வெள்ளி, 15 ஏப்ரல், 2022

இளையராஜா மீது வாரியிறைத்த வன்மச் சேறு!

இளையராஜா மீதான விமர்சனங்கள்!

இளையராஜா மோடியை அம்பேத்காரோடு ஒப்பிட்டு எழுதிவிட்டாராம்!

காலையிலிருந்து வன்மத்தை வாரியிறைத்து அரிப்பை சொறிந்துகொண்டிருக்கின்றன விஷ ஜந்துக்கள்!

அவர் அவ்வாறு எழுதியதற்கான கற்பிதக் காரணங்கள்தான் இவர்களின் தரத்தைச் சொல்லும் விஷயம்!

இன்கம்டாக்ஸ் ரைடிலிருந்து தப்பிப்பதற்காக, பத்மஶ்ரீ அவார்ட் வாங்குவதற்காக, கவர்னர் பதவி கிடைக்கும் என்பதற்காக!

இவர்கள் எந்த நோக்கத்துக்காக மற்றவர்கள் காலைக் கழுவிக் குடிப்பார்களோ, அதையெல்லாம் அவர் நோக்கமாக சித்தரித்து தங்கள் தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மூடர் கூட்டம்!

தேர்தல் தோறும் கூட்டணி மாறுவதும், பதவிப் பிச்சைக்காகவும் பசையான இலாகாக்களுக்காகவும் காவடி தூக்குவது கேவலமான அரசியல்வியாதிகளின் தொழில்!

இசைராஜன் கொஞ்சம் பல்லிளித்துக் குழைந்திருந்தால் அடைந்திருக்கக்கூடிய வசதிகள் என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்!

சிங்கம் நாய்களைப்போல் ஆதாயத்துக்கு வாலாட்டாது!

இப்போதே அது பத்மவிபூஷன் - பாரத ரத்னா மட்டுமே பாக்கியிருக்கும் அடுத்த படி!

தகுதியேயற்ற சிலருக்குக் கொடுக்கப்பட்டு ஏற்கனவே ஒளியிழந்துபோன பாரத ரத்னா வழங்கப்பட்டால் பெருமை இசைராஜனுக்கல்ல - அரசியல் காரணங்களால் விநியோகிக்கப்பட்டு, களங்கப்பட்ட அந்த விருதுக்குத்தான்!

அவர் தானாகப்போய் மோடியைப் பாராட்டி பரிசில் வாங்கி கல்யாண மண்டபம் கட்டவில்லை!

Ambedkar and Modi - Reformer’s ideas, Performer’s implementation என்ற புத்தகத்துக்கு முன்னுரை எழுத ஒப்புக்கொண்டபோது, தானாகவோ, இன்னொருவர் எழுதிக்கொடுத்தோ இதை சொல்லியிருக்கிறார்!

இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுத நேர்ந்திருந்தால், வங்கத்துச் சிங்கமோ, அன்னையோ, ஏன், தமிழக முதல்வராகவே இருந்தாலும், இருவரையும் ஒப்பிட்டே எழுத நேர்ந்திருக்கும்! அது அவை நாகரீகம்!

டிஆர் பாலு கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசை குளிர்வித்துப் பேசுவது அவைக் குறிப்பிலும் இருக்கிறது, ஊடகங்களிலும் வந்திருக்கிறது! உங்கள் பாஷைப்படி, அந்த சங்கி, தனக்காகவோ, தன் தலைமைக்காகவோ, நீங்கள் சொன்ன அந்தக் காரணங்களுக்காகத்தான் நாடாளுமன்றத்தில் குழைகிறதா? நீங்கள் குரைக்கும் காரணங்கள் அவருக்கும் பொருந்துமா இல்லை அது மட்டும் அவை நாகரீகம் என்ற பிரிவில் வருமா? சான்றிதழ் வழங்கிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

உங்கள் தற்காலிகமான, அடுத்த தேர்தலில் எப்படி மாறும் என்று கணிக்கவே முடியாத, கருத்துக்களுக்கு மாறாக யாருமே பேசக்கூடாது என்று நினைப்பது அருவெறுப்பான மேட்டிமைத்தனம்! அசிங்கமான சர்வாதிகாரம்! மாற்றுக் கருத்தை மதிக்காத இடத்தில் ஜனநாயகம் மூச்சுத் திணறி செத்துப்போகும்!

இன்றைக்கு ராகதேவனின் சாதியை விளித்துப் பேசிய உங்களுக்கு சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை என்ற சொற்களை உச்சரிக்கக்கூட அருகதை இல்லை!

எதற்கும் இப்போது வீசும் சேற்றை கொஞ்சம் அள்ளி வைத்துக்கொள்ளுங்கள்- 2024ல் அதையே முகத்தில் பூசிக்கொள்ளவோ, அள்ளித் தின்னவோ நேரக்கூடும்

உங்கள் அரசியல் அசிங்கங்களை, ஆபாச விமர்சனங்களை நீங்கள் ஒருவர் மீது ஒருவர் ஆட்டுக்குட்டி என்றோ அடிமைக்கூட்டம் என்றோ பிணம்தின்னி என்றோ அள்ளி வீசிக்கொள்ளுங்கள், காலம் மாறும்போது கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொள்ளுங்கள்!

அரசியல் தவிர்த்த ஏனையோரை, அது இளையராஜாவோ, வேறு யாரோ, விமர்சிக்கும்போது, கொள்கை ரீதியாக, கருத்து ரீதியாக விமர்சியுங்கள், உங்களுக்கு ஒரளவேனும் நாகரீகம் என்பது இருந்தால்!

உங்கள் அரசியல் சாக்கடைக்குள் நீங்களே புரண்டு களியுங்கள்! அவர்களை அங்கே இழுக்காதீர்கள், அவர்கள் தரம் வேறு!

இளையராஜாவாவது மயிராவது என்று ஹாஸ்டேக் போட்டு சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள்!

நல்லது!

மல்லாந்து படுத்து, நிலவைப் பார்த்து காறித் துப்புவதற்கு ஈடானது அது

இளையராஜாவின் கருத்தை நானும் ஆதரிக்கவில்லை, ஆனால் அவரது கருத்து அதுதான் என்பதற்கும் உத்தரவாதமில்லை! ஏனெனில், அது அந்தவிடத்து சொல்லியாகவேண்டிய நாகரீகம் - அவ்வளவே

பிரதமரை வரவேற்க விமானநிலையத்தில் முதல்வர் பூங்கொத்து கொடுப்பதைப்போல!

நன்றி!

1 கருத்து: