புதன், 8 டிசம்பர், 2021

பூங்காற்று உன் பேர் சொல்ல…

“பெத்து கொடுங்க சிஸ்டர்” 
”சிஸ்டர்ன்னு சொல்றத நிறுத்துங்க டாக்டர் எத்தனை வேணும்னாலும் பெத்து தர்றேன்!”
ரவி முதுகில் சொத்தென்று விழுந்த அறையைத் தொடர்ந்து கேட்டது அபர்ணா குரல் “எவடி அவ?”
இது இரவுநேர வார்ட் ரவுண்ட்ஸில் ஒரு அன்றாடக் காட்சி!
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் சென்னை மெடிக்கல் காலேஜ் என்ற நாமகரணம் சூட்டிக்கொள்ளுவதற்கு முந்தைய காலம்!
ரவியும் அபர்ணாவும் ஹவுஸ் சர்ஜன்கள்! இன்னும் சில மாதங்களில் ஆறுவருட உழைப்புக்கு பரிசாக இளங்கலை மருத்துவர் பட்டம் வாங்கிய கையோடு, கிராமத்துக்குப் போய் மருத்துவம் செய்யும் கனவோடு ரவி. அவன் கூடவே இருந்து பத்துப் பிள்ளை பெற்றுப் போடும் பேராசையோடு அபர்ணா.
ஆரம்ப உரையாடல் நைட் ரவுண்ட்ஸில் தூக்கம் இல்லாது வேதனையோடு புரளும் நோயாளிகளுக்கு மயக்கத்துக்காகத் தரும் பெத்தடின் இஞ்செக்‌ஷனுக்கு!
இண்டெண்ட் போட்டு வாங்கும் பெத்தடினுக்கு முழு பொறுப்பும் அந்தந்த வார்ட் தலைமை செவிலியர். லாக்கரில் பூட்டி வைத்திருக்கும் மருந்தை, சீஃப் டாக்டர் கையெழுத்திட்ட ப்ரிஸ்க்ரிப்ஷனைக் காட்டி வாங்கி ஊசிபோட வேண்டிய பொறுப்பு அந்தந்த வார்டில் நைட் ட்யூட்டி டாக்டர்களுடையது!
விடிய விடிய விழித்திருக்க வேண்டிய கட்டாயத்தில், சுற்றிலும் நோயாளிகளாக இருக்கும் சூழலில் இந்த சின்னச் சின்ன உரையாடல்கள்தான் க்ளூகோஸ்!
அன்றைக்கு ரவிக்குத்தான் நைட் ட்யூட்டி!
மாப்பிள்ளை படம் ரிலீஸ் ஆகி ரெண்டுநாள் ஆகியிருந்தது! 
ரெண்டு நாள்தானே ஆகுது ரவி, அடுத்தவாரம் போலாமே?
ரெண்டு நாள் ஆச்சு! ரஜினி படம் வந்து ரெண்டுநாளா பார்க்காம இருக்கறது எத்தனை பெரிய க்ரைம் தெரியுமா?
ஒரு டாக்டர் நீ! இப்படியா வெறி பிடிச்ச ரசிகனா இருப்பே?
டாக்டர்ன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? ரஜினி படம்லாம் ரசிக விசில் சத்தத்தோடு பார்க்கறதுதான் த்ரில்!
மன்றத்துல கெஞ்சி ராத்திரி பதினோரு மணி ஷோவுக்கு சத்யம்ல ரெண்டு டிக்கெட் வாங்கி வெச்சிருக்கேன்!
எனக்கு பதிலா நைட்ட்யூட்டி காம்பனசேஷனுக்கு ரமேஷை ஏற்பாடு செஞ்சாச்சு!
நான் வார்ட்ல போய் ரவுண்ட்ஸ் முடிச்சு இஞ்செக்‌ஷன்லாம் போட்டுடறேன்!
பத்து மணிக்குள்ள கிளம்பி கேஷுவாலிட்டிக்கு வந்துடு! போறோம்.
பேப்பரில் ரஜினி பேர் எழுதியிருந்தாலே அரை மணி நேரம் உத்துப் பார்ப்பான் ரவி! 
அபர்ணாவுக்கு தமிழ் சினிமாவே ட்ராஸ்! ஓரளவுக்கு கமல் மட்டும் பிடிக்கும்! 
நேத்து மாப்பிள்ளை கூடவே ரிலீஸ் ஆன வெற்றிவிழா நல்லா இருக்கு!
ப்ரதாப் போத்தன் ஸ்க்ரீன்ப்ளே செம்மயா இருக்கு! அதுக்குப் போலாம் - இது அபர்ணா!
அங்க வந்து தூங்கி வழிய என்னால ஆகாது! ரெண்டுநாள் கழிச்சு மேட்னிக்கு போலாம்- கூட்டமில்லாம பார்த்துட்டு வரலாம்!
- இது ரவி!
வழக்கம்போல ரவி பிடிவாதம் ஜெயிக்க, இதோ கிளம்பியாச்சு!
ரவிக்கு சேலம் பக்கம் பூலாம்பட்டின்னு ஒரு குக்கிராமம்!
ஜமீன்தார் பிள்ளை! படிப்பெல்லாம் உள்ளூர் கவர்மெண்ட் ஸ்கூல்!
மெட்ராஸ் சென்ட்ரல்ல எறங்கி, சப்வே வழியா எதிரில் இருக்கற காலேஜுக்கு போகணும்!
முதல்தடவை ஏற்காடு எக்ஸ்ப்ரஸ்ல வந்து இறங்கி, சப்வே திறக்க ஒருமணிநேரம் பெட்டி படுக்கையோடு காத்திருந்த அப்பாவி!
ஆறு வருஷத்தில் அதை ஆயிரம் தடவை நக்கல் செய்திருப்பாள் அபர்ணா!
அபர்ணா டிப்பிக்கல் டவுன் வளர்ப்பு!
சென்னைக்கும் டெல்லிக்கும் அப்பாவோடு ஃப்ளைட்ல பறக்கும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் பீட்டர்!
இரண்டுபேருக்கும் எதிரும் புதிருமான ரசனை!
ஒரே இணைப்புப் புள்ளி இளையராஜா!
கல்லூரியில் சேர்ந்த புதிதில் ராகிங்கில் பாட்டுப் பாடச் சொல்ல, ரெண்டுபேரும் ஏக காலத்தில் ஆரம்பித்த பாடல், இளையநிலா பொழிகிறது!
சட்டென்று திரும்பிப் பார்த்ததில் பார்வைப் பொறி பற்றிக்கொள்ள, இளையராஜா பாடல்கள் பற்றிய தொடர் சிலாகிப்புகளில், காதல் தீ பற்றிப் படர்ந்தது!
காதல் ஓவியம் பாட்டு கேசட் மட்டும் படம் வர்றதுக்கு முன்னாடி ரிலீஸ் ஆகியிருந்தால், படம் ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கும்!
கிழிக்கும், ராதா ஆடற டான்ஸ்க்கு படம் நாலுநாள் ஓடியதே பெரியவிஷயம்!
ஓவர் கான்ஃபிடன்ஸ்ல பாரதிராஜா ராதாவை இந்த ரோலில் நடிக்கவைத்ததும், முட்டாள்தனமான ஈகோல பாட்டை ரிலீஸ் பண்ணாம விட்டதும் சூசைடல்!
ரேவதி நடிச்சிருந்தாக்கூட படம் உருப்பட்டிருக்கும்!
பூஜைக்காக வாழும் பூவை…ன்னு தீபன் சக்கரவர்த்தி உருகும் பாட்டு ஒன்னு போதும்! இந்த இளையராஜா உழைப்பெல்லாம் இப்படி சாக்கடையில் கொட்டுன சந்தனமாப் போகுதுங்கறது ரெண்டு பேருக்குமான ஆதங்கம்!
எது எப்படியோ, காதல் ஓவியம் தந்த பாடம், பெரும்பாலான பட கேசட் சிடி எல்லாம் முன்கூட்டியே ரிலீஸ் ஆக, வெற்றிவிழாவின் “பூங்காற்று, உன் பேர் சொல்ல…” இருவருக்கும் ஓயா விருப்பப் பாடல்!
அதிலும், ரவியோட ஜிப்ஸில, அப்போ புதுசா வந்திருந்த கெண்வுட் ஆடியோ சிஸ்டத்தில் அந்த சிடியை அந்த பாட்டை மட்டும் ரிப்பீட்டில் ஓடவிட்டு ஈசிஆர் ரோட்டில் நேரம் காலம் பார்க்காமல் சுற்றுவதில் இருவருக்கும் கொள்ளைப் பிரியம்!
இளையராஜா மாதிரி ஒரு ஜாலவித்தைக்காரனை பார்க்கவே முடியாது ரவி! 
எவ்வளவு உற்சாகமான காதல் பாட்டு இது? இதை கேட்கும்போதே அடுத்து ஒரு ட்ராஜடி நடக்கப் போறதை எப்படி கெஸ் பண்ண முடியுது பாரு!
சும்மா அளந்துவிடாதே! அப்படி ஒன்றும் தோணல!
என்ன பெட்?
படம் வந்ததும் போறோம், பார்க்கறோம், நான் சொன்னது சரியாக இருந்தா, படம் பார்ககற செலவு, டின்னர், ப்ளோஹாட் ப்ளோ கோல்ட் கஸாட்டா எல்லாம்  உன் செலவு! இல்லைன்னா என்னுது!
இப்போ கூட மாப்பிள்ளை பார்க்கப் போகும்போதும் அதே சிடி, அதே பந்தயம்!
சரி, நாளைக்கே ஈவினிங் ஷோ போறோம், பார்க்கறோம்! நீ சொன்னமாதிரி இருந்தால் செலவெல்லாம் என்னுது! இல்லைன்னா, வண்டி ஏறினதும் லிப்கிஸ் தரவேண்டியது நீ! ஓகேவா?
சீ! நாயே! அலையுது பாரு!
மறுநாள் படம் பார்த்து, அபர்ணா ஜெயிச்சபோதும், ஒரு நீளமான லிப்லாக்! படம் அந்த அளவுக்கு அவர்களை பாதித்திருந்தது! 
நெகிழ்ந்து போயிருந்த அபர்ணா சொன்னாள்! ரவி, நமக்கு முதலில் பெண்குழந்தைதான் பிறக்கும்! அதற்கு லலிதான்னு பேர் வைக்கலாமா? படத்தில் அமலா பெயர்!
லூசு, என்னை செண்டிமெண்டல் இடியட்ன்னு சொல்லிட்டு நீ என்ன பண்றே?
சில சமயம் செண்டிமெண்டலா இருக்கறது தப்பில்லை ரவி! 
சரி, பொண்ணு பொறந்தா அந்தப் பேரே வைப்போம்!
மூச்சுமுட்டக் கட்டிக்கொண்டவள் சொன்னாள், அதென்ன, பொறந்தா? பொறக்கும்!
இறுக்கமான திரைக்கதை அசத்த, ரெண்டுபேருமே நெகிழ்ந்து போன தருணத்தில் ரவி ஓயாமல் கேட்டான் - எப்படி கெஸ் பண்ணுனே?
லூசாடா நீ? அந்த வயலின் அழறது கேட்கலயா உனக்கு? இதில் ராஜா ரசிகன்னு பீத்தல் வேற!
நீயெல்லாம் சங்கர்கணேஷ் கேட்கத்தான் லாயக்கு! பட்டிக்காடு!
சங்கர் கணேஷுக்கு என்னடி, ஒரு மேகமே மேகமே போதாதா?
சுத்தி சுத்தி ராஜாதான் அவங்களோட மெயின் டாபிக்!
அன்னக்கிளியில்கூட ஆரம்பிக்காது அவர்கள் அலசல்!
அவளுக்கென்றோர் மனம் படத்தில் எம்எஸ்வி கூட ராஜா பணியாற்றிய ஒற்றைப் பாடல் எப்படி தனித்து நிற்கிறது என்று அலசுமளவு ராஜா இருவருக்குள்ளும் ஊறிப் போயிருந்தாலும், இந்த பூங்காற்று உன் பேர் சொல்ல… மட்டும் ஏனோ அடிமையாக்கி வைத்திருந்தது இருவரையும்!
படம் பார்த்தபின் கிடைத்த முதல் முத்தம் வேறு அதை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக்க,
ரெண்டு ஹாஸ்டலிலும் ரூம் மேட்ஸ் காலில் விழுந்து கதறுமளவு அது ரிப்பீட் மோடில்!
ஒருவழியாக கான்வொகேஷன் முடிந்து, அவரவர் ஊருக்குப் புறப்படும்போது ஊருக்குப் போனதும் அம்மா அப்பாவிடம் பேசி பெண் பார்க்க வருவதாக வெகு நம்பிக்கையோடு சத்தியம் செய்திருந்தான் ரவி!
ஏர்போர்ட் போகும் வழி முழுக்க அதே பாட்டு! மீனம்பாக்கம் ஏர்போர்ட் லவுன்ச் அன்றைக்கு வேடிக்கை பார்த்த முத்தத்தில் அத்தனை சூடு!
டெல்லி விமானம் கண் மறையும்வரை பார்த்திருந்த ரவி, ஊர் வந்து சேரும்வரை அந்தப் பாட்டை மாற்றவுமில்லை, நிறுத்தவும் இல்லை!
ஊர் வந்ததும், ஒரே மகனை கட்டிப் பிடித்து கலங்கிய அப்பா அம்மாவை பார்த்தபோது அபர்ணா விஷயம் அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்றே பட்டது ரவிக்கு!
ஒரு வாரம், கோழி, ஆடு பிரியாணி ஆனதும், பம்ப் செட் குளியலும், வேப்பமரத்தடி கட்டில் தூக்கமுமாக ஓட, அந்த ஞாயிறு டெல்லியிலிருந்து வந்தது அந்த ட்ரங்க் கால்!
ரவி, எப்போ வரப்போறீங்க?
- அபர்ணா!
சீக்கிரம் வர்றோம்டி!
கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டிருந்த அப்பா கேட்டார்- யார் ரவி அது?
என் க்ளாஸ் பொண்ணுப்பா!
ஓ! என்னவாம்?
அப்பா, நானும் அபர்ணாவும்…
நீயும் அபர்ணாவும்?
அப்பா, நான் அவளைத்தான் கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்!
இதெல்லாம் இந்த வயசுல எல்லோருக்கும் வர்றதுதான்! காலேஜ் பழக்கத்தை காலேஜோட விட்டுட்டு வந்துடணும்! அதை விட்டுட்டு, இதென்ன பழக்கம்? உமா உனக்காகவே காத்திருக்கறா!
இல்லப்பா, நான் வாக்கு கொடுத்துட்டேன்!
அப்போ, உன் அத்தைக்கு நான் கொடுத்த வாக்கு?
அத்தை புரிஞ்சுக்குவாங்கப்பா, நான் பேசறேன் அவங்ககூட!
தாராளமா பேசு, ஆனா எனக்கு கொள்ளி வச்சுட்டு பேசு!
என்னப்பா இது?
ஒரு நிமிஷம் உத்துப் பார்த்த அப்பா உறுதியா சொன்னார், நான் பேச்சு மாறமாட்டேன் ரவி, அது நான் சாகறவரைக்கும்!
இல்லப்பா, அபர்ணா இல்லன்னா நான் செத்துடுவேன்!
ஒன்றுமே பேசாமல் தோட்டத்துப்பக்கம் போனார் அப்பா!
எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு பேசாமல் நின்ற அம்மா ஓடிப்போய் ரூம் கதவைச் சார்த்திக்கொள்ள, விபரீதம் புரிந்து கதவை உடைத்து ரவி உள்ளே நுழையும்போதே நிலைமை கைமீறி இருந்தது!
கயிற்றில் தொங்கிய அம்மாவை பதறிப்போய் இழுக்க, வலது காது வைரத் தோட்டோடு பிய்ந்து கயிற்றில் ஒட்டிக்கொள்ள ரத்தம் பீய்ச்சி அடித்தது!
அவசர அவசரமாக அரை உயிராய், அம்மாவை காரில் ஏற்ற, தோட்டத்திலிருந்து முருகன் ஓடி வந்தான் கதறலோடு!
ஐயா பூச்சி மருந்தை குடிச்சுட்டாரு சாமி!
எவ்வளவு கொடூரமான நாள் அது!
அப்பாவையும் அம்மாவையும் வாறிப் போட்டுக்கொண்டு வண்டியை எடுக்க, டீஃபால்ட்டாக சிடி ஓட ஆரம்பித்தது, பூங்காற்று, உன் பேர் சொல்ல…
முகம் வெளிற சிடியை உருவி பதற்றமாக வெளியே எறிந்தான் ரவி!
ரெண்டுநாள் ஐசியு வாசம் முடிந்து ரெண்டுபேரும் நார்மல் வார்டுக்கு வந்த ரெண்டுபேரும் கேட்ட ஒரே கேள்வி, என்னை ஏன் காப்பாத்துனே?
வியந்து மரியாதையாகப் பார்த்த ஊர் குற்றம் சாட்டிப் பேச, அம்மா அப்பா நிலை கண்டு உருகிப் போயிருந்த ரவி, தழுதழுத்த குரலில் சொன்னான், நான் உமாவையே கட்டிக்கறேன்ப்பா!
மகன் மனசு மாறுவதற்குள் என்று அவசர அவசரமாக அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்!
ஃபோனில் அபர்ணாவிடம் அம்மா சொன்னது கேட்டது ரவிக்கு! அவனுக்கு கல்யாணம் ஆகப் போகுது! இனி் ஃபோன்பண்ணி இப்படி தொந்தரவு பண்ணாதே!
அழக்கூட உரிமையில்லாமல் உள்ளுக்குள் நொறுங்கிப் போனான் ரவி!
அதற்குப் பின் அந்தப் பாட்டை ரவி கேட்கவேயில்லை! எங்காவது டிவியிலோ ரேடியோவிலோ பாடக் கேட்டாலும் சட்டென்று அந்த இடம் விட்டு நகர்ந்துவிடுவான்!
அம்மாவின் அரைக்காது மட்டும் அவ்வப்போது அபர்ணாவை நியாபகப்படுத்தி உறுத்தும்!

இதோடு இந்தக் கதை முடிந்திருக்கலாமோ? 
ஆனால் அவ்வளவு சுலபமா என்ன வாழ்க்கை? 

கல்யாணம் முடிந்து வருடங்கள் ஓடினவே தவிர, உமா வயிற்றில் ஒரு புழு பூச்சி தங்கவில்லை!
அம்மாவின் அழுகை சகிக்கமுடியாமல், அப்போது பிரபலமாக இருந்த கமலா செல்வராஜிடம் கன்சல்ட்டேஷனுக்குப் போனபோது, அட, அங்கே அஸிஸ்டண்ட் டாக்டர் ராகவி - ரவியோட க்ளாஸ்மேட்!
வரிசையான பரிசோதனைகள் முடிந்து, மாலை பார்த்த டாக்டர் புன்னகையோடு சொன்னார் “நீங்க ரெண்டுபேருமே ஃபிஸிகலி நார்மல்! இன்னும் கொஞ்சநாள் வெய்ட் பண்ணலாமே?
நிம்மதியாக தலையாட்டிவிட்டு வந்து, கொலைப் பசியோடு கேண்ட்டீனில் ராகவியோடு உட்கார்ந்தபோது, உமா ரெஸ்ட்ரூம் போன அவகாசத்தில் தயங்கித் தயங்கிக் கேட்டான், அபர்ணா பற்றி ஏதும் தெரியுமா?
ஆறுதலாக கையைப் பற்றிய ராகவி சொன்னாள், எனக்கு நடந்தது எல்லாம் தெரியும் ரவி. அவ இப்போ சென்னைலதான் இருக்கா! பிஜி முடிச்சுட்டு தனியா ப்ராக்டிஸ் பண்றா!
கல்யாணம்?
இல்லை ரவி! அவ பண்ணிக்குவான்னு தோணல! அவ நம்பர் தர்றேன், பேசறயா?
இல்லை ராகவி, அதற்கான தகுதி எனக்கில்லை!
உமா வர்றதைப் பார்த்து அவசரமாக கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டான் ரவி!
அதிசயமாக அடுத்தமாசமே சென்னையிலிருந்து ஃபோன்!
ராகவி!
ரவி, நீ நாளைக்கு சென்னை வரமுடியுமா? ஒரு செமன் கவுண்ட் டெஸ்ட் எடுக்கணும்!
கமலா மேடம் எதுவும் வேண்டாம்ன்னு சொன்னாங்களே?
தெரியல ரவி! ஒரு செமன் கவுண்ட் மட்டும் ரிப்பீட் பார்ரத்துடலாம்ன்னு சொன்னாங்க!
மறுநாளே சென்னை போய் டெஸ்ட்டுக்கு கொடுத்துவிட்டு கேட்டபோது, சீஃப் டாக்டர் ஊரில் இல்லை, நாளைக்கு அவங்களே வந்து டெஸ்ட் பார்த்துக்கறேன்னு சொல்லி ஃப்ரீஸர்ல வைக்கச் சொல்லியிருக்காங்க!
பத்து நாளில் ராகவியிடமிருந்து ஃபோன், எல்லாம் நார்மல் ரவி, நோ ப்ராப்ளம்!
சொல்லிவைத்ததுபோல் அடுத்த மாதமே உமா கர்ப்பமாக, அம்மா சந்தோஷத்தில் ஊரிலிருக்கும் எல்லாக் கோவிலுக்கும் படையல்போட, அவனையே உரித்துவைத்ததுபோல் பிறந்த பெண் குழந்தைக்கு அம்மா ஆசைப்படி குலதெய்வம் பெயர் - கற்பகம்!
பத்தாவது வருட அலும்னி மீட் கொடைக்கானலில் - தேவராஜன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்த ஏற்பாடு!
குடும்பத்தோடு வந்திருந்த ராகவி, கற்பகத்தின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டுக் கேட்டாள், என்ன பேர் வச்சிருக்கே ரவி? 
கற்பகம்!
ஒரு நொடி முகம் மாறியதா என்ன? யாரோ கூப்பிட நகர்ந்தாள் ராகவி!
சுரேஷ்கிட்டே கேட்டான் அபர்ணா வரலயா?
அவ பொண்ணு ஸ்கூல்ல ஏதோ ஃபங்க்‌ஷன்! வரமுடியலன்னு சொன்னா!
பொண்ணா? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
பின்ன எப்படி ரவி, பொண்ணு? அவ ஹஸ்பண்ட் மிலிட்டரி டாக்டர்ன்னு நினைக்கிறேன்!
கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தபோதும், அப்பாடா என்று சுமையிறங்கியதுபோல் இருந்தது ரவிக்கு!
திரும்ப வரும்போது உமா கூட கேட்டாள்! இன்னைக்கு என்ன ஒரேயடியா சந்தோஷமா இருக்கீங்க?
ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் பார்த்ததுதான் - வேறென்ன?
அடுத்த பத்து வருஷமும் ஓடியது தெரியாமல் ஓட, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் 1995 பேட்ச்  இருபத்தைந்தாவது வருட மீட்அப் ஏற்காட்டில்!
பிஎம்டபிள்யூ அலட்டாமல் மலையேற, உற்சாகமாக விசிலடித்தபடி ஓட்டிய ரவியை ஆச்சர்யமாகப் பார்த்தாள் உமா! பென்ட்ரைவிலும், விசிலிலும் பூங்காற்று, உன் பேர் சொல்ல… 
மூன்றாவது முறை பாட்டு ரிப்பீட் ஆக பின்சீட்டிலிருந்து கற்பகம் அதட்டிளாள் - வேறு பாட்டு போடுப்பா, போரடிக்குது!
ஒருவழியாக ஏற்காடு வந்து ஒதுக்கியிருந்த அறையில் சுருண்டபோது மணி எட்டு! குளிர் எலும்பை வருட, தூங்கிப்போனான் ரவி!
சென்னையிலிருந்து எல்லோரும் மறுநாள் வருவதாகத்தான் புரோக்ராம்!
காலை பழக்கதோஷத்தில் ஆறு மணிக்கே எழுந்து லேடீஸ் சீட் பக்கம் மெதுவாக நடக்க, முன்னால் துள்ளிக்குதித்து நடப்பது யார்?
கற்பகம்? 
ஆச்சர்யமாய் பேரைச் சொல்லிக் கூப்பிட, திரும்பிய கற்பகம் கண்ணில் குழப்பம்!
யார் நீங்க?
பின்னாலிருந்து பழகிய குரல் கேட்டது- அது கற்பகம் இல்லை ரவி!
அபர்ணா!
அப்படியே இருந்தாள்! ஆச்சர்யம் மாறாமல் கேட்டான்! உன் மகளா அபர்ணா?
ஒரு நிமிடம் மௌனமாக நின்றவள் மெதுவாகச் சொன்னாள்- நம் மகள் ரவி!
வ்வாட்! 
உண்மைதான் ரவி!
நமக்குள் அப்படி எதுவுமே நடக்காதபோது இதென்ன உளறல்? விளையாடாதே!
உன் ஹஸ்பண்ட் எங்கே?
இல்லாத ஹஸ்பண்டை எப்படிக் காட்டட்டும் ரவி?
எனக்கு கல்யாணமே ஆகல!
மை காட், மை காட்!
அப்போ குழந்தை?
தேங்க்ஸ் டு ராகவி! அவதான் ரொம்ப மன்றாடிக் கேட்டதும் இந்த உதவியை செய்தாள் - வெகு தயக்கத்தோடு!
அன்னைக்கு உன்னை டெஸ்ட்டுக்கு கூப்பிட்டது இதற்குத்தான்!
ஆர்ட்டிஃபிஷியல் இன்செமனேஷன் ரவி! ஆனாலும், நான் ஆசைப்பட்டபடியே நம்ம குழந்தை!
கடவுளே! 
சொல்ல மறந்துட்டேனே ரவி, அவ பேரு லலிதா!
திகைத்துப்போய் அப்படியே நின்றுவிட்டான் ரவி, அபர்ணா கையசைத்துப் போனதையும் கவனிக்காமல்!
தூரத்து ஸ்பீக்கரில் எங்கோ கேட்டது அந்த சாகாவரம் பெற்ற பாட்டு…
பூங்காற்று, உன் பேர் சொல்ல….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக