வெள்ளி, 11 மார்ச், 2022

வட மாநில தேர்தல் முடிவுகளும் உள்ளூர் விமர்சனங்களும்!

      உபி தேர்தல் முடிவுகளும் உள்ளூர் அறிஞர்கள் விமர்சனங்களும்!

தேர்தலில் ஒரு கட்சி வெல்வதும் மற்றவை தோற்பதும் தவிர்க்க இயலாதவை!

தேர்தல் என்பது தற்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் சித்துவிளையாட்டு

மக்களின் மனநிலை என்பது அதன் ஒரு பகுதி மட்டும்தான்!

நமக்குப் பிடித்ததுதான் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும், நம் ரசனை, நம் பார்வை மட்டும்தான் உயர்வானது, மாற்றுக் கருத்து என்பதே மட்டரகமானது, முட்டாள்தனமானது என்பது கடைந்தெடுத்த மேட்டிமைத்தனம், அகங்காரம், சர்வாதிகாரம் என எல்லாமே!

தமிழகத்தில் இருக்கும் சாய்ஸ் திமுக, அதிமுக என்ற இரண்டு பிராந்தியக் கட்சிகள்!

அங்கே, உங்கள் பாஷையில் பான்பராக் வாயனுகளுக்கு இரண்டு தேசியக் கட்சிகள்

தலைமையே இல்லாத காங்கிரஸ்

கச்சிதமாக காய் நகர்த்தும் பாஜக!

போன இரண்டு தேர்தல்களில் அதிமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள்!

இன்றைக்கு திமுகவை தேர்ந்தெடுத்ததும், அவர்கள் இந்தியாவிலேயே, ஏன், உலகத்திலேயே புத்திசாலிகள்! இதுதான் உங்கள் விமர்சன லட்சணம்!

எனில், அந்த சோற்றாலடித்த பிண்டங்களுக்கு உயிரும், உணர்வும், அறிவும் எப்போது வந்தது? பத்தாண்டுகால அதிமுக ஆட்சியிலா? சாகும்வரை எம்ஜியாரை முதல்வராக வைத்திருந்த, கலைஞரை சாகும்போதுகூட முதல்வராக்காத இந்த முட்டாள்கள் எப்படி திடீரென்று இவ்வளவு புத்திசாலி ஆனார்கள்

இப்படி யாராவது கேள்வி கேட்டால் உடனே பக்கெட்டில் சாயத்தைக் கரைத்துக்கொண்டுவந்து தலையில் ஊற்றி சங்கி சங்கி என்று கூவுவதுதான் இணைய அறிவுஜீவித்தனம்

அந்த பான்பராக் வாயர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளில், இத்தனை அவலத்துக்குப்பிறகும் ஏன் நூற்றாண்டு கண்ட கட்சியின்மீது நம்பிக்கை வரவில்லை? இதற்கு எந்த பான்பராக் வாயன்கள் காரணம்

க்ரேட்டர் நொய்டாவில் பாதி சிறப்பு வாய்ந்த ஒரு நகரம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

அந்த நகரை நிர்மாணித்தது அந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பான்பராக் வாயன்கள்தான்!

இன்றைக்கு அங்கிருக்கும் சாலைப் போக்குவரத்து, கட்டுமான வசதிகள் தமிழ்நாட்டில் எக்காலத்தோ வந்துவிட்டன! ஆனால் இப்போதுதான் அவர்கள் அதை எட்ட முடிகிறது எனில் அதற்கு இதற்குமுன் ஆண்ட எல்லாக் கட்சிகளும்தான் காரணம்! அதை செய்யாத கட்சிகள்தான் அதற்குப் பொறுப்பு! மக்கள் அல்ல! அவர்கள் படிப்பறிவை, வசதியை வேண்டாம் என்று சொல்லவில்லை! இந்த அளவுக்குக்கூட வசதிகளை செய்து கொடுக்காத அங்கிருந்த அரசியல் கட்சிகளே காரணம்! மக்கள் அல்ல!

உங்களுக்கு அவர்கள் பான்பராக் வாயர்கள்! அவர்களுக்கு நீங்கள் டாஸ்மாக் வாயர்கள் - அவ்வளவே!

அவர்கள் சாதி பார்த்து, மதம் பார்த்து வாக்களித்தார்கள் எனில், நாம் அதைவிடக் கேவலமாக காசும், துணிமணியும், பொருளும், சாராயமும்  வாங்கிக்கொண்டு வாக்களித்தோம்

சாதி, மத விஷயத்திலும் நாம் ஒன்றும் ஒழுங்கில்லை

வேட்பாளர் தேர்விலிருந்து எல்லாமே அந்தந்தத் தொகுதியின் சாதி மதக் கணக்குப் பார்த்தே

அவர்களது பட்டவர்த்தனமாக வெளியே தெரியும், இங்கே இலைமறை காயாக

அவ்வளவே!

வேண்டுமானால், கர்நாடகாவில் பாதுகாப்பு கேட்டிருக்கும் ஒரு ஜோடியிடம் கேளுங்கள், தமிழகத்தில் ஜாதி யுவராஜ் மட்டத்தில் மட்டுமல்ல, எந்த உயரத்தில் இருக்கிறது என்று சொல்வார்கள்!

காங்கிரஸ் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியிருந்தால் குரங்குக் குப்பன்களுக்கும், மோடி மஸ்தான்களுக்கும் அரசியலில் என்ன வேலை

பிழை, அவர்களுக்கு வாய்த்த கட்சிகளிடம், மக்களிடமல்ல!

தொழில்துறையில், ஜவுளித்துறையில், எலெக்ட்ரானிக் உபகரணங்களில், கட்டுமானப் பொருட்களில் வடக்கிலிருந்து வருபவை என்ன, இங்கிருந்து செல்பவை என்ன என்பதை கணக்கெடுத்துப் பாருங்கள், பான்பராக் வாயர்கள் எங்கிருக்கிறார்கள் என்று புரியும்!

பானிபூரி விற்கிறார்கள் என்று திண்ணைக்கிழவிகள்போல் டாஸ்மாக் வாசலில் நின்றுகொண்டு ஏகடியம் பேசிக்கொண்டே இருங்கள், இன்னும் பத்தாண்டுகளில் பாதாளத்தில் கிடப்பீர்கள்!

ஏதாவது கண்கூடான நிரூபணம் வேண்டுமென்றால், செவ்வாய், புதன் கிழமைகளில் ஈரோடு ஜவுளி சந்தைக்கு போய் ஒருமணிநேரம் அமைதியாக வேடிக்கை பாருங்கள்

உள்ளூர் கோடீஸ்வர முதலாளிகள் உடைந்த ஹிந்தியில் சேட்டு சேட்டு என்று அந்தப் பான்பராக் வாயர்களின் காலைக் கழுவி குடிக்காத குறையாக இறைஞ்சுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்!

ஆண்ட பரம்பரை ஜாதிகளின் முகத்தில் அப்போது அத்தனை அசட்டுக்களை வழியும்!

மக்களில் எவரும், யாருக்கும் தாழ்ந்தவரில்லை! அவரவர் துறையில் அவர்கள் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறார்கள்!

அரசியல்வியாதிகள் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அளவுக்குமீறிக் குதித்து எகிறி இணையத்துக்கு வெளியே விழுவீர்களானால், உண்மை முகத்தில் அறைந்தே கொன்றுவிடும்!

இப்போதே ஒரிஸாவிலிருந்தும், வடமாநிலங்களிலிருந்தும் புகைவண்டிகள் நிரம்பி வழிய அவர்கள் வந்து இறங்காமல்போனால், ஸகில்ட் லேபர் என்பதே இல்லாமல் பல தொழில்கள் நசிந்திருக்கும்!

ஐஐடியில் அதிக எண்ணிக்கையில் இருந்த நாம் இப்போது ஆந்திரர்களுக்கு வெகு பின்னால்!

ஆட்சிப்பணிகளில், கேட்கவே வேண்டாம், ஒருகாலத்தில் டெல்லி செகரட்ரியேட்டில், தடுக்கி விழுந்தால் தமிழன் மேஜையில்தான் போய் விழவேண்டும்!

இன்று கோவை வருமானவரித்துறை அலுவலகத்துக்குள் மலையாளம் தெரியாமல் நுழைவதே விரயம்!

முதலில், நம் முகத்தில் பூசிக்கொண்டிருக்கும் கறைகளை களையுங்கள்

அதுவரை

அவர்கள் முதுகு அழுக்கோடு பான்பராக்கை துப்பித் திரியட்டும்!

இத்தனையும் படித்துவிட்டு, வழக்கம்போல் ஏதோ ஒரு வண்ண சங்கி என்று சொல்லி, உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!

காலத்தே கல்லாத பாடம் கவைக்குதவாது

கவனம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக