நேற்று மதியம் டப்பா சாப்பாட்டை தின்னுட்டு, பிடுங்க எந்த ஆணியும் இல்லாம சமந்தா வீடியோவை பார்த்து ஓ சொல்லலாமா, ஓஓ சொல்லலாமான்னு யோசிச்சுட்டிருக்கும்போது பதட்டமா வந்தார் பார்ட்னர்!
“சார் நீங்க ப்ளட் டோனர்தானே?”
“ஆமா!”
“ஓ பாசிட்டிவ்தானே?”
“ஆமா!”
“கடைசியா எப்போ டொனேட் பண்ணீங்க?”
என்னது, பிஸினஸ் பார்ட்னரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாரு, நாமவேற பழக்கதோஷத்துல ஆமா ஆமான்னு சொல்லிட்டிருக்கோம்?
“என்ன சார் பிரச்னை? தூக்கம் வரலயா?”
“இல்ல சார், அவசரமா ப்ளட் வேணும்! ஃப்ரண்டோட அம்மாவுக்கு நாளைக்கு காலைல ஓப்பன்ஹார்ட் சர்ஜரி! நாலு யூனிட் ப்ளட் வேணும்!”
“அதுக்கென்ன, பேஷா கொடுத்துட்டாப்போச்சு!
எப்போ வேணும்?”
“உங்களுக்கு எப்போ முடியும்?”
இங்க உட்கார்ந்து சேரை தேய்ச்சுட்டிருக்கறதுக்கு, அங்க போனா சேச்சிகளையாவது பார்த்துட்டிருக்கலாமேன்னு ரெட்டை ரெடியா, “ஏன், இப்போவே போறேனே?”
“இல்ல சார், ஏதோ வேலை செஞ்சுட்டிருக்கீங்க, சாயங்காலம் போனாகூட போதும்!”
லேப்டாப்ல ட்விட்டரை நோண்டிட்டிருக்கறதுகூட தெரியாத ஆளெல்லாம் பிஸினெஸ் பார்ட்னரா வெச்சுட்டு எங்கே உருப்பட?
“இல்ல, இதை எப்போ வேணும்னா பண்ணிக்கலாம், சேச்சி, சே.. சர்ஜரி முக்கியம்”
“எந்த ஹாஸ்பிடல்?”
அவர் சொன்ன ஹாஸ்பிடல்ல இதுவரைக்கும் டொனேட் பண்ணப் போனதில்லை! ஒரே ஒரு தடவை, கண் முன்னாடி பைக்ல இருந்து விழுந்து ரத்தம் சொட்டக் கிடந்தவரை எமர்ஜன்சி வார்டில் கொண்டு இறக்கிவிட்டு வந்தது தவிர, அங்கே வேறெதுக்கும் போனதில்லை!
சரின்னு, மூடிட்டு, (லேப்டாப்பை) அவர் ஃப்ரண்டோட நம்பரை வாங்கிட்டு கிளம்பியாச்சு!
“எப்படித்தான் ப்ளட்லாம் டொனேட் பண்றீங்களோ, எனக்கு ரத்தத்தை பார்த்தாலே பயம்!” - இதுவேற!
கோடை பண்பலைல அந்நேரத்துக்கு ஏதோ ஆம்பள ஆர்ஜே ஆத்திட்டிருந்ததைக் கேட்கப் பிடிக்காம, கூடப் பொறந்த க்ரைம் பார்ட்னருக்கு ஃபோனைப் போட்டு கதை கேட்க, “போனவாரம், நான் அட்மிட் ஆன ஹாஸ்பிடல்ல ஃபீமேல் நர்ஸ்லாம் செம அழகா இருந்தாங்க!” ஆரம்பமே..
“அடிப்பாவி! துணைக்கு என்னை கூப்பிட்டிருக்கலாம், அல்லது அங்கிருந்தே வீடியோ கால் பண்ணியிருக்கலாம், இப்போ தங்கச்சிகூட ஒடம்பு சரியில்லாதப்ப கூடஇருக்க முடியாத அண்ணனா போய்ட்டேனேன்னு எவ்வளவு கில்ட்டியா இருக்கு தெரியுமா?”
“மூடிட்டு வண்டியை ஓட்டுங்க! நீங்க எதுக்கு ஃபீல் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்!”
அதுதான் ஊருக்கே தெரியுமே!
“அடுத்த தடவை அதே ஹாஸ்பிடல் போனா வீடியோ கால் பண்ணுடா!”
“தூ! இப்போ போற இடத்துல கிழவி நர்ஸ் இருக்கும் போங்க!”
பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு, “சார், சார்ஜ் லிஸ்ட் படிச்சுக்கங்க, மினிமம் சார்ஜ் முப்பது ரூபாய்!”
மன்னிச்சுக்கப்பா, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது, நீயே படிச்சு சொல்லிடு ப்ளீஸ்!”
அவர் மனசுக்குள்ள திட்டிய வசவு வீதிவரைக்கும் கேட்டுச்சு!
ஒருவழியா, அடுத்த எண்ட்ல, ஒரு கிலோமீட்டர் தள்ளி, D ப்ளாக் மாடில இருந்த ப்ளட் பேங்க் கதவை தள்ளித் திறந்தால், கண்கொள்ளா காட்சி!
போனவாரமே ரிட்டயர் ஆகியிருக்கவேண்டிய எங்க பாட்டி க்ளாஸ்மேட் நர்ஸ்!
உடன்பிறந்தாள் சாபம் ஊழ்போல் வந்து உறுத்தும்ன்னு சொன்னது வள்ளுவரா, ஔவையாரா?
“ஹலோ, ஷூவை வெளியே கழட்டிட்டு வாங்க!”
பரீட்சை பேப்பர் மாதிரி நாலு பக்கம், ஒரு ஃபார்மை கொடுத்து, ஃபில்லப் பண்ணுங்க!
பாதில எட்டிப் பார்த்து, “என்னங்க, பச்சை இங்க்ல ஃபில்அப் பண்றீங்க? வேற ஃபார்ம் தர்றேன், ப்ளூல பண்ணுங்க!”
ஏறகனவே கடுப்புக் கூந்தல்! இதுல இதுவேற!
“பச்சைல எழுதக்கூடாதுன்னு எங்க எழுதியிருக்கு?”
சார், சார், நான் வேணும்னா ஃபில்அப் பண்ணிடறேன்!” - அம்மா ஆபரேஷன்காரர்! அவர் கவலை அவருக்கு!
“சார், நாளைக்கு காலைல ஆபரேஷனுக்கு ரெண்டு யூனிட் ஃப்ரஷ் ப்ளட் வேணுமே, அதை அரேஞ்ச் பண்ணிட்டீங்களா?”
இந்தக் கேள்வி அவருக்கு!
“இல்லை சிஸ்டர், இனிமேல்தான்!”
“அதுதான் சார் முக்கியம், அதை மிஸ் பண்ணிடாதீங்க”
டெஸ்ட்டட் பாஸிட்டிவ் ஃபார் ஹெச் ஐவி? ன்ற கேள்விக்கு எஸ்ஸை டிக் பண்ணலாமான்னு யோசிச்சுட்டிருந்த என்னை, “சார், நீங்க காலைல ஒரு எட்டு மணிக்கு வரமுடியுமா, ப்ளீஸ்?”
ஏன்?
“ஃப்ரஸ் ப்ளெட் வேணும், அதான்”
“ஃப்ரஸ்ன்னா, குளிச்சுட்டு வரணுமா?”
யோவ்ன்னு சொன்னமாதிரி தெரியல, ஆனா, சிரிச்சுட்டுத்தான் பதில் சொல்லுச்சு! “படுத்தாதீங்க சார், நாளைக்கு வரமுடியுமா?”
“என் ப்ளட் ஃப்ரெஸ்ன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க?”
“சாஆஆஆர்!”, அம்மா ஆபரேஷன்காரர்!
“சரி, வர்றேன், காலைல ட்யூட்டில நீங்க இருக்கமாட்டீங்கதானே?”
“ஏன்?”
“இல்ல, சும்மா கேட்டேன்! காலைல வர்றேன்!”
காலைலயாவது..
நம்பிக்கைதானே வாழ்க்கை!
“சார், வாங்க, ஒரு காஃபி குடிச்சுட்டுப் போகலாம்!”
“நான் என்ன விருந்துக்கா வந்திருக்கேன், போய் அம்மாவைப் பாருங்க, அவங்களுக்கு சரியானதும் கறி சோத்துக்கே வர்றேன்” எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு துண்டு போட்டு வச்சிட்டு, வீட்டுக்கு!
காலைல, ஏழு மணிக்கே குளிச்சு, ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டுட்டு, விசிலடிச்சுட்டுக் கிளம்பினால், “அப்பா, என்னை காலேஜ்ல எறக்கி விட்டுட்டு போ!”
“ஏன், உன் வண்டி என்ன ஆச்சு?”
“நேத்து ஃப்ரண்ட் கூட வந்துட்டேன்! வண்டி காலேஜ்ல நிக்குது!”
“ஃப்ரண்டா, ஃப்ரண்டியா?”
“ஃப்ரண்டுக்கு கடைசி எழுத்து dதானப்பா?”
அடப்பாவி! காலேஜ் போக ஆரம்பிச்சு பத்து நாள் கூட ஆகல!
இதை ஒருநாள் தனியா விசாரிக்கணும்!
வடக்கு எல்லைல இருக்கற காலேஜ்ல கொண்டு எறக்கிவிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு போகும்போதே கால், “சார், வந்துட்டீங்களா?”
“வந்துட்டிருக்கேன்மா! இன்னும் பத்து நிமிஷம்!”
பார்க்கிங்குக்கு முப்பது ரூபாய் தண்டம் கட்டிட்டு எதுக்கு அவ்வளவு தூரம் நடக்கணும்? அதுவுமில்லாம, முப்பது ரூபாய்க்கு என்ன வாங்கலாம்ன்றதை இங்கே சொன்னா கலவரமே வந்துடும்!
ரைட் ராயலா, ப்ளட் பேங்க் வாசல்ல டாக்டர்ஸ் பார்க்கிங்ன்னு கொட்டை எழுத்தில் எழுதியிருந்த இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்க, அட, செக்யூரிட்டி சல்யூட் அடிச்சு கதவை திறந்துவிட்டார்!
ஒன்னு, அவர் புதுசா இருக்கணும், அல்லது நம்மை புதுசுன்னு நினைச்சிருக்கணும்!
முதல் சகுனமே நல்லா இருக்கேன்னு படியேறும்போது ஃபோன், “சார், நான் அம்மா கூட இருக்கேன்! நீங்களே போய் பேஷண்ட் பேரை சொல்லி ப்ளட் கொடுத்துடறீங்களா, ப்ளீஸ்?”
சரின்னு சொல்லிக்கிட்டே கதவைத் திறக்க, கடவுள் இருக்கான் குமாரு!
“எந்தா இத்தறை லேட்டாயிட்டு வருன்னு?”
கேரளத்துக் குயில்களின் கோபம்தான் எத்தனை அழகு!
வழக்கமான வழிசல்கள் முடிந்து, டப்பா கூல்ட்ரிங்கை (இதை மாத்தித் தொலைக்கமாட்டாங்களா, ஒரு காஃபி கொடுக்கலாமே?) வேண்டாவெறுப்பாக குடித்து, கிளம்பும்போது, “சேச்சி, ஞான் வரும்போள் விளிச்சது உங்கட நம்பரோ?”
இல்லா, மேட்ரன் சேச்சியோடது, வயசு அறுபது!
சிரிப்பை மட்டும் போனஸா வாங்கிட்டு, “மறுபடி ஏதாவது தேவைன்னா உங்க நம்பர்ல இருந்து கூப்பிடுங்க!”
பி கு:
இதில் குருதிக்கொடை பற்றி எதுவுமே இல்லையே என்போருக்கு,
அப்படிப்பட்ட ஆலமரத்தில்தான் அந்தப் பசுமாடு கட்டியிருந்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக