செவ்வாய், 12 ஏப்ரல், 2022

நேற்றிரவு நான் பேயைப் பார்த்தேன்..

நேற்றிரவு நடந்ததென்ன….

நேற்று நடு ஜாமத்தில் பால்கனிக் கதவைத் திறந்தபோது அதை/அவரைப் பார்த்தேன்!

ஏறத்தாழ ஒரு மாசமாகவே தூக்கமும் என் மூஞ்சிலயே முழிக்கமாட்டேன்னு போயிடுச்சு! ஒரு வாரம் ஒரு மணிக்கே வாக்கிங் போய்ப்பார்த்தேன்! சி ப்ளாக்ல நாய் குரைக்க ஆரம்பிச்சதும், அலங்கோலமா ஒரு மாமா கதவைத் திறந்துட்டு பக்கத்து வீட்டுக்குள்ள பாஞ்சுட்டாரு. கதவை சார்த்த வந்த அட்டு ஃபிகர் என்னை பாதகான்னு மொறச்சுட்டு கதவை படார்ன்னு மூடும்போதுதான் கவனிச்சேன், பாப்பா முதல்மரியாதை ராதா கெட்அப்ல! யோக்கியனுக்கு இந்நேரத்தில பக்கத்து வீட்ல என்ன வேலைன்னு யோசிக்கும்போதே புரிஞ்சுது, நாளைக்கு வந்தா நாயை அவிழ்த்துவிட்டுடுவாங்கன்னு!

இது ஆகறதில்லை, பேசாம படிக்கலாம்ன்னு ஜெமோவோட புக் ஒன்னை எடுத்துவெச்சு உட்கார்ந்தேன்

வெள்ளத்தணைய மலர் நீட்டம்!

மத்தவங்களுக்கு யானை டாக்டர் கிடைச்சா, நம்ம கைக்கு உச்சவழுதான் கிடைக்குது!

சாரு, திஜாரா, கூடவே சரோஜாதேவியும் கொஞ்சம் கலந்துகட்டி, ஜெமோ அள்ளித் தெளிச்சிருக்காரு! நாலு பக்கம் படிக்கறதுக்குள்ள, சாமியார் என்ன பண்ணினார்ன்னு போய் அந்த முதல்மரியாதை கதவைத் தட்டலாமான்னு தோண ஆரம்பிச்சுடுச்சு! ரைட்டு! மடக் மடக்ன்னு ஒரு பாட்டில் தண்ணியை குடிச்சுட்டு, பொத்திக்கிட்டு படுத்தாச்சு!

இதுவும் சரிப்படாது, பேசாம பால்கனில ராக்கிங் சேர்ல உட்கார்ந்து இருட்டை வேடிக்கை பார்க்கலாம்ன்னா, அந்த சரக் சரக் சத்தம் கேட்டு செக்யூரிட்டிக்கு பேதி புடுங்கிக்கிச்சுன்னு மறுநாள் கம்ப்ளைண்ட்!

எதுக்கும் இருக்கட்டும்ன்னு பால்கனில ஒரு சேரை சாயங்காலமே எடுத்துப்போட்டா,

எதுக்கு அங்கே சேர்?

இல்லை, நைட் தூக்கம் வரலைன்னா உட்கார்ந்துக்கலாமேன்னு..

ஏன், ராப்பிச்சைக்காரன் மாதிரி காலனி முழுக்க சுத்துவீங்களே, அதையே செய்யலாமே, கொழுப்பாச்சும் குறையும்!

நாய் துரத்துது!

வேணும்ன்னா ஒரு குடுகுடுப்பை வாங்கிக்கங்க, நாய் பயந்துக்கும்! இல்லைன்னா, சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் செக்யூரிட்டி செத்துப்போய்ட்டாராம், நைட் ஷிஃப்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு சொன்னாங்க, போறீங்களா? அங்கே போய் உட்காந்தா, காசாவது கிடைக்கும்!

எல்லாம் நேரம்

பல்லைக் கடிச்சுட்டு பாத்ரூம்க்குள்ள போனதும், நான் சேர் போட்டுவச்ச இடத்திலிருந்து பக்கத்து வீட்டு பெட்ரூம் தெரியுதான்னு செக் பண்ணினதா உளவுப்படை தகவல்!

நேத்து நைட்டும் பதினோரு மணிக்கு வலுக்கட்டாயமா கண்ணை இறுக்க மூடிட்டு படுத்து, எட்டுக்கோடியே எழுபது லட்சம் எண்ணிட்டு டைம் பார்த்தா மணி ஒன்னு! தூக்கம் வர்ற பாட்டைக் காணோம்!

சரி, பால்கனில உட்காரலாம்ன்னு கதவைத்திறந்தால், அதைப் பார்த்தேன்.

அதுவா, அவரா?

கருப்பு பேண்ட், ப்ளூ செக்ட் சர்ட், டக் இன், ஷூ, ஒரு ஆஃபீஸர் தோரணைல என் வீட்டு பால்கனில, அந்நேரத்தில் ராக்கிங் சேர்ல உட்காந்திருக்கார்!

குடல் வாய் வரைக்கும் வந்துடுச்சு! அடிக்க வாகா ஏதாவது கிடைக்குமான்னு தேடிக்கிட்டே, யோவ், யாருய்யா நீ?

ஐயம் சுந்தர வடிவேல்! நைஸ் மீட்டிங் யூ!

வெள்ளைக்காரனுக்கு பொறந்தமாதிரி நுனிநாக்கு ஆங்கிலம்!

எழுந்து நின்னாலும், நெஞ்சு உயரம்கூட வரல

யோவ், இங்க என்ன பண்றே?

உங்களுக்காகத்தான் வெய்ட் பண்றேன்! பைதவே, இந்த ராக்கிங் சேர் என்னால ஏறி உட்காரமுடியாத அளவு உயரமா இருக்கு, கொஞ்சம் உயரம் கம்மியா வாங்கிப்போடுங்க!

யாருங்க நீங்க, இங்கே எப்படி வந்தீங்க?

நான் எங்கே வேணும்னாலும், எப்போ வேணும்னாலும் வரமுடியும்!

ஏன் நீங்க கடவுளா?

காலைல கடவுளைப் பார்த்தேன்னு சொல்லிப் பாரு! உன் பெண்டாட்டி கூட நம்ப மாட்டா!

பேயைப் பார்த்தேன்னு சொல்லு, உலகமே நம்பும்!

யோவ், குடிச்சிருக்கியா? பைப்பைப் பிடிச்சு ஏறி வந்து உட்கார்ந்துட்டு கதை சொல்லிட்டிருக்க?

அதுக்கு என் வீடுதான் கிடைச்சதா?

உன் வீடா? அட முட்டாளே, உன்னுது என்னுதுன்னு ஏதாவது இருக்கா இந்த உலகத்தில்?

நேற்று என்னுடையதாக இருந்தது, இன்று உன்னுடையது, நாளை யாருடையதோ! கீதை படிச்சதில்லையா?

எனக்கிருந்த கொடூர மனநிலையில் ஓங்கி ஒரு அறை விட்டேன்!

அறைந்தேனா என்ன? கை எதிலுமே படாமல் காற்றில் அரைவட்டம் அடித்து ஓய்ந்தது!

ஃபர்ஸ்ட் டைம், முழங்கால் நடுங்க, சேரில் தடுமாறி உட்கார்ந்தேன்!

பேய் வெள்ளைக் கலர்லதானே இருக்கும்? நீங்க எப்படி டிப்டாப்பா இப்படி?

யோவ், நீங்களா சாமி இப்படி இருக்கும், பேய், பூதம் இப்படி இருக்கும்ன்னு கற்பனை பண்ணிக்கிட்டா நான் என்னய்யா பண்ண

யார் நீங்க? உண்மையை சொல்லுங்க!

சொன்னேனே, சுந்தர வடிவேல்!

ஆறு வருஷத்துக்கு முன்னே இதே வீட்ல குடியிருந்தேன்! ஒரு நள்ளிரவில் மூச்சுத் திணறி செத்துப்போனேன்!

ஆஸ்த்மாவா?

யோவ், பொண்டாட்டி கழுத்தை நெரிச்சாலும் மூச்சுத் திணரும்யா!

இந்த லட்சணத்தில பேயா வேற சுத்தறயா நீ?

அதைவிடு, நீ ஏன் தூங்காம இப்படி பேயாட்டம் அலையறே

சும்மா, வயசாச்சே!

மழுப்பாதே! லூசு மாதிரி பிஹேவ் பண்ணி எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிற்கறது எனக்குத் தெரியும்! இனி ஜென்மத்துக்கு நீ உருப்படப்போறதில்லை! அது எனக்கு வேண்டாத விஷயம்!

ஆனால் தகுதிக்கு மீறி ஆசைப்படறதும், எதையும் இறுக்கிப் பிடிச்சுக்க நினைச்சா இதுதான் நடக்கும்!

உறவுன்றது காத்து மாதிரி! இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க கைதான் வலிக்கும், காத்து கை நழுவி போய்க்கிட்டே இருக்கும்!

இன்னொரு விஷயம், டோண்ட் புட் ஆல் யுவர் எக்ஸ்  இன் ஒன் பேஸ்கட் ன்றது ஷேர் மார்க்கெட்டுக்கு மாத்திரமில்லை, உறவுக்கும் பொருந்தும்!

இந்த சிங்கிள் ரோஸ் கேன் பி மை கார்டன் பாலிசியை உனக்கு யார் சொல்லித்தந்தது? ஒரு வேளைக்கு ஒருத்தர்தான் ஃப்ரண்ட் - இது என்ன இழவு பாலிசி?

ஐயா பெரிய ஹர்ஷத் மேத்தா மாதிரியும், விவேகானந்தர் மாதிரியும் பேசறீங்களே, உங்க ஒய்ஃப் ஏன் உங்க கழுத்தை நெரிச்சு கொன்னாங்க?

அதான் சொன்னேனே? ஒன் அட் ஒன் டைம் பாலிசி எனக்கு எந்த ரிலேசன்ஷிப்லயும் ஒத்துவராது! அதனால, கிடைச்ச ஸ்பேஸ்ல இன்னும் ரெண்டு பேரை ஸ்க்வீஸ் இன் பண்ணப் பார்த்தேன்!

போட்டுத் தள்ளிட்டா மகராசி!

நித்யானந்தா வேலை செஞ்சு செத்துப் போய்ட்டு ஃபிலாசஃபி வேற பேசறயே வெக்கமா இல்லை?

வாழும்போதே இருந்ததில்லை, இப்போ பேயா அலையும்போது எங்கிருந்து வரும்?

சரி, இப்போ எதுக்கு வந்து என் கழுத்தை அறுக்கறே?

நீ இந்த வீட்டை காலி பண்ணப்போறேன்னு கேள்விப்பட்டேன்!

அடப்பாவி, பேய்ங்ககூட காஸிப் பேசுவீங்களா?

யோவ், நீ உன் புக் செல்ஃப்ல இன்னும் எத்தனை புக் படிக்காம வெச்சிருக்கே, இன்னும் எதெதை யூஸ் பண்ணாம வெச்சிருக்கே, எல்லாம் எனக்குத் தெரியும், சொல்லவா?

மூடிக்கிட்டு வந்த வேலையை மட்டும் சொல்லு!

பேய்கிட்டயே இவ்வளவு தெனாவெட்டா பேசறே, அப்புறம் ஏன்யா இப்படி கழுத்தறுந்த கோழி மாதிரி சுத்தறே?

இதபார், நீ வந்த வேலையை சொல்லு, இல்லைன்னா பொத்திக்கிட்டு கிளம்பு!

சரி, சொல்றேன்! எனக்கு தனியா சுத்தி போரடிக்குது! ஒன்னு, நீ செத்துப்போய் எனக்கு துணைக்கு வா, இல்லைன்னா, யாரையாவது சாகடிச்சு அனுப்பு!

அட பரதேசி! என்னை கொலை செய்ய சொல்றியா?

உன்னை அதெல்லாம் செய்ய சொல்லல, தினம் ஒரு PBS பாட்டுப்பாடி அப்லோட் பண்ணச்சொல்லி உன் டிஎம்ல ஒருத்தங்க கேட்டாங்கதானே?

யோவ், அதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?

நீ டிஎம்ல யாருகிட்ட செருப்படி வாங்கினேன்னும் எனக்குத் தெரியும், சொல்லவா?

அப்பா, சாமி, இப்போ நான் என்ன செய்யணும் சொல்லித்தொலை!

நாளைல இருந்து தினம் ஒரு பாட்டுப் பாடி அப்லோட் பண்ணு!

அதால உனக்கென்ன லாபம்?

எப்படியும் பத்து நாளைக்குள்ள, பாட்டுக் கேட்டவரு தற்கொலை பண்ணிக்குவாரு, இல்லைன்னா, உன்னை போட்டுத் தள்ளிடுவாரு! ரெண்டில் எது நடந்தாலும் நல்லதுதான்! எனக்கு பேச்சுத்துணைக்கு ஆள் கிடைக்கும்!

உனக்கு பத்து நாள்தான்டி டைம், வர்ட்டா!

சொல்லிக்கிட்டே காணாம போய்ட்டாரு!

என்ன செய்யலாம்?

பாடிடலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக