செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

சிகப்பு சட்டையும் சேட்டுக் குட்டியும்!

        சிகப்பு சட்டையும் சேட்டுக் குட்டியும்!

சிவனேன்னுதான் இருந்தேன்! இன்னைக்கு காலைல ஒரு கட்டம் போட்ட சிகப்பு சட்டை குளத்தில் கல்லெறிஞ்சுட்டுப் போயிடுச்சு!

படிச்சுட்டிருந்த காலம்

அப்போதான் ஸ்பன் அப்படின்னு ஒரு ஐட்டம் துணில பிரபலமாகிட்டிருந்தது! ரேயானும் உல்லனும் கலந்தமாதிரி ஒரு துணி! லாவண்யா மீசைமுடி மாதிரியோ கடவுள் மாதிரியோ, பிசிறு இருந்தும் இல்லாமலும் புசுபுசுன்னு நூல் சாஃப்ட்டா இருக்கும்!

பென்சில்ல நீளமா கோடு போட்ட மாதிரி ஒல்லியா உயரமா இருக்கற எனக்கு சூட் ஆகாதுன்னு தெரிஞ்சே பெரிய பெரிய கட்டம் போட்ட சட்டை என் ஃபேவரிட்!

செட் ஆகாதுன்னு தெரிஞ்சும், சௌகார்பேட்டை சேட்டுப்பொண்ணுக பின்னாடி சுத்தலயா, அது மாதிரிதான்!

ஒரு கட்டம் முடிஞ்சு, அடுத்த கட்டம் முதுகுல ஆரம்பிக்கறமாதிரி சட்டை போடாடதா காட்டான்!”

வேற யாரு, ஆத்ம சினேகிதி ரேவதிதான்!

அதேமாதிரி நம்ம கலருக்கு சூட் ஆகற கலரும் வாங்கறதில்ல!

ஒருநாள் ப்ளைன் கறுப்பு சட்டை போட்டுட்டு இன்ஸ்ட்டிட்யூட் போனா, சட்டை போடாம வந்திருக்கான்னு ஒரே கலவரம்!

அன்னைக்கு விட்டதுதான் ப்ளைன் சட்டையை!

நல்ல ரத்த சிகப்புல ஒரு கட்டம் போட்ட சட்டை, சௌகார்பேட்டை ஃப்ளவர் பஜார் முனைல, ரோட்டோர கடைல ஒருநாள் கண்ல பட்டுச்சு! கூட வந்த ரேவதி கால்ல விழுந்து மறிச்சும், - டேய், இது உனக்கு சூட்டே ஆகாதுடா! மதுரைலிருந்து வந்த ஊரு நாட்டான் மாதிரி இருக்கும்!- வாங்கிக் கொடுத்தால்தான் ஆச்சுன்னு ஒத்தைக் கால்ல நின்னுட்டேன்!

நமக்கு பெரும்பாலும் துணி எடுக்கற லக்‌ஷூரிக்கெல்லாம் ஃபைனான்ஸியரோ, ஸ்பான்ஸரோ, ரேவதிதான்!

வாங்கற எட்டணா ஸ்டைஃபண்டும் காசி விநாயகா மெஸ்ல மந்த்லி சாப்பாட்டுப் பாஸ் வாங்கவே போதாது!

ஊரிலிருந்து நைனா அனுப்பற மணியார்டர்தான் மானத்தை காப்பாத்திக்கிட்டிருந்தது!

இதில் வாரம் ஒரு சட்டை வாங்கணும்ன்னா ஆம்பளக் காமாட்சி கால்லதான் விழணும்! திட்டிக்கிட்டே வாங்கிக் கொடுப்பா பாவம்!

அன்னைக்கு அந்த சட்டை வாங்க ஒரு காரணம் வேற இருந்து தொலைச்சுது!

சௌகார்பேட் திரும்புன உடனே அகர்வால் பவன்! அங்கே கிடைக்கறமாதிரி லஸ்ஸி மாதிரி இந்தப் பிரபஞ்சத்திலேயே வேற எங்கேயும் கிடைக்காது! ரோஜாப்பூ வாசனையோட, சர்க்கரை அங்கங்கே நெருட, டிவைன்!

எதை சொல்ல வந்து எதை சொல்லிட்டிருக்கேன்! தின்னே கெட்ட ஜாதி!

அந்த அகர்வால் தாண்டி ரெண்டாவது கடைல ஒரு சேட்டுக் குட்டி!

இந்த மானு, மயிலு, ரம்பா, ஶ்ரீதேவி, பானுப்ரியா எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சுரண்டி எடுத்து செஞ்ச சிலை!

அஞ்சரை அடி உயர அம்மன் விக்கிரகம்! செப்பு சிலை! எங்கெங்கே வளையணுமோ, அங்கங்கே கரெக்ட்டா வளைவு நெளிவோட

ரைட்டு!

அது ரெண்டுநாள் முன்னாடிதான் ரத்த செகப்புல ஒரு டாப்ஸும், பளிச் வெள்ளைல ஒரு பென்சில்ஃபிட் ஜீன்ஸும் போட்டுட்டு நின்னுட்டிருந்துச்சு! அன்னைக்கே முடிவு பண்ணியாச்சு, ரேவதி பைக்கை வித்தாவது ஒரு சிகப்பு சட்டை வாங்கிடறதுன்னு!

இந்த சௌகார்பேட்டை ரோட்ல ஒரு பெரிய இடைஞ்சல், சைக்கிள் ரிக்‌ஷா! அந்த ரோட்ல ஓட்ட முடிஞ்ச ஒரே வாகனம்!

ரெண்டேமுக்காலடி அகல ரோட்ல எதிரும் புதிருமா போய்க்கிட்டே இருக்கும்!

தளும்பத் தளும்ப இடுப்பை வெளிச்சமா காமிச்சுக்கிட்டு, கவனமா தலை மயிரை மூடிக்கிட்டு சேட்டுப் பொம்பளைகளும், வெள்ளைக்கலர் சோன்பப்டி பேண்ட்டும் குர்தாவுமா ஆம்பளைகளும் சளசளன்னுவபேசிட்டே உட்கார்ந்து போயிட்டிருப்பாங்க!

கால்ல சக்கரம் ஏறிட்டுப் போறதெல்லாம் ஒரு சகஜமான விஷயம்! த்தா..ன்னு மெட்ராஸ் பாஷைல கத்தினாலும் கண்டுக்காம போவானுக!

ஆனாலும் அங்கிருக்கற மார்க்கெட்ல கிடைக்காத ஐட்டமே இல்லை! மூணுபைசா கவரிங் நகைல இருந்து இம்போர்ட்டட் கோஹினூர் வரைக்கும்!

எனக்கு ஏனோ அந்த ரங்கநாதன் ஸ்ட்ரீட்டைவிட, இந்த ரோடும், புரசைவாக்கமும்தான் ஷாப்பிங்குக்கு ஒத்துவரும்!

கொஞ்சம் எலைட் க்ளாஸ் மாதுரி தீட்சித்துகளை ஓரக்கண்ணால பார்த்துக்கலாம்ங்கறது அடிஷனல் போனஸ்!

அப்படி ரிக்‌ஷாவுக்கு ஒதுங்கி ஓரமா நின்னபோதுதான் கண்ணில் வெட்டிய மின்னல் நம் கதாநாயகி!

சரி, சிகப்பு சட்டைக்கு வருவோம்!

மறுநாளே அந்த சிகப்பு சட்டை போட்டுட்டு கிளம்பும்போது சஞ்சீவ் கேட்டான்! மாப்ள, சட்டை நல்லா இருக்கே, எங்கே வாங்குனே?

நியூயார்க்ல இருந்து என் தாய்மாமா வந்திருக்காரு, அவரு வாங்கிட்டு வந்தாருடா!

ப்ளாட்ஃபார்ம்ல வாங்குனதுன்னு அந்த நாய்க்கு ஏன் சொல்லணும்?

என் தாய்மாமனுக அமிஞ்சிக்கரையை தாண்டியதி்ல்லைங்கறதும், கையை அறுத்தாலும் ரத்தம் வராத கஞ்சப் பயலுகன்னும் அவனுக்கு தெரியவா போகுது?

என்ன விலையாமாடா?

எழுபது டாலரோ எம்பது டாலரோ சொன்னாரு மாப்ள!

செத்தான்! வயித்தெரிச்சல்ல ஒரு வாரத்துக்கு சோறு எறங்காது பயலுக்கு!

சொல்ல மறந்துட்டேனே! சேட்டுக்குட்டியை சைட் அடிக்க ஆரம்பிச்ச உடனே செஞ்ச முதல் காரியம், மீசையை வழிச்சு எறிஞ்சது!

அன்னைக்கு என் முகரையை பார்த்துட்டு ரேவதி சிரிச்ச சிரிப்புக்கு, வாரம் ஒருநாள் சோத்துக்கு உப்பு போட்டுத் திங்கறவனா இருந்தாக்கூட தண்டவாளத்தில் தலையைக் கொடுத்திருப்பான்!

தொளதொளன்னு அந்த சட்டையை டக்இன் பண்ணி, சோடாபுட்டி கண்ணாடியை மாட்டிக்கிட்டு கண்ணாடில பார்த்தப்ப எனக்கே நேத்து ராத்திரி பெல்ஸ் ரோட் இருட்ல கையைத் தட்டிக் கூப்பிட்ட ஐட்டத்தைப் பார்க்கறமாதிரி இருந்துச்சு!

பேசாம ஐப்ரோ பென்சிலை எடுத்து மீசை வரைஞ்சுக்கலாமான்னு தோணுச்சு! ஆனா அது இன்னும் கேவலமா இருக்கும், மீசையில்லாம நல்லா சேட்டுப்பயலாட்டம் இருக்குன்னு, என்ன, கொஞ்சம் கறுத்த சேட்டு, மனசை தேத்திக்கிட்டு, ச்சலோ சௌகார்பேட்டை!

கரெக்ட்டா அந்த சேட்டுப்பொண்ணு கொட்டை விக்கிற கடைக்கு - நட்ஸ்ன்னா தமிழ்ல அதுதானே?- டயகனல்லி ஆப்போசிட் நம்ம பழக்கடை அக்கா கடை!

அந்தக் காலத்திலேயே அந்த அக்கா கடைல லிட்சி, ரம்பூட்டான், மங்கூஸ், ஏன், கிவிகூட கிடைக்கும்!

அந்த அக்காவுக்கு என்மேல ஒரு சாஃப்ட் கார்னர், செத்துப்போன அதோட தம்பி மாதிரியே இருக்கேன்னு!

பாதிநாள், வலிய இழுத்து ஏதாவது கொடுக்கும், காசெல்லாம் கொடுத்தா வாங்காது!

இந்தா, இந்தப் பழத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் ஒடச்சு சாப்பிடு! உள்ளாற மூக்குச்சளியாட்டம் இருக்கும், அதை ஸ்பூன் போட்டு வழிச்சு வழிச்சு துன்றானுக இந்த சேட்டுப் பயலுக!

அந்த உவமையை கேட்டும், அதை வாங்கிட்டுப்போய் சாப்பிட்டவனை என்ன சொல்ல?

பார்த்தவுடனே அக்கா கேட்ட முதல் கேள்வி, மீசை எங்கடா தம்பி?

உஷாரா, நேத்து பாட்டி செத்துப்போச்சுக்கா!

அடப்பாவமே, என்ன ஆச்சு

ரிக்‌ஷாக்காரன் இட்ச்சுட்டு பூட்டான்க்கா! அநேகமா உன் புருஷன் மாதிரிதான் இருந்துச்சு, நிறுத்தாம போய்ட்டாப்ல!

எடு செருப்ப, நாயே, என்கிட்டயே கத உட்ரியா? சிரிச்சுக்கிட்டேதான் கேட்டுச்சு! அவ்வளவு நல்ல அக்கா!

பழம் கீது சாப்பிடறயா?

இல்லக்கா, ஒரு பர்ச்சேஸ்!

முடிச்சுட்டு வர்றேன்!

என்ன வாங்கறதுன்னு தெரியாம கடை ஏறியாச்சு!

லேகியம் விக்கற இடம் மாதிரி கலவையா ஒரு வாசம்!

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தறமாதிரி ஒரு பெரிய சரம், அத்திப்பழம்! விலையைப் பார்த்தா அதிகமில்லை, என் ஆறு மாச ஸ்டைஃபண்ட்!

எதை வாங்கறதுன்னும் தெரியல, முன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும், நாம பொறந்த சென்னிமலைல முந்திரிதான் ஒரே நட்ஸ்! அதுவும் பொங்கல், தீபாவளிக்கு கேசரிலயோ பாயசத்திலோ ரெண்டோ மூனோ போட! இங்கே டப்பா டப்பாவா ஏதேதோ! இதெல்லாம் திங்கற ஐட்டமான்னே தெரியாது!

சேட்டுக் குட்டி வேற சிரிச்சுக்கிட்டே, யெஸ், வாட் டூ யூ வாண்ட்?

தட்டுத் தடுமாறி, வாண்ட் சம்திங் ஹெல்த்தி

மொத தடவையா நாலு வார்த்தை இங்கிலீஸ்!

ஏதோ ஒரு பச்சைக் கலர் பழம், கலாக்காயைவிட கொஞ்சம் பெரிசு, ஒரு நூறுகிராம் கவர்ல போட்டு கையை உரசிட்டுக் கொடுக்க,

வாட் ப்ரைஸ்?

அது சொன்ன ஃபைனான்ஸ் என் பர்ஸ்லயே இல்லை! இந்த மாசம் காசிவிநாயகா கோவிந்தாதான்! ஒரு மாசம் ராத்திரி ஆகாரம் கன்ஃபார்ம்டா தண்ணிதான்!

சட்டை பாக்கெட்ல, கை மடிப்புல, இருந்த சில்லறை வரைக்கும் பொறுக்கிக் கொடுத்துட்டு, கைல மிஞ்சின ஒற்றை இருபது பைசால தாமரை!

அப்போதே சிம்பாலிக்கா சொல்லியிருக்கான் ஆண்டவன்!

பலியாடு மாதிரி காசைக் கொடுத்துட்டு, சேட்டுப்பொண்ணு கை பட்ட இடத்தில் ஐஸ்கட்டி பட்டமாதிரி இருந்த சொகத்துல இளிச்சுக்கிட்டே நடந்தவனை, கையைப் பிடிச்சு இழுத்துச்சு பழக்கடை அக்கா!

என்ன, சேட்டுக் குட்டியை சைட் அடிக்கறயா?

இல்ல, ஆமாம்க்கா!

இப்படி இந்தப்பக்கம் வந்து குந்து, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்!

இல்லக்கா, எனக்கு வேலை இருக்கு!

உன். வேல என்னான்னு எனக்குத் தெரியும், இங்க உட்காரு, உங்கிட்ட ஒன்னு சொல்லணும்!

திருதிருன்னு முழிச்சுக்கிட்டே உட்கார்ந்த உடனே, நல்லா அம்சமா பழக்கடைக்காரன் மாதிரியே இருக்கடா தம்பி!

சொல்லு, அந்த சேட்டுக் குட்டியை சைட் அடிக்கறயா?

ஆமாக்கா

நல்லா, மீனாட்சி சேஷாத்திரி மாதிரி அம்சமா இருக்கில்ல!

பார்றா! பழக்கடை அக்கா வாய்ல இருந்து மீனாட்சி சேஷாத்ரி!

கொஞ்சம் வழிஞ்சுட்டே, ஆமாக்கா!

அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணுதா?

ஏங்க்கா நீ வேற, இப்போதான் பார்த்தா சிரிக்குது!

அது தெருவுல போற பிச்சைக்காரன், ரிக்‌ஷா வலிக்கிற என் வீட்டுக்காரன், அவ்வளவு ஏன், பொறைக்கு வாலாட்டற நாயைப் பார்த்துக்கூட சிரிக்குது!

சுர்ருன்னு கொஞ்சம் ரோஷம் மண்டைக்கு ஏற, சரிக்கா, நான் போறேன்!

இந்த ரோஷத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல! கொஞ்சம் இரு, இப்போ ஒரு பொண்ணு வரும், காட்றேன்!

இந்தா, அதுவரைக்கும் இந்த மாதுளையை உரிச்சுத் தர்றேன், சாப்பிடு!

பசி வேளை, கைல இருக்கற இருபது பைசா பஸ்ஸுக்கு பத்தாது! இன்னைக்கு ட்ரிப்ளிக்கேன் வரைக்கும் நடராஜாதான்!

போதாக்குறைக்கு ஏதோ பொண்ண வேற காமிக்கறேன்னு சொல்லுது!

கூச்சப்படாம வாங்கி சாப்பிட்டுட்டிருக்கும்போது அந்த சேட்டு கடை வாசல்ல ஒரு ரிக்‌ஷா வந்து நிக்குது!

ரிக்‌ஷா நிரம்பி வழிய ஒரு லேடி தஸ்புஸ்ன்னு இறங்குச்சு!

யாருக்கா இது? அவங்க பெரியம்மாவா!

ம்அதோட அக்கா! சரியா இதைவிட மூனு வருஷம் மூத்தது! இதென்ன அழகு, அது நல்லா வெத்தலைக் கொடியாட்டம் அம்புட்டு லட்சணமா இருந்துது!

இந்த சேட்டுப்புள்ளைகளே இப்படித்தான்! கல்யாணம் வரைக்கும் கொடி மாதிரி இருப்பாளுக! கல்யாணம்ன்னு ஒன்னு ஆச்சு, வீட்ல உட்கார்ந்து ஸ்வீட்டும் நெய்யுமா தின்னு செனமாடு மாதிரி ஆயிடுவாளுக!

என் ஆளு அப்படி ஆகாதுக்கா!

என்னது, உன் ஆளா?

அக்கா சிரிச்ச சத்தத்துக்கு மிண்ட் ஸ்ட்ரீட்டே திரும்பி பாத்துச்சு!

இருநூத்தம்பது ரூபா காசுக்கு சில்லறையெல்லாம் பொறுக்கி, குடுத்துட்டு வர்றே, உன் ஆளா அது?

இதைக் கேட்டா அது வாயில சிரிக்காது!

அது உன்னையெல்லாம் மனுசனாவே மதிக்காது! அடுத்த வருஷம் குஜராத்ல இருந்தோ ராஜஸ்தான்ல இருந்தோ ஒருத்தனை அவங்கப்பன் குதிரைல கொண்டாந்து இறக்குவான்! அதைக் கட்டிக்கிட்டு ரெண்டே வருஷத்துல செனப் பன்னி மாதிரி ஊதிப்போய் திரியும்!

உனக்கெதுக்கு இந்த வேலை?

நீ சில்லறை பொறுக்கிக் கொடுத்த அழகெல்லாம் நான் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன்!

அந்தக் கருமத்தையெல்லாம் தின்னு வாயால வவுத்தால புடுங்கப்போகுது!

மரியாதையா அதை கொண்டுபோய் கொடுத்துட்டு காசை திரும்ப வாங்கிட்டு கிளம்பு!

இங்க நிக்கற நேரம், அந்தா, அங்க கந்தகோட்டம் வாசல்ல நின்னேன்னா வேளாவேளைக்கு பிரசாதமும் கிடைக்கும், ஒட்டடை குச்சியாட்டம் இருந்தாலும், கொஞ்சம் லட்சணமா இருக்கே, நம்ம ஊர் பொண்ணு ஏதாவது மாட்டினாலும் மாட்டும்! போ!

இந்த காசுல ஒரு மாசத்துக்கு அதுக்கு பீச்ல சுண்டல் வாங்கித் தரலாம்!

எனக்கான போதி மரத்தை எங்கே வச்சிருந்திக்கான் பாருங்க ஆண்டவன்!

அந்தக் கடைல கொண்டுபோய் கொடுக்க வெட்கமா இருக்குன்னு நெளிஞ்சவனை கைப்பிடியா பிடிச்சு அதுக்கு பக்கத்து கடைக்கு இழுத்துட்டுப் போச்சு!

இந்தா சேட்டு, நேத்து இந்தப் புள்ளாண்டான் உன் கடையாண்டதான் இதை வாங்கிட்டுப் போச்சு, க்வாலிட்டி நல்லால்லன்னு வீட்ல திட்றாங்கன்னு கண்ணக் கசக்குது, வாங்கினு துட்டை திருப்பிக்கொடு!

மறு வார்த்தை பேசாம எடை போட்டு வாங்கி வச்சுட்டு காசை கொடுத்தான் கடைக்கார மகராசன்!

நடந்ததை நம்பமுடியாம பார்த்துட்டிருந்த என்னிடம், இந்தா, இந்த ஆப்பிளைக் கொண்டுபோய் உங்கூட வருமே, அந்த ஐயரு பொண்ணுக்கு அக்கா குடுத்துச்சுன்னு குடு!

ரேவதிக்கு!

செருப்படி சர்வ நிச்சயம்! அடுத்த நாலு நாள் டின்னர் ஆப்பிள்தான்!

என்ன, மீசை திரும்ப வளரத்தான் ஒரு மாசம் ஆயிடுச்சு!

ரேவதியோட அந்தப் பக்கம் போனப்போ, அட, நம்ம சேட்டுத் தம்பிக்கு மறுபடியும் மீசை வளர்ந்துடுச்சு!

கொஞ்ச நஞ்ச மானமும் காத்துல பறந்ததைவேற சொல்லணுமா?


இத்தனைக்கு அப்புறமும், பாழாய்ப்போன மனசு கேட்குதா என்ன?

ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு சென்னை போனப்போ, ஆர்வத்தை அடக்கமாட்டாமல் அங்கே போனா, அக்கா, உடனே அடையாளம் கண்டுக்கிட்டு, என்ன தம்பி, உன் லவ்வரைப் பார்க்க வந்தியா?

என்னத்தைச் சொல்ல, ஜீரோ சைஸ் பீரோ சைஸா மாறி கல்லால உட்கார்ந்திருக்க, ஒரு சின்ன சந்தோஷம்!

என்ன தம்பி, கல்யாணம் ஆயிடுச்சா? எங்க இருக்கே இப்போ?

ஆயிடுச்சுக்கா, இப்போ ஹோசூர்ல இருக்கேன்! சென்னைக்கு வேற வேலையா வந்தேன்! அப்படியே அக்காவையும் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்!

சட்டுன்னு கண்ணு கலங்கிடுச்சு அக்காவுக்கு! அட என் ராசா, இன்னும் அக்காவை மறக்காம இருக்கயே!

யாரு, அந்த பாப்பாரப் பொண்ணத்தானே கட்டிக்கிட்டே?

அத்தை மகள் அருக்காணியை கட்டிக்கிட்ட கதையை அக்காவுக்கு சொல்லி என்ன ஆகப்போகுது?

மையமா தலையை ஆட்டிட்டு கிளம்பிட்டேன்!

சரி, அந்த சிவப்பு சட்டை என்ன ஆச்சு?

இன்னைக்குத்தான் அதே துணி, டிசைன்ல ஒரு ட்ரவுசரைப் பார்த்தேன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக