வியாழன், 20 ஜனவரி, 2022

கொரோனாவும் அண்ணாத்தயும்!

           கொரோனாவும் அண்ணாத்தே படமும்!

ரெண்டுமே முதலில் ஒரு முழு வட்டம் வந்துவிட்டதால், இனி நம்மை நெருங்காதுன்னு நெனச்சுட்டிருந்தேன்

ஆனா, ரெண்டுமே அடுத்த ஆட்டத்தை ஒரே நாளில் திரும்ப ஆரம்பிச்சுடுச்சு!

முதலில், கொரோனா..

நேற்று முன்தினம் ஆஃபீஸ் போனபோதே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது! வெவ்வேற சவுண்ட் எஃபெக்ட்ல தும்மல் சத்தம்! காசைத் துரத்திக்கிட்டு ஊர் ஊரா அலைஞ்சதுல, எனக்கு அங்கே நடக்கும் எதுவும் தெரியல!

என்ன ஆச்சுன்னு பக்கத்து டேபிள் பார்ட்னரை கேட்டிருக்கக்கூடாது! அவர் பங்குக்கு என் பக்கம் திரும்பி போட்ட தும்மல் மதுரை எய்ம்ஸ் வரைக்கும் கேட்டிருக்கும்

அவர் இன்ஃபெக்‌ஷன் அந்த ஃபோர்ஸ்ல என் லங்க்ஸ்ல டீலக்ஸ் ரூம் போட்டு குடியேறியிருக்கும்!

ஒன்னுமில்ல சார், கார்த்தியும் ராமராஜும் கேரளா தொடர்ச்சியா நாலு நாள் போய்ட்டு வந்தாங்க, ஒரு கன்வேயர் மாற்ற!

ரெண்டு பேருக்குமே, காய்ச்சல், சளி! கூடவே அந்த ரூம்ல இருக்கும் ஆட்டோமேஷன் ஸ்டாஃப் நாலு பேருக்கும் இருமல், சளி!

டெஸ்ட் எடுத்தாச்சா?

இல்லை சார், இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு!

வாய் வரைக்கும் வந்த கெட்ட வார்த்தையை முழுங்கிட்டு ஆறு பேரையும் கூப்பிட்டு, என்ன வேலையா இருந்தாலும் நாசமா போகட்டும்!

இப்போ ஃபோன் பண்ணி சொல்லிடறேன், முதலில் ஆறுபேரும் லேப்ல போய் டெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க!

இன்னும் கொஞ்சம் வேலை.. இது பார்ட்னர்!

முறைச்சதில் பதுங்கி, சரி சரி, போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்க!

ஒரு வாரம், உங்க யாரையும் நான் இங்கே பார்க்கக்கூடாது!

லேப் போய் டெஸ்ட் கொடுத்துட்டு நேரா வீட்டுக்குப் போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க!

சரி, உங்களுக்கு ஏன் தும்மலும் இருமலும்?

நேத்து முழுக்க அவங்களோடதான் மிசின்ல ஒர்க் பண்ணேன்!

சரி, நீங்களும் கிளம்புங்க!

வீட்டுக்கு இந்நேரத்தில் போனா சாப்பாடு கிடைக்காது, லஞ்ச் முடிச்சுட்டுப் போறேன்!

அது சரி, அவரவருக்கு அவரவர் பிரச்னை!

சாப்பாட்டு டேபிள்ல எதிரெதிரே உட்கார்ந்து மாஸ்க்கை கழட்டியதும் அடுத்த பூகம்ப தும்மல்!

ரைட்டு! தல நம்மள முடிச்சுருச்சுன்னு அப்போதே தோணுச்சு!

கடனேன்னு சாப்பிட்டு, முதுகுல கை வச்சு தள்ளாத குறையா வீட்டுக்கு துரத்தும்போது சொன்னேன், நீங்களும் லேபுக்கு போய்ட்டு போங்க!

நான் வீட்லயே செல்ஃப் டெஸ்ட்டிங் கிட் வச்சிருக்கேன், அதுல பண்ணிக்கறேன்!

அவர் வீடு இருக்கும் திசைக்கு ஒரு நமஸ்காரம் அந்த பொறுமைசாலி பெண்டாட்டிக்கு பண்ணிட்டு வரும்போது,

இன்னொரு ஸ்டாஃப், சார், எனக்கும் ஃபீவர்!

இப்படி ஒரொரு ஆளா வராதீங்க, எல்லோரும் கேபினுக்கு வாங்க!

எல்லோரும் உட்கார்ந்ததும், யாருக்கெல்லாம் ஒடம்பு சரியில்ல?

தமிழய்யா பொண்ணு ஸ்டாஃப் ரூமுக்கு போய் சாக்பீஸ் எடுத்துட்டு வரச் சொன்னமாதிரி, எல்லாப் பயலும் கையை தூக்கறாங்க!

ஒருத்தர் மாத்திரம் கை தூக்கல

நீங்க யார், சப்ளையரா?

இல்லை சார், புது ஸ்டாஃப். நேத்துதான் ஜாயின் பண்ணேன்!

சரி, எல்லோரும் சிஸ்டத்தை ஆஃப் பண்ணிட்டு கிளம்புங்க, தம்பி, நீங்க இருக்கீங்களா, போறீங்களா?

போறேன்னு கண்ணும், இருக்கேன்னு வாயும் சொல்லுச்சு!

எவன் ஆஃபீஸ்ல தனியா உட்கார்ந்திருக்கறது, மச்சினி இல்லாத வீட்டுக்கு முதல்முறை போன மாப்பிள்ளையாட்டம்?

நீங்க இருங்க, அவங்க எல்லாம் போகட்டும்!

நாளைக்கு யாருக்கு எந்தப் பிரச்னையும் இல்லையோ, அவங்க மட்டும் வாங்க, இப்போ கிளம்புங்க!

நாலு மணிக்கெல்லாம் லேபிலிருந்து ஃபோன், சார் உங்க ஸ்டாஃப் நாலு பேருக்கு கோவிட் பாசிட்டிவ்!

பார்ட்னர் போட்ட தும்மல் எனக்கும் தொண்டைல எரிய ஆரம்பிக்க, பரிதாபமா உட்கார்ந்திருந்த புது ஸ்டாஃபை பூட்டீட்டு கிளம்ப சொல்லிட்டு நகர் உலா!

பிக் பஜார்ல, “ஆம் வாடிக்கையாளர்களே, ஒரு கிலோ உளுத்தம்பருப்பு நூற்றி இருபது ரூபாய் மட்டுமே

சந்தைல லேகியம் விக்கிற மாடுலேசன்ல ஸ்பீக்கர்ல பேசிக்கிட்டிருந்த பரதேவதை கொஞ்சம் லட்சணமா இருந்துச்சு!

இந்த பிஸ்கட் என்ன விலை

பதினைந்து ரூபாய் சார்!

இது?

ம்ன்னு மொரச்சுக்கிட்டே இதுவும் அதேதான் சார்!

பேட்ச் வேறயா இருக்கேன்னு கேட்டேன்!

சட்டென்று சூழ்நிலை வெப்பநிலை ரெண்டு டிகிரி கூட, மெதுவா ஜகா வாங்கி, எதையும் வாங்காம வண்டிக்கு வரும்போது தொண்டைல தீ பற்றி எரிய ஆரம்பிச்சுது!

வீட்டுக்கு வந்துட்டு பார்ட்னருக்கு ஃபோன் பண்ணா, சார் எனக்கு மைல்டா பாஸிட்டிவ்!

டோலோ போட்டிருக்கேன்! நாளைக்கு ஆஃபீஸுக்கு வந்துடுவேன்!

அடப்பாவி, நீ பற்றவைத்த நெருப்பொன்று.. 

பேசிப் பிரயோஜனம் இல்லை!

உங்களோட சேர்த்து அஞ்சு பேருக்கு பாஸிட்டிவ்! மூடிட்டு எல்லோரும் வீட்லயே இருங்க! நாளைக்கு நான் ஆஃபீஸ் போய்க்கறேன்!

ஆக்சுவலா என்னோட ப்ளான் எல்ஜிக்கு போறது!

அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொங்கலுக்கு எடுத்த சேலையை கட்டிட்டு வர்றேன்னு ப்ராமிஸ் பண்ணியிருந்துச்சு!

சரி, போய் சேவிச்சுட்டு ஆஃபீஸ் போய்க்கலாம்ன்னு படுத்தா, விடியறதுக்குள்ள பாத்ரூம் பைப்பைவிட அதிகமா தண்ணி, மூக்குல!

எல்ஜியை கேன்சல் பண்ணிட்டு ஆஃபீஸ் வர்றதுக்குள்ளே நல்ல ஃபீவர்!

ஒரு மணி நேரத்துக்குமேல உட்கார முடியல!

பேய் மாதிரி தனியா முழிச்சுட்டிருந்த புது பையனைக் கூப்பிட்டு, நெக்ஸ்ட் மண்டே வரைக்கும் ஆஃபீஸ் லீவு! ஊருக்குப் போறது, கல்யாணம் பண்ணிக்கறதுன்னு ஏதாவது இருந்தா முடிச்சுட்டு வாங்க!

சார், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!

திருதிருன்னு முழிக்கும்போதே நினைச்சேன்!

சரி, ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்தவாரம் வாங்க!

வீட்டுக்கு வந்து, கெஸ்ட் ரூம்ல வேக்குவம் எல்லாம் போட்டு, ஃபர்ஸ்ட் நைட் ரூம் மாதிரி பெட்ஷீட்லாம் மாத்தி, இதோ, இன்னைக்கு இரண்டாவது நாள்!

வேளாவேளைக்கு சோறு கொண்டுவந்து பவ்யமா தள்ளி நின்னு பயத்தோட பொண்டாட்டி கொடுத்துட்டுப் போறது blessing in disguise!


இனி, அண்ணாத்த ..

நேத்து காலைல ஆஃபீஸ் கிளம்புப்போதே, எல்ஜிக்கு போகமுடியலயேன்ற எரிச்சல், கூடவே தொண்டைலயும்!

ஒரு புது நெம்பர்ல இருந்து கால்!

ஆஃபீஸ் போய் கூப்பிட்டுக்கலாம்ன்னு விட்டா, மறுபடியும் அதே நம்பர்..

வேண்டா வெறுப்பா எஸ்ஸ்..

அண்ணா, நான் சசி பேசறேன்!

சித்தப்பா பொண்ணு!

ஊர்ல ஏதாவது பெருசு போயிடுச்சுபோலன்னுதான் முதல்ல தோணுச்சு!

சொல்லு சாமி, என்ன விஷயம், இதென்ன புது நம்பர்?

நம்பர் மாத்திட்டன்ணா, ஏனோ ஒருவாரமா உங்கிட்ட பேசணும்போலவே இருந்துச்சு!

ராஜா, இப்போ ஆஃபீஸ் கிளம்பிட்டிருக்கேன், ஒரு பத்து மணிக்கு மேல கூப்பிடறயா?

சரிண்ணா!

ஆஃபீஸ பூட்டிட்டு கிளம்ப நினைக்கும்போது மறுபடி சசி!

சொல்லுடா

அண்ணா, நீ எப்போ ஊருக்கு வருவே?

முன்னல்லாம் அடிக்கடி வருவே, இப்போ வர்றதே இல்லை!

கொஞ்சம் வேலை! வேறொன்னும் இல்லை! முடிஞ்சா நெக்ஸ்ட் வீக் வர்றேன்டா!

நான் என்ன உன் கூடப் பொறந்த தங்கச்சியா, நான் கூப்பிட்டா நீ வருவயா?

அறைஞ்சு பல்ல கழட்டிடுவேன் நாயே, என்ன பேசற நீ!

இல்லண்ணா, அன்னைக்கு டிவில அண்ணாத்த படம் பார்க்கும்போது முழுக்க முழுக்க உன் நியாபகம்தான்! ஏன் அழறேன்னு இவருகூட கேட்டாரு!

அட லூசு, படம் பார்த்தெல்லாமா அழுவே?

ஏன் பேசமாட்டே, அந்தப் படம் பார்த்ததிலிருந்து உன் நியாபகம்தான்ணா! ஒவ்வொரு சீனும் உன்னைத்தான் நியாபகப்படுத்துச்சு!

எப்படியாவது ஒருநாள் இந்த வாரத்தில வந்து ஒரு பத்து நிமிஷம் தலையை காட்டிட்டுப் போண்ணா!

உன் கையால ஒரு கால் டம்ளர் காஃபி கொடுன்னு நீ கேட்கற மாதிரியே இருக்குண்ணா!

அட லூசு, அழாத, நான் கண்டிப்பா அடுத்தவாரம் வர்றேன்! சரியா?

அந்தப் படத்தோட நான்தான் கனெக்ட் ஆகல போல

சிவா இவங்களுக்குத்தான் குறி வச்சு எடுத்தார்போல!

நம்பமுடியாத அளவுக்கு ஆச்சர்யமா இருக்கு! இத்தனைக்கும் அவ சட்டுன்னு உடைஞ்சுபோற பொண்ணும் இல்ல!

தப்பு நம்மகிட்டதான் போல

சிவாவோட இலக்கு சரியாத்தான் இருக்கு! அநேகமா ட்விட்டருக்கு வெளியே உலகம் வேற மாதிரி இருக்கும்போல!

க்வாரண்டைன் முடிஞ்சதும் கண்டிப்பா ஊருக்குப் போகணும் தங்கச்சி கையால கால் டம்ளர் காஃபி குடிக்க!

பார்ப்போம்!!