ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

Will you be my valentine?

            Will you be my valentine?

ரவி, நீ ஒரு ஹிப்போக்ரட்டிக் இடியட்!”

பெட்டர் தேன் பீயிங் ஸ்பைன்லெஸ் க்ரியேச்சர் லைக் யூ ஆனந்த்!”

சென்னை கிளைக்கு மாறுதலாகி வந்த இந்த ஆறு மாதத்தில் இவர்களின் இந்த கீரியும் பாம்புமான உரையாடல் பழகிப் போயிருந்தது லாவண்யாவுக்கு!

ஆறாவது தளத்தில், ஒரு ஓரமான சன்னலோர இருக்கையில் ஆஃபீஸ் கேண்டீனில், ஆவி பறக்க ப்ளாக் காஃபியை ருசித்துக்கொண்டே, இன்னும் வெட்டப்படாத பெசண்ட் நகர் மரங்களையும், சத்தமில்லாமல் ஆர்ப்பரிக்கும் தூரத்து அலைகளையும் பார்த்துக்கொண்டு சிறு புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்!

இன்றைய விவாதம் ஜிஹாப் பற்றி!

ரவிக்கு எப்போதுமே புரட்சி மோட் தான். ஆனந்த் கொஞ்சம் மிதவாதி!

இதை விடக்கூடாது, காவி தீவிரவாதம் நாட்டின் இறையாண்மைக்குக் கேடு, பிறர் மத உரிமைகளில் தலையிட இவர்கள் யார் நாட்டாமை? - இது ரவி.

ஒருத்தருக்கு ஒருத்தர் குண்டு வீசியோ வெட்டிக்கிட்டோ சாகட்டும், அது கவலையில்லை, ஆனால் பெண் கல்வியை ஆயுதமாக எடுத்தது மடத்தனம்!

ஒரு பெண்ணுக்கு கல்வி மறுக்கப்படும்போது, அடுத்து வரும் தலைமுறையே பாதிக்கும், இதை இரண்டு தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் - இது ஆனந்த்!

ஜிஹாப் பெண் அடிமைத்தனம்!

வைணவப் பெண்கள் தோள்பட்டையில் சூடு வைத்துக்கொள்ள வற்புறுத்தப்படுவது மட்டும் என்ன?

இப்படி பொறி பறக்கும் விவாதத்தில் ரவி குரல் எப்போதும் ஓங்கியே ஒலிக்கும்!

ஆனந்த் பேசுவதே மித வாதம்தான்! அதனால் குரல் அதிராது!

எப்போது அடித்துக்கொள்வார்களோ என்று இருக்கும் பார்ப்பவர்களுக்கு!

லாவண்யா கேட்டபோது ரவி பதில், “இதென்ன இணைய நட்பா, கருத்து மாறுபட்டால் மண்ணை வாரித் தூற்றி ஒதுங்கிப்போக? உண்மையான நட்பில் மாற்றுக் கருத்துக்கே முதல் மரியாதை! ஒத்த கருத்தே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் குட்டைத் தண்ணீரைப்போல தேங்கி பாசி படிந்துபோகும்

இருவரும் நல்ல நண்பர்கள்! ஆனால் விவாதங்களில் மட்டும் எலியும் பூனையும்! “நாளைக்கே வேற ப்ரான்ச்சுக்குவட்ரான்ஸ்ஃபர் ஆகிப் போனால், நட்பு டைல்யூட் ஆகலாம், அது வேறு விஷயம்! ஆனால் கண்டிப்பாக இந்தக் கருத்து வேறுபாடுகள் எங்களைப் பிரிக்காது! அடுத்தவர் சுதந்திரம் பற்றிய அடிப்படை அறிவு எங்களுக்கு இருக்கு!”

இவர்களை வேடிக்கை பார்ப்பதே லாவண்யாவின் ஒரே பொழுதுபோக்கு!

வந்த கொஞ்ச நாளிலேயே அவர்களோடு இயல்பாய் இணைந்துகொண்டு, இப்போது எங்கே போவதென்றாலும் மூன்று பேரும்தான்!

மில்லியன் டாலர்களில் புரளும் ஒரு எம்என்சியின் சென்னை கிளைக்கு மாறுதல் கிடைத்தபோது லாவண்யா கொஞ்சம் பயந்தாள்

கேள்விப்பட்ட வரைக்கும், தமிழ்நாட்டுப் பசங்க கொஞ்சம் ஓவரா க்ரிஞ்சு! வழிசல் அதிகமா இருக்கும், இல்லைன்னா அம்மாஞ்சிகளா இருப்பானுக!

அந்த பயத்தோடவே வந்தவளுக்கு இவங்க ரெண்டுபேரும் பெரிய ஆறுதல்!

லாவண்யா ரொம்பவுமே இண்டிபண்டன்ட்! அவ்வளவா படிப்பறிவு இல்லாத அப்பா, ஆனால், படிப்பு, உடை, வேலை, காதல், கல்யாணம் இதிலெல்லாம் அளவற்ற சுதந்திரம்!

அப்படி ஒரு அப்பா கிடைத்தது வரம்! ஒரே பெண்! அதனால ஏக ஒட்டுதல், கூடவே, உன் வாழ்க்கையை நீ தீர்மானி! எனக்கு ஏதும் உன் சாய்ஸில் மாற்றுக் கருத்து இருந்தால், விவாதிப்போம், ஆனால், இது உன் வாழ்க்கை, இறுதி முடிவெடுக்கும் உரிமை எப்போதும் உன்னுடையதாக இருக்கட்டும்!

அவர் அப்படி இருப்பதாலேயே கொஞ்சம் கூடுதல் பொறுப்பு!

இருபத்தெட்டு வயசாயிடுச்சு! இதுவரைக்கும் எந்த குழப்பமும் இல்லை! ஏனோ இவங்க ரெண்டுபேரும் கொஞ்சம் சபலப்படுத்தறானுகளோ?

தலையை உதறி, அந்த நினைப்பை உதறி எழுந்தவள், நான் கிளம்பறேன்!

அவ நகர்ந்ததும், ஆதிகால வழக்கப்படி பேச்சு அவளைப்பற்றித் திரும்பியது!

எல்லா விஷயத்திலும் கருத்து வேறுபாடு இருந்தாலும், அரேஞ்ச்ட் மேரேஜ் ரப்பிஷ் ன்றதுல ரெண்டுபேரும் ஒத்துப் போனாங்க!

ஆனந்த், வாட் டூ யூ ஃபீல் எபௌட் ஹர்

டு பீ ஹானஸ்ட், திங்க்கிங் ஆஃப் ப்ரொபோசிங் ஹர் திஸ் 14த்!

அடப்பாவி! நானும்!

ட்ரை யுர் லக்!

சரி, யார் முதல்ல சொல்ல?

நீயே சொல்லு ரவி, உனக்கு நோ சொன்னா நான் அதுக்கப்புறம் சொல்லிக்கறேன்!

பேராசை ஆனந்த் உனக்கு, என்னை வேண்டாம்ன்னுட்டு உனக்கு எஸ் சொல்லப்போறாளா?

எனக்கு எஸ் சொல்லிட்டா நீ என்ன பண்ணப்போறே?

அதுக்கப்புறம் ப்ரொபோஸ் பண்றது வேஸ்ட்! வேற ஆள் பார்க்கவேண்டியதுதான்!

உனக்கு ஏமாற்றமா இருக்காதா ஆனந்த்?

எதுக்கு, நான் ப்ரொபோஸ் பண்ணியிருந்தா எனக்குத்தான் ஓகே சொல்லியிருப்பான்ற நம்பிக்கையோட சந்தோஷமா உன் கையை குலுக்கிட்டு ஒதுங்கிப்பேன்! கலயாணத்துல வந்து மூணு வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு ஒரு வால்க்ளாக் ஜிகினா பேப்பரும் ரிப்பனுமா கொடுத்து, ஃபோட்டோவுக்கு இளிச்சுட்டு வந்துடுவேன், தட்ஸ் ஆல்!

அட் டைம்ஸ் யூ மேக் மீ ஃபீல் ஜெலஸ் ஆனந்த்! இந்த மைண்ட் செட் எனக்கு செத்தாலும் வராது!

ஒரே ப்ரான்ச்ல மூணு வருஷமா குப்பை கொட்டும் பேச்சிலர்களுக்குள், பர்சனல் விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள இயல்பாக முடிந்தது!

கை கொள்ளாத சம்பளம், இருந்தாலும் ரெண்டுபேருமே கொஞ்சம் கட்டுப்பாடான பசங்க!

ஆனந்த் அடையார்ல ஒரு வீட்ல பேயிங் கெஸ்ட்!

ரவிக்கு அந்தமாதிரி அம்மாஞ்சித்தனம் பிடிக்காது! பீச்சைப் பார்த்தமாதிரி ஒரு அப்பார்ட்மெண்ட்ல தனிக்குடித்தனம்! அவ்வப்போது சொந்த சமையல், மற்ற நேரம் இருக்கவே இருக்கு, பீச் ஓர அக்கா கடைல இருந்து, ஸ்டார் ஹோட்டல் வரைக்கும்!

ஒரே பேமெண்ட்ல கார் வாங்க வசதி இருந்தும் ரெண்டு பேருமே ஆளுக்கு ஒரு பைக்தான்!

ஓரளவு இந்த ருட்டீன் போரடிச்சுப்போய், கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்கும்போதுதான் லாவண்யா எண்ட்ரி!

மிஸ் லாவண்யா! ஈமெயிலில் பார்த்தபோதுகூட ஒன்னும் தோணல!

ஆனால் ஒரு சுபயோக சுபதினத்தில் வந்து இறங்கியபோது

வ்வ்வ்வாட் வுமன்!

பிரம்மன் ஏகப்பட்ட அப்ரைசல் மீட்டிங்குக்கு அப்புறம் படைச்சிருப்பான் போல

அந்த ரோமானியன் மூக்கும், பஞ்சாபி வளப்பமும்ஐந்தடி எட்டு அங்குலத்தில் ஒரு சின்னப் பிசிறு கூட இல்லாத மெழுகுச்சிலை!

மிஸ் லாவண்யா என்ற அறிமுகப்படலத்திலேயே கரைந்துபோனார்கள் ரெண்டு பேரும்!

சந்தேகத்துக்கு இடமில்லாமல், வகிட்டு குங்குமம், மெட்டி, தாலி, மோதிரம் ஏதும் இல்லாதது ஆறுதல்!

ஆஃபீஸில் இருக்கும் மற்ற பெண்களின் விஜய், அஜித், சிவகார்த்தி காஸிப்களில் ஒட்டாமல் இயல்பாய் இவர்களோடு ஒட்டிக்கொண்டாள்!

கேண்ட்டீனிலோ, பீச்சீலோ ஒயாத அரட்டை!

பெரும்பாலும் அவங்க ரெண்டுபேரும்தான் பேசுவார்கள், லாவண்யா புன்னகையோடு கேட்டுக்கொண்டிருப்பாள்!

ஒருநாள் தாலி பற்றி பொறி பறந்தது விவாதம்!

எதற்கு பெண்ணுக்கு மட்டும் கல்யாணம் ஆனவள் என்று ஒரு அடையாளம்? பெண்ணை அடிமைப்படுத்த ஆண்களுக்கு அது ஒரு கருவி- இது வழக்கம்போல ரவி!

இல்லை, அது ஒருவகையில் சோஷியல் செக்யூரிட்டி! இப்போ லாவண்யா மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்தால், நடு ரோட்டில் மண்டி போட்டு ப்ரொபோஸ் பண்ணத் தோணாதா? இதே தாலி இருந்தா, அந்த அதிர்ஷ்டசாலி நல்லா இருக்கட்டும், நாம வேற ஆளைப் பார்க்கலாம்ன்னு நகர்ந்துடுவோம்தானே? - இது ஆனந்த்!

சத்தமாக சிரித்த லாவண்யாவை முறைத்தான் ரவி!

இது காலகாலமாக ஆண்களின் டெக்னிக்! ஒரு பெண்ணை, அவளோட புற அழகை வைத்து எடை போடுவது! நீங்களும் வெட்கமே இல்லாம வழிஞ்சுட்டு இருக்கறத அவனுக யூஸ் பண்ணிக்கறாங்க!

வேற என்ன பண்ணனும் ரவி?

எவனாவது அழகா இருக்கேன்னு சொன்னா செருப்பைக் கழட்டி அடிக்கணும்! பெண் என்ன, இவனுகளுக்கு எப்போதுமே உடம்புதானா?

ஈஸி ரவி, ரொம்ப உணர்ச்சிவசப்படாதே! இதெல்லாம் பேஸிக் இண்ஸ்டிங்க்ட்

ஆண் பெண் இடையே கவர்ச்சி இல்லைன்னா எந்த ஜீவராசியும் இல்லாமல் அழிஞ்சே போகும்!

உன்னைமாதிரி ஆளுங்களைத்தான் முதல்ல இழுத்துவெச்சு அறுக்கணும்.

சரி சாமி, இனி எல்லோரையும் புர்க்கா போட்டுக்கச் சொல்லிடலாம்!

அதானே, நாங்க சமமா நடத்தமாட்டோம், நீங்க பொத்திட்டு இருங்க! அதானே!

யப்பா டேய் ஏன் இத்தனை உருட்டு? லாவண்யா நீங்க சொல்லுங்க, நீங்க என்னைமாதிரி அழகான பசங்களை சைட் அடிக்கமாட்டீங்களா?

தாராளமா! ஆனா அழகான பசங்களை, உன்ன மாதிரி பசங்களை இல்லை!

ஒரு பேச்சுக்குக் கூட

அவங்க பார்க்கறதும், நீ பேசறதும் ஒன்னா ஆனந்த்?

நான் என்னடா பண்ணித் தொலைச்சேன்?

அன்னைக்கு கவிதாவைப் பார்த்து என்ன சொன்னே?

என்னடாப்பா சொன்னேன்?

அத்தனைபேர் முன்னாடி சொல்றே, கவி, உங்க ப்ரெஸ்ட் எனக்கு பெரிய டிஸட்ராக்‌ஷன், கொஞ்சம் முந்தானையை ஒழுங்கா போடுங்கன்னு! அந்த லூசும் ஈன்னு இழிக்குது!

டேய், அன்னைக்கு அவ அநியாய லோகட்! அதுதான்!

ஏன்டா ஒரு பொண்ணை மாரைப் பார்த்தேதான் பேசணுமா?

யப்பா டேய், அது என்கிட்ட இல்லை, அதனால பார்த்தேன்! ஆளை விடுடா சாமி!

பெண்ணுரிமை, பெண் விடுதலை எல்லாம் மூச்சைப் பிடிச்சுட்டு மணிக்கணக்கில் பேசுவான் ரவி!

ஆனந்த், அவனுக்கு நேர் விரோதம்! ரோட்ல கேசுவலா பார்க்கற முன்னப்பின்ன தெரியாத பெண்ணைக்கூட, யூ லுக் ப்யூட்டிஃபுல்ன்னு தயக்கமே இல்லாமல் சொல்லுவான்!

ஃப்ளிர்ட்டிங் அவன் பிறவி குணம்! ஆனால் அதோடு மறந்துட்டு வேலையைப் பார்ப்பான்! ரவிதான் அன்னைக்கு முழுக்க பொருமிட்டே இருப்பான்! எவளாவது ஒருத்தி ஒதைச்சாத்தான் திருந்துவே!

லாவண்யாவுக்கு ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுது! இந்த இருபத்தெட்டு வருஷத்தில் எத்தனை ஆண்களைப் பார்த்து விட்டாள்! கண்ணைப் பார்த்துப் பேசறவன், காமம் வழியப் பேசறவன், கையை மெதுவா தொட்டுப் பார்க்கறவன், கூட்டமே சாக்குன்னு உரசுறவன், காணாததுபோல் கடந்து போறவன்- இப்படி!

இந்த ரெண்டு பேருமே இன் லவ் வித் மீ! கண்டிப்பா கூடிய சீக்கிரம் ப்ரொபோஸ் பண்ணப் போறாங்க, மே பீ திஸ் வாலன்டைண்ஸ் டே?

ரவி, லொடலொடன்னு பேசுவான், ஆனால் பெரும்பாலும் ஷோல்டரைத் தூக்கிட்டு பேசற பேச்சு! புரட்சி, பெண்ணுரிமை, ஜாதி மத ஒழிப்பு, கேவலமான அரசியல்வாதிகள் .. இப்படி! மத்த நேரத்தில் அவன் அப்பா, அம்மா, தம்பி, நாய்க்குட்டி, இப்படி! அவன் ஊரைப்பற்றி பேசும்போது அவ்வளவு அழகா இருக்கும்! கண்கள் மின்ன அவன் பேசறதை கேட்டுட்டே இருக்கலாம்ன்னு தோணும்! ஏறத்தாழ அவன் வாழ்க்கை முழுக்க அவகிட்டே சொல்லிட்டான்!

ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம்தான்! மறுபடி வேதாளம் புரட்சி முருங்கை மரத்தில் ஏறிக்கும்!

அன்னைக்கு கஸ்டமர் கேர் ரமேஷ் ரிசப்ஷனிஸ்ட் ஷோபாகிட்ட ப்ரொபோஸ் பண்ண, அவள் கத்தி கூப்பாடுபோட, ஏறத்தாழ ரமேஷைக் கொன்னிருப்பான்- ஆனந்த் மட்டும் குறுக்கே விழுந்து தடுக்காமல் இருந்தால்!

ஆனால் அன்னைக்கு ஆனந்த்தான் இயல்புக்கு மாறாக பயங்கர வியர்டா நடந்துட்டான்!

ஷோபாவை எட்டி ஏறத்தாழ அறைந்தேவிட்டான்!

இப்போ என்னடி கேட்டுட்டான் அவன்? பிடிக்கலன்னா வேண்டாம்ன்னு சொல்லவேண்டியதுதானே? எதுக்கு இவ்வளவு ஸீன்? ஈன்னு இளிச்சுட்டுப் பேசும்போது அவன் கண்ல காதல் தெரியலயா? அப்போவே சுதாரிச்சிருக்கலாமே? என்னவோ கையைப் பிடிச்சு இழுத்தமாதிரி இத்தனை கூப்பாடு எதுக்கு? உங்க ரெண்டுபேருக்கு நடுவே அமைதியா முடிஞ்சிருக்கவேண்டிய விஷயம்! இதை இவ்வளவு பூதாகரமாக்கி அவனை அசிங்கப்படுத்தி என்ன சாதிச்சே? இந்த அவமானம் அவனை காலமெல்லாம் கொல்லும்! ஸே சாரி டு ஹிம்

இந்த சேஞ்ச் ஆஃப் ஸீனரி ஆஃபீஸில் யாருமே எதிர்பார்க்காதது!

திடீர்ன்னு மயான அமைதி!

அவ எதுக்கு சாரி கேட்கணும்?

ரவி, நீ கொஞ்சம் மூடிட்டிரு! உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது அவனை அடிக்க? இதே அவ ப்ரொபோஸ் பண்ணி இவன் வேண்டாம்ன்னு சொல்லியிருந்தா?

அவளை கை நீட்டி அடிச்சிருப்பயா? என்னடா மயிரு ஈக்வாலிட்டி நீ பேசறது?

ஆனந்த் இப்படி கத்திப் பேசறதையே நம்ப முடியாம பார்த்துட்டிருந்தது மொத்த ஆஃபீஸும்! குறிப்பா லாவண்யா!

இன்னைக்கு அவ சாரி சொல்லாம கேட்டைத் தாண்ட முடியாது!

என்னடா செய்வே?

தெரியாது! ஆனா கொன்னே போட்டாலும் போடுவேன்!

ரமேஷ் காலில் விழாத குறையாகத் தடுத்தும், அவளை மன்னிப்புக் கேட்கவைத்தே ஓய்ந்தான் ஆனந்த்!

அதிர்ச்சி மாறாமல் சாயங்காலம் ரெண்டுபேர் கூடவும் பேசாமல் ஹாஸ்டலுக்குப் போய்விட்டாள்!

மறுநாள் வந்து கேட்டபோதும் தன் ஸ்டாண்டை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டான் ஆனந்த்!

ஒரு பையனோ பெண்ணோ ப்ரொபோஸ் பண்றது அவங்களோட தனிப்பட்ட விஷயம்!

அதை ஊதிப் பெருசாக்கி ஸீன் போடறது ப்யூர் அட்டெண்ஷன் சீக்கிங்!

ஷோபா, ரமேஷ் ரண்டுபேரும் அந்த வாரத்திலேயே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போய்ட்டாங்க! கடைசிவரை ஷோபா ஆனந்தை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை! அவன்தான் வலியப் போய் கை கொடுத்து விஷ் பண்ணிட்டு வந்தான்!

லாவண்யா கேட்டதற்கும், அது அன்னைக்கே முடிஞ்ச விஷயம், அதை எதற்கு இன்னும் தூக்கிட்டு அலையணும்?

ரவிதான் ஒரு வாரம் அவனை ஓயாமல் மேல் ஷாவனிஸ்டிக் இடியட்ன்னு திட்டிக்கிட்டே இருந்தான்!

ரவி பிறந்தது,வளர்ந்தில் ஆரம்பித்து, இன்னைக்கு வரைக்கும் மொத்த ஜாதகத்தையும் சொல்லியும்,

கேட்டுட்டே உட்கார்ந்திருப்பாளே ஒழிய லாவண்யா தன்னைப் பற்றி எதுவும் சொன்னதில்லை!

அவன் கண்ல கேள்வி தெரியுமேயொழிய அவனும் வாயைத்திறந்து கேட்டதில்லை!

ஆனந்த் அப்படியில்லை! கேட்டதற்கு மட்டும் பதில்! சொந்த விஷயம் எதுவும் அவனாக சொன்னதில்லை!

எல்லாமே பொதுவான விஷயங்கள்தான் பேசுவான்!

அவளை யூ லுக் லேவிஷிங் டுடேன்னு சிலநாள் சொல்லியிருக்கிறான்! மற்றபடி சினிமா, கவிதை, அழகிய பெரியவன், அசோகமித்திரன் இப்படித்தான்!

லாவண்யா ரெண்டுபேர் ரூமுக்கும் போயிருக்கிறாள்!

ரவி ரூம் அவ்வளவு நீட்டா இருக்கும்! ஒரு சின்ன பெரியார் சிலை, ஒரு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஃபோட்டோ! அதது அதற்கான இடத்தில்! பழுத்த நாத்திகவாதி, லாவண்யா மாதிரி!

ஆனந்த் ரூம் கந்தரகோலம்! ஒரு பெரிய சிவன் படம், எப்போதும் எரியும் அகல் விளக்கு!

லாவண்யா உட்காரக்கூட, சேரில் இருந்து டவலையும் ரெண்டு ஜட்டியையும் எடுத்துப் போட்டுவிட்டு உட்காரவேண்டியிருந்தது!

ஏன் ஆனந்த் ரூம் இப்படி இருக்கு

ஒரு பேச்சலர் ரூம் வேற எப்படி இருக்கும்?

ரொம்ப பக்தியா ஆனந்த் உனக்கு?

என்னோட முட்டாள்தனத்துக்கெல்லாம் பழி சுமக்க யாராவது வேணுமே, சிவன் வந்து சிக்கிட்டாரு! கடவுள்ன்னு ஒன்னு இருக்குன்னு நம்பறதே, கூட துணைக்கு யாரோ இருக்காங்கன்னு ஒரு தைரியம் தரத்தான்! எவ்வளவோ விஷயங்களை கேள்வி கேட்காம ஒத்துக்கறோம்! அதில் ஒன்னா இது இருந்துட்டுப் போகட்டுமே!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனந்த்

இருக்கட்டுமே, அது அவரவர் நம்பிக்கை! பரஸ்பரம் நம்பிக்கைகளை மதிக்கத் தெரிந்தால் போதும்!

அதைப் பற்றி யாரும், யாருக்கும் லெக்சர் கொடுக்காமல் இருந்தால போதும்!

நேற்று பெஸண்ட் நகர் பீச்சில் பேசிக்கொண்டிருக்கும்போது ஆனந்த்தான் சொன்னான்.

லாவண்யா, நாளைக்கு காலைல ரவி உன்கிட்ட ஏதோ பேசணுமாம்!

என்ன பேசணும் ரவி? இப்போவே சொல்லேன், என்ன சஸ்பெண்ஸ் வேண்டியிருக்கு?

இல்லை லாவண்யா, நாளைக்கு பேசுவோமே?

ஓகே! ஆனந்த் நீயும் இருப்பேதானே?

இல்லை! அவன் மட்டும்தான்!

நான் நாளைக்கு ஆஃபீஸ் வரல!

பேசி முடிச்சுட்டு முடிஞ்சா ரூமுக்கு வா!

அப்படிவந்தால், நானும் உன்கிட்ட பேசணும்!

ஸ்ட்ரேஞ்ச் ஃபெல்லோஸ்!

சொல்லிக்கிட்டே எழுந்துவிட்டாள் லாவண்யா! ஓகே கய்ஸ், நாளைக்கு பார்க்கலாம்!

அதற்கப்புறம் அவங்களும் ஜாஸ்தி பேசிக்கல! கிளம்பலாம் ஆனந்த்! கொஞ்சம் டென்ஷனா இருக்கு! நாளைக்குப் பார்க்கலாம்! குட் நைட் அண்ட் குட் லக் டு யூ!

உனக்கும் குட் லக் ரவி!

இதோ, சொன்னமாதிரியே ரவி கேபினில் லாவண்யா!

சொல்லு ரவி, ஏதோ பேசணும்ன்னியே?

கொஞ்சம் பதட்டமா இருக்கு லாவண்யா!

கொயட் அன்நேச்சுரல் ரவி! சொல்லு, வாட் எவர்! என்கிட்ட என்ன ஃபார்மாலிட்டி?

யூ லுக் ப்யூட்டிஃபுல் லாவி!

பார்றா, ஃபர்ஸ்ட் டைம் யூ ஆர் சேயிங் திஸ்! தேங்க்ஸ் ரவி!

இதுதான் நீ சொல்லவந்ததா?

ஒரு முழு நிமிஷம் மௌனமாக இருந்தவன், சட்டென்று மேஜையில் இருந்த ஒற்றை ரோஜாவை எடுத்து நீட்டினான்

வில் யூ மேரி மீ லாவண்யா?

வ்வாட்? டிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ ரவி!

வொய் லாவண்யா?

ம் ஆல்ரெடி மேரீட் ரவி!

டோண்ட் ட்ரை டு கட் ஜோக் லாவண்யா ப்ளீஸ்!

நோ ரவி! ம் சீரியஸ்! ஹீ இஸ் ஏன் ஏர்ஃபோர்ஸ் ஆஃபீஸர்!

பட் ஒய் டிட்ண்ட் யூ டெல் மீ?

ஒய் ஸுட் ரவி? யூ டிண்ட் ஆஸ்க் மீ. நான் எதுக்கு வாலண்டியரா சொல்லணும்?

ஆனால் நான் என் மொத்தக் கதையும் உன்கிட்ட சொல்லியிருக்கேன்!

அது உன் நேச்சர் ரவி! நானும் ஏன் அப்படி இருக்கணும்?

ஷிட்! இப்படி சொல்லாமல் கழுத்தை அறுத்துட்டயே!

மைண்ட் யுவர் லாங்குவேஜ் ரவி!

பிட்ச், நான் பேசும்போதெல்லாம் ன்னு இளிச்சுட்டிருந்தயே, அப்போ சொல்லியிருக்கவேண்டாமா

மறுபடி தப்பா பேசறே ரவி!

சேம் டோன் யூஸ்ட் பை யுவர் ஃப்ரண்ட் டு ஷோபா!

நீங்க எல்லாம் ஒரே ப்ரீட் தானே!

ஆமாடி! நாங்க எல்லாம் அப்படித்தான்! எங்களுக்கு இப்படி இளிச்சு மயக்கி ஏமாத்தத் தெரியாது!

மறுபடி தப்பா பேசறே ரவி! நீ ப்ரொபோஸ் பண்ணுவேன்னு எனக்கு எப்படி தெரியும்?

ஏன் தாலி கட்டிக்கல?

ஆச்சர்யமா இருக்கு ரவி நீ இதை கேட்கறது! அதெல்லாம் பெண்ணடிமைத்தனம்ன்னு நீதானே சொன்னே?

இப்போ என்ன, நாம நல்ல ஃப்ரண்ட்ஸா இருப்போம்!

நான் ஏதாவது அசிங்கமா பேசறதுக்குள்ள போயிடு! புருஷன் அங்கே மிலிட்ரில கஷ்டப்பட்டுட்டிருக்கான், நீ இங்கே ஆம்பளைங்களோட ஈஷிட்டு திரியறயே, வெட்கமா இல்லையா உனக்கு?

ஏன், புருஷன் மிலிட்டரில இருந்தா ஆம்பளைங்க கிட்ட பேசக்கூடாதா

ட்ரக் ட்ரைவராகவோ, ஐடி எம்பாளாயியாகவோ இருந்தால் ஆம்பளைகளோட ஈஷிக்கறது ஓகேவா?

பரவால்லையே ரவி, எல்லையில் ராணுவ வீரர்கள்ன்னு ரொம்ப பழகிய டோன்ல பேசறே!

ரவி, நான் இப்போ நீ பேசிய எல்லாத்தையும் மறந்துட்டேன்! நீ என் ஃப்ரண்ட், ஜஸ்ட் ஃப்ரண்ட்!

உனக்குத் தோணும்போது வா! அதே நேசத்தோட இருப்போம் நட்பா!

ஆனந்த் ஏதோ பேசணும்ன்னு கூப்பிட்டான், நான் அவன் வீட்டுக்கு போறேன்! வர்றயா ரவி?

போ! நானாவது பேசி அனுப்பினேன்! அவன் அடிச்சு துரத்தப்போறான் பார்த்துக்க!

நன்றி ரவி, தேங்ஸ் ஃபார் ஆல் குட் டைம்ஸ் வீ ஹேட்!

தயக்கத்தோடுதான் ஆனந்த ரூமுக்குள் நுழைந்தாள்!

வழக்கத்துக்கு மாறாக ரூம் சுத்தமாக இருந்தது! டேபிள் மீது ஒரு சின்ன ரோஜாப்பூங்கொத்து!

சொல்லு ஆனந்த், ஏதோ பேசணும்ன்னு சொன்னே?

உட்கார் முதல்ல!

சரி, சொல்லு!

லாவண்யா யூ லுக் ப்யூட்டிஃபுல்!

இதை இன்னைக்கு ரண்டாவது தடவை கேட்கிறேன் ஆனந்த்! இன்னைக்கு என்னவோ நான் திடீர்ன்னு அழகாயிட்டேன் போல!

எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது லாவண்யாநேராவே கேட்கிறேன், வில் யூ மேரி மீ?

ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டாள், ரவி எதுவும் ஃபோன் பண்ணலயா ஆனந்த்?

இல்லையே, ஏன்?

ஒருவேளை நான் அடி வாங்கட்டும்ன்னு விட்டுட்டான் போல!

ஆனந்த், ம் மேரிட் ஆல்ரெடி!

! ம் சாரி லாவண்யா, மை பேட் லக்!

அவ்வளவுதானா?

வேறென்ன, தாடி வளர்த்துட்டு சுத்தணுமா? எப்படியும் வளர பத்து நாள் ஆகும்! அப்புறம் வேணும்னா ஒரு சாராய பாட்டிலும், நாய்க் குட்டியும் வாங்கிக்கிறேன் தேவதாஸ் மாதிரி!

உனக்கு என்மேல கோபமே வரலயா ஆனந்த்?

எதுக்கு?

எனக்கு கல்யாணம் ஆனதை நான் சொல்லாமல் மறைச்சதற்கு?

நீ எங்கே மறைச்சே லாவண்யா? நாங்க கேட்கல, நீ சொல்லல! தட் சிம்பிள்!

நாங்க கேட்டு, நீ இல்லைன்னு பொய் சொல்லியிருந்தால் வேணும்ன்னா ஏமாத்திட்டேன்னு சொல்லலாம்

தேங்க் காட் ஆனந்த்!

இன்னைக்கு ரவியும் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினான்! நான் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னதும் தாறுமாறா திட்டி அனுப்பிட்டான்!

பெருசா ஃபீல் பண்ணாத லாவி, அவன் ஒரு எமோஷனல் இடியட்! ரெண்டு நாள்ல சரியாகிடுவான்!

காஃபி குடிக்கறயா லாவண்யா?

உண்மையை சொல் ஆனந்த், உனக்கு டிஸப்பாயிண்ட்மெண்ட்டாகவே இல்லையா?

அதெப்படி இல்லாம போகும்?

ஒரு ஐம்பது கிலோ ஐஸ்க்ரீம் எனக்கு இல்லைன்னு போனது கண்டிப்பா வருத்தம்தான்!

அதுக்கு என்ன பண்ணமுடியும்?

உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டா வரச் சொல்லமுடியும்?

சரி, நான் ஒருவேளை அப்படி டிவோர்ஸ் பண்ணிட்டு வந்தா?

ஜோக் பண்ணாதே லாவண்யா, உன்னையெல்லாம் பிறவி மடையன் கூட விடமாட்டான்!

சீரியஸா கேட்கிறேன் ஆனந்த், நான் டிவோர்ஸியா இருந்தா என்ன பண்ணுவே?

! அதனாலதான் மிஸ் லாவண்யாவா?

வா, போய் லஞ்ச் முடிச்சிட்டுப் போனா சரியா இருக்கும்!

எங்கே ஆனந்த்?

வேறெங்கே, குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு! நாலு மணிக்குத்தான் கோவில் திறப்பாங்க! போற வழில ஜிஆர்டில தாலி வாங்கிக்கலாம், கோவில் வாசல்லயே மாலை கிடைக்கும்! எதேஷ்டம்!

விளையாடாதே ஆனந்த், எனக்கு ஒரு குழந்தை இருக்கு!

நமக்குன்னு சொல்லு!

எனக்கு ஏன் டைவர்ஸ் ஆச்சுன்னு உனக்குத் தெரியவேண்டாமா?

அதைத் தெரிஞ்சு நான் என்ன பண்ணப்போறேன்? உன்னோட பாஸ்ட் எனக்கெதுக்கு? அதில் நான் இல்லவே இல்லை! உன்னோட ப்ரசெண்ட் வாழ்க்கையில் நீ ஒரு அற்புதம்! யுனீக் பீஸ்! எதிர்காலத்தில் நானும் கூட இருப்பேன்! அது நல்லாத்தான் இருக்கும். வேறென்ன வேணும்?

அப்படி நீ பழைய கதையை சொல்லித்தான் ஆகணும்ன்னா, குன்றத்தூர் போற வழில டாக்ஸில சொல்லிக்கிட்டே வா! அஸ்வின் குமார் மாதிரி தூங்காம கேட்கறேன்! கிளம்பலாமா?

அடப்பாவி, கிவ் மீ சம் ப்ரீத்திங்!

உட்கார்!

உன்கிட்ட ஒரு உண்மை சொல்லணும்! நீங்க ரெண்டுபேருமே என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணப் போறீங்கன்னு எனக்குத் தெரியும்!

எப்படி?

பெண்களுக்கு சில விஷயங்களில் செவன்த் சென்ஸ் இருக்கு ஆனந்த்!

எனக்கு தேர்ந்தெடுக்கறதில் குழப்பம் இருந்துச்சு!

அன்னைக்கு ஷோபா விஷயத்திலிருந்தே எனக்கு ஒரு பயமும்!

அதனால உங்களை டெஸ்ட் பண்ண எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய் சொல்லிப் பார்த்தேன்! ரவி தோற்றுப் போனான்! நீ கூலா இருக்கவும், டைவர்ஸ், குழந்தைன்னு அடுத்தடுத்து சொல்லிப் பார்த்து நான்தான் தோற்றுப் போனேன்!

அடிப்பாவி!

சட்டென்று மேஜை மீதிருந்த பூங்கொத்தை எடுத்தவள், கண்களில் தாபம் மின்னக் கேட்டாள்

ஆனந்த்,

Will you be my valentine?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக