திங்கள், 21 மார்ச், 2022

காடறியா கோவில் யானையின் பேரன்பு!

                      காற்றில் கரைந்த நேசம்!

கடைசிக் கதையின் நாயகனுக்கு மட்டும் ஏன் வேறு பெயர் வைக்கவேண்டும்?

ரவி!

காடறியா யானை

முதலில் தான் ஒரு யானை என்பதே அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான்!

கனவில்கூட காடு காணாத யானை

கோவிலில் பிறந்து, மனிதர்களோடே வாழ்ந்து, ஒருநாள் மனிதர்கள் மத்தியிலேயே மரித்துப்போக நேரும் வாழ்க்கையில் தன்னை ஒரு யானை என்று உணரக்கூடத் தோன்றாத வாழ்க்கை!

அவனுக்கு ஏறத்தாழ மனிதர்களின் பாஷையும் அத்துபடி - தன்னைப்பற்றி யாராவது பேசும்போது உன்னித்துக் கேட்குமளவு!

வாழ்க்கை அவன்வரையில் சிக்கலில்லாமல்தான் இருந்தது- மீனாட்சியை தற்செயலாக சந்திக்கும்வரை!

தன்மீது ஏறிச் செல்வோரை சுமப்பதும், கொடுக்கும் காசை வாங்கி பாகனிடம் கொடுப்பதும், தலை தொட்டு ஆசீர்வதிப்பதும், பைப் தண்ணீரில் குளிப்பதும், சோற்றுருண்டை வாங்கித் தின்பதும் என ஒருவகையில் குறையற்ற வாழ்க்கை!

ரவி, தன்னை பிறரினும் உயர்வாக உணரும் ஒரு தருணமும் உண்டு!

அலங்கார முக கவசம் அணிவித்து, முதுகில் அம்பாரி அமைத்து அபிராமித்தாயாரை சுமந்துசெல்லும் தருணம்!

அப்போது காட்டப்படும் ஆராதனைகளும், கூப்பிய கை தொழுகைகளும் தனக்கும்தான் என்று இறுமாந்து நடப்பான்!

அவ்வப்போது அபிராமி அவனிடம் பேசுவதுண்டு!

என்ன ரவி, சந்தோஷமா இருக்கிறாயா? இதுதான் அடிக்கடி அன்னை கேட்கும் கேள்வி!

எனக்கென்ன குறை தாயே? நான் பெருமகிழ்வோடு இருக்கிறேன்!

உனக்கென்று பிடித்தது, பிடிக்காதது ஏதுமில்லையா ரவி?

அப்படி என்ன இருக்கிறது தாயே? எனக்கு எல்லாமே கேளாமலே கிடைக்கிறது! நீ என்மீது பவனி வரும்போது, உன்னோடு என்னையும் ஊரே தொழுகிறது! இதற்குமேல் வேறென்ன வேண்டும்?

நீ யானை என்பதை நீ உணரவேண்டும் ரவி, உன் ஆசைகள், தேவைகள், பழக்கவழக்கங்கள் உன்னைச் சுற்றியிருப்போரிலிருந்து மாறுபட்டது என்பதை அறியவேண்டும்! மனிதர்களின் சூதும் வாதுமற்ற நேர்மையான விலங்கின உலகம் எத்தனை உயரியது என்பதையும்!

அதை அறிவதால் ஏது பலன் தேவி, இப்போதே நான் நலமுடனே இருக்கிறேன்!

ஏறத்தாழ வாழ்வின் அந்திமம் அருகிவிட்டது ரவி உனக்கு! இறக்குமுன் உன்னை உணர்வது அவசியம்!

அப்படி ஒன்று எப்போது நேரும் தாயே?

ஈசன் மனையாளின் மர்மப் புன்னகைக்கான பதில் அடுத்த வாரமே கிட்டியது!

யானைகளுக்கான புத்துணர்வு முகாம் என்று ஊரே பேசிக்கொண்டது! எல்லா வளர்ப்பு யானைகளையும் இரண்டு மாதம் வனச்சூழலில் பராமரிக்க அரசு உத்தரவு! அடுத்த வாரமே கிளம்பவேண்டும்!

ரவிக்கு மனதே இல்லை! வழக்கம்போல் அபிராமித் தாயாருடன்தான் புலம்பல்!

இல்லை தாயே, என் இடம் இதுதான், இங்கேயே பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன், இங்கேயே மரிப்பேன்!

இரண்டு வருடங்களுக்குமுன் கேசவன் இறந்தபோது எத்தனை மலர் மாலைகள், எத்தனை கண்ணீர்! அப்படி ஒரு வழியனுப்பு எனக்கு வேறெங்கு கிடைக்கும், இந்த அஸ்தமனம் நெருங்கும் பருவத்தில் எனக்கெதற்கு புத்துணர்வு? பயணத்திடையே அல்லது முகாமில் ஏதும் நேர்ந்து அநாதையாக சாக சம்மதமில்லை எனக்கு!

இதுதான் உன் பிரச்னை ரவி! இது அப்பட்டமான மனிதர்களின் மனோநிலை! இறப்பிற்குப் பிறகும் எதற்கு வெட்டி கௌரவம் ரவி?

வனம் சேர்ந்த யானையின் உடலம் பிற உயிர்களின் உணவாவதுதான் இயற்கை உணவுச் சுழற்சி ரவி! இறப்பிலும் பிறருக்கு உதவியாவதுதானே உயர்வானது ரவி?

ஆயினும் தேவி

விடு ரவி, மனிதர்களின் பிடிவாதமும் கற்பிதங்களும் உன் உணர்வில் ஊறிப்போய்விட்டன

ஒருவகையில் இந்த முகாம் உனக்கு விழிதிறப்பாய் அமையும்!

உனக்கான ஞானத் திறவுகோல் அங்கேதான் இருக்கிறது!

பேரன்பின் பேரின்பமும், உதாசீனப் பிரிவின் பெருந்துயரும் உனக்கு அங்கேதான் கிடைக்கப்போகிறது!

உன் படைப்பின் காரணமோ அர்த்தமோ உனக்கு விளங்கக்கூடும் ரவி, உன்னுள் உறையும் இந்த கேடுகெட்ட மனித வன்மங்களும், குரோதங்களும், கோபங்களும் அற்றுப்போகுமெனில்!

நீ மீண்டும் இங்கு திரும்பி வராமலே போகக்கூடும் ரவி

போ! உனக்கான ஒரு பேரன்புச்சுடர் அங்கே கனன்றுகொண்டிருக்கிறது!

அதன் வெளிச்சத்தில் கரையேறுவதும் அதை ஊதி அணைப்பதும் உன் ஊழ்வினைப்படி!

முகாமுக்கு வந்த முதல் சிலநாட்கள் உண்மையிலேயே கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது! இப்படிப்பட்ட இடத்தில் தான் பிறந்து வளர்ந்து மடிய நேராதது புண்ணியம் என்று பட்டது!

சக யானைகளோடு ஒட்டமுடியாமல், அதிகாலைகளில் வேலியோரம் தனித்து உலாவிக்கொண்டிருக்கும்போதுதான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கணத்தில் அந்த சிறகு முளைக்காத தேவதை கண்ணில் பட்டது!

பார்த்த நொடியே, தன்னை உய்விக்கவந்த தெய்வம் அதுவென்று உணரமுடிந்தது!

காணாது கடந்த கடவுளை கதறி அழைக்கும் ஒரு பக்தனின் ஆதங்கத்தோடு பிளிறி அழைத்தது!

அந்தக் குரலில் ஏதோ ஒன்று அனுதாபத்தை தட்டியெழுப்ப, இயல்பாக வேலியோரம் வந்தது அந்த தெய்வம்- மீனாட்சி!

தன் மனம் தொழும் அபிராமி சாயல் ரவி மனக்கண்ணில் படமாய் விரிய, அபிராமித்தாயே பெண் களிறின் உருக்கொண்டு வந்ததென அன்பில் விழிவிரிய தொழுது நின்றது ரவி!

அன்றுமுதல் அதிகாலைகள் அந்தக் கடவுளின் ஆசிகளுக்கு என்றானது ரவிக்கு!

பொழுதெப்போது புலரும் என்று இரவெல்லாம் தவமிருக்க ஆரம்பித்தது ரவி!

கானகம் பிறந்து, கானகம் அளந்து வளர்ந்த மீனாட்சிக்கு ரவியின் கோமாளித்தனங்களும் அரைவேக்காட்டுப் புரிதல்களும் ஒவ்வாமையாக இருந்தபோதும், தன் இயல்பான அனுதாப உணர்ச்சியால் தினசரி காலைகளின் சில துளிகளை ரவிக்கு ஒதுக்கியது!

பழகிய சிலநாட்களிளேயே ரவியின் ஆழ்மன முள்ளைப் பிடுங்கியெறிந்து, வாழ்வின் இயல்பை உணரவைத்தது!

ரவியின் முட்டாள்தனமான முதல் செய்கை, அந்த அனுதாபத்தை தனக்கான உரிமை என்று தானாக முடிவு செய்துகொண்டு, ஒருநாள் தாமதமானாலும் வலியுறுத்த ஆரம்பித்தது!

தன்னுடைய சூர்யோதயம் மீனாட்சிதான் என்ற ஆர்வக்கோளாறில் தன் எல்லைகளை உணர மறந்தது!

இயல்பிலேயே சுதந்திரமான மீனாட்சிக்கு இந்த கட்டாய அன்பு சகிக்கமுடியாத நிலையில், தன் தனிமைப்பொழுதுகளை ரவி வலிந்து பிடுங்கிக்கொள்வது ஒவ்வாமை என்பதை தாட்சண்யம் இன்றி சொல்லியபோதும், ரவிக்கு தன் இடம் என்ன என்பதை உணரும் அறிவு மழுங்கிப்போனது அதன் ஊழ்வினை!

தன் தகப்பனின் வயதொத்த ரவியின் உரிமை மீறல்களை தன் இயல்புக்கு மீறி சகித்துக்கொண்டு அனுதாபத்தோடு கானக விதிமுறைகளை ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொடுத்தது மீனாட்சி!

தன்னிலும் பாதி வயதேயான மீனாட்சியே தனக்குக்கிடைத்த ஞானத்தாய் என்பதை உணர்ந்த ரவி, அன்பின் மிகுதியாலும், தனக்கே தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பேரன்புப் புதையல் கிடைத்த போதையில், இத்தனைநாள் இழந்திருந்த நேசத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வத்துடிப்பிலும், தாய் மடி தேடித் தாவும் குழந்தைபோல, மீனாட்சியின் உணர்வுகளை சற்றும் புரிந்துகொள்ளாத முட்டாள்தனத்தோடு, மீனாட்சியின் எல்லாப் பொழுதுகளும் தனக்கானது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தபோது, இழப்பின் வித்து ஆழமாக ஊன்றப்பட்டதை அது அறியவே இல்லை!

யாருக்கும் கிட்டாத புதையல் குவியலை தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் மனிதர்களிடம் கற்ற கள்ளத்தனங்களை தானறியாமலே உபயோகிக்க ஆரம்பித்தது!

கனவிலும் காணமுடியா பெருஞ்செல்வம் பெற்றவன் தானறியாமலே அதை பகிரங்கப்படுத்துவதுபோல, தான் மீனாட்சியின் தீவிர பக்தன் என்பதை வெளிச்சப்படுத்தி முட்டாள்தனமான ஆனந்தித்தது

முகாமின் மற்ற யானைகளின் மத்தியில் தான் பேசுபொருளாவதை இயல்பாகவே தனிமைவிரும்பியான மீனாட்சியால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை!

இவை எதையுமே உணரும் அடிப்படை அறிவுமற்ற தன் தவறுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதையும் ரவி உணரவில்லை!

ரவியைவிட ஆயிரம் மடங்கு அறிவாளியான மீனாட்சிக்கு ஒருநாள், ரவியின் எதிர்பார்ப்புக்கள் சகிக்கமுடியாத தொல்லை என்பது புரியவர, தன் இயல்பான நேர்மையோடு, இனி, உன் வழியில் என்னால் வர இயலாது ரவி! உன் எதிர்பார்ப்புகள் என்னை அச்சுறுத்துகின்றன! உன் மீதான அனுதாபம் என்னை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்கமுடியாது, என்னைத் தேடிவருவதை இப்போதே நிறுத்திக்கொள் என்று சொல்லிவிட்டே அகன்றது மீனாட்சி!

இழப்பின் ஆதங்கத்திலும் வலியிலும் அடுத்த முட்டாள்தனத்தையும் செய்தது ரவி!

பிழைகளை திருத்திக்கொண்டு இயல்பாய் இருப்பதைவிட்டு, மீனாட்சியை புண்படுத்திவிட்ட குற்ற உணர்வில் வேலியோரம் போவதையே நிறுத்திக்கொண்டுவிட்டது, அது பிரிவு சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி என்பதை உணராமலே! அது வன்மமாய் உணரப்படும் என்ற அடிப்படை உணர்வுமற்ற முட்டாள்தனத்துக்கு மிகப்பெரிய விலை கொடுத்தது ரவி!

கையில் கிடைத்த ரத்தினத்தை காக்கத் தெரியாது இழந்ததை தாமதமாக உணர்ந்தது ரவி!

அதன்பிறகு எத்தனை அழுது புரண்டபோதும், பாதம் தொட்டு மன்றாடியபோதும், ரவியைத் திரும்பிப் பார்ப்பதையும் தவிர்த்தது மீனாட்சி! அதன் பேராண்மை, குற்றங்களை சகித்துக்கொள்ள அனுமதிக்காதது மீனாட்சியின் பிழையில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்தது ரவி!

குருடாய்த் திரிந்தவனுக்கு சிலநாட்கள் மட்டும் பார்வை வந்தும், தானாக கண்களைக் குத்திக் குருடாக்கிக்கொண்ட கையறு நிலை ரவிக்கு! ஆனால் தன் இந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்று உணரும் சின்ன அறிவாவது எஞ்சியிருந்தது ரவியின் அதிர்ஷ்டம்! இல்லாவிட்டால், இன்னும் மூடத்தனப் படுகுழியில் விழுந்திருக்கும்!

கானக முகாமுக்கு வருமுன், தன் தாய் அபிராமியோடான உரையாடல் நியாபகம் வந்தது ரவிக்கு!

தனிமையில் கதறி அழைத்தது ஈசன் உடனுறை நாயகியை!

தாயே! உன் கரிநாவு உதிர்த்த சொல் பலித்தது! எனக்கான ஞானத்திறவுகோலை நான் கண்டுகொண்டேன்! ஆனால் கண்ட சிலநாட்களிலேயே அதை கூத்தாடிக் கூத்தாடித் தொலைத்தும் போனேன்!

ஏன் இப்படி எனக்குமட்டும் நடக்கிறது தாயே?

உன் உடன்பிறந்த சாபம் அது ரவி!

நல்லவை எதுவுமே உனக்கு நிலைக்காது! அது இந்தப் பிறவியில் நீ வாங்கிவந்த சாபம்! தொலைந்துபோக நீயே முழுக் காரணமும் ஆவாய் என்பது உன் தலையில் எழுதப்பட்ட எழுத்து!

இதோ, சிலநாட்களில் முகாம் முடியப்போகிறது!

மீண்டும் இங்கேயே வந்துவிடு! உன்னை அறிந்த, நீ உணர்ந்த மனிதர்களோடே உழன்று மரித்துப்போ! இல்லை தாயே, இனி அந்த இடமும் எனக்கு ஒட்டாது!

பிறகு, என்ன செய்யப்போகிறாய் ரவி? மீனாட்சியின் நிழல் தேடி போகப்போகிறாயா?

இல்லை தாயே!

ஏன், உனக்கு மீனாட்சி மீதும் வெறுப்பு வந்துவிட்டதா?

அறிந்தே கேட்கிறீர்கள் தாயே! தெய்வத்தை பக்தன் எப்படி வெறுப்பது? மிகக் குறுகிய காலத்தில் அன்பின் பெருவெளிச்சத்தையும், காரிருளையும் உணரவைத்த என் குருவல்லவா அந்த அன்புரு?

என் தகுதிக்கு வெகுவாக மீறிய அந்த உறவும் நட்பும் சில நாட்களேனும் எனக்கு வாய்த்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்!

அந்த உயர்ந்த உள்ளத்தின் கடைக்கண் பார்வை கிட்டிய சில நாட்களின் குளுமை நினைவுகளை அசைபோட்டே கழியட்டும் என் எஞ்சிய சில காலங்களும்!

அந்த தெய்வப்பிறவியின் மீது எந்தவித எதிர்பார்ப்போ ஏமாற்றமோ, வருத்தங்களோ இன்றி, இனியேனும் என் முட்டாள்தனங்கள் உறுத்தாத தொலைதூரத்தில் எனக்கான நாட்களைக் கடத்திவிடுவேன்!

மனிதர்களோடு வாழ்ந்து பழகிய உன்னை என்னாலும் நம்பமுடியவில்லை ரவி! மீனாட்சி ஒரு பெண் என்பதால் அதன் மீது வேறு ஏதாவது மறைமுக ஈர்ப்பு உள்ளதா ரவி?

நீயும் பெண்தானே தாயே, உன்மீது எனக்கு எந்தவகை ஈர்ப்போ அதைவிட நூறுமடங்கு உன்னதமான உறவு அது தாயே! இது எத்தனை புனிதமான பந்தமோ அதைவிட கோடி மடங்கு புனிதமான நேசம் அது தாயே! நான் தொழும் தெய்வத்தை வேறு பார்வை பார்க்கும் கீழ்மையை நீ எனக்கு சொல்லித்தரவில்லை தாயே! அந்த உறவை, உணர்வை கொச்சைப்படுத்தும் உரிமை என்னைப் படைத்த உனக்கே இல்லை!

அப்படி எத்தனை நாள் அவளோடு உனக்கு நட்பு ரவி?

தாயே, என்னைப் படைத்தது தாங்களாகவே இருக்கலாம், ஆனாலும் என் காதுபட அவள் என்று விளிக்கும் உரிமை உங்களுக்கும் இல்லை!

சரி ரவி, அவர்! இப்போது சொல்!

தங்கத்தை தங்கமென்று உணர எத்தனை நாள் பழகவேண்டும் தாயே?

உண்மையான நேசத்தின் ஒவ்வொரு நொடியும் ஓர் ஆயுட்காலத்துக்கு சமம்!

அந்தக் கணக்கில் அந்த அன்பு தெய்வத்தின் காலடி நிழலில் நான் வாழ்ந்த காலம் ஆயிரம் யுகங்கள்!

இனி என் எஞ்சிய காலத்தின் வெற்றிடத்தை வேறு எந்த உறவும் நிரப்ப இயலாது!

எனில் இங்கே நீ வந்துவிடுவதை எது தடுக்கிறது ரவி?

இல்லை தாயே, இனி உங்களையே என் தெய்வம் என்று என்னால் சுமக்கமுடியாது! இனி உங்கள் முகத்திலும் என் மீனாட்சித் தாயின் முகமே தெரியும்!

என்னால் இனி மனிதர்களோடும் இயைந்து வாழ முடியாது, நான் யார் என்பதை உணர்ந்தபிறகு!

பழகிய முகங்களோ, மனிதர்களோ தட்டுப்படாத வேறு வனம் தேடிப் போகிறேன்!

ஏமாற்றத்தின் வலி தாங்கிக்கொண்டு, பழகிய சில நாட்களிலேயே அந்த அன்பு தெய்வத்தை காயப்படுத்திய பாதகத்துக்கு ஒரு சிறு தண்டனையாக, பரிகாரமாக, என் விருப்ப உணவான யானைச் சோளத்தை இனி எக்காலமும் தொடுவதில்லை என்ற முடிவோடு, என் மீனாட்சித் தாயின் மன்னிப்பை யாசித்துக்கொண்டே என் எஞ்சிய காலத்தை கடத்திவிடுவேன்!

ஒரு விரக்திப் புன்னகையோடு தலையசைத்து நகர்ந்த ரவியை மறுநாள் விடிந்தபோது முகாமிலோ கானகத்திலோ எங்கும் காணவில்லை!

யாருக்கும் உபயோகமற்ற அந்த கிழட்டு ஜீவனைத் தேடும் அவசியமும் யாருக்கும் இருக்கவில்லை!

கடைசி கண்மூடலின்போது தன் ஞான ஆசிரியையின் உருவம் தன் மனக்கண் நிறைக்கவேண்டும் என்ற பேராசை வேண்டுதலோடு காற்றோடு கரைந்திருந்தது ரவி!

வெள்ளி, 11 மார்ச், 2022

வட மாநில தேர்தல் முடிவுகளும் உள்ளூர் விமர்சனங்களும்!

      உபி தேர்தல் முடிவுகளும் உள்ளூர் அறிஞர்கள் விமர்சனங்களும்!

தேர்தலில் ஒரு கட்சி வெல்வதும் மற்றவை தோற்பதும் தவிர்க்க இயலாதவை!

தேர்தல் என்பது தற்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் சித்துவிளையாட்டு

மக்களின் மனநிலை என்பது அதன் ஒரு பகுதி மட்டும்தான்!

நமக்குப் பிடித்ததுதான் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும், நம் ரசனை, நம் பார்வை மட்டும்தான் உயர்வானது, மாற்றுக் கருத்து என்பதே மட்டரகமானது, முட்டாள்தனமானது என்பது கடைந்தெடுத்த மேட்டிமைத்தனம், அகங்காரம், சர்வாதிகாரம் என எல்லாமே!

தமிழகத்தில் இருக்கும் சாய்ஸ் திமுக, அதிமுக என்ற இரண்டு பிராந்தியக் கட்சிகள்!

அங்கே, உங்கள் பாஷையில் பான்பராக் வாயனுகளுக்கு இரண்டு தேசியக் கட்சிகள்

தலைமையே இல்லாத காங்கிரஸ்

கச்சிதமாக காய் நகர்த்தும் பாஜக!

போன இரண்டு தேர்தல்களில் அதிமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள்!

இன்றைக்கு திமுகவை தேர்ந்தெடுத்ததும், அவர்கள் இந்தியாவிலேயே, ஏன், உலகத்திலேயே புத்திசாலிகள்! இதுதான் உங்கள் விமர்சன லட்சணம்!

எனில், அந்த சோற்றாலடித்த பிண்டங்களுக்கு உயிரும், உணர்வும், அறிவும் எப்போது வந்தது? பத்தாண்டுகால அதிமுக ஆட்சியிலா? சாகும்வரை எம்ஜியாரை முதல்வராக வைத்திருந்த, கலைஞரை சாகும்போதுகூட முதல்வராக்காத இந்த முட்டாள்கள் எப்படி திடீரென்று இவ்வளவு புத்திசாலி ஆனார்கள்

இப்படி யாராவது கேள்வி கேட்டால் உடனே பக்கெட்டில் சாயத்தைக் கரைத்துக்கொண்டுவந்து தலையில் ஊற்றி சங்கி சங்கி என்று கூவுவதுதான் இணைய அறிவுஜீவித்தனம்

அந்த பான்பராக் வாயர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளில், இத்தனை அவலத்துக்குப்பிறகும் ஏன் நூற்றாண்டு கண்ட கட்சியின்மீது நம்பிக்கை வரவில்லை? இதற்கு எந்த பான்பராக் வாயன்கள் காரணம்

க்ரேட்டர் நொய்டாவில் பாதி சிறப்பு வாய்ந்த ஒரு நகரம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

அந்த நகரை நிர்மாணித்தது அந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பான்பராக் வாயன்கள்தான்!

இன்றைக்கு அங்கிருக்கும் சாலைப் போக்குவரத்து, கட்டுமான வசதிகள் தமிழ்நாட்டில் எக்காலத்தோ வந்துவிட்டன! ஆனால் இப்போதுதான் அவர்கள் அதை எட்ட முடிகிறது எனில் அதற்கு இதற்குமுன் ஆண்ட எல்லாக் கட்சிகளும்தான் காரணம்! அதை செய்யாத கட்சிகள்தான் அதற்குப் பொறுப்பு! மக்கள் அல்ல! அவர்கள் படிப்பறிவை, வசதியை வேண்டாம் என்று சொல்லவில்லை! இந்த அளவுக்குக்கூட வசதிகளை செய்து கொடுக்காத அங்கிருந்த அரசியல் கட்சிகளே காரணம்! மக்கள் அல்ல!

உங்களுக்கு அவர்கள் பான்பராக் வாயர்கள்! அவர்களுக்கு நீங்கள் டாஸ்மாக் வாயர்கள் - அவ்வளவே!

அவர்கள் சாதி பார்த்து, மதம் பார்த்து வாக்களித்தார்கள் எனில், நாம் அதைவிடக் கேவலமாக காசும், துணிமணியும், பொருளும், சாராயமும்  வாங்கிக்கொண்டு வாக்களித்தோம்

சாதி, மத விஷயத்திலும் நாம் ஒன்றும் ஒழுங்கில்லை

வேட்பாளர் தேர்விலிருந்து எல்லாமே அந்தந்தத் தொகுதியின் சாதி மதக் கணக்குப் பார்த்தே

அவர்களது பட்டவர்த்தனமாக வெளியே தெரியும், இங்கே இலைமறை காயாக

அவ்வளவே!

வேண்டுமானால், கர்நாடகாவில் பாதுகாப்பு கேட்டிருக்கும் ஒரு ஜோடியிடம் கேளுங்கள், தமிழகத்தில் ஜாதி யுவராஜ் மட்டத்தில் மட்டுமல்ல, எந்த உயரத்தில் இருக்கிறது என்று சொல்வார்கள்!

காங்கிரஸ் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியிருந்தால் குரங்குக் குப்பன்களுக்கும், மோடி மஸ்தான்களுக்கும் அரசியலில் என்ன வேலை

பிழை, அவர்களுக்கு வாய்த்த கட்சிகளிடம், மக்களிடமல்ல!

தொழில்துறையில், ஜவுளித்துறையில், எலெக்ட்ரானிக் உபகரணங்களில், கட்டுமானப் பொருட்களில் வடக்கிலிருந்து வருபவை என்ன, இங்கிருந்து செல்பவை என்ன என்பதை கணக்கெடுத்துப் பாருங்கள், பான்பராக் வாயர்கள் எங்கிருக்கிறார்கள் என்று புரியும்!

பானிபூரி விற்கிறார்கள் என்று திண்ணைக்கிழவிகள்போல் டாஸ்மாக் வாசலில் நின்றுகொண்டு ஏகடியம் பேசிக்கொண்டே இருங்கள், இன்னும் பத்தாண்டுகளில் பாதாளத்தில் கிடப்பீர்கள்!

ஏதாவது கண்கூடான நிரூபணம் வேண்டுமென்றால், செவ்வாய், புதன் கிழமைகளில் ஈரோடு ஜவுளி சந்தைக்கு போய் ஒருமணிநேரம் அமைதியாக வேடிக்கை பாருங்கள்

உள்ளூர் கோடீஸ்வர முதலாளிகள் உடைந்த ஹிந்தியில் சேட்டு சேட்டு என்று அந்தப் பான்பராக் வாயர்களின் காலைக் கழுவி குடிக்காத குறையாக இறைஞ்சுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்!

ஆண்ட பரம்பரை ஜாதிகளின் முகத்தில் அப்போது அத்தனை அசட்டுக்களை வழியும்!

மக்களில் எவரும், யாருக்கும் தாழ்ந்தவரில்லை! அவரவர் துறையில் அவர்கள் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறார்கள்!

அரசியல்வியாதிகள் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அளவுக்குமீறிக் குதித்து எகிறி இணையத்துக்கு வெளியே விழுவீர்களானால், உண்மை முகத்தில் அறைந்தே கொன்றுவிடும்!

இப்போதே ஒரிஸாவிலிருந்தும், வடமாநிலங்களிலிருந்தும் புகைவண்டிகள் நிரம்பி வழிய அவர்கள் வந்து இறங்காமல்போனால், ஸகில்ட் லேபர் என்பதே இல்லாமல் பல தொழில்கள் நசிந்திருக்கும்!

ஐஐடியில் அதிக எண்ணிக்கையில் இருந்த நாம் இப்போது ஆந்திரர்களுக்கு வெகு பின்னால்!

ஆட்சிப்பணிகளில், கேட்கவே வேண்டாம், ஒருகாலத்தில் டெல்லி செகரட்ரியேட்டில், தடுக்கி விழுந்தால் தமிழன் மேஜையில்தான் போய் விழவேண்டும்!

இன்று கோவை வருமானவரித்துறை அலுவலகத்துக்குள் மலையாளம் தெரியாமல் நுழைவதே விரயம்!

முதலில், நம் முகத்தில் பூசிக்கொண்டிருக்கும் கறைகளை களையுங்கள்

அதுவரை

அவர்கள் முதுகு அழுக்கோடு பான்பராக்கை துப்பித் திரியட்டும்!

இத்தனையும் படித்துவிட்டு, வழக்கம்போல் ஏதோ ஒரு வண்ண சங்கி என்று சொல்லி, உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!

காலத்தே கல்லாத பாடம் கவைக்குதவாது

கவனம்!