திங்கள், 20 டிசம்பர், 2021

எல்லோரும் ஒட்டுமொத்தமாய் தோற்றுப்போனோம்!

இன்னொரு தற்கொலை என்ற அளவில் கடந்துபோகப் பழகிவிட்டோம்!

காரணம் யாரென்று பெயர் சொல்லியிருந்தால் போராளிகளுக்காவது பயன்பட்டிருக்கும்!

பொதுவாக குமுறியிருக்கிறது அந்தக் குழந்தை!

“என் கனவுகள் அத்தனையும் சிதைந்து போய்விட்டன. பாதுகாப்பே இல்லை இந்த பாழும் சமுதாயத்தில்,

உறவுகள், ஆசிரியர்கள், யாரையுமே நம்பமுடியவில்லை” என்று அடிக்கோடிட்டு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறது ஒரு பள்ளிக் குழந்தை!

இது இப்போது ஒரு வழக்கமான வாராந்திர நிகழ்வு என்று ஆகிவிட்டது!

கட்சி அரசியலும் சினிமாவும் போடும் காட்டுக்கூச்சலில் இது ஒரு முனகலாகக்கூட கேட்காமல்போய்விட்டது!

ஒரு திரைப்படம் வெற்றியா தோல்வியா என்ற விவாதம் பெற்ற வெளிச்சத்தில் நூற்றில் ஒரு பங்கும் இதற்குக் கிடைக்கவில்லை!

கோவை பள்ளி மாணவி தற்கொலையில் நமக்கு குற்றம் சாட்ட ஒரு உருவம் இருந்தது வசதியாகப் போய்விட்டது!

அந்த ஆசிரியர், பள்ளி முதல்வர்தான் காரணம் என்று அடுத்தவனை விரல் நீட்டிப் பேச வாய்ப்பு கிடைத்தது!

நல்லவேளை, நாம் தப்பித்தோம் என்ற சந்தோஷத்தில், நம் குரலும் ஓங்கி ஒலித்தது!

அதிலும், இதிலும், இடையில் இதுபோல் சிறு அதிர்வுகளை மட்டுமே ஏற்படுத்திய கரூர் சிறுமி தற்கொலையிலும், குற்றவாளிகளின் கூட்டாளிகள் நாமும்தான் என்பது ஏனோ நமக்கு உறுத்தாமலே போய்விட்டது!

நடந்தது நம் வீட்டில் இல்லை என்பதால், நாம் மறுநாளே திருவாதிரையோ, தீபாவளியோ கொண்டாடப் போய்விட்டோம்!

இது நம் வீட்டில் நடக்கவில்லையா? நம் குழந்தைகள் அவர்கள் ஆணோ, பெண்ணோ பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா? “நமக்குத் தெரியாது” என்பதுதான் உண்மை!

மொத்தமாக, ஒரு சமுதாயமாக நாம் தோற்றுப்போய்க்கொண்டிருக்கிறோம்!

எத்தனை வீடுகளில் குழந்தைகள் தோழமையோடு அணுகப்படுகிறார்கள்

தங்களுக்கு நேர்வதை, தாங்கள் சந்தேகமாகவோ, சங்கடமாகவோ உணர்வதை பெற்றோரிடம் வந்து 

நேரிடையாக சொல்லுமளவு எத்தனை குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்கப்பட்டிருக்கிறது?

மாதா, பிதா, அடுத்த இடத்தில் இருக்கும் குரு இந்த மூன்றுபேரும் எந்த அளவுக்கு அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்?

துரதிர்ஷ்டவசமாக, குரு என்ற இடத்தில் இருப்போரே முதல் குற்றவாளிகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்!

ஏன் இப்படி?

குடும்ப உறவுகளுக்குள் கொடுக்கல் வாங்கலில்கூட, ஒரு குழந்தைதான் கொன்று வீசப்படுகிறது! அதுவும் தவறாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே கொலை செய்யப்படுகிறது!

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒருவேளை, ஃப்ரீ செக்ஸ் அனுமதிக்கப்பட்டால் இதெல்லாம் நடக்காதா?  மூலைக்கு மூலை சாராயக்கடைகளை திறந்ததுபோல பாலியல் விடுதிகள் திறக்கப்பட்டால், இப்படியெல்லாம் செய்யமாட்டார்களா? 

நிச்சயமாக இல்லை!

பெண் என்பவளே காலை விரித்துப் படுக்கவைக்கப்படவேண்டிய ஒரு பண்டம்! பெண் என்பவள் ஒரு உடல்! அவளுக்கு ஆறு வயதானாலும், அறுபது வயதானாலும், தன் தேவையைத் தணிக்க ஒரு ஓட்டை! அதை அடைவதே ஒரு ஆணின் அதிகபட்ச ஆளுமை! 

ஒரு பெண்ணை அவமானப்படுத்த, அவள் உடலைத் தொட்டாலே போதும்! அப்படித் தொட்டதை ஒரு பெரிய அவமானம், இழப்பு என்று உணரவைத்தே அவளை மிரட்டவும் முடியும், இனி வாழ்க்கையே போச்சு என்று அவளை நம்பவைக்கவும் முடியும்! 

எவ்வளவு பெரிய லைசென்ஸ் ஆண்களுக்கு?

Stalking எவ்வளவு glorify செய்யப்படுகிறது நம் கதைகளிலும், படங்களிலும்?

கட்டாய உறவு கொண்டவன் திருந்திவந்தால் அவனையே ஏற்றுக்கொள்வதால், காணாமல்போன கற்பு காப்பாற்றப்படும் என்பது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதமும் அதிர்ஷ்டமும்!

கோவலனை திரும்ப ஏற்றுக்கொண்ட கண்ணகிதான் கற்புக்கு அரசி! 

கண்ணகி ஒரு மாதவனோடு அலைந்து திரிந்து வந்து, காத்திருந்து ஏற்றுக்கொண்டிருந்தால் கோவலன் கற்புக்கு அரசன் ஆகியிருப்பானா?

காவியங்களிலிருந்து, புராணத்திலிருந்து, பெண்தான் புனிதத்தை தீக்குளித்தோ, கல்லாய்க் கிடந்தோ நிரூபித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது!

ஆண் அலம்பிக்கொண்டு போனால் போதும்!

இதைப் பேசினால் நீண்டுகொண்டே போகும்!

நடந்த கதைக்கு வருவோம்!

நட்பு, உறவு, ஆசிரியர் என்று எவ்வளவு நம்பிக்கை மோசடிகள்?

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமுதாயம் என்று பொதுப்படையாய் கையைக் காட்டுவதைவிட, முதலில் தோற்றுப்போனவர்கள் பெற்றோர்கள்!

அந்தப் பெண் வீட்டில் வந்து முதல்நாளே சொல்லியிருந்தால், பெரும்பாலும் என்ன ஆகியிருக்கும்?

நீ என்ன செய்தாய் என்பதுதான் முதல் கேள்வியாய் இருந்திருக்கும்!

பாதிக்கப்பட்ட குழந்தைக்கே கட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கும்! படிப்பு நிறுத்தப்பட்டு வீட்டோடு முடக்கப்பட்டிருக்கும்!

லட்சக்கணக்கில் கட்டணம் கட்டி சேர்த்த பள்ளியை பகைத்துக்கொள்ளவோ, வேறு பள்ளி மாற்றவோ எத்தனை பெற்றோர் தயாராக இருப்பார்கள்? அதைவிட குற்றம் சொல்லும் குழந்தையையே குறை சொல்வது சுலபம்தானே?

இதைவிட அடிப்படையான விஷயம், 

கற்பென்ற ஒரு கற்பிதத்தை பெண் குழந்தைகளின் கால் சந்தில் ஒளித்துவைத்து, அதை புனிதம் என்றும், அதை காக்கவேண்டிய முழுப் பொறுப்பும் அந்தப் பெண்ணின் தலையில்தான் என்றும் நம்பித் திரிவது!

தனக்கு என்ன நேர்கிறது, அதை எப்படித் தடுப்பது, இதை யாரிடம் முறையிடுவது என்பதுகூட தெரியாத குழந்தைகள் அறியாமல் இழக்கும் ஏதோ ஒன்றுதான் கற்பு. 

ஜெயகாந்தன் நாவலில் ‘கெட்டுப்போய்’ வரும் பெண் தலையில் தண்ணீரைக் கொட்டி நீ சுத்தமாயிட்டடீ என்று சொல்லும் அம்மா பாத்திரம் அன்றைக்கு ஒரு கலாசார அதிர்ச்சி!

கெட்டுப்போக பெண் ஒரு பண்டமில்லை! அந்நேரத்தில் தலையில் தண்ணீர் கொட்டுவதே அதீதம்! நாய் காலைத் தூக்கிவிட்டுப் போனதென்றால் காலையா வெட்டிக்கொள்ள முடியும்? கழுவிக்கொண்டு போவதுதான் உத்தமம்!

விரும்பி உடன்படாமல் வலுக்கட்டாயமாக நடப்பது உறவுமல்ல! விரும்பியே உடன்பட்டு நடந்திருந்தாலும், இனி வேண்டாம் என்று மறுதலிக்கும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டுதானே?

விருப்பம் இன்றி புணரவரும் ஆணை தற்காப்புக்காக கொல்லவும் சட்டம் அனுமதிக்கிறது! 

ஆனால், சமூகம்?

அவள் துப்பட்டாவை ஒழுங்காகப் போடவில்லை என்பதுதான் குற்றத்தின் ஆரம்ப காரணி என்று கதைக்கும்!

கெட்டுப் போனவள், கெடுக்கப்பட்டவள் என்ற வார்த்தைப் பிரயோகங்களே மிகப்பெரிய அநீதி! 

பெண் என்பவள் போகப்பொருள் அல்ல என்பதை ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்! 

பெண் குழந்தைகளிடம், தன் பயங்களை, எதிர்கொள்ளும் விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளும் தோழமையோடு இருங்கள்!

குழந்தைகள் யாரைப்பற்றி, அவர்கள் கடவுள் ஸ்தானத்தில் இருந்தாலும், எது சொன்னாலும் நம்பிக்கையோடு காது கொடுத்துக் கேளுங்கள்!

இதில் பயப்படவோ, அவமானப்படவோ, மறைத்துவைக்கவோ ஏதும் இல்லை என்பதை குழந்தைகளோடு நீங்களும் உணருங்கள்!

எது நடந்தாலும் நம் பெற்றோர் நமக்குத் துணையிருப்பார்கள் என்ற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் விதையுங்கள்!

குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால், இந்த உலகத்தையே புரட்டிப்போடும் வேலை இருந்தாலும், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முதலில் அதில் கவனம் செலுத்துங்கள்! 

அக்கறையோடு நம்பிக்கையோடு விசாரித்து, சின்ன விஷயமாக இருந்தாலும் உதாசீனப்படுத்தாமல் கேளுங்கள்!

நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பது எது என்பதை சொல்லிக்கொடுங்கள்!

தவறு என்று தெரிந்தால், செருப்பைக் கழற்றி அடிக்கச் சொல்லுங்கள்! அத்துமீறினால் அறுத்து வீசினாலும் தவறில்லை என்று சொல்லுங்கள்!

நாலுபேருக்குத் தெரியவந்தால் அசிங்கம் அந்த மிருகத்துக்குத்தான் என்பதை உணரச் செய்யுங்கள்!

குழந்தைகள் யாரைக் குற்றம் சொன்னாலும், அவர்களுக்கே ஆதரவாய் நில்லுங்கள்!

அந்த விஷயத்தில் உங்கள் குழந்தையைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்.

இப்போதைக்கு இது போதும்! அவரவர் குழந்தைகளை அவரவர் காப்பதும், துணை நிற்பது அவசியம் என்பதை பெற்றோர் முதலில் உணருங்கள்!

இது முதல் படி!

சமுதாயத்தை மாற்ற பல படிகள் கடக்கவேண்டும்! அதை வேறொருநாள் பேசுவோம்!1 கருத்து: