ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

நல்ல நட்புக்கான Ten Commandments 😊

எதிர் பாலினரிடை நட்பு!

இன்னுமே இது பேசுபொருளாக இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சர்யம்!

ஒரு வாரமாக அடிக்கடி செக்ஸ்டிங், பாலியல் அத்துமீறல்கள் பற்றிய ஸ்பேஸ்களைப் பார்க்க நேர்ந்தது!

கூடவே, ஒரு pinned tweet கண்ணில் பட்டது!

“Sex பத்தி பேசாம ஆண்-பெண் பேசிக்கவே முடியாதா..? (Long term la)

அதற்கு வாய்ப்பே இல்லையா என்ன?”

என் முதல் பதில், “ஏன் முடியாது?”

இரண்டாவது, “ஏன், பேசினால் என்ன தப்பு?”

இரண்டுக்கும் காரணம் கீழே!

படிப்பிலும், தொழில் நுட்பத்திலும் சிகரம் தொட்டுவிட்ட இளைய தலைமுறைக்கு இந்த உறவுச் சிக்கல் மட்டும் ஏன் பலாப்பிசினாக ஒட்டிக்கொண்டு தொடர்கிறது?

விளம்பரத் துறையில் நான் பார்த்தவரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டாக மாறாத ஒரு விஷயம்,

இந்த சோப் போட்டுக் குளித்தால் ஆண்கள் உங்கள் மேல் வெறி கொண்டு பாய்வார்கள், இந்த ஷேவிங் க்ரீம் போட்டால்  பெண்கள் ஓடிவந்து கட்டிக்கொள்வார்கள், வெள்ளையாக இருந்தால் வேலை கிடைக்கும் என்று, எதிர்பாலினத்தை ஈர்ப்பதுதான் இந்தப் பிறவியில் செய்யப்போகும் மகத்தான சாதனை என்ற அற்புதமான போதனையை உங்கள் மண்டைக்குள் திணிப்பதுதான்!

என்ன, ஷேவிங் க்ரீமுக்கு நடந்தது இப்போது குறிப்பிட்ட ஜட்டி அணிந்தால் பெண்கள் மேலே பாய்வதும், ஒரு லுங்கி கட்டினால் பாத் டப்புக்குள் இழுத்துக் கட்டிக்கொள்வதும் என முன்னேறியிருக்கிறது!

இந்தக் கொடூர அபத்தத்தை கேள்வி கேட்டால், ஃபேர் அண்ட் லவ்லி க்ளோ அண்ட் லவ்லி ஆனதே பெரும் புரட்சியாகிப் புல்லரிக்கவைக்கிறது சமூகம்!

இந்த அபத்தக் கொடூரங்கள் போக, நம் சீரியல், சினிமா அபத்தங்கள் வேறு! எந்த டூயட் பாடலை ஒலியில்லாமல் பார்த்தாலும், இதையெல்லாம் எப்படி துணி போட்டுக்கொண்டு, என்று சந்தேகம் வருமளவு எக்ஸ் ரேட்டட்!

இப்படி ஒரு சமூகச் சூழலில் வளரும்வரைக்கும், எதிர்பாலின தொடர்பு என்பதே எட்டாக் கொம்புத்தேன்!

இந்த இழவையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது!

ஆனால், நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும்!

ஆண், பெண் நட்பென்பது இன்னுமே ஒரு சிக்கலான விஷயமாகவே ஏன் தொடர்கிறது?

எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து, மூக்கோட்டை மாதிரி ஒரு நகரத்தில் வளர்ந்த ரவிக்கு கால் நூற்றாண்டாக இயல்பாக, எளிமையான விஷயமாக இருப்பது ஏன் அவனுக்கு அடுத்த தலைமுறைக்கு இத்தனை சிக்கலாக?

போதனைதான் இருப்பதிலேயே ஈஸி என்பதால், என்னாலான ஒரு உபதேச ரத்தின மாலை!

நான் சொல்ல வருவது பொதுவாக நட்புக்கு என்றாலும், ஆண், பெண் நட்புக்கு, கொஞ்சம் அதிகமாக!

  1. தோற்றத்தை அடிப்படையாக வைத்து நட்பு!

உருவக் கேலியைவிட அபத்தம், உருவம் சார்ந்த ஈர்ப்பு! வெறும் அழகை வைத்துக்கொண்டு, நட்பில் என்ன செய்ய?

அது ஐஸ்வர்யா ராயாகட்டும் அல்லது துல்கர் சல்மான் ஆகட்டும்!

நீ ரொம்ப அழகா இருக்கே

சரி!

நீ ரொம்ப அழகா இருக்கே,

சரி!

அப்புறம்? வெறும் அழகு திகட்டிப் போகும்! அழகு, முதன்மை ஈர்ப்புக்கு ஓரளவு உதவலாம். நட்பு தொடர, அது ஒரு சின்னக் காரணிகூட ஆகமுடியாது!

அப்படி, அழகே பிரதானம் என்று தொடரும் நட்பு, எங்காவது படுக்கையிலோ, செருப்படியிலோதான் முடியும்.

    2.  நட்பில் அந்தரங்கம்!

இது மிக மிக முக்கியம்! உங்கள் நட்பு கடைச் சரக்கல்ல, ஷோ கேஸில் மாட்டி வைக்க! அது உள்ளாடையைப்போல அந்தரங்கமானது! அதன் வண்ணத்தை அனைவருக்கும் காட்டித் திரிய அவசியமில்லை, அது அசிங்கமும்கூட!

மாப்ள, நான் ஜாக்கி ஜட்டி போட்டிருக்கிறேன் என்று பெருமையடித்துக்கொள்வதல்ல எதிர்பாலின நட்பு. உங்களுக்கிடையேயான உரையாடல்களை, பொதுவான நண்பர்களிடம்கூட அனுமதியின்றிப் பகிர்வது பெரும்பிழை! உங்களுக்கு சாதாரணமாகத் தெரியும் ஒன்று அவருக்கு உங்களிடம் மட்டுமே பகிர்ந்துகொண்ட ரகசியமாக இருக்கக்கூடும்! பெண்கள் இந்த விஷயத்தில் மிக சென்ஸிட்டிவ் ஆனவர்கள்.

   3.   நட்பில் நேர்மை!

இது எல்லாவகை உறவிலும் அடிப்படை தகுதி! இங்கு இது இன்னும் கொஞ்சம் தீவிரமாக!

கவரிங் நகை எப்படிப் பொத்திவைத்தாலும், ஒருநாள் பல்லிளித்துவிடும்! அதைவிட வேகமாக பூச்சுக்கள் போர்த்த நட்பு! லட்சக்கணக்கில் கொடுத்து ப்ரைடல் மேக்கப் போட்டாலும், வாழப்போவதென்னவோ, சாயங்கள் களைந்த முகத்தோடுதான்! பேச நினைப்பதை நேரிடையாகப் பேசுங்கள்! உண்மையான நட்புக்குப் பூச்சுக்கள் தேவையில்லை! தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் போலியாக, பாசாங்காக பழகுவது, நட்பை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் தள்ளியே நிறுத்திவிடும்!

You look awkward in this outfit/ look gorgeous, இந்த விஷயத்தில் நீ செய்தது தவறு/ சரி. இதுபோல் எதுவும், மனதில் பட்டதை தயங்காமல் முகத்துக்கு நேராக சொல்லிப் பழகுங்கள்! முகத்துக்கு நேராக, முதுகுக்குப் பின்னால், இரண்டுமே ஒன்றாக இருப்பது நலம்!

If something disturbs you, அதையும் மட்டைக்கு இரண்டு கீற்றாய் பேசிப்பாருங்கள்! முதலில் முகம் இறுகக்கூடும்! ஆனால், நாளடைவில் நட்பு இறுகும்!

ஒருநாள் கொஞ்சம் தளர் உடை அணிந்து வந்திருந்த தோழியிடம், don’t stand leaning on my table, your hip is my major distraction என்று ரவி சொன்னதை நான் காதாறக் கேட்டிருக்கிறேன்! அந்தப் பெண் அசந்தர்ப்பமாக இறக்கும்வரை அவனுக்கு உற்ற தோழியாக இருந்ததும் எனக்குத் தெரியும்

   4.   அடுத்த கட்ட நகர்வு!

இங்குதான் பெரும்பாலும் தடுமாற்றங்கள் ஆரம்பிக்கும்! நட்பு, கண்டிப்பாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டியதில்லை! எல்லாத் தோழனும், தோழியும் வாழ்க்கைத் துணையாக முடியாது

உங்களுக்குத் தோன்றிய அதே அவருக்கும் தோன்றவேண்டியதில்லை! நட்புக்கிடையே தூதுகள் தேவையில்லை! கேட்குமுன் நன்கு யோசித்துக்கொள்ளுங்கள்! கேளுங்கள், வலியுறுத்தாதீர்கள்! மறுத்தாலும் நட்பைத் தொடருமளவு உங்கள் வார்த்தைகளில், நடத்தையில் கண்ணியம் இருக்கட்டும்! ஆனால் என்வரையில்

நட்பின் அடுத்த கட்டம் காதலல்ல! அப்படிக் கேட்கத் தோன்றும் நட்பைவிட, கேட்கவே தோன்றாத நட்பு ஆழமானது, அழகானது! அங்கே ஆரம்பம் முதலே புரிதல் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.

   5.   எல்லைகள் இல்லா நட்பு!

இங்கேதான் வருகிறது அந்த pinned tweetக்கான பதில்!

ரமேஷிடம் பேசமுடிந்த எந்த விஷயத்தையும் ராதிகாவிடமும் பேச முடிவதே நட்பு!

இது என் தோழன்/ தோழி என்ற நினைவைவிட, ஆண்/பெண் என்பது நினைவில் துருத்திக்கொண்டே நிற்கும் நட்பில் அந்த எல்லைகளுக்குள் மட்டுமே பேச முடியும், அப்படிப் பேசுவதே நலம்!

செக்ஸ் என்பது கண்டிப்பாக வளர் இளம் பருவத்தில் ஒரு குறுகுறுப்பு! அதைப்பற்றி தன் சம வயது நட்பிடம் பகிர்ந்துகொள்வதில் பிழையில்லை! பால்யம் கடந்தோருக்கு, அது ஒரு பழகிப்போன பழைய விஷயம்! அதில் பகிர்ந்துகொள்ளவோ பரவசப்படவோ ஏதுமில்லை! ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தபிறகும் அதை ஆர்வம் குன்றாது பேசுவது கண்டிப்பாக ஓரளவுக்கேனும் பர்வர்ஷன்தான்! அதிலும் வயது குறைவான எதிர்பாலினத்தோடு அப்படி யாராவது பேசும்பட்சத்தில் சொல்லாமல் விலகிவிடுவது உத்தமம்! அங்கு கள்ளம் கண்டிப்பாக இருக்கும்! அது நட்புக்கு உதவாது, உவக்காது! சம வயதினரிடை பேசுவதிலும், சில வரையறைகள் இருக்கின்றன

I had a great fucking sex yesterday என்பதைப் போன்ற சென்ஸிட்டிவ் விஷயங்களை சம வயது தோழனிடம், தோழியிடம் இயல்பாகப் பகிர்ந்துகொள்ள முடியும்! அதிலும் ஆரம்பம் முதலே எந்த பாகுபாடும் பார்க்காமல் தோழமையோடு மட்டுமே பேசுவோரிடம்! ஆனால் எல்லைகள் வகுத்துக்கொண்ட நட்புக்கு சிலபஸ் ஒன்று கட்டாயம் இருக்கிறது! அதை மீறும்போது, நட்பு தோற்றுப்போய், ஒதுக்கம் தவிர்க்கமுடியாது போகும்.

   6.   நட்பின் எல்லைகள்!

நட்பு என்று நேரிடையாக இல்லாமல், தற்காப்புக்காகவோ, சமூகம் குறித்த அச்சத்தாலோ, அண்ணன், தங்கை என்றோ அக்கா தம்பி என்றோ, உறவுமுறை வைத்தே பேசிப் பழகும் தோழமை ஒன்று உண்டு! இங்கு கட்டாயம் எல்லைகள் உண்டு! You should mean what you say என்பது அடிப்படை நாகரீகம்! உடன் பிறந்தாரோடு எதைப் பேசமுடியுமோ, அதை மட்டுமே இந்தவகை நட்போடு பேசமுடியும்! இவர்களிடம் கண்டிப்பாக செக்ஸ் பற்றி பேசுவது கீழ்த்தரம்! அக்கா, தம்பி, அண்ணன், தங்கை, அப்பா இதிலெல்லாம் மாதிரி என்ற suffix கிடையாது! பிறவியிலிருந்தே உறவானாலும், இடையில் வந்தாலும் உறவு ஒன்றுதான்! அப்படி உங்களால் எண்ணமுடியாவிடில் அந்த உறவுமுறை சொல்லி அழைப்பதை முதலில் நிறுத்துவது நேர்மை! இந்தவகை நட்பில் எல்லைகள் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டவை.

   7.   ஈகோ என்னும் நட்புக் கொல்லி!

எல்லோரும், எல்லாத் தருணத்திலும் சரியாக இருக்க முடியாது! தவறுகளை ஒப்புக்கொள்ளப் பழகுங்கள்! நான்தான் சரி என்று அடம் பிடிக்காதீர்கள்! உங்கள் செயலோ, சொல்லோ, harmless என்று உங்களுக்குப் படலாம்! ஆனால் அதை எதிர்கொள்பவரை எங்கு தைத்தது என்பது உங்களுக்குத் தெரியாது! If someone says that they are hurt with that particular action, don’t ever try to justify that by proving your intentions. உங்கள் நோக்கம் முக்கியமே அல்ல! உங்கள் செயல் அவர்களை ஏதோ ஒருவகையில் பாதித்தது என அவர்கள் உணர்ந்தாலே, தயக்கமின்றி மன்னிப்புக் கேளுங்கள்! அதுவும் நட்பில் அவசியமான உரிமைதான்! அதுமட்டுமல்ல, தவறியும் அதை திரும்ப செய்யாதீர்கள், அதன்பிறகு எவ்வளவு பழகி, எவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டாலும்! அது நட்புக்கான சின்ன மரியாதை! A no is no forever.

   8.   எந்த நிலையிலும் விலகத் தயாராக இருங்கள்

சிலரோடு நட்பைத் தொடருவதில் சில சிக்கல்கள் இருக்கக்கூடும். Just because you wanted to be a friend, don’t hang on with anyone. இருவருக்கும் பரஸ்பரம் தோன்றாத எந்த உறவும் நிரந்தரமல்ல! ஒருவர் செய்வதும் சொல்வதும் இன்னொருவருக்குப் பிடிக்கவில்லை, அல்லது காயப்படுத்துகிறது, சில முயற்சிகளுக்கும் விளக்கங்களுக்கும் பிறகும் அது நீடிக்கிறது எனில், அந்த நட்பு உங்களுக்கானதில்லை! உடைந்த கண்ணாடியை சேமித்துவைத்துப் பலனில்லை! ஒரு காஃபி, கை குலுக்கலோடு, உறுத்தாமல் விலகிக்கொள்வது கிட்னிக்கு நல்லது! அதைவிடுத்து, ஒட்டாத உறவை தக்க வைக்க குட்டிக்கரணம் அடிப்பது அறிவீனம்! கட்டாயத்தாலோ, பரிதாபத்தாலோ தொடரும் நட்பு அர்த்தமற்றது! சகித்துக்கொண்டு வாழும் வலி நட்பிலாவது வேண்டாமே!.

   9.  முறிவிற்குப் பின்னான நடத்தை!

இங்குதான் பலரும் அசிங்கப்படுவதும், நிலை தவறுவதும்! நல்லவை அல்லவை எல்லோரிடத்தும் உண்டு! பழகும்வரை நல்லவர், விலகலுக்குப்பின் பூதக்கண்ணாடி வைத்துத் தேடி அவர் கெட்டவர்- இதுதான் பெரும்பாலும் பொதுவான நடைமுறை!

பிறிந்து போனவரை பிறரிடம் தூற்றாதீர்கள்! அது மற்றோரையும் உங்களிடமிருந்து மனதளவில் விலக்கி வைக்கும்! உங்கள் பிரிவுக்கான காரணத்தை போஸ்டர் அடித்து ஒட்டத் தேவையில்லை! அது உங்கள் இருவருக்குமான அந்தரங்கம்! அவர் உங்களைப்பற்றி தவறாகவே கூறித் திரிந்தாலும், உண்மையாய் உங்களைப் புரிந்தோரிடம் தன்னிலை விளக்கங்கள் தேவையில்லை! அது வதந்திகளுக்கும், வம்புக்கும் ரக்கை கட்டும் வேலை!

எனில், பிரிந்தவர் பற்றி பேசவே கூடாதா? இல்லை, பேச விஷயங்களும் இருக்கிறது! அவர் சொல்லோ செயலோ நடவடிக்கைகளோ அவரை தவறான பாதைக்கோ, சிரமத்துக்கோ இட்டுச் செல்லப்போகிறது என நீங்கள் உணர்ந்தால், குற்றம் சாட்டும் தொனியில் இல்லாமல், இருவருக்கும் பொதுவானவரிடம் மென்மையாக உண்மையைச் சொல்லி அவருக்கு உதவவோ அறிவுரை சொல்லவோ வேண்டுங்கள்! விலகிப்போனாலும் அவர் உங்கள் விரோதி அல்ல என்பதை உணருங்கள்! மறைமுகமாக அவருக்கு ஏதும் நன்மை செய்ய மறக்காதீர்கள்! ஒருநாள் பழகினாலும் உண்மை நட்புக்கும் அன்புக்கும் expiry date இல்லை!

   10.   ஊடலுக்குப் பிறகான கூடல்!

ஊடுதல் காமத்துக் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்

இது வள்ளுவன் சொன்ன அழகான விஷயம்! இது காதலுக்கும் காமத்துக்கும் மட்டுமல்ல! நட்புக்கும் பொருந்தும்! ஒரு தவறான புரிதலுக்குப் பிறகு ஈகோவோ தயக்கமோ இல்லாமல் பரஸ்பரம் விளக்கங்கள் கூறி, அடித்துப் புரண்டோ, அழுது அணைத்தோ மீண்டும் சேரும் நட்பில், நான் பார்த்தவரை ஒட்டுதல் மிக அதிகம்! பிரிந்தவர் மீதான உங்கள் நேசமும், தேடலும் குன்றாதிருப்பின், நல்ல சந்தர்ப்பத்தில், உறுத்தாது உங்கள் தரப்பைச் சொல்லுங்கள்! பிரிவுக்கான காரணங்கள் உறவுக்கான தேடலின்முன் அற்பம் எனில், இருபுறமும் நட்பு நெருப்பு கனன்றுகொண்டிருந்தால் செம்புலப்பெயல் நீர்போல் அன்புடை நெஞ்சம் கலத்தலும் அதிகபட்ச சாத்தியமே!

இதுவரைக்கும் பொழுது போகாமல் சுற்றிச்சுற்றிச் சொன்னதின் ஒற்றை வரி synapses:

Be real, be honest and be you always.

அவ்வளவே 😊👍


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக