சனி, 11 டிசம்பர், 2021

ஒரு ஆல்ரௌண்டர் வீழ்ந்த கதை!

எல்லா தெருவோர கிரிக்கெட் குழுவிலும் இப்படி ஒருத்தர் இருப்பார்!

எங்கள் டீமில் அண்ணன்!

டீமில் புதிதாகச் சேரும் பசங்களுக்கு அவர்தான் ஆதர்ஷம்!

கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்! அதிலும் டெண்டுல்கரை அவர் துவைத்துக் காயப்போடும் அலட்சியம் வேற லெவல்!

“ஸ்கொயர் கட் இப்படியா அடிப்பாங்க? லெஃப்ட் லெக் எங்க இருக்கு பாரு! அதை இப்படி நீட்டி, வலதுகாலை மடக்கி சும்மா திருப்பிவிட்டா, பந்து பதறிக்கிட்டு பௌண்டரிக்கு ஓடாதா?”

“எதுக்கு இப்படி மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கறான்? கேட்டா மாஸ்டர் ப்ளாஸ்டர் அப்படிம்பானுக!”

“அசாருதீன் அந்த ரிஸ்ட்டை ஃப்ளிக் பண்றது தெரியாது, பந்து ஸ்கொயர் லெக் பௌண்டரில இருக்கும்!”

“இப்போதான் சொன்னேன்

அவுட்சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இவ்வளவு உயரத்துல வருது பால்!

என்ன செஞ்சிருக்கணும்? சும்மா பேட்டை அப்படி ஒசத்தி, லைட்டா தள்ளிவிட்டிருக்க வேண்டாமா? ஆஃப் சைட்ல சிக்ஸ் பறக்காதா?”

“இந்த பால் ஸ்ட்ரைட் ட்ரைவ் மெட்டீரியல்! இதை டொக்கு வெச்சு வேஸ்ட் பண்றான் பாரு!”

“இன்ஸ்விங்கருக்கு நேரா காலைக் கொடுத்து எல்பி வாங்கிட்டு வர்றான் பாரு! இவன்லாம் ஒரு ப்ளேயர்!

மாடு கூட பேட்டை முன்னாடி நிறுத்தி தடுத்திருக்கும்! பௌலர் கையை ஒசத்தும்போதே பந்தை கணிக்கத் தெரியவேண்டாமா?”

இப்படி தூள் பறக்கும் விமர்சனம்!

பௌலிங்கை சொல்லவே வேண்டாம்!

“ஆறு பாலும் ஆறு வேரியேஷன் காட்டவேண்டாமா? அவன்தான் சுத்தறான்னு தெரியுதே, ஒரு யார்க்கர் போடணும்ன்னு தோணாதா?

பாரு, யார்க்கர் போடச் சொன்னா லட்டு மாதிரி ஃபுல்டாஸ் போட்டுக் கொடுக்கறான்!

இறங்கி வர்றான்னு தெரியுதே அடுத்த பால் ஸ்லோவா போடாதா தத்திமுண்டம்?”

ஃபீல்டிங்ல, 

எல்லா பௌண்டரிக்கும் அந்தந்த ஃபீல்டர் அத்தனை வசவு வாங்குவார் பாவம்!

டிவி வால்யூம் குறைச்சு வெச்சுட்டு, ஒரு பச்சை சட்டையை போட்டுக்கிட்டு, முகத்தை எகத்தாளம் உறைந்துபோன சவம் மாதிரி வெச்சுக்கிட்டு அவர் செய்யும் விமர்சனத்தை ஒரு கூட்டம் ஆன்னு வாயைப் பிளந்துட்டு கேட்கும்!

ஓரளவாவது கிரிக்கெட் தெரிஞ்ச எவனும் அந்த ஆளை மதிக்கவே மாட்டான்!

ஆனால், அண்ணனுக்குத் தெரியும்

பெரிய ஸ்க்ரீன்ல கிரிக்கெட் பார்க்க, அவ்வப்போது பால், க்ளவுஸ் ஏதாவது வாங்க, டோர்ணமெண்ட்க்கு பணம் கட்ட, தன்கிட்ட பசங்க வந்துதான் ஆகணும்ன்னு!

அதுக்காகவே அவர சகிச்சுக்க வேண்டிய நிலைமை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் டீமுக்கு!

ரவிதான் புலம்புவான்

“வக்காளி, ஒரு எழவும் தெரியாம புடுங்கி மாதிரி பேசிக்கிட்டிருக்கான்! ஒரு மேட்சுலயாவது இந்த ஆளை இறக்கி, அப்டமன் கார்ட் ஒடஞ்சு உள்ள குத்தறமாதிரி ஒரு பால் போடணும்!”

சரியா ஒரு சான்ஸ் கிடைச்சது

ஈரோடு டீம்கூட மேட்ச்!

வேணும்ன்னே கால் சுளுக்கிக்கிச்சுன்னு கடைசி நிமிஷத்துல ஸீன் போட்டு ஒதுங்கிக்கிட்ட ரவி, அண்ணன் கிட்ட போய், “அண்ணே, இன்னைக்கு நீங்கதான் எறங்கறீங்க! உங்க எக்ஸ்பீரியண்ஸ்க்கு, அவனுக கதறப் போறானுக!

ஃபஸ்ட் பேட்டிங் எடுத்தா, பத்து ஓவர்ல இருநூறு ரன் அடிக்கறோம், அவங்கள பத்து ரன்ல சுருட்டறோம்! இல்ல, அவனுக வைக்கற டார்கெட்ட மூணு ஓவர்ல முடிக்கறோம்!

கோடிவீட்டு பரிமளா ரவி செட்டு

“அண்ணன் இன்னைக்கு களம் எறங்கப்போறாரு! ஈரோடு டீம் செதறப் போகுது”ன்னு ரவியைப் பார்த்து ரகசியமா கண்ணடிச்சு உசுப்பிவிட, பலியாடு மாதிரி எறங்கிட்டாரு அண்ணன்!

முதல்ல ஈரோடு பேட்டிங்

அண்ணன் பௌலிங் போட மாட்டேன், பேட்டிங்குக்கு எனர்ஜி வேணும்ன்னுட்டார்!

ஆன் சைட் பௌண்டரில ஃபீல்டிங் நின்னுட்டு அநியாயத்துக்கு சொந்த டீம் பௌலிங்கையே கலாய்ச்சுட்டிருந்தார்!

ஈரோடு டீம் விக்கெட் கொடுக்காம ஏழு ஓவர்ல நூத்தி எட்டு ரன்! அப்போதான் அந்த கேட்ச் வந்தது அண்ணனுக்கு!

பனைமர ஒயரம் போய், அண்ணன் கைக்கு நேரா லட்டு மாதிரி எறங்குது பால்!

அண்ணன் அசால்ட்டா புடிச்சுடுவாருன்னு சொல்லி வாய் மூடல! சொத்துன்னு மண்டைலயே வாங்குனாரு பாலை! கண்ணுல மின்மினிப் பூச்சி பறக்க, 

“சூரிய வெளிச்சம் கண்ண கூசிடுச்சு” - மதியவேளைல கெழக்க பார்த்து நின்னவருக்கு!

பொறி கலங்கி நின்னவரை ரவி தட்டிக் கொடுத்து சொன்னான்

“விடுங்கண்ணே, பேட்டிங்ல பார்த்துக்கலாம்!”

ஈரோடு டீம், பத்து ஓவர்ல விக்கெட் கொடுக்காம நூத்தி நாப்பத்தொம்பது ரன்!

எப்படியோ பேட் புடிக்காம ஒப்பேத்திடலாம்ன்னு அண்ணன் நெனப்புல மண்ணைப் போட்டானுக பசங்க! பூராப் பயலும், பெவிலியனுக்கும் பிட்சுக்கும் ரன் எடுக்க, நாலு ஓவர்ல மூணு விக்கெட்டுக்கு பதினெட்டு ரன்!

த்ரீ டவுன்ல அண்ணன் கைல பேட்டைக் கொடுத்து உள்ளே அனுப்பியாச்சு!

மொத பால் மடார்ன்னு பேடுல வாங்க, மொத்த டீமும் ஹவ் ஈஸ் தட்ன்னு அலற, அம்பயர், அண்ணன் ஃப்ரண்டு, எருமை மாடு மாதிரி அசையாம நின்னுட்டார்!

வெறுத்துப் போய் அடுத்து போட்ட ஸ்லோ பால் வர்றதுக்குள்ள அண்ணன் பேட்டை ஒரு முழு சுத்து சுத்தி முடிக்க, பால், சாதுவாய் உருண்டுபோய் ஸ்டம்புக்கு அடில உட்கார, நல்லவேளையா பெய்ல் கீழ விழல!

அடுத்த பந்தை கண்ணை மூடிக்கிட்டு குருட்டு வீச்சு வீச, எங்க டீமுக்கு முதல் பௌண்டரி!

அடுத்து வந்தது அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த பந்து! நூறு கிலோமீட்டர் வேகத்துல வந்த பந்து சரியா கால் சந்துல பட, மளுக்குன்னு ஏதோ ஒடையற சத்தம் பௌண்டரி லைனை ஒட்டி உட்கார்ந்திருந்த ரவிக்கும், பரிமளாவுக்கும், துல்லியமா கேட்டது!

அப்படியே மடங்கி விழுந்த அண்ணனை மட்டாடர்ல அள்ளிப் போட்டுக்கிட்டு ஓட, மேட்ச் வெற்றி தோல்வியின்றி தள்ளிவைக்கப்பட்டது!

மறுநாள் காலைல ஆஸ்பத்திரி பெட்ல கண்ணு முழிச்ச அண்ணன்கிட்ட ரவி சொன்னான், “கெத்துண்ணா நீங்க, தோக்கற மேட்சை அபாண்டன் பண்ணி ட்ரா ஆக்கிட்டீங்க!”

களுக்ன்னு பரிமளா சிரிச்ச சத்தத்துல 

மளுக்ன்னு அப்ப ஒடஞ்சது அண்ணனோட, 

நெஞ்சு!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக