ்பிடல்ல இதுவரைக்கும் டொனேட் பண்ணப் போனதில்லை! ஒரே ஒரு தடவை, கண் முன்னாடி பைக்ல இருந்து விழுந்து ரத்தம் சொட்டக் கிடந்தவரை எமர்ஜன்சி வார்டில் கொண்டு இறக்கிவிட்டு வந்தது தவிர, அங்கே வேறெதுக்கும் போனதில்லை!

சரின்னு, மூடிட்டு, (லேப்டாப்பை) அவர் ஃப்ரண்டோட நம்பரை வாங்கிட்டு கிளம்பியாச்சு!

எப்படித்தான் ப்ளட்லாம் டொனேட் பண்றீங்களோ, எனக்கு ரத்தத்தை பார்த்தாலே பயம்!” - இதுவேற!

கோடை பண்பலைல அந்நேரத்துக்கு ஏதோ ஆம்பள ஆர்ஜே ஆத்திட்டிருந்ததைக் கேட்கப் பிடிக்காம, கூடப் பொறந்த க்ரைம் பார்ட்னருக்கு ஃபோனைப் போட்டு கதை கேட்க, “போனவாரம், நான் அட்மிட் ஆன ஹாஸ்பிடல்ல ஃபீமேல் நர்ஸ்லாம் செம அழகா இருந்தாங்க!” ஆரம்பமே..

அடிப்பாவி! துணைக்கு என்னை கூப்பிட்டிருக்கலாம், அல்லது அங்கிருந்தே வீடியோ கால் பண்ணியிருக்கலாம், இப்போ தங்கச்சிகூட ஒடம்பு சரியில்லாதப்ப கூடஇருக்க முடியாத அண்ணனா போய்ட்டேனேன்னு எவ்வளவு கில்ட்டியா இருக்கு தெரியுமா?”

மூடிட்டு வண்டியை ஓட்டுங்க! நீங்க எதுக்கு ஃபீல் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்!”

அதுதான் ஊருக்கே தெரியுமே

“அடுத்த தடவை அதே ஹாஸ்பிடல் போனா வீடியோ கால் பண்ணுடா!”

தூ! இப்போ போற இடத்துல கிழவி நர்ஸ் இருக்கும் போங்க!”

பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு, “சார், சார்ஜ் லிஸ்ட் படிச்சுக்கங்க, மினிமம் சார்ஜ் முப்பது ரூபாய்!” 

மன்னிச்சுக்கப்பா, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது, நீயே படிச்சு சொல்லிடு ப்ளீஸ்!”

அவர் மனசுக்குள்ள திட்டிய வசவு வீதிவரைக்கும் கேட்டுச்சு!

ஒருவழியா, அடுத்த எண்ட்ல, ஒரு கிலோமீட்டர் தள்ளி, D ப்ளாக் மாடில இருந்த ப்ளட் பேங்க் கதவை தள்ளித் திறந்தால், கண்கொள்ளா காட்சி

போனவாரமே ரிட்டயர் ஆகியிருக்கவேண்டிய எங்க பாட்டி க்ளாஸ்மேட் நர்ஸ்!

உடன்பிறந்தாள் சாபம் ஊழ்போல் வந்து உறுத்தும்ன்னு சொன்னது வள்ளுவரா, ஔவையாரா?

ஹலோ, ஷூவை வெளியே கழட்டிட்டு வாங்க!”

பரீட்சை பேப்பர் மாதிரி நாலு பக்கம், ஒரு ஃபார்மை கொடுத்து, ஃபில்லப் பண்ணுங்க!

பாதில எட்டிப் பார்த்து, “என்னங்க, பச்சை இங்க்ல ஃபில்அப் பண்றீங்க? வேற ஃபார்ம் தர்றேன், ப்ளூல பண்ணுங்க!”

ஏறகனவே கடுப்புக் கூந்தல்! இதுல இதுவேற!

பச்சைல எழுதக்கூடாதுன்னு எங்க எழுதியிருக்கு?”

சார், சார், நான் வேணும்னா ஃபில்அப் பண்ணிடறேன்!” - அம்மா ஆபரேஷன்காரர்! அவர் கவலை அவருக்கு!

சார், நாளைக்கு காலைல ஆபரேஷனுக்கு ரெண்டு யூனிட் ஃப்ரஷ் ப்ளட் வேணுமே, அதை அரேஞ்ச் பண்ணிட்டீங்களா?”

இந்தக் கேள்வி அவருக்கு!

இல்லை சிஸ்டர், இனிமேல்தான்!”

அதுதான் சார் முக்கியம், அதை மிஸ் பண்ணிடாதீங்க

டெஸ்ட்டட் பாஸிட்டிவ் ஃபார் ஹெச் ஐவி? ன்ற கேள்விக்கு எஸ்ஸை டிக் பண்ணலாமான்னு யோசிச்சுட்டிருந்த என்னை, “சார், நீங்க காலைல ஒரு எட்டு மணிக்கு வரமுடியுமா, ப்ளீஸ்?”

ஏன்?

“ஃப்ரஸ் ப்ளெட் வேணும், அதான்”

“ஃப்ரஸ்ன்னா, குளிச்சுட்டு வரணுமா?”

யோவ்ன்னு சொன்னமாதிரி தெரியல, ஆனா, சிரிச்சுட்டுத்தான் பதில் சொல்லுச்சு! “படுத்தாதீங்க சார், நாளைக்கு வரமுடியுமா?”

“என் ப்ளட் ஃப்ரெஸ்ன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க?”

“சாஆஆஆர்!”, அம்மா ஆபரேஷன்காரர்! 

“சரி, வர்றேன், காலைல ட்யூட்டில நீங்க இருக்கமாட்டீங்கதானே?”

“ஏன்?”

“இல்ல, சும்மா கேட்டேன்! காலைல வர்றேன்!”

காலைலயாவது..

நம்பிக்கைதானே வாழ்க்கை!

“சார், வாங்க, ஒரு காஃபி குடிச்சுட்டுப் போகலாம்!”

“நான் என்ன விருந்துக்கா வந்திருக்கேன், போய் அம்மாவைப் பாருங்க, அவங்களுக்கு சரியானதும் கறி சோத்துக்கே வர்றேன்” எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு துண்டு போட்டு வச்சிட்டு, வீட்டுக்கு!

காலைல, ஏழு மணிக்கே குளிச்சு, ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டுட்டு, விசிலடிச்சுட்டுக் கிளம்பினால், “அப்பா, என்னை காலேஜ்ல எறக்கி விட்டுட்டு போ!”

“ஏன், உன் வண்டி என்ன ஆச்சு?”

“நேத்து ஃப்ரண்ட் கூட வந்துட்டேன்! வண்டி காலேஜ்ல நிக்குது!”

“ஃப்ரண்டா, ஃப்ரண்டியா?”

“ஃப்ரண்டுக்கு கடைசி எழுத்து dதானப்பா?”

அடப்பாவி! காலேஜ் போக ஆரம்பிச்சு பத்து நாள் கூட ஆகல! 

இதை ஒருநாள் தனியா விசாரிக்கணும்!

வடக்கு எல்லைல இருக்கற காலேஜ்ல கொண்டு எறக்கிவிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு போகும்போதே கால், “சார், வந்துட்டீங்களா?”

“வந்துட்டிருக்கேன்மா! இன்னும் பத்து நிமிஷம்!”

பார்க்கிங்குக்கு முப்பது ரூபாய் தண்டம் கட்டிட்டு எதுக்கு அவ்வளவு தூரம் நடக்கணும்? அதுவுமில்லாம, முப்பது ரூபாய்க்கு என்ன வாங்கலாம்ன்றதை இங்கே சொன்னா கலவரமே வந்துடும்!

ரைட் ராயலா, ப்ளட் பேங்க் வாசல்ல டாக்டர்ஸ் பார்க்கிங்ன்னு கொட்டை எழுத்தில் எழுதியிருந்த இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்க, அட, செக்யூரிட்டி சல்யூட் அடிச்சு கதவை திறந்துவிட்டார்!

ஒன்னு, அவர் புதுசா இருக்கணும், அல்லது நம்மை புதுசுன்னு நினைச்சிருக்கணும்!

முதல் சகுனமே நல்லா இருக்கேன்னு படியேறும்போது ஃபோன், “சார், நான் அம்மா கூட இருக்கேன்! நீங்களே போய் பேஷண்ட் பேரை சொல்லி ப்ளட் கொடுத்துடறீங்களா, ப்ளீஸ்?”

சரின்னு சொல்லிக்கிட்டே கதவைத் திறக்க, கடவுள் இருக்கான் குமாரு!

“எந்தா இத்தறை லேட்டாயிட்டு வருன்னு?”

கேரளத்துக் குயில்களின் கோபம்தான் எத்தனை அழகு!

வழக்கமான வழிசல்கள் முடிந்து, டப்பா கூல்ட்ரிங்கை (இதை மாத்தித் தொலைக்கமாட்டாங்களா, ஒரு காஃபி கொடுக்கலாமே?) வேண்டாவெறுப்பாக குடித்து, கிளம்பும்போது, “சேச்சி, ஞான் வரும்போள் விளிச்சது உங்கட நம்பரோ?”

இல்லா, மேட்ரன் சேச்சியோடது, வயசு அறுபது!

சிரிப்பை மட்டும் போனஸா வாங்கிட்டு, “மறுபடி ஏதாவது தேவைன்னா உங்க நம்பர்ல இருந்து கூப்பிடுங்க!”

பி கு:

இதில் குருதிக்கொடை பற்றி எதுவுமே இல்லையே என்போருக்கு,

அப்படிப்பட்ட ஆலமரத்தில்தான் அந்தப் பசுமாடு கட்டியிருந்தது!

சனி, 11 டிசம்பர், 2021

ஒரு ஆல்ரௌண்டர் வீழ்ந்த கதை!

எல்லா தெருவோர கிரிக்கெட் குழுவிலும் இப்படி ஒருத்தர் இருப்பார்!

எங்கள் டீமில் அண்ணன்!

டீமில் புதிதாகச் சேரும் பசங்களுக்கு அவர்தான் ஆதர்ஷம்!

கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்! அதிலும் டெண்டுல்கரை அவர் துவைத்துக் காயப்போடும் அலட்சியம் வேற லெவல்!

“ஸ்கொயர் கட் இப்படியா அடிப்பாங்க? லெஃப்ட் லெக் எங்க இருக்கு பாரு! அதை இப்படி நீட்டி, வலதுகாலை மடக்கி சும்மா திருப்பிவிட்டா, பந்து பதறிக்கிட்டு பௌண்டரிக்கு ஓடாதா?”

“எதுக்கு இப்படி மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கறான்? கேட்டா மாஸ்டர் ப்ளாஸ்டர் அப்படிம்பானுக!”

“அசாருதீன் அந்த ரிஸ்ட்டை ஃப்ளிக் பண்றது தெரியாது, பந்து ஸ்கொயர் லெக் பௌண்டரில இருக்கும்!”

“இப்போதான் சொன்னேன்

அவுட்சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இவ்வளவு உயரத்துல வருது பால்!

என்ன செஞ்சிருக்கணும்? சும்மா பேட்டை அப்படி ஒசத்தி, லைட்டா தள்ளிவிட்டிருக்க வேண்டாமா? ஆஃப் சைட்ல சிக்ஸ் பறக்காதா?”

“இந்த பால் ஸ்ட்ரைட் ட்ரைவ் மெட்டீரியல்! இதை டொக்கு வெச்சு வேஸ்ட் பண்றான் பாரு!”

“இன்ஸ்விங்கருக்கு நேரா காலைக் கொடுத்து எல்பி வாங்கிட்டு வர்றான் பாரு! இவன்லாம் ஒரு ப்ளேயர்!

மாடு கூட பேட்டை முன்னாடி நிறுத்தி தடுத்திருக்கும்! பௌலர் கையை ஒசத்தும்போதே பந்தை கணிக்கத் தெரியவேண்டாமா?”

இப்படி தூள் பறக்கும் விமர்சனம்!

பௌலிங்கை சொல்லவே வேண்டாம்!

“ஆறு பாலும் ஆறு வேரியேஷன் காட்டவேண்டாமா? அவன்தான் சுத்தறான்னு தெரியுதே, ஒரு யார்க்கர் போடணும்ன்னு தோணாதா?

பாரு, யார்க்கர் போடச் சொன்னா லட்டு மாதிரி ஃபுல்டாஸ் போட்டுக் கொடுக்கறான்!

இறங்கி வர்றான்னு தெரியுதே அடுத்த பால் ஸ்லோவா போடாதா தத்திமுண்டம்?”

ஃபீல்டிங்ல, 

எல்லா பௌண்டரிக்கும் அந்தந்த ஃபீல்டர் அத்தனை வசவு வாங்குவார் பாவம்!

டிவி வால்யூம் குறைச்சு வெச்சுட்டு, ஒரு பச்சை சட்டையை போட்டுக்கிட்டு, முகத்தை எகத்தாளம் உறைந்துபோன சவம் மாதிரி வெச்சுக்கிட்டு அவர் செய்யும் விமர்சனத்தை ஒரு கூட்டம் ஆன்னு வாயைப் பிளந்துட்டு கேட்கும்!

ஓரளவாவது கிரிக்கெட் தெரிஞ்ச எவனும் அந்த ஆளை மதிக்கவே மாட்டான்!

ஆனால், அண்ணனுக்குத் தெரியும்

பெரிய ஸ்க்ரீன்ல கிரிக்கெட் பார்க்க, அவ்வப்போது பால், க்ளவுஸ் ஏதாவது வாங்க, டோர்ணமெண்ட்க்கு பணம் கட்ட, தன்கிட்ட பசங்க வந்துதான் ஆகணும்ன்னு!

அதுக்காகவே அவர சகிச்சுக்க வேண்டிய நிலைமை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் டீமுக்கு!

ரவிதான் புலம்புவான்

“வக்காளி, ஒரு எழவும் தெரியாம புடுங்கி மாதிரி பேசிக்கிட்டிருக்கான்! ஒரு மேட்சுலயாவது இந்த ஆளை இறக்கி, அப்டமன் கார்ட் ஒடஞ்சு உள்ள குத்தறமாதிரி ஒரு பால் போடணும்!”

சரியா ஒரு சான்ஸ் கிடைச்சது

ஈரோடு டீம்கூட மேட்ச்!

வேணும்ன்னே கால் சுளுக்கிக்கிச்சுன்னு கடைசி நிமிஷத்துல ஸீன் போட்டு ஒதுங்கிக்கிட்ட ரவி, அண்ணன் கிட்ட போய், “அண்ணே, இன்னைக்கு நீங்கதான் எறங்கறீங்க! உங்க எக்ஸ்பீரியண்ஸ்க்கு, அவனுக கதறப் போறானுக!

ஃபஸ்ட் பேட்டிங் எடுத்தா, பத்து ஓவர்ல இருநூறு ரன் அடிக்கறோம், அவங்கள பத்து ரன்ல சுருட்டறோம்! இல்ல, அவனுக வைக்கற டார்கெட்ட மூணு ஓவர்ல முடிக்கறோம்!

கோடிவீட்டு பரிமளா ரவி செட்டு

“அண்ணன் இன்னைக்கு களம் எறங்கப்போறாரு! ஈரோடு டீம் செதறப் போகுது”ன்னு ரவியைப் பார்த்து ரகசியமா கண்ணடிச்சு உசுப்பிவிட, பலியாடு மாதிரி எறங்கிட்டாரு அண்ணன்!

முதல்ல ஈரோடு பேட்டிங்

அண்ணன் பௌலிங் போட மாட்டேன், பேட்டிங்குக்கு எனர்ஜி வேணும்ன்னுட்டார்!

ஆன் சைட் பௌண்டரில ஃபீல்டிங் நின்னுட்டு அநியாயத்துக்கு சொந்த டீம் பௌலிங்கையே கலாய்ச்சுட்டிருந்தார்!

ஈரோடு டீம் விக்கெட் கொடுக்காம ஏழு ஓவர்ல நூத்தி எட்டு ரன்! அப்போதான் அந்த கேட்ச் வந்தது அண்ணனுக்கு!

பனைமர ஒயரம் போய், அண்ணன் கைக்கு நேரா லட்டு மாதிரி எறங்குது பால்!

அண்ணன் அசால்ட்டா புடிச்சுடுவாருன்னு சொல்லி வாய் மூடல! சொத்துன்னு மண்டைலயே வாங்குனாரு பாலை! கண்ணுல மின்மினிப் பூச்சி பறக்க, 

“சூரிய வெளிச்சம் கண்ண கூசிடுச்சு” - மதியவேளைல கெழக்க பார்த்து நின்னவருக்கு!

பொறி கலங்கி நின்னவரை ரவி தட்டிக் கொடுத்து சொன்னான்

“விடுங்கண்ணே, பேட்டிங்ல பார்த்துக்கலாம்!”

ஈரோடு டீம், பத்து ஓவர்ல விக்கெட் கொடுக்காம நூத்தி நாப்பத்தொம்பது ரன்!

எப்படியோ பேட் புடிக்காம ஒப்பேத்திடலாம்ன்னு அண்ணன் நெனப்புல மண்ணைப் போட்டானுக பசங்க! பூராப் பயலும், பெவிலியனுக்கும் பிட்சுக்கும் ரன் எடுக்க, நாலு ஓவர்ல மூணு விக்கெட்டுக்கு பதினெட்டு ரன்!

த்ரீ டவுன்ல அண்ணன் கைல பேட்டைக் கொடுத்து உள்ளே அனுப்பியாச்சு!

மொத பால் மடார்ன்னு பேடுல வாங்க, மொத்த டீமும் ஹவ் ஈஸ் தட்ன்னு அலற, அம்பயர், அண்ணன் ஃப்ரண்டு, எருமை மாடு மாதிரி அசையாம நின்னுட்டார்!

வெறுத்துப் போய் அடுத்து போட்ட ஸ்லோ பால் வர்றதுக்குள்ள அண்ணன் பேட்டை ஒரு முழு சுத்து சுத்தி முடிக்க, பால், சாதுவாய் உருண்டுபோய் ஸ்டம்புக்கு அடில உட்கார, நல்லவேளையா பெய்ல் கீழ விழல!

அடுத்த பந்தை கண்ணை மூடிக்கிட்டு குருட்டு வீச்சு வீச, எங்க டீமுக்கு முதல் பௌண்டரி!

அடுத்து வந்தது அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த பந்து! நூறு கிலோமீட்டர் வேகத்துல வந்த பந்து சரியா கால் சந்துல பட, மளுக்குன்னு ஏதோ ஒடையற சத்தம் பௌண்டரி லைனை ஒட்டி உட்கார்ந்திருந்த ரவிக்கும், பரிமளாவுக்கும், துல்லியமா கேட்டது!

அப்படியே மடங்கி விழுந்த அண்ணனை மட்டாடர்ல அள்ளிப் போட்டுக்கிட்டு ஓட, மேட்ச் வெற்றி தோல்வியின்றி தள்ளிவைக்கப்பட்டது!

மறுநாள் காலைல ஆஸ்பத்திரி பெட்ல கண்ணு முழிச்ச அண்ணன்கிட்ட ரவி சொன்னான், “கெத்துண்ணா நீங்க, தோக்கற மேட்சை அபாண்டன் பண்ணி ட்ரா ஆக்கிட்டீங்க!”

களுக்ன்னு பரிமளா சிரிச்ச சத்தத்துல 

மளுக்ன்னு அப்ப ஒடஞ்சது அண்ணனோட, 

நெஞ்சு!