செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

ஏன் பெண்களுக்கு மட்டும் மாதாந்திர அவஸ்தைகள்?

                 பீரியட்ஸ் வந்த கதை!

அதற்கு முன் கொஞ்சம் அகலிகையின் முன்கதை!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய, மோகினி அவதாரமெடுத்து எல்லா தகிடுதத்தமும் செய்து, விஷ்ணு தேவர்களை அமுதம் குடிக்கவைத்தபிறகு, அழகை காமத்துக்கு பயன்படுத்தியதற்கு பிராயச்சித்தமாக, தவத்துக்கு பயன்படும் விதமாக படைக்கப்பட்ட மாசு மருவற்ற பேரழகி அகலிகை என்கிறது ஒரு கதை! தவத்துக்கு எதுக்குடா பேரழகி உதவி அப்படின்னு பிரம்மனை யாருமே கேட்கல!

அவங்களுக்கு ஜொல்லுவிட ஒரு பேரழகி கிடைத்த சந்தோஷமே போதுமானதாக இருந்திருக்கு!

இன்னொரு வெர்ஷன், அமுத கலசத்தை ஏந்திவந்த அழகுக் கலசமே அகலிகைதான் அப்படின்னு!

எப்படி இருந்தாலும், அகல்யா என்றால் சற்றும் அப்பழுக்கற்ற, குறையில்லாப் பேரழகி என்று அர்த்தம்

பேர் வைக்கறதுல நம்ம ஆளுகதான் கில்லாடிகளாச்சே?

போதும், இனி கதைக்கு வருவோம்!

துடைத்துவைத்த தங்கக் குத்துவிளக்குபோல தகதகவென்று வந்து நின்ற அகலிகையைப் பார்த்ததும் தேவர் சபையிருந்த அத்தனை பேருக்கும் காமம் தலைக்கேறி அவளை அடைய நினைக்க, காதல் மன்னன் இந்திரனுக்கும், தவசிரேஷ்டர் கௌதம மாமுனிக்கும் அவள் மீது ஆசை பெருக்கெடுக்க

சாவுக்கும் சாபத்துக்கும் பயந்து, மற்ற அத்தனைபேரும் பொத்தினாற்போல் ஒதுங்கிக் கொண்டார்கள்!

இருவரில் இன்னாருக்கென்று தீர்ப்புச் சொல்லி சிக்கிக்கொள்ள பிரம்மன் மட்டும் கிறுக்கனா என்ன?

முன்னும் பின்னும் தலையுள்ள பசுவை யார் வலம் வருகிறீர்களோ, அவர்களுக்குத்தான் இந்தக் கன்னிகை சொந்தம் என்றொரு இம்பாஸிபில் ஜட்ஜ்மெண்ட்ட சொல்லிட்டு, கேப்ல கிடா வெட்ட முடியுமான்னு பார்த்துட்டிருந்திருக்கு தல!

யோவ், லூசா நீ ன்னு யாரோ பப்ளிக் இண்டரெஸ்ட் லிட்டிகேஷன் பெட்டிஷனோட எகிற, லைட்டா ஜகா வாங்கி, சரி, உலகத்தை யார் முதல்ல சுத்தி வர்றீங்களோ அவங்களுக்குத்தான் இந்த ஞானப்பழம், சீ! கன்னிப்பழம்ன்னு ஒரு அமெண்ட்மெண்ட் க்ளாஸ்!

த்தா, இதோ வர்றேன்னு இந்திரன் புறப்பட, கௌதமரை ப்ளாக்ல டிக்கெட் நான் வாங்கித் தர்றேன்னு நாரதர் ஓரங்கட்டிட்டாரு!

கோசாலைக்கு விறுவிறுன்னு இழுத்துட்டுப் போய், அப்போதான் கன்றை பிரசவிக்கற ஒரு பசுவைக் காட்டினார்! கன்றோட தலை அப்போதான் பசுவோட பின்பக்கம் வெளிய வருது

பசுவை வெச்சு பாலிடிக்ஸ் அப்போவே ஆரம்பிச்சுடுச்சு!

ஆஹா, கண்டேன் முன்னும் பின்னும் தலையுள்ள பசுவைன்னு கௌதமர் குதிக்க, எதுக்கும் இருக்கட்டும்ன்னு அந்தப் பசுவை ஒரு சுற்று சுற்றவிட்டு, இந்திரன் சபைக்கு கூட்டிட்டு வந்து, இருபுறமும் தலையுள்ள பசுவை கௌதமன் கண்ட கதையை நாரதர் சொல்ல, எல்லோருக்குமே கொஞ்சம் ஜெர்க் ஆச்சு

ஆனா, மாடிஃபைட் ஜட்ஜ்மெண்ட் வேறயாச்சேன்னு  யாரோ வெட்டிப் பஞ்சாயத்து கிளப்ப, தேபிகோ 420/126 செக்‌ஷன்படி, கன்றீனும் பசுவை வலம் வந்தால் உலகை சுற்றி வந்ததற்கு சமம் என்று நாரதர் அள்ளிவிட, வேறென்ன, அகலிகையை அடைந்தார் கௌதமர்!

உலகைச் சுற்றிவிட்டு மூச்சு வாங்க வந்த இந்திரன் வடை போச்சேன்னு நிற்க, கௌதமர் கிரஹஸ்தர் ஆனார்!

அதற்கப்புறம் இந்திரன் செய்த தகிடுதத்தம், சாபம் வாங்கி, அகலிகை கல்லானது, ராமன் கால் பட்டு மறுபடி பெண்ணானது - இதெல்லாம் ஜிவிஎம் படம் மாதிரி வாய்ஸ் ஓவர்ல தாண்டி

இப்போ க்ளைமேக்ஸ்!

இதுவரை நடந்த கதையில் ஏதும் கேள்விகள் இல்லைதானே?

எப்படி இருக்கும்

கதை கேட்டே வளர்ந்தவங்களாச்சே நாம்! நமக்கெங்கே கேள்விகள் வரப்போகிறது?

சரி, கதைதான் முடிஞ்சுபோச்சே, அப்புறம் என்ன, அதானே?

இருக்கு

அகலிகை அதுக்கப்புறம் பண்ணிய சம்பவம்

இனி, தவிர்க்க முடியாமல், கொஞ்சம் தூய தமிழ்!

இதோ, தேவர்கள் சபை முழுமையாக கூடியிருக்க, வழக்கோடு வந்தவள் அகலிகை!

அபார அழகி தொடுத்த வழக்கை வேடிக்கை பார்க்க மும்மூர்த்திகளோடு அவர்களின் மனைவியரும்!

சொல் அகலிகை, என்ன உன் வழக்கு?

நல்லவேளை, இந்த ஆண்கள் சபையில் முப்பெரும் தேவியரும் வந்திருப்பது என் அதிர்ஷ்டம்!

முப்பத்து முக்கோடி தேவர்களே, உங்கள் பார்வையில் பெண் என்பவள் யார்?

கேள்வியே புரியாமல் விதிர்த்தது தேவசபை!

அவள் ஒரு பண்டம்! நீங்கள் அடைய விரும்பும் ஒரு பொருள்! அதற்காக உங்கள் பராக்கிரமங்களைக் காட்டி, அவளைக் கவர்ந்து செல்வீர்கள்! அவள் தன் பத்தினித்தன்மையை உங்களுக்கு சேவகம் செய்து நிரூபித்து சொர்க்கம் புகவேண்டும். அதுதானே?

பெண்களை தாயென மதித்துப் போற்றும் சமூகம் நமது அகலிகை! உனக்குக் கொஞ்சம் அவையடக்கம் தேவை!

எனக்கு உடலின் பாதியை வழங்கியவர் சிவன்! லட்சுமியை தன் மார்பில் உறைய வைத்தவர் திருமால்! இப்படி பெண்கள் கொண்டாடப்படுவது உனக்குத் தெரியாதா? - இது பார்வதி!

நல்லது தேவி! தாங்கள் வேறு மாதிரி திருவாய் மலர்ந்திருந்தால்தான் ஆச்சர்யம்!

ஆணும் பெண்ணும் சமம் எனில், அவர்கள் என்ன வழங்குவது, நீங்கள் என்ன ஏற்பது? அது உடன்பாடா, யாசகமா தாயே?

முதல் கலகக் குரல் கேட்டு ஸ்தம்பித்தது சபை!

ஐந்தறிவு மிருகங்களே இணை தேடி, பிடித்தபின்பே சம்மதித்துப் புணரும்!

இங்கே ஒரு கடைச்சரக்காக பெண்ணை நிறுத்தி, போட்டியில் வெல்பவனுக்கு அவளை பரிசாகக் கொடுக்கிறீர்கள்! எனில், பெண்கள் உங்களுக்கு யார்?

ஒரு காலத்தில் பெண்களின் விருப்பத்தேர்வாய் இருந்தது சுயம்வரம்

அவள் மாலையிடுபவனே அவளுக்கு மணாளன்!

இது எப்போது மாறியது? யாரால் மாற்றப்பட்டது?

இப்போது உனக்கென்ன குறை அகலிகை?

ரிஷி பத்தினி என்ற கௌரவத்தோடு வலம் வரும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்?

சாபவிமோசனம் பெற்று அக்னிநட்சத்திரமாய் ஜொலிக்கும் உன் வாயிலிருந்தா இந்த வார்த்தைகள்?

அருமை ஶ்ரீதேவித் தாயே!

எனக்கான இணை இந்த கௌதமனா, இந்திரனா, அன்றி அதோ, அந்த வாயிற்காப்போனா, அதை தேர்ந்தெடுக்கவேண்டியது நான் தாயே!

என் துணையை தேர்ந்தெடுக்கும், என் வாழ்வை நிர்ணயிக்கும் உரிமை எனக்கன்றி வேறு யாருக்கு?

படைத்தவனுக்கே உள்ளது அந்த உரிமை!

அறிவழிந்து போனீர்களா சரஸ்வதி தேவி? சிந்திக்கும் திறனற்றுப் போனதா கல்விக் கடவுள்?

விலங்குக்கும் உள்ள உரிமைகள்கூட அற்றுப்போனவளா பெண்?

இடையில் ஒருத்தி, தலையில் ஒருத்தி, இடப்புறம் ஒருத்தி, வலப்புறம் ஒருத்தி, இதுதானா சமநீதி?

ஏன், அதுபோல உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்று கேட்க வந்தாயா அகலிகை?

அந்த அசிங்கத்தையும்தான் அடுத்த யுகத்தில் அரங்கேற்றினீர்களே! ஒரு பெண்ணின் விருப்பம் கேளாமல், ஐவருக்கிடையே கூறு போட்டீர்களே, அப்போதும் பெண் விருப்பம் எதுவென கேட்கப்படவில்லைதானே?

இப்போது உன் பிராது என்ன பெண்ணே, அதை மட்டும் சொல்! அவைக்கு வேறு வேலை இருக்கிறது!

எது? ரம்பையை ஆடவிட்டு ரசிப்பதா?

வரம்பு மீறிப் பேசுகிறாய் நீ!

வரம்பென்பதை யார் வகுப்பது?

கௌதமனைப் புணர்ந்தபோதெல்லாம் கல்லாய் உறைந்தவளை கல்லாக மாற சபிக்கப்பட்டதே பேரவலம்தானே?

வந்தவன் தேவேந்திரன் என்று உணர்ந்தே ரசித்துக் கலந்தேன்! அது ஆணாதிக்கத்தின் மீதான என் நேரடித் தாக்குதல் என்றால் எனைக் கற்புநெறி பிறழ்ந்தவள் எனுமோ இச்சபை?

அதிலென்ன சந்தேகம்?

என் விருப்பம் கேளாமல் என்னை ஆண்டவன் என் பதி!

என்னை திருட்டுத்தனமாகவேனும் புணர்ந்து தன் கேடு கெட்ட ஆண்மை அரிப்பை தீர்த்துக்கொண்டவன் தேவேந்திரன்!

அதற்கு எனக்கொரு சாபம்!

ஊர்மிளை விருப்பம் அறியாது லக்குவனை காடழைத்துச் சென்றவன், ரூமாவின் விருப்பம் ஏதெனக் கேளாமல் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவளைத் தந்தவன், எவனோ சொன்னான் என்று, தன் மானம் யாவும் தன் மனைவி கற்பில் இருப்பதாய் எண்ணி, அதை நிரூபிக்க அவளை தீக்குளிக்கச் சொன்னவன், ஆயிரம் மனைவியரில் ஒருத்திக்குப் பிறந்து, தன்னை விரும்புவதாய் நேரிடையாகச் சொன்னவளை மானபங்கப் படுத்தியவன்

அவன் கால்பட்டா எனக்கு சாபவிமோசனம்?

அன்றைக்குத்தான் மனமாற நான் மீண்டும் மனதளவில் முழுமையாகக் கல்லானேன்!

அகலிகை, தேவர் சபையை அவமதிப்பது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? அதற்கு என்ன தண்டனை என்பதை நீ அறிவாயா?

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போனாலும், பெண் எதை அணிவது, எதை அறிவது, எதை உண்பது எல்லாவற்றையும் ஆண்களே தீர்மானிக்கும் உலகில் வாழ சபிக்கப்பட்டதைவிட வேறேது கடும் தண்டனையும் சாபமும், பிரம்மதேவா?

வரம்பு மீறுகிறாய் அகலிகை, உடனடியாக மன்னிப்புக் கேட்காவிடில், மீண்டும் நீ சபிக்கப்படுவாய்!

சாபம்! நீர் யார் என்னை சபிக்க?

இதோ, என் சாபம் உங்கள் அத்தனை பேருக்கும்!

த்ரேதா யுகம் தொடங்கி, கலியுகம் வரைக்கும், பெண்ணாலேயே, பெண்ணுக்காகவே போரிட்டு மடியட்டும் ஆணினம்!

மதமும், மதம் சார்ந்த விஷயங்களுமே மனிதகுலத்தின் பேரழிவுக்குக் காரணமாகட்டும்!

உடல் அழகு மட்டுமே நம் சொத்து, அதனால் நாம் எத்தனை உரிமைகளை இழந்தாலும், சிறுமைப்பட்டாலும் பரவாயில்லை என்று வாழும் ஈசன் மனையாள் முதல் அனைத்துப் பெண்களுக்கும், மாதத்தில் சில நாட்களாவது தன் உடல் குறித்து முகம் சுளித்து அருவெறுத்து வெறுக்கும் நிலை வரட்டும், இது என்ன, இது எனக்கு வேண்டாமே என்று ஒவ்வொரு பெண்ணும் தன் உடல் கண்டு குறுகிப்போகட்டும்!

அந்த சில நாட்களில் ஆண்களும் உங்களைக் கண்டு அசிங்கப்பட்டு ஒதுங்கட்டும்!

நான் நேர்மையானவளானால், என் உணர்வுகள் உண்மையானால், இயற்கையே, பஞ்ச பூதங்களே, என் சாபம் பலிக்கட்டும்!

ஈசன் மனைவி முதல் எல்லா தேவ, மனித குலப் பெண்களுக்கும், ஆணோடு உறவுக்குத் தயாரான காலம் முதல், இனவிருத்திக்கு தகுதியுள்ள காலம் முடியும் வரை,

ரத்த அணுக்கள் போல, உடலுக்குள்ளேயே இன்றுவரை சுத்திகரித்துக்கொள்ளும் உபயோகப்படுத்தப்படாத கருமுட்டைகள்,

ரத்தமும் நிணமுமாய் சிதைந்து மாதம்தோறும் ஜனனப் பாதையிலேயே வெளியேறட்டும்!

அந்த வலியும் வேதனையும் அழுக்குப்பட்ட உணர்வும் இந்த அடிமைச் சிறுமதிக்கு தண்டனையாய் அமையட்டும்!”

எங்கோ ஒரு இடி இடித்தது

கண் கூசும் வண்ணம் ஒரு மின்னல் வெட்டியது!

ஐயோ, இது எனக்கு வேண்டாமே என்று முகம் சுளித்துப் பதற, தேவ சபை திகைத்து நிற்க, ஈசன் மனைவி காலிடை வெளிப்போந்தது ராஜஜ்வல்லையின் முதல் ரத்தம்!

புன்னகை மறையாது காற்றோடு கலந்தாள் அகலிகை!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக