வியாழன், 3 மார்ச், 2022

எனக்கு வாய்த்த என் தோழன் என்னும் பெருஞ்சுமை!

     நானும் ஒரு அரைக்கிறுக்கு introvert தோழனும்!


இன்றைக்கு காலையில் முகம் தொங்கிப் போய் வந்தான் என் சமவயதுத் தோழன்! எங்கேயோ சரியாக வாங்கிக் கட்டியிருக்கிறான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது

நெடுநாளாக அவனோடே என் பயணம்

ஒரு டிபிகல் ஹார்ட்கோர் இண்ட்ரோவர்ட்! அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசித் தொலைக்கமாட்டான்! பொறுக்கியெடுத்து யாரிடமாவது அவனைப் பேசவைக்க எனக்கு தாவு தீர்ந்துபோகும்

அரைச் சிரிப்பும் தலையசைப்பும்தான் அவன் கம்யூனிகேஷன்!

ஆனால் அவனிடம் ஒரு விநோதப் பழக்கம்! யாரையாவது அவனுக்குப் பிடித்துப்போனால் போதும், மொத்தமாக அள்ளிக்கொட்டிவிடுவான்

பலமுறை சொல்லியிருக்கிறேன், “கொஞ்சம் ஸ்லோவா போய்த்தொலை! அவர்களுக்கும் கொஞ்சம் ப்ரீத்திங் கொடு! இப்படி ஊசி குத்திய பலூன்போல இத்தனை வேகமாக எல்லாவற்றையும் கொட்டாதே!”

கேட்டதே இல்லை

ஆனால் அவனையும் சொல்லிக் குற்றமில்லை! எனக்குத் தெரிந்து அவனுடைய மொத்த வாழ்நாளில் நான்கைந்து நெருங்கிய நண்பர்கள் இருந்திருந்தால் அதிகம்! அதுவும் ஒரு சமயத்தில் ஒருவர், அதிகபட்சம் இருவர்

இதில்கூட என்ன இழவு ரேஷன் என்று கேட்டாலும், “என் தனிமை சுமையிறக்க ஒரு உண்மை நட்பே போதும்!” என்பதே பதில்!

எனக்குத் தெரிந்து, கடந்த பத்தாண்டுகளில் யாரையுமே அவனது நெருங்கிய வட்டத்துக்குள் சேர்த்ததில்லை அவன்!

சமீபகாலத்தில் கொஞ்சம் உற்சாகமாக சுற்றிக்கொண்டிருந்தான்

எப்போதும் ஒரு யோசனையிலேயே இருக்கும் நெற்றிச் சுருக்கத்தைக் காணோம்! சிரிப்பிலும் அந்தப் போலித்தனம் இல்லை!

வியாபாரத்தில் எல்லா தகிடுதத்தமும்! ஆனால், சொந்த வாழ்வில் அவனுக்கென்று ஒரு கொள்கை! If someone is to get hurt or affected, let it be me, than my loved ones!

இதனாலேயே மனம் முழுக்க ரணமும் சீழுமாய், வெளிக்காட்டாமல் ஒரு புன்னகைப் போர்வை!

இப்படியே அடக்கி, மறைத்துவைத்து, ஒருநாள் அழுகிப்போய்த்தான் சாகப்போகிறாய் என்று பலமுறை கத்தியும் பலன் ஏதுமில்லை! ஒருநாள் வெகு சந்தோஷமாக வந்தான்

ஏறத்தாழ வாழ்வின் கடைசி கட்டத்தில் என்னைப்போலவே ஒரு தோழமையைக் கண்டுபிடித்தேன்! உன்னைவிடவே அவரிடம் ஒரு நெருக்கத்தைக் கண்டுபிடிக்கமுடிந்தது!”

இதையாவது தக்கவைத்துக்கொள்! இதுதான் என்னால் சொல்லமுடிந்தது!

இன்றைக்கு அவன் வந்த கோலமே சொன்னது அவன் என் பேச்சை கேட்கவில்லை என்பது!

சொல்லு!

வழக்கம்போலத்தான், உற்சாகத்தில், நெருங்கிவந்தால் முகத்தை நக்கத் தாவும் நாயைப்போல நடந்துகொண்டிருந்திருக்கிறேன்! இத்தனை நாள் அவர் என்னை சகித்துக்கொண்டிருந்திருக்கிறார்! எப்படி ஒரு தர்மசங்கடத்தை அவருக்குத் தந்திருக்கிறேன்!”

சரி, அது இன்றைக்கு எப்படித் தெரிந்தது?

இன்றைக்கு வேறொரு விஷயம் பேசுகையில் அவரே சொன்னார்! தேவையில்லாமல் என் சொந்த விஷயங்களையெல்லாம் துருவித் துருவிக் கேட்கிறாய். That makes me uncomfortable என்று!

அப்படி என்ன கேட்டாய்

அதைக் கேட்டு அவரை மேலும் தர்மசங்கடப்படுத்தவா?”

சரி, இப்போ என்ன?

வேறென்ன, மறுபடியும் நீயும் நானும்தான்! நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதைபோல கூத்தாடிக் கூத்தாடி நல்ல நட்பைப் போட்டு உடைத்திருக்கிறேன்! இத்தனை நாளாக நான் எல்லை மீறுவதைக்கூட சொல்லமுடியாமல் அவர் எத்தனை சங்கடப்பட்டிருப்பார்? ஒருவரை தர்மசங்கடப்படவைப்பதைக்கூட உணர முடியாமல் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!”

சரி, இனி அவரோடான உன் நட்பு?

என்வரையில் எந்த மாறுதலும் இல்லை! அவர் மீதான மரியாதையும் அன்பும் எள்ளளவும் குறையவில்லை, குறையாது

முட்டாள் மாதிரி மேலே விழுந்து பிடுங்கியது நான்தானே

அவர் என்ன செய்வார் பாவம்

ஆனால் என் எல்லை எதுவென்று புரியாமல், இனி எதையுமே பேச தயக்கமாகத்தான் இருக்கும்! அப்படி எதையெல்லாம் கேட்டேன் என்பது புரியாமல் குற்ற உணர்ச்சியில் காலையிலிருந்து என் மண்டை வெடிக்கிறது! இனி, ஒரு மரியாதையான தூரத்திலிருந்து அவரை இந்த அளவாவது தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்!”

சொல்லிக்கொண்டே போய்விட்டான்!

இத்தனை வருடப் பழக்கத்தில் எனக்கே அவனை முழுமையாகப் புரியாதபோது, அந்தப் புதிய நண்பர் என்ன செய்வார்

பகிர்ந்துகொள்ள யாருமே இல்லாமல் வீடு, ஆஃபீஸ் என்று வேறு எந்த வடிகாலும் இன்றி உழலும் அவன் ஒரு நல்ல நட்பு கிடைத்ததும் கண்டிப்பாக ஒரு புதையல் கிடைத்ததுபோல் எல்லைகள் புரியாமல் கண்மூடித்தனமாக நடந்திருப்பான் என்பதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை!

பிறவி முட்டாள்தனம் கட்டை எரியும்வரை போகாது! அதிலும் அவன் அடிமுட்டாள்! எமோஷனல் இடியட்!

மறுபடியும் அந்த நத்தை தன் கூட்டுக்குள் புகுந்துகொண்டுவிட்டது

ஆனால் எனக்குத் தெரியும், அதன் இடம் அதுதான் என்று

அவனுக்கும், நானும், அவன் நெற்றிச் சுருக்கமும்தான் தனக்கு சாஸ்வதம் என்று புரிந்துவிட்டால் போதும்!

என்ன, இனி அவன் கூட்டைவிட்டு வெளியே வந்து புதிதாக யாரிடமாவது ஒரு வார்த்தை பேசவே சில வருடங்களாவது ஆகும்

அதுவரை, அவனை நான்தான் நகர்த்திக்கொண்டு போகவேண்டியிருக்கும்

அதுவரை சமூக வலைத்தளங்களில் என் இருப்பு இன்னுமே குறைந்துபோகலாம் அன்றி அவனோடே காணாமலும் போகலாம்

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக