திங்கள், 4 ஏப்ரல், 2022

நட்பென்பது அத்தனை அவசியமா?

"அந்த ஆளைப் பத்தி யோசிச்சியா?" 
சம்பந்தமே இல்லாமல் வந்து விழுந்த கேள்வி- தலையும் புரியாமல் வாலும் புரியாமல்! 
"எந்த ஆளு?" 
சென்ட்ரல் ஸ்டேஷன் வாசல்ல கலர் கலரா ஜொலிச்ச ஃபவுண்டன், நிழற்குடை எல்லாத்தயும் வளைச்சு வளைச்சு செல்ஃபி எடுத்து போஸ்ட் பண்ணிட்டு வந்து உட்கார்ந்த தமிழ்ச்செல்வன், 
“ம்ம்ம் .. காலைல நம்மகூட ட்ரெயின்ல வந்தவர்" புதன்கிழமை ஒரு கல்யாணச் சாவுக்கு இண்டர்சிட்டி எக்ஸ்ப்ரஸ்ல சென்னைக்கு கிளம்பும்போது தெரியாது அப்படி ஒரு ஆளை சந்திக்க நேரும்ன்னு. 

பொதுவாகவே பயணத்தின்போது படிப்பது, பாட்டுக் கேட்பது எல்லாம் எனக்குப் பிடிக்காது! அதைவிட அலர்ஜி பக்கத்தில் இருக்கறவங்களோடு பேச்சுக்கொடுப்பது! வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கு ஒரே பொழுதுபோக்கு! 
மூணுபேர் உட்கார்ற சீட்ல ஜன்னலோரம் அந்த ஆளுக்கு! அடுத்த ரெண்டும் எங்களுக்கு - எனக்கும் தமிழ்செல்வனுக்கும்! 
கோவைல நானும், திருப்பூர்ல தமிழ்ச்செல்வனும் ஏறிக்கறதா ஏற்பாடு! அதனால அந்த ஆள் இருந்தது எனக்கு ஒன்னும் உறுத்தலை! 
என்னைமாதிரியே கொஞ்சம் சிடுமூஞ்சியா இருந்ததால ரெண்டுபேரும் ஏதும் பேசிக்கவே தோணல! தமிழ்ச்செல்வன் எனக்கு நேரெதிர்! வண்டி கிளம்பிய ரெண்டாவது நிமிஷம், 
ஐயம் தமிழ்ச்செல்வன்! நீங்க? 
ஷாக் அடிச்சமாதிரி திரும்பிப்பார்த்த ஆள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கிட்டார்! 
தேவையாடா உனக்கு? 
 கேட்டது வேஸ்ட்! காஃபி, அந்த விளங்காத டிஃபன் இப்படி ஒவ்வொண்ணும் வாங்கும்போது அந்த ஆளை விடாமல், சார், உங்களுக்கு? 
கேட்டுக்கேட்டே சேலம் வரும்போதே ரெண்டுபேரும் சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க! 
சென்னைல எங்கே போறீங்க? 
எங்கேயும் இல்லை! திரும்ப இதே வண்டில கோயமுத்தூர்தான் வரணும்! 
இந்த பதில் தந்த ஷாக் என்னையும் அவங்க பேச்சை கவனிக்க வெச்சுச்சு! 
என்ன சார் சொல்றீங்க? 
ஆமாம், நான் இதே ட்ரைன்ல திரும்ப போய்டுவேன்! அப்போ எதுக்கு வர்றீங்க? 
சும்மாதான், என்ன பண்றதுன்னு தெரியல! 
 அதுக்கு இந்த வெயில்ல தேவையே இல்லாம அலையணுமா? பேசாம வீட்டோட இருக்கலாமே? 
என் மூஞ்சியைப் பார்க்க எனக்கே பிடிக்கல! கொலைகாரனைப் பார்க்கற மாதிரி இருக்கு! வெளியே வந்தா வேற மூஞ்சிகளை பார்த்தாலாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும், பழகின இடத்துல இருக்கவே பிடிக்கல! வீட்ல இருந்தா என் மூஞ்சில நானே காறித் துப்பிடுவேன். அல்லது தற்கொலை பண்ணிக்குவேன். அத அவாய்ட் பண்ணத்தான் இப்படி வெளிய கிளம்பிட்டேன். ஒருவாரமா எங்கே போறேன்னே தெரியாம ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்! 

அப்படி என்ன செஞ்சீங்க? 

ஒரு கொலை! 

இப்போதான் அந்த ஆளை முழுசா கவனிச்சுப்பார்த்தேன்!
ஐம்பது வயதுக்குள்ள இருக்கலாம்! ஒல்லியா உயரமா இருந்த அந்த ஆளைப்பார்த்தால் கொலை செய்யுமளவுக்கு தைரியம் இருக்கற ஆள் மாதிரி தெரியல! ஓரளவுக்கு படிச்சு, நல்ல நிலைல இருக்கற ஒரு ஆபீஸர் தோரணை! 

பொய் சொல்லாதீங்க ஸார், உங்களைப் பார்த்தா அப்படித் தெரியல! 

ஒரு மனுஷன் மூஞ்சியை வெச்சு அவனை எடை போடமுடியும்ன்னா வாழ்க்கை ரொம்ப ஈஸியா போய்டும்.  நீங்க என்னை என்னன்னு கூப்பிட்டீங்க? 
சார்ன்னு! 
என் முதல் பிரச்னை அதுதான்! அந்த மரியாதை! என்னை தரையிறங்கவே விடாத மரியாதை! என்னை தள்ளியே வெச்சிருக்கற மரியாதை! அதுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு! 
சார், ஏதோ கொலை செஞ்சதா சொல்லிட்டு, இப்போ மரியாதை பத்தி ஏதோ பேசிட்டிருக்கீங்க? 
தயவுசெய்து என்னை சார்ன்னு கூப்பிடாதீங்க ப்ளீஸ்! முருகேசன்னு சொல்லுங்க! 
ஓகே மிஸ்டர் முருகேசன், சொல்லுங்க! 
மறுபடியும் பார்த்தீங்களா, எய்தர் நான் முருகேசன் சார், ஆர் மிஸ்டர் முருகேசன்! 
முன்னாடியே பின்னாடியே ஏதும் இல்லாமல் என்னை வெறும் முருகேசனா என்னை யாரும் நினைச்சுக்கூடப் பார்க்கறதே இல்லை! இதுதான் நான் செஞ்ச கொலைக்கு காரணம் அப்படின்னு சொன்னா நம்புவீங்களா? 

ஆள் கொஞ்சம் கிறுக்கு போலன்னு நினைக்கும்போதே, என்ன சார்,பைத்தியக்காரன்ன்னு தோணுதா? அப்படியில்லை 
 பரவாயில்லை என் கதையை முழுசா கேட்டால், அப்படித்தான் நினைப்பீங்க! இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு லூசு மாதிரி பேசறான்னு! 
பரவால்ல! இனி நாம் சந்திக்க வாய்ப்பு ரொம்ப கம்மி! நீங்க எனக்கு டோட்டல் ஸ்ட்ரேஞ்சர். நீங்க என்னை எப்படி நினைச்சா என்ன? சொல்றேன், ஏதாவது புரியுதான்னு பாருங்க! 
தண்ணீர் பாட்டிலை எடுத்து நிதானமா குடிச்சு முடிச்சுட்டு , 
கொலைன்னா சொன்னேன்? கொலைதான் அது. கத்தியை எடுத்து குத்துறதும், கழுத்தை நெரிக்கறதும் மட்டும்தான் கொலையா? 
நான் செஞ்ச கொலை அதல்ல! ஒரு நட்பை, ஒரு உறவை, ஒரு எதிர்காலத்தை கொன்னது! அது ஃபிசிக்கலா கொலை செய்யறதைவிட கொடுமையானது! 
மொதல்ல என்னைப்பத்தி சுருக்கமா சொல்லிடறேன்! நான் அந்தக் காலத்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்! பெண்டியம் காலத்து ஆளு! அப்பா அரசாங்க அதிகாரி! அடிக்கடி மாறுதல் வர்ற உத்தியோகம்! அதனால, மூணு வருசத்துக்கு மேல எந்த ஊரிலும் இருந்ததில்லை! அதனாலேயே நிரந்தரமான நட்பே அமையல! இப்போ இருக்கற மாதிரி டெலிபோன் வசதிகள் இல்லாத காலம்! அதனால, அந்தந்த ஊர்ல ஒரு தற்காலிக நண்பர்கள்! அது மறந்து அடுத்த ஊர்! 
இப்படி வேர் இல்லாமலே சுத்திக்கிட்டு இருந்ததால, ஒருமாதிரி தனிமையே பழகிப்போன வாழ்க்கை! 
இது ஒரு மேட்டரா சார், நானும்கூடத்தான்… அப்படின்னு நான் பேச ஆரம்பிக்கும்போதே தமிழ்ச்செல்வன் என் கையைப் பிடித்து அழுத்தி பேச்சை நிறுத்தினான்! 
நீங்க சொல்லுங்க முருகேசன்! 
தாங்க்யூ தமிழ்! ரொம்பநாள் பழகியமாதிரி உரிமையா பேர் சொல்லி பதில்! 
அப்பாவையும், அவர் தோரணையும் பார்த்துப்பார்த்து அதுதான் வாழ்க்கைன்னு என் மனசிலும் பதிஞ்சு போச்சு! போதாக்குறைக்கு, அன்னைக்கு ஊரிலேயே இல்லாத படிப்பு, அது தந்த பெரிய இடத்து வேலை! போற இடத்தில் எல்லாம் கொடுக்கப்படற மரியாதை, என்னோட இயல்பு நிலையை ரொம்ப தூரம் மாத்திடுச்சு எனக்குத் தெரியாமலே! இன்னைக்கு எனக்கு அறுபத்து மூணு வயசு! 
பார்த்தா நம்பவே முடியல சார்! 
உண்மைதான்! அது என் உடல் வாகு!அதை விடுங்க! இந்த சில மணிநேரமாவது காம்ப்ளிமெண்ட் எதுவும் இல்லாம பேசறேனே ப்ளீஸ்! 
ஃபீல்டுல அப்டேட்டா இருந்ததால, வேலைக்குன்னு போற எல்லா இடத்திலும், தலைமைக்கு அடுத்த இடம்! அதற்கான மரியாதை! 
இதோ, இப்போகூட கோவைல ஒரு கம்பெனில மூணு வருஷமா டெக்னிக்கல் டைரக்டர்! 
கம்பெனி கார், ட்ரைவர், வீடு, எல்லாமே இருக்கு! யார்கிட்ட பேசப்போனாலும், எழுந்து நின்னு மரியாதையா பேசறதுதான் இந்த முப்பது வருஷ பழக்கம்! எம்டி உட்பட, யாருமே பேர் சொல்லி கூப்பிடறது இல்லை! 
இதேதான் குடும்ப வட்டத்திலும்! 
ஒரு மரியாதைப்பட்ட தூரத்தில் வைத்துத்தான் அன்பும். ஜெயித்தவன் வாழ்க்கை எவ்வளவு வலிக்கும்ன்னு எனக்குத் தெரியாமலே போயிருந்திருக்கும், இந்த ஆபீஸ்ல நானா கொண்டுவந்த சீட்டிங் அரேன்ஜ்மெண்ட் இல்லாம இருந்திருந்தா! 
தனித்தனி அறைகளில் மூச்சு முட்டறதா உணர்ந்தபோது, சின்னச்சின்ன க்யூபிக்கலா தடுத்து, அதிலும் நடுவில் ஒரு க்யூபிக்கிலில் உட்கார்ந்தபோது புதுசா பிறந்த மாதிரி இருந்துச்சு! 
என்னைவிட சின்னப்பசங்களும் பொண்ணுகளும், இந்த காலத்து வேலைச்சூழல்ல சந்தோஷமா வேலை செய்யறதை ஏறத்தாழ முழு நேரமும் பார்க்க ஆரம்பித்தபோதுதான் எதை இழந்திருக்கிறேன் என்று புரிய ஆரம்பித்தது! 
எனக்கு எல்லாமே இருக்கிறது, படிப்பு, வேலை, வசதி சொந்தம், பந்தம் எல்லாமே! ஆனா எனக்கு இல்லாமலே போன முக்கியமான ஒன்னு, நட்பு! 
மெதுவா எல்லோர் கூடவும் சகஜமா பேச ஆரம்பித்தேன்! அது என் இத்தனை வருட இயல்புக்கு ஒத்துவரல! 
அதற்கு ஏத்தமாதிரி, வயசு வித்தியாசம் வேறு! 
கொஞ்சம் நெருங்கிப்பழகிய எல்லோரும், அண்ணான்னோ அப்பான்னோ முறைவெச்சு கூப்பிட ஆரம்பித்து, தானா ஒரு மரியாதையும், டிஸ்டன்ஸ்சும் கிரியேட் ஆனதையும் தவிர்க்க முடியல! 
சரியா சொல்லணும்ன்னா, ஷாலினி, ரவி, மைதிலி, ரமேஷ், எல்லோருமே எனக்கு நண்பர்கள் போலத்தான், ஆனா, ஒரு அண்ணன் தம்பி, தங்கைகளுக்கு உள்ள கட்டுப்பாடு, மரியாதைகளோட! 
இதுதான் எனக்கு ஆல்ரெடி ஏராளமா இருக்கே, இதுவா நான் தேடியது? 
இல்லைன்னு சொல்றமாதிரி வந்தார் குமார்! என்னைவிட இருபது வயசுக்கு மேல சின்னவர்! கிட்டத்தட்ட நாற்பது வயசு! சொன்னால்தான் நம்பமுடியும்! அத்தனை இளமை, தோற்றத்திலும், முக்கியமா நடவடிக்கையிலும்! பேரழகன்! ஆனால் அதை சொன்னால் கோபிச்சுக்குவார்! எந்தப்பொண்ணு பார்த்தாலும் தயங்காம ப்ரொபோஸ் பண்ணிடும், அத்தனை அழகு, அப்படி ஒரு ஆட்டிட்யூட்! 
அவனா நீயின்ற மாதிரி பார்க்காதீங்க! ஒருத்தரைப் பற்றி சொல்லும்போது அவர்களோட நிறைகள் எல்லாத்தையும் சொன்னாத்தானே உங்களுக்குப் புரியும்? 
இல்லை சொல்லுங்க, நாங்க எதுவும் குறுக்கே பேசல - இது தமிழ்ச்செல்வன்! 
நான் அவர் கண்ணில் ததும்பிய கண்ணீரை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாவே உட்கார்ந்திருந்தேன்! 

குமாரை நான் சந்தித்தது என்னோட வரமும், சாபமும்! அவர் வராம இருந்திருந்தா, நட்புங்கறதே எனக்குத் தெரியாம போயிருக்கும்! 
அதே சமயம், ஒரு நண்பனின் பிரிவு இத்தனை வலிக்கும் என்பதுவும்! 
 குரல் தழுதழுப்பதைப் பார்த்து, தமிழ்ச்செல்வன் இயல்பாக கையைப் பற்றி ஆறுதலாய் அழுத்த, காத்திருந்ததுபோல் கண்ணீர் வழிய, சில வினாடிகளில் சின்னப்பிள்ளைபோல தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தார்! 
 எல்லாமே ஒரு நிமிடம்தான்! 
பழையபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியே வெறிக்க ஆரம்பித்துவிட்டார்! 
எனக்குத்தான் அந்த சூழல் மொத்தமாகவே விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது! அறுபதைக்கடந்த ஒரு மனிதன், முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரிடம், இப்படி ஒரு பொது இடத்தில் அழமுடியும் என்பதே அபத்தமாக இருந்தது! அதிலும் அத்தனை தோரணையான ஒரு மனிதர்! 
கொஞ்சநேரம் சகிக்க முடியாத அமைதி, ட்ரெயின் ஓடும் சத்தம் தவிர ஏதுமில்லை! 
அந்த நேரத்தில் காஃபி வர, எங்களை எதுவுமே கேட்காமல், மூணு காஃபி! சொன்னவர், எங்கள் பக்கம் திரும்பி, ஸாரி, ஸாரி, கொஞ்சம் விநோதமா நடந்துக்கிட்டேன்! 
பரவாயில்லை முருகேசன்! - இது தமிழ்ச்செல்வன்! நிதானமாக காஃபி குடித்து முடித்தவர், மறுபடி ஒரு ஸாரி சொல்லி ஆரம்பித்தார்! 
என்வரைக்கும், செக்ஸை விட அந்தரங்கமானது அழுகையும் கண்ணீரும்! 
மலைபோல இழப்பு வந்தபோதும், நான் அழுது யாரும் பார்த்ததில்லை! 
எனக்கு அழத்தெரியும்ங்கறதே என் அம்மா, பெண்டாட்டி பிள்ளைகளுக்கு கூட தெரியாது! 
இன்னைக்கு இத்தனை கூட்டத்தில்... 
எவ்வளவு கடினமான அலுவலக, குடும்ப  பிரச்னைகளையும் சர்வ சாதாரணமா தீர்க்கத்தெரிஞ்ச எனக்கு இந்த உணர்வுச் சிக்கலை எப்படி கையாள்றதுன்னே தெரியல! எல்லாமே என்னைத்தேடி வர்ற வாழ்க்கையை வாழ்ந்துட்டு, நானாகத் தேடிப்போன ஒன்னு மொத்தமா கைவிட்டுப் போயிடுச்சு!
இழப்பின் வலி எத்தனை கொடுமை! 
உங்களுக்கு வினோதமாக இருக்கலாம் இனி நான் சொல்லப்போவது! 
குமாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை நானே முப்பது வருடம் பின்னால் போய் கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது - அதே வேகம், துடிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம்! 
எல்லாவற்றுக்கும் மேல், வயது, பதவி, ஜெண்டர் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இயல்பாய் பேசும் அநியாய நேர்மை! 
ஆபீஸில் எல்லோருக்கும் நான் ஸார், அல்லது அண்ணன்! குமாருக்கு மட்டும் முருகேசன்! 
தேடித்தேடிப் போய் பேச ஆரம்பித்தேன்! 
என் வலிந்த நேசம் அவருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்திருக்கிறது! 
ஆனாலும் அவருக்கு இயல்பான அந்த இரக்ககுணம் என்னோடு நட்பு பாராட்ட ஆரம்பித்தது! 
தினசரி குட்மார்னிங் ஸார்களுக்கு மத்தியில், குமாருடைய குட் மார்னிங் முருகேசன் எனக்கு அத்தனை ஆனந்தம்! 
என்னை இப்படி பெயர் சொல்லிக்கூப்பிட ஆட்களே இல்லை! 
உங்களுக்கு நம்பக் கஷ்டமாகக்கூட இருக்கும்! சொந்தத்தில்கூட, என் அம்மா உட்பட, யாருமே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுவதை நிறுத்தி பல வருடம் ஆகிடுச்சு! 
இதுக்கு என்ன காரணம்ன்னு தேடிப்போனால், தலைக்குப் பின்னால் நானாக வரைந்துகொண்ட ஒளிவட்டம்! 
ஆனால், என்னை தரையிறக்கி, என்னையும் தன்னைப்போல் ஒருவன் என்று நடத்தியவர் குமார்! பேச்சுக்கு இடையே, யோவ் என்றும், கே பி மாதிரி பேசாதே என்றும் சரளமாக அவர் சொல்லும்போது, இத்தனை நாள் எந்த இன்டிமசியை தொலைத்திருக்கிறேன் என்பது புரிஞ்சுது! 
அப்புறம் என்ன ஆச்சு - இது மறுபடி தமிழ்ச்செல்வன்! பதில் கொஞ்சம் சத்தமான பாட்டாகவே வந்தது! நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி! அக்கம் பக்கத்து சீட்டில் இருப்பவர்கள் எல்லாம் திரும்பிப்பார்க்கும்படி கொஞ்சம் உரக்கவே பாடிய அவர், சட்டென்று தன் கன்னத்தில் ஓங்கி அறைந்துகொண்டு எழுந்து பாத்ரூம் பக்கம் போய்விட்டார்! 
பேயறைந்ததுபோல் உட்கார்ந்திருந்த தமிழ்செல்வன்கிட்ட , 
இந்த ஆள் முழு சைக்கோ. மரியாதையா எழுந்து வேற கம்பார்ட்மெண்ட் போய்டலாம் வா! 
இல்லை, நீ பயமா இருந்தா எழுந்துபோ, நான் வரல! அந்த ஆள் எல்லாவற்றையும் கொட்டிடறது அவருக்கு நல்லது! 
முட்டாள்தனம்! அந்த ஆள் உன்னை கடைசில கடிச்சுவைக்கப்போறான்! 
பரவாயில்லை! நான் சென்னை போகும்வரை அந்த ஆளை விடப்போவதில்லை! 
ஹீ நீட்ஸ் எ ஹீலிங்! 
பதில் சொல்ல வாயைத் திறந்தவன், அந்த ஆள் வருவதைப் பார்த்து அமைதி ஆகிட்டேன்! 
நல்லா அழுதுட்டு வந்திருக்கான்னு மூஞ்சியைப் பார்த்தாலே தெரிஞ்சுது! 
ஸாரி தமிழ்! இனி கம்போஸ்ட்டா இருப்பேன்! 
உங்க நண்பருக்கு என்னைப் பிடிக்கலை போல! நீங்களும் என்னை மன்னிச்சுக்கங்க ஸார்! 
பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்! 
எனக்கு இந்த சைக்கோத்தனங்கள் எல்லாம் அலர்ஜி! அவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் எனக்கு சுவாரஸ்யம் குறைந்துபோனது! 
ஸாரி தமிழ். கொஞ்சம் விநோதமா நடந்துக்கிட்டேன், மன்னிச்சுக்கங்க! 
சொல்லுங்க, அப்படி என்ன ஆச்சு? 
எல்லாமே நல்லாத்தான் போய்ட்டிருந்தது! 
எனக்கு குமாரைப் பார்க்கும்போது, இனி மிச்சமிருக்கும் ஆயுளுக்கும் அவரை என்னோடு இறுக்கிப் பிடிச்சு வெச்சுக்கணும்ன்னு தோனிக்கிட்டே இருந்துச்சு! அந்த வேகம், அந்தக் கோபம், அந்த ஸ்ட்ரைட் ஃபார்வார்ட்நெஸ்!. 
எல்லாத்துக்குமேல், எல்லோர் மீதுமான அந்த அக்கறை! இன்னொன்னு, அவர் எதையுமே கற்றுக்கொள்ளும் வேகமும், ஈடுபாடும்! 
என்கிட்டேயும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யுது! பைத்தான் சாஃப்ட்வேர் மாதிரி சில விஷயங்கள்ல நான் கிங்! எல்லோருமே என்கிட்டத்தான் சந்தேகம் கேட்பாங்க, ஒரு விஷயம் கத்துக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, அதில் எக்ஸ்பர்ட் ஆகாம விட்டதில்லை! 
ஆனால், என்னோட கூடப்பிறந்த இன்னொரு குணம், கத்துக்கிட்டதும் அதன்மீது ஆர்வம் குறைவதும், யாராவது கொஞ்சம் தடம் மாறிப்பேசினால் அதை அப்படியே உதறிப்போகும் கோபமும்! அப்படி ஒரு சூழலில், இன்னைக்கு உச்சத்தில் இருக்கும் ஒரு கம்பெனி வேலையை உதறி எறிஞ்சு வந்ததும், அந்த சாஃப்ட்வேர் ஸ்கில்லை அதற்குப்பிறகு உபயோகிக்காமல் விட்டதும் எனக்கு நியாபகம் வந்தது! குமாருக்கு அப்படியே அந்த ஸ்கில்லை மாற்றிவிட்டு, நான் அடைய நினைச்ச உயரங்களை குமாரை அடையவைத்து ரசிக்க நினைச்சதும், நான் ஒன்று சொன்னால், நூறு கற்றுக்கொள்ளும் குமாரின் வேகமும், எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது! 
ஆனால், ஆரம்பத்தில் இயல்பா இருந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக அவரைத் தக்கவைத்துக்கணுமே அப்படின்ற ஆதங்கத்திலும், பேராசையிலும், என்னோட இயல்பைத் தொலைக்க ஆரம்பித்தேன்! 
அங்கேதான் நான் தடுமாறினேன் என்பது எனக்குப் புரியல, 
ஆனால் குமாருக்கு என் இயல்பு மாறுவது புரிய ஆரம்பிச்சுது. 
இறுக்கிப் பிடித்துக்கொள்ளும் ஆர்வத்தில், எல்லை மீறி எதிர்பார்க்க ஆரம்பித்தேன்! 
எந்நேரமும் அவர் என் கூடவே இருக்கணும், எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கணும் அப்படின்னு பேராசை. அவர் எனக்கு என்னவாக இருக்கணும்ன்னு யோசிக்கத் தெரிஞ்ச எனக்கு, நான் அவருக்கு யார் என்பது புரியல! 
இந்த வயசில் எனக்குக் கிடைத்த ஒற்றை சிநேகம் என்னை பேராசைக்காரன் ஆக்கியிருக்கிறது! 
அவருக்கு இருந்த ஆயிரம் நட்பு வட்டத்தில் நானும் ஒன்னு. ஆனால் எனக்கு இருந்த ஒற்றை நட்பு அவர் மட்டும்தான்! 
இன்னும் சரியா சொல்லப்போனால், அவர் உலகத்தில் எனக்கும் இடம் இருந்தது, ஆனால் என் உலகமே அவராகத்தான் இருந்தார்! 
இதை அவரிடம் சொல்ல எனக்கு சமயம் வாய்த்தபோதும், எனக்கு நட்பு வட்டமே இல்லைங்கற விஷயத்தை சொல்ல நான் தயங்க ஒரு காரணம் இருந்தது! 
ஏன் எனக்கு ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கல அப்படின்ற காரணத்தையும் சொல்லவேண்டி வரும்! அது என்னோட மிகப்பெரிய அந்தரங்கம்! 
அதை குமார்கிட்ட சொல்லித்தான் ஆகணும், ஏன்னா, அவர்தான் என் ஒரே நட்பு, ஆனால் அதை பாதி வழியில் சொல்வது எனக்கு இன்னொரு உள்நோக்கம் இருப்பதாய் பட்டுவிடும், 
அதிலும் என் முட்டாள்தனங்களால் குமார் என்னைவிட்டு விலகிப்போகும் நிலையில் ஒரு கேவலமான புரிதலுக்கு வழிவகுத்துவிடும் என்ற பயம்! 
சரி, இப்போ இவ்வளவு தெளிவா பேசற நீங்க இதை ஈஸியா பேசி புரியவெச்சிருக்கலாமே? 
இல்லை! அப்போது எனக்கு நான் யார் என்பதே புரியாத அளவுக்கு பெரும் குழப்பத்தில் இருந்தேன்! இன்செக்யூரிட்டி! அதுதான் சரியான வார்த்தை! நடக்கும் ஒவ்வொரு செயலையும் நேரிடையாகப் புரிந்துகொள்ளாமல், இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று தப்பாகவே யோசிக்கும் மனநிலை! சரி, குமார் ஒரு பொண்ணா இருந்திருந்தாலும் இப்படித்தான் இறுக்கிக்கணும்ன்னு அலைஞ்சிருப்பீங்களா? 
என் கேள்வியில் இருந்த கிண்டல் புரிந்தாலும், நிதானமாகச் சொன்னார், 
நட்பில் ஆண் பெண் வித்தியாசம் பார்க்கும் முட்டாள்தனம் எனக்கு இல்லை சார்! 
ஒரு சபிக்கப்பட்ட நாளில், ஒரு சாதாரண விஷயத்தை நான் அசிங்கமாக ஊதி பெரிது படுத்தியதில், இனி என் முகத்திலேயே முழிக்காதே என்று பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு முற்றாக விலகிப்போய்விட்டார் குமார்! சரி, கொஞ்சநாள் விட்டு கொஞ்சம் சூடு ஆறியதும் உங்கள் தரப்பை விளக்கியிருக்கலாமே? 
அப்போதே ஒரு வார்த்தை, நான் ஏதாவது தப்பாக செஞ்சிருந்தா சொல்லுங்க குமார், என்னை நான் திருத்திக்கறேன்னு கெஞ்சினேன்! 
உங்களைத் திருத்த நான் தெரபிஸ்ட் இல்லை சார் என்று சொன்ன அந்த வார்த்தையில் அத்தனை வெறுப்பு! சரி, மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று இருந்தபோது, மாலையில் வந்து இறங்கியது கடைசி இடி! 
இனி, நான் சாஃப்ட்வேர் படிக்கப்போவதில்லை எந்நாளும் என்று தீர்மானமான செய்தி! 
அப்போதுதான் நான் செய்த கொலையின் வீரியம் எனக்கு உறைத்தது.
ஒரு நல்ல நட்பைக் கொன்றதுகூட கொலையல்ல! 
ஒரு மகத்தான புத்திசாலி வாலிபனின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை கொன்றதுதான் பெரும் பாதகம்! 
நான் இல்லாவிட்டால், வேறு யார் மூலமாவது அவர் கற்றுத் தேர்ந்திருப்பார்! நானாக வலியப்போய் கற்றுக்கொடுக்கிறேன் என்று குட்டையைக் குழப்பி, இனி எந்நாளும் அதை நான் கற்றுக்கொள்ளமாட்டேன் என்று அவர் வெறுத்துப்பேச வைத்ததுதான் கொடூரக்கொலை! 
இல்லை, கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள அவர் கொஞ்சநாளில் தானாகவே கற்றுத் தேர்ந்துவிடுவார்! கவலைப்படாதீங்க! 
உங்களுக்கு குமாரைத் தெரியாது தமிழ், அவர் பிடிவாதம் என்னைவிடப் பெரியது! 
சரி, நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? இப்படியே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கப் போகிறீர்களா? 
இல்லை! மனம் சமப்படும்வரை! அப்படி சமாதானம் ஆகாவிட்டால், ரயிலில் உட்காருவதற்கு பதிலாக தண்டவாளத்தில் உட்கார்ந்துவிட்டுப் போகிறேன்! பிரச்னை மொத்தமாக முடிந்துடும்!
இதைவிட அபத்தமே இருக்கமுடியாது! அப்போ, உங்க குடும்பம், மத்தவங்க, யாருமே உங்களுக்கு முக்கியம் இல்லையா?
குடும்பத்துக்கும், மத்தவங்களுக்கும் தேவையான எல்லாமே நான் செஞ்சு முடிச்சுட்டேன்! இனி அவங்களுக்கு நான் இருந்தே ஆகணும்ன்ற அவசியம் இல்லை! இது எனக்கே எனக்குன்னு நான் ஆசைப்பட்ட ஒரு விஷயம்! அதில் ஒருவரை இந்த அளவு காயப்படுத்தியிருக்கிறேன்! அது என்னை வாழவிடாது!
லூசு! - சட்டென்று என் வாயில் வந்த வார்த்தை அவரை பாதித்ததாகவே தெரியல!
தமிழ்ச்செல்வன்தான் என்னை முறைச்சுட்டு, அவர்கிட்ட பேச ஆரம்பிச்சான்!
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, உங்க ஆபீஸ் பெயரைச் சொல்லுங்கள், உங்கள் சார்பாக நான் போய் பேசிப்பார்க்கிறேன்! 
அப்படி ஏதாவது அடிமுட்டாள்தனம் செய்து அவரை நான் இருக்கும் ஆபீஸை விட்டே போகச் செய்துடாதீங்க, கதை கேட்டோமா, பொழுதைப் போக்கினோமான்னு உங்க வேலையைப்பாருங்க! 
பெரிதாக கையெடுத்துக் கும்பிட்டவர், சட்டென்று எழுந்து, கோவைக்கு திரும்பிப் போகும்போது எனக்கு அடுத்த கம்பார்ட்மெண்ட் என்று சொல்லிக்கொண்டே திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டார்! அதற்குப்பின் வேலையெல்லாம் முடித்து திரும்ப வந்து சென்ட்ரல் ஸ்டேஷனில் உட்காரும்போது நான் அந்த ஆளை சுத்தமாக மறந்துபோனேன்! 
ஆனால், தமிழ்ச்செல்வன் மறக்கவில்லை என்பதற்கு அடையாளம்தான் ஆரம்பத்தில் கேட்ட கேள்வி! 
அந்த சைக்கோ கிழவனை நீ இன்னுமா சுமந்துக்கிட்டு திரியறே? வொர்த்லெஸ் இடியட்! அதெல்லாம் கீழ்ப்பாக்கத்தில் இருக்கவேண்டிய கேஸ்! 
உனக்கு ஏன் அவர் மேல இவ்வளவு கோபம்? கோபமெல்லாம் இல்லை தமிழ்ச்செல்வன். 
இன்னும் ரெண்டு நாள்ல அப்படி ஒரு ஆளை நாம் சந்திச்சதே மறந்துபோகும். அந்த ஆளுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் எதுக்கு! 
சரி, உன் அபிப்ராயம் என்ன அந்த ஆளைப்பத்தி? வேஸ்ட் ப்ராடக்ட்! தனக்கு என்ன வேணும்ன்னு தெளிவா தெரியாம, தன்னையும் அடுத்தவங்களையும் சிறுமைப்படுத்தி திரியற ஜீவன்! 
என்னவோ ஒரு நட்பு முறிஞ்சு போனதுக்கு காதல்ல தோத்தமாதிரி இத்தனை பில்ட்அப் வேற! 
நான் அந்தக் குமார் இடத்தில் இருந்திருந்தால் எப்போதோ செருப்பால் அடித்து துரத்தியிருப்பேன், சுத்த லூசுக்கூ .. 

அடிபட்ட மாதிரி ஒரு பார்வை பார்த்தான் தமிழ்ச்செல்வன்! 
நம் ஐம்பது வருட பழக்கத்தில், உன் வாயிலிருந்து வரும் முதல் கெட்டவார்த்தை! 
அப்போ, அந்த அளவுக்கு அந்த ஆள் உன்னை பாதிச்சிருக்காரு! 
உனக்கு ஏன் அந்த ஆள் மேல இவ்வளவு வெறுப்புன்னு நான் சொல்லட்டுமா? 
போடா, நீ வேற லூசு மாதிரி உளறிக்கிட்டு! அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கு? அந்தக் கிறுக்கன் எதற்கு என்னை பாதிக்கணும்? 
காரணம் என்னன்னு நான் சொல்லட்டுமா? 
சொல்லேன், கேட்போம், ட்ரைனுக்கு இன்னும் டைம் இருக்கு! 
இந்த நக்கல்கூட அந்த வெறுப்பின் விளைவுதான் தம்பி! உனக்கு அந்த ஆளை உன்னோட ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சிருக்கு! 
கொஞ்சம் குறுக்கே பேசாமல் நான் சொல்றதைக்கேளு ப்ளீஸ்! 
ஏன்னா, அந்த ஆள் அல்மோஸ்ட் உன்னோட ஆல்டர்ஈகோ. 
இதோ, இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு, எத்தனை நிழற்குடை, அலங்காரம், கலர்கலரா ஃபவுண்டைன். இன்னைக்குத்தான் சிஎம் திறந்து வெச்சிருக்கார். எல்லோரும் செல்ஃபியோ போட்டோவோ எடுத்துட்டிருக்காங்க! குறைஞ்சபட்சம் நின்னு வேடிக்கையாவது பார்க்கறாங்க! 
நீ என்ன பண்ணினே? 
நேரா வந்தே, பெஞ்சு மேல உட்கார்ந்தே, இத்தனை ஆரவாரமும் சந்தோஷமும் உன் கண்ணில் பட்டமாதிரிகூட தெரியல! 
நான் உன்னை கவனிச்சுக்கிட்டேதான் வர்றேன்! 
வரவர நீ உனக்குள்ள இறுகிப்போய்க்கிட்டே இருக்கே! உன்னோட சிரிப்பு சந்தோஷம், எல்லாமே வெறும் பாவனைதான்! 
அந்த ஆளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? உனக்கு அம்மா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் இருக்காங்க, ஆனா, உனக்குன்னு யாராவது ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா? ஏன்டா, நீயெல்லாம் ஃப்ரெண்ட் இல்லாம யாரு எனக்கு? முட்டாள், நாங்க எல்லோருமே உன்கிட்ட ஃப்ரண்ட்லியா இருக்கோம், ஆனா ஃப்ரெண்ட் இல்லை! 
இன்னும் பச்சையா சொல்லணும்ன்னா, நீ எங்க யாருக்கும் அந்தரங்கமான ஃப்ரெண்ட் ஆகவே முடியாது! ஏன்னா, நீ என் சித்தப்பா பையன்! அந்த லிமிடேஷன் எப்போதுமே நம்ம நட்பில் இருக்கு! 
நாம் எதைப்பேசினாலும் அது ஒரு மரியாதைப்பட்ட எல்லைக்குள்தான்! புரியுதா உனக்கு? 
இப்போ என்ன சொல்லவர்றே? நீ எனக்கு ஃப்ரெண்ட் இல்லைன்னா? 
இப்படி முட்டாள் மாதிரி புரிஞ்சுக்காதே! நெருக்கமான ஃப்ரெண்ட் யாரு தெரியுமா? 
யு குட் பீ ஏபில் டு ஷேர் ஈவன் யுவர் டர்ட்டி திங்ஸ் வித்! அப்படி யார் இருக்காங்க உனக்கு? எனக்கு மூர்த்தி இருக்கான், முப்பது வருஷ ஃப்ரெண்ட். இந்த வயசுலயும், என்னால அவனுக்கு போன் பண்ணி, மச்சான், டேய், நேத்தைக்கு நைட்டு, அப்படின்னு என்னால பேசமுடியும்! அப்படி யாரையாவது உன்னால காட்ட முடியுமா? 
ஹானஸ்டா பதில் சொல்லு, என்கிட்டே பகிர்ந்துகொள்ளமுடியாத விஷயங்கள் உனக்கு இருக்குதானே? 
ஆமாம்! 
அப்படி எந்த லிமிடேஷனும் இல்லாததுதான் ஃப்ரண்ட்ஷிப். 
அப்படி ஒருத்தராவது அவசியம் எல்லோருக்கும்! உன்னோட ஃப்ரெண்ட் எல்லாமே உன் சொந்தக்காரங்க, நான் உட்பட! 
ஒருவகைல நாங்க உன்னைக் கெடுத்து வெச்சிருக்கோம்! 
போனவாரம் உன்னைப்பத்தித்தான் நானும் மணிவண்ணனும் பேசிட்டிருந்தோம்! அவனுக்கு யாராவது ஃப்ரெண்ட் இருக்காங்களான்னு மணி கேட்டான்! எப்படி யோசிச்சுப் பார்த்தும் எனக்கு யாரையும் நியாபகம் வரல! ஒரே ஒருத்தி இருந்தா, அவளும் செத்துப்போய்ட்டா! 
ஒரு காலத்தில் நீ எப்படி இருந்தவன்? உன்னைச் சுற்றி எத்தனை நண்பர்கள்? 
நடுஜாமத்தில் மவுண்ட் ரோட்டில் கேக் கட் பண்ணுனதும், விடியவிடிய பீச்சில் கூத்தடித்ததும் நானெல்லாம் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன்! எத்தனை ட்ரிப் நண்பர்களோட சுத்திவந்திருக்கே?அதுக்கப்புறம் என்ன ஆச்சு? 
எப்படி நட்புன்னு ஒரு ஆள் கூட இல்லாம ஏன் இப்படி நத்தை மாதிரி சுருங்கிட்டே? 
எனக்கு முருகேசன் ஒரு பொருட்டே இல்லை! ஆனால், அந்த ஆள் பேச ஆரம்பித்ததும் அது உன் கதையை, உன் வாயால கேட்கற மாதிரி இருந்துச்சு எனக்கு! நீ ஒண்ணும் முட்டாள் இல்லை. இன்ஃபேக்ட் எங்க எல்லோரையும் விட புத்திசாலி நீ! 
உனக்கும் அது புரிஞ்சிருக்கும் அதனாலதான் நீ சைலண்டா உட்கார்ந்து கேட்டுட்டிருந்தே! இல்லைன்னா, நீ எழுந்து போயிருப்பே, நீ அப்படிப்பட்ட ஆள்தான்! 
உன்னோட பிடிவாத குணம், எதையும் முயற்சி பண்ணிப் பார்க்கும் துணிச்சல், எல்லோரும் போகும் வழில போகமாட்டேன்கின்ற பிடிவாதம் இதெல்லாம் எங்க எல்லோரையும் ஆச்சர்யமா பார்க்க வைக்குது! எங்களுக்கு உன் மேல இருக்கறது பாதி பிரமிப்பும் மரியாதையும்தான்! 
உன்னோட ஓரளவு அந்தரங்கமா பேசற ஒரே ஆள் நான்தான்! நாம் சுத்தி சுத்தி எதைப்பேசறோம்?, குடும்பவிஷயம் பத்தி! 
என்னைக்காவது நீ பார்த்த ஒரு சினிமா, பூ, பொண்ணு, புத்தகம், நயன்தாரா, இப்படி எதைப்பற்றியாவது யார் கிட்டயாவது பேசியிருக்கியா இந்த இருபது வருடத்தில்? 
வெட்டி அரட்டை அடிக்கறது அப்படின்னு சீப்பா நினைக்கிற விஷயம்தான் நம்மை உயிர்ப்போடு வெச்சிருக்குன்னு புரியாத முட்டாள் இல்லை நீ! 
ஏன் அப்படி ஒன்னு இல்லாமலே போச்சு உன் வாழ்க்கைல? யோசி! 
சொஸைட்டியை விட்டு மனசளவுல நீ எவ்வளவு விலகிப் போயிருக்கேன்னு எனக்குப் புரியுது! 
அதுதான் எனக்கு, மணிக்கு, செல்வத்துக்கு உன்னைப்பற்றிய கவலை! 
ஒரு அவுட்லெட்டே இல்லாம ஒரு மனிதன் வாழவே முடியாது. 
கொஞ்சம் யோசிச்சுப்பாரு, அந்த முருகேசனுக்கு உனக்கும் என்ன வித்தியாசம்? 
கடவுளா பார்த்துத்தான் இன்னைக்கு அந்த ஆளை நம்ம கண்ணில் காட்டியிருக்கார்! 
அந்த ஆள் அத்தனை பேசலைன்னா, எனக்கு இதை உன்கிட்ட பேச ஒரு காரணம் கிடைச்சிருக்காது, தைரியமும் வந்திருக்காது! அந்த ஆள் என் வேலையை சுலபமாக்கிட்டுப் போய்ட்டாரு! 
என்னை அந்த ஆள் மாதிரின்னு சொல்லவர்றியா? கோபப்பட்டாலும் பரவாயில்லை! இன்னைக்கு நான் உன்கிட்ட பேசியாகணும்! 
அந்த ஆள்கூட பரவாயில்லை! 
இந்த வயசுக்கு யார்கூடவோ நட்பா இருக்கணும்ன்னு முயற்சியாவது பண்ணி தோத்திருக்கார்! 
என்னையும் அந்த ஆள் மாதிரி ஓப்பன் ட்ரைன்ல உட்கார்ந்து பைத்தியக்காரன் மாதிரி அழச் சொல்றயா? இப்படி புரிஞ்சுக்கிட்டா, நீ நிச்சயம் ஒரு பைத்தியக்காரன்தான்! அந்த ஆளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? அவராவது மத்த மனுசங்ககிட்ட பேசறாரு. நீ என்ன பண்றே?
நீயே சொன்னதுதான்! நேத்துக்கூட வண்டியை எடுத்துக்கிட்டுப்போய் எங்கேயோ கேரளா காட்டுக்குள்ள தனியா ஒரு முழுநாள் உட்கார்ந்துட்டு வந்திருக்கே!
இப்படி அடிக்கடி நடக்குது! உண்மைதானே? 
எங்க எல்லோருக்குமே பயமா இருக்கு! நீ ஒருநாளைக்கு வெடிச்சு சிதறிடுவேன்னு! 
அந்த ஆதங்கம் உனக்குப் புரியலன்னா நான் இத்தனை பேசியது வேஸ்ட்! 
வெறும் சொந்தக்காரங்க, ஆபீஸ் இது மட்டும்தான் உலகம்ன்னு ஏன் சுருங்கிபோனேன்னு யோசி! எல்லோரும் பார்த்து பொறாமைப்படும்படி நண்பர்களோட அத்தனை கொண்டாட்டமா இருந்த நீ ஒரு வட்டத்துக்குள்ள ஏன் உன்னை சுருக்கிக்கிட்டே? எனக்கு காலைல முருகேசன் பேசப்பேச உன்னை நினைச்சுத்தான் பயமா இருந்துச்சு. 
எப்போ என்கிட்ட பேசணும்ன்னு தோனினாலும் வா பேசலாம்! 
ஆனால் இந்த பலூனை சீக்கிரம் திறந்து விட்டுடு! இல்லன்னா ஒருநாள் வெடிச்சுடும்! ப்ளீஸ்! 
அதற்கப்புறம் நானும் எதுவும் பேசல, அவனும் எதுவும் பேசல! 
மூணரை மணிக்கு திருப்பூர்ல இறங்கும்போது, என் கையைப்பிடித்து அழுத்தி, 
நைட்டு நீ தூங்கலேன்னு எனக்குத் தெரியும்! யோசி, சீக்கிரம் எனக்கு பதில் சொல்லு ப்ளீஸ்! 
இன்னும் யோசிச்சுக்கிட்டேதான் இருக்கேன்! முருகேசன் என்னைவிட பெட்டரோ? 
தமிழ்ச்செல்வன் சொன்னமாதிரி, 
எனக்கு ஒரு கவுன்சிலிங் தேவைதானா?
எல்லோருக்கும் ஒரே ஒரு நட்பாவது தேவைதானா, உயிர்ப்போடு வாழ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக