சனி, 28 மே, 2022

அப்பாவின் புல்லாங்குழல்!

கனவாய் கரைந்த கணங்கள்.

ஒரு திறமையை, அது சார்ந்த ரசனையை யாருக்குமே தெரியாமல் எத்தனை நாள் உங்களால் மறைக்கமுடியும்

ஒரு மாதம்? ஒரு வருடம்?

அறுபது வருடங்களுக்குமேல், தன் மூச்சு நின்றுபோகும்வரை மறைத்தே வாழ்ந்து முடிவதென்றால், அது என்னமாதிரியான வைராக்கியமாக இருக்கமுடியும்?

நானாக இருந்தால், ஏன், பொதுவாக யாராக இருந்தாலும், தன் திறமையை தம்பட்டம் அடித்துக்கொள்ளத்தானே தோன்றும்? அதுதானே மனித இயல்பும்?

ரவிக்கு கொஞ்ச நாளாகவே இதுதான் மனதுக்குள் மிகப்பெரிய வலியும் வேதனையும்!

அப்பா!

ஒரு தகப்பனாக எவ்வளவு உயர்ந்த மனிதர்

கண்டிப்பும் பாசமும் சரிவிகித கலவை!

பிள்ளைகள் நால்வருமே அம்மாவைவிட அப்பாவுக்குத்தான் நெருக்கம்!

அதிலும் ரவிமீது அவருக்கு மாளாத அன்பும் அக்கறையும்!

பொதுவாக எதையும் திணிக்கவும் மாட்டார், உட்காரவைத்து அறிவுரையும் சொல்லமாட்டார்!

தனக்கு இரை இல்லாதுபோனாலும், குஞ்சுகளின் பசி நிறைக்க மறக்காத தாய்ப்பறவை

ஒரு வயதுக்குமேல், அபூர்வமாக அரசியல் உட்பட பலவற்றையும் ரவியோடு மட்டும் விவாதிப்பார்!

கலைஞரின் தீவிர அபிமானி!

ரவி இடறியபோதெல்லாம் கொஞ்சமும் தயங்காமல் தாங்கிக்கொண்டு நிமிரவைத்தவர்!

அதற்காக அவர் பட்டவை மிக அதிகம்!

நான்கு வருடம் ஆகிறது! அப்பா என்ற ஆபத்பாந்தவன் இல்லாதுபோய்!

அப்பா கூடப் பிறந்தவர்கள் பத்து பேர்!

அவர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு. அக்கா தங்கைகளுக்கு அண்ணன் தம்பிகள் உயிர் என்றால், நான்கு அண்ணன் தம்பிகளுக்குள் அப்படி ஒரு அபார பிணைப்பு!

அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருந்திருக்கமுடியாது! முரண்படாத உறவு உலகிலேயே இல்லை!

ஆனால், ஒருவரை ஒருவர் விமர்சித்தோ, விட்டுக்கொடுத்துப் பேசியோ பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை!

அப்பா இறந்தபோது உடன்பிறந்த அத்தனைபேரும் காரியம் முடியும்வரை அகலவில்லை!

சித்தப்பாவோடு ரவிக்கு மிகுந்த நெருக்கம். தன் மனைவி, குழந்தைகள், நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் விஷயத்தையும் அவரோடு ஒரு தோழமையோடு பேசமுடியும். அவருக்கும் அவனிடம் ஒருபடி அதிக வாஞ்சை!

இருவருக்குள் மட்டும் பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் ஏராளம்

அப்பா காரியங்கள் எல்லாம் முடிந்து, ஊருக்குக் கிளம்பும் நாள்!

ரவி, வாயேன், கொஞ்சம் வெளியே போய் வரலாம்!

இதுதான் அவர்களுக்குள் ஒரு சங்கேதம்!

தனியாக ஏதோ பேசவேண்டியிருக்கிறது என்று அர்த்தம்!

மருதமலை அடிவாரத்தில், ஒரு ஆளரவமற்ற மரத்தடியில் வண்டியை நிறுத்தியபிறகு,

சொல்லுங்க சித்தப்பா!

அண்ணன் கவிதையெல்லாம் எழுதுவார், தெரியுமா உனக்கு?

கொஞ்சம் ஆச்சர்யமாகக்கூட இருந்தது ரவிக்கு! இதை சொல்ல கண்டிப்பாக இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார்!

தெரியும் சித்தப்பா! ஒரு நோட்டு முழுக்க எழுதி வெச்சிருந்தாரு! அந்த நோட்டும் காணாமல் போயிடுச்சு!

ஒரு பெருமூச்சோடு கொஞ்சநேரம் அமைதியானவர், மெதுவாகச் சொன்னார்!

அதெல்லாம் அவர் காலேஜ் படிக்கும்போது எழுதியது!

வேற ஏதாவது சொல்லியிருக்காரா அண்ணன் உன்கிட்ட, தன்னைப்பற்றி?

இந்த சித்தப்பாவே புதுசு ரவிக்கு!

சித்தப்பாவுக்கு எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு!

மழுப்புவதும், சுற்றிவளைப்பதும் அவருக்குப் பிடிக்காது என்பதைவிட தெரியாது! அவ்வளவு ஸ்ட்ரைட் ஃபார்வார்ட்!

அவர் எதையோ சொல்லவந்து இத்தனை தயங்குவது ஆச்சர்யம்!

இல்லையே சித்தப்பா, அவர் வேற எதுவுமே சொன்னதில்லை!

மறுபடி ஒரு சில நிமிடங்கள் அமைதி!

சித்தப்பா மனசுக்குள் வார்த்தைகளை கோர்ப்பது புரிய, மெதுவாக அவர் கையைப் பிடித்துக்கொண்டான்- சொல்லுங்க சித்தப்பா!

அண்ணனுக்கு சங்கீதத்தில் நல்ல இன்ட்ரஸ்ட்

தெரியும் சித்தப்பா! எனக்கு அதுவே பெரிய ஆச்சர்யம்! அவர் உட்கார்ந்து பாட்டு கேட்டு நான் பார்த்ததில்லை! ஆனால், ஜெயா டிவி, சன்டிவில வர்ற மார்கழி உற்சவம், சங்கீதக் கச்சேரிகளை தவறாம பார்ப்பார். வருஷம் தவறாமல் திருவையாறு போவார்!

மறுபடி ஒரு தயக்கம், சின்ன அமைதி!

அண்ணன் நல்லா புல்லாங்குழல் வாசிப்பாரு, தெரியுமா உனக்கு?

தூக்கிவாரிப்போட்டது ரவிக்கு!

விபரம் தெரிய ஆரம்பித்து நாப்பது வருடங்களுக்கு மேலாக அப்பாவோடு பயணித்ததில் இப்படி ஒரு தகவலே தெரியாது!

இல்லை சித்தப்பா எனக்குத் தெரியாது! இன்ஃபேக்ட் அம்மாவுக்கே தெரியுமான்னு தெரியல

இதை நீங்ககூட இத்தனை நாளா சொல்லவே இல்லை சித்தப்பா!

சித்தப்பா நேரடியாக எதுவுமே சொல்லல!

விடு! அவரே போய்ட்டாரு. சும்மா எனக்கு சொல்லணும்போல தோணிச்சு!

ஆனா ஏன் இதை அவர் சொல்லாம மறைக்கணும்?

இதற்கும் நேரடியான பதில் இல்லை!

எங்க அம்மா பேச்சை அண்ணன் மீறமாட்டாரு

விநோதமாகப் பார்த்த ரவியை, சரி, கிளம்பு, போகலாம், எனக்கு ட்ரெயினுக்கு லேட் ஆயிடுச்சு!

அந்த சூழலில் அந்தத் தகவல் விநோதமாக இருந்தாலும், அதற்குள் ஏதோ உள்ளர்த்தம் இருப்பது மாலை சித்தப்பா கிளம்பும்போது உறுதியாச்சு!

ரவி, நம்ம பேசிய விஷயத்தை யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம்!

அன்னைக்கு மண்டைக்குள்ள ஏறிய பூரான், அடுத்த வாரமே தீவிரமா கடிக்க ஆரம்பிச்சுது!

அப்பா முடிஞ்சா உன்னை வரச் சொன்னாரு ரவி

பெரியப்பா பையனிடமிருந்து ஃபோன்!

மறுநாளே, திருப்பூர், பெரியப்பா வீடு!

வாப்பா, மொதல்ல சாப்பிடு போ!

பெரியப்பாகிட்ட இது ஒரு பழக்கம்! வந்தவங்க சாப்பிடவரைக்கும் அவருக்கு வேற எதுவுமே தோணாது!

சாப்பிட்டு, வாசலில் சேர் போட்டு உட்கார்ந்தும், சுத்தி வளைச்சு ஏதேதோ பேசறார்! கண்டிப்பா அரசியல்பேச வரச் சொல்லியிருக்கமாட்டார்!

சொல்லுங்க பெரியப்பா, ஏதோ பேசணும்ன்னு வரச் சொன்னீங்களாமே!

அதெல்லாம் ஒன்னுமில்லை! சும்மா உன்னை பார்க்கணும்ன்னு தோணுச்சு!

விஷயம் புரிந்தோ, புரியாமலோ, பெரியப்பா மகன் உள்ளே போக, காது கேட்கும் தொலைவில் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, குரலைத் தாழ்த்திக் கேட்டார் - உங்க அப்பன் ஏதாவது உன்கிட்ட சொல்லியிருக்கானா?

ஏதாவதுன்னா?

இல்லை, வேற யாருகிட்டயும் சொல்லாதேன்னு ஏதாவது?

வயது, முதுமை காரணமாக கடந்த காலத்துக்குள் சட் சட்டென்று புகுந்துகொண்டு அப்போது பேசியதையே அடுத்த விநாடி மறந்துபோகும் பெரியப்பா இவ்வளவு கோர்வையாகப் பேசியதே ஆச்சர்யம் ரவிக்கு!

இல்லையே பெரியப்பா!

எங்க அம்மா பேச்சை அவன் கேட்டிருக்கக் கூடாது!

என்ன விஷயம் பெரியப்பா?

உங்கப்பனுக்கு முரட்டு பிடிவாதம் அதிகம். ஆனா, எங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னால் அதை உயிரே போனாலும் மீறமாட்டான்! அதுதான் அவனோட பலவீனம்!

அந்தப் பொண்ணு என்னைத்தான் வரச்சொல்லி கடுதாசி போட்டுச்சு!

கண் கலங்க, கையைப் பிடிச்சுக்கிட்டு கெஞ்சுச்சு!

இவன்கிட்ட பேசினேன்!

இல்லண்ணா, அம்மாவுக்கு இஷ்டம் இல்லை, இதோட விட்றுங்க! இனி இதைப்பத்தி எங்கிட்ட பேசாதீங்கன்னு எழுந்து போய்ட்டான்.

அன்னைக்கே அந்தப் பொண்ணு பாம்பே கிளம்பி போயிடுச்சு! நான்தான் போய் ரயில்ல ஏத்திவிட்டேன்!

தலையும் வாலும் புரியவில்லை ரவிக்கு!

என்ன சொல்றீங்க பெரியப்பா!

விடு! அவனே போய்ட்டான்! இனி இதை பேசி என்ன ஆகப்போகுது!

ஆனா உங்கப்பன் பிடிவாதமா இருந்துட்டான். எங்க அம்மா பேச்சை அவன் கேட்டிருக்கக் கூடாது! அவன் செஞ்சது பெரிய தப்பு!

அவ்வளவுதான்!

அதற்குப்பிறகு அவர் எதற்கும் பதில் சொல்லல!

கிளம்பும்போது சொன்னார்! ரவி, இது உனக்கு மட்டும் தெரியணும்ன்னு நான் சொன்னேன்! இதை யார்கிட்டயும் பேசிட்டிருக்க வேண்டாம்!

ரெண்டுபேரும் பாரத்தை ரவி தலையில் இறக்கி வச்சுட்டு, அமைதியாகிட்டாங்க!

அப்பாவோட கல்யாணக் கதை! அவர் பெண்ணையே பார்க்காமல் அம்மா சொன்னால் சரி ன்னு நேரா கல்யாணத்துக்கு வந்தது இப்போதான் கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது ரவிக்கு!

யோசித்துப் பார்க்கும்போது எந்த முடிச்சையுமே அவிழ்க்க முடியவில்லை ரவிக்கு!

மனைவி, பிள்ளைகளிடம் அத்தனை பிரியமான மனிதர்! ராஜா வீட்டுப் பிள்ளைகளைப்போல் பிள்ளைகளை வளர்த்தவர்!

தன் மகள் திருமணம்வரை, அவர் அம்மா மரணிக்கும்வரை அவர் கிழித்த கோட்டை தாண்டியதில்லை!

ஆனால், அவர் பொழுதுபோக்காக ஒரு சினிமா பார்த்ததையோ, பாட்டுக் கேட்டதையோ, வேறு எந்தப் பழக்கமும் இருந்ததையோ ரவி பார்த்ததே இல்லை!

கணவன் மனைவிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்தபோதும் ரவியின் அம்மாவும் இந்த விஷயங்களில் அவரை குறை சொன்னதில்லை!

மும்பை, ஹைதராபாத், சென்னை, டெல்லி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி என நினைத்த நேரத்துக்கு நினைத்த ஊருக்கு பயணம்- தொழில் நிமித்தமாக!

வரும்போதெல்லாம், பெண்டாட்டி, பிள்ளைகளுக்கு பெட்டி நிறைய, ஏதாவது!

அவருடைய எந்தப் பயணத்துக்கும் அம்மா தடைசொல்லி பார்த்ததில்லை ரவி!

ஆனால், யோசித்துப் பார்த்தால், அவர் திருவையாறு போகும்போது மட்டும் அம்மா மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொள்வது இப்போது நியாபகத்துக்கு வந்தது ரவிக்கு!

உடல் முழுமையாக ஒத்துழைக்க மறுத்தபோதும், பிடிவாதமாக கடைசி வருஷம் டாக்ஸி வைத்துக்கொண்டு அவர் திருவையாறு போனதும், வேண்டாவெறுப்பாய் புலம்பிக்கொண்டே அம்மா கூடப் போனதும்

இன்னொரு விஷயமும்கூட! தைரியமாக புதுத்தொழில்களை ஆரம்பிப்பார்! துணிந்து அகலக்கால் வைப்பார்! அயராமல் சுத்துவார், உழைப்பார்! ஆனால் கடைசி, ஃபினிஷிங் டச் மட்டும் ஏனோ எதிலுமே அவருக்கு சரிவர அமைந்ததில்லை

பெரியப்பா, சித்தப்பா இருவர் சொன்னதையும், இதையெல்லாம் முடிச்சுப்போட்டு, மண்டைக்குள் தனியே குடைந்துகொண்டிருந்த ரவி, அப்பா இறந்து ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து பேச்சு வாக்கில் கேட்பதுபோல் அம்மாவிடம் கேட்டான்.

ஏம்மா, அப்பாவுக்கு கர்நாடக சங்கீதத்தில் ரொம்ப ஈடுபாடா?

இல்லையேப்பா!

பின்ன ஏன் அவரு வருஷாவருஷம் திருவையாறு போனாரு?

அவர் எல்லா ஊருக்கும்தான் போனாரு

சுவாரஸ்யமே இல்லாமல் வந்தது பதில்!

ஏம்மா, அப்பா ஏதாவது வாத்தியம் வாசிப்பாரா?

அப்படின்னா?

இல்லை, இந்த வயலின், மிருதங்கம் இந்த மாதிரி!

இல்லையேப்பா, இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்காதா

சொல்லிக்கிட்டே எழுந்து போய்ட்டார்!

அம்மா உண்மை சொல்லவில்லை என்பது புரிந்தது ரவிக்கு!

அறுபது வருட பழைய கதை! அதை தோண்டித் துருவி என்ன ஆகப்போகிறது என்று அதோடு ரவியும் அதை மறந்தே போனான்!

ஊரடங்கு, ஆஸ்பத்திரி, தொழில் நசிவு பிரச்னைகள் எல்லாம் அப்பா கதையை பின்னுக்குத் தள்ளியிருந்தாலும், ஏற்காடு, மேட்டுப்பாளையம், ஹைதராபாத், வயநாடு என்று போன இடங்கள் பலவற்றில் ஏற்பட்ட அடையாளக் குழப்பங்கள், அறிமுகமற்றவர்களின் அன்பான விசாரிப்பு, இவை ஏதோ ஒரு வகையில் அப்பாவோடு தொடர்பு படுத்தி யோசிக்கவைத்துக்கொண்டேதான் இருந்தது!

மேலும், தன் வாழ்வின் தன் பங்களிப்பே இல்லாமல் நடந்த ஒரு பெரிய விபத்தும், சமீபத்தில் மனோரீதியாக ஏற்பட்ட ஒரு பேரிழப்பும், விபரீதமான கற்பனைகளை விதைத்து, இவை ஏதோ ஒரு சாபம்தானோ என்று தடுமாறவைத்தது!

இப்படியெல்லாம் யோசிப்பதே அந்த அன்பு மட்டுமே கொடுத்து வளர்த்த ஆத்மாவுக்கு செய்யும் துரோகம் என்பதும் புரிய, தூக்கமின்றி அலைந்த ரவி, எப்படியாவது இந்த முடிச்சை அவிழ்ப்பதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தான்!

முதல் வேலையாக ஊருக்குப் போனவன், அப்பாவோட பென்ஷன் கேசுக்கு வேணும்மா ன்னு சொல்லி, அப்பாவுடைய பழைய பெட்டி எல்லாவற்றையும் குடைந்ததில், அப்பாவுடைய சர்ட்டிஃபிகேட் இருந்த ஃபைலில் கிடைத்தது அந்த நாலாக மடித்து வைக்கப்பட்ட காகிதமோ, கடிதமோ!

ஆனாலும் அதிலும் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை!

அரை நூற்றாண்டுக்கு மேலாக மடித்தே வைக்கப்பட்டு, நைந்து பொடிப்பொடியாய் உதிர்ந்த காகிதத்தில் காணக் கிடைத்தவை மைப்பேனாவில் எழுதிய சில ஆங்கில, ஹிந்தி எழுத்துக்கள் மட்டும்தான்!

அப்பாவுக்கு ஹிந்தி படிக்கத் தெரியும் என்பது அடுத்த ஆச்சர்யம்!

ஏதாவது தடயம் கிடைக்காதா என்று அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கே பயணம்- ஒரு சதவிகித வாய்ப்பு இருந்தாலும் விடவேண்டாமே என்று!

சினிமாவில்தான் சட்டென்று காட்சிகள் மாறி விடை கிடைக்கும்! வாழ்க்கை வேறானது!

உங்க அப்பா படித்த காலத்தில் இங்கு வேலை செய்தவர்கள் யாராவது உயிரோடு இருந்தாலே அது உலக சாதனை! அப்படி இருந்தாலும் பேசும் நிலையிலிருக்க வாய்ப்பே இல்லை!

அந்தக் காலத்து ரெக்கார்ட் எல்லாம் செல்லரிச்சு தூக்கிப்போட்டே இருபது வருஷமாச்சு!

அந்த வருஷம் பாம்பேல இருந்து இங்கே வந்து படிச்ச ஒரு பெண் என்பதைத் தவிர, பெயர்கூடத் தெரியாத ஒருவரைப்பற்றி அரை நூற்றாண்டுக்குமேல் கடந்து என்ன தெரிந்துகொள்ளமுடியும் என்று இவ்வளவு தூரம் வந்தீங்க?

நியாயமான கேள்வி!

அமைதியாக ஊருக்கு வரும் வழியில் மனசுக்குள் ஆயிரம் கேள்விகள்!

ஏன் தன் திறமையை அப்பா எல்லோரிடமும் சொல்லாமல் முழுமையாக மறைத்தார்?

வருடம் தவறாமல் ஊரில் கூடி கிண்டலும் கேலியுமாக கூத்தடித்த குடும்பத்தில், எப்படி சொல்லிவைத்தாற்போல் அத்தனைபேருமே இந்த விஷயத்தை பேசாமல் தவிர்த்தார்கள்? ஒருவேளை இது அப்பா, பெரியப்பா, சித்தப்பா தவிர வேறு யாருக்கும் தெரியாதா?

சித்தப்பா சொன்னதும், பெரியப்பா சொன்னதும் முழுக்க ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையா?

ஒருமுறை நண்பர் குழுவில் ஒரு வித்வானோடு சேர்ந்து கச்சேரி கேட்க நேர்ந்தபோது உங்கப்பா சுருதி தவறாமல் தாளம் போட்டு ரசிக்கிறாரே, அந்த அளவு முறையாக சங்கீதம் கற்றவரா என்று கேட்டபோது ஏன் அப்படி இல்லவே இல்லை, அது தற்செயல் என்று ஏன் மறுத்தார்?

அப்படி உயிரோடு இசை ஊறிப்போன ஒரு மனிதர் ஏன் அவ்வளவு வைராக்கியமாக அதை இறுதிவரை மறுக்கவும் தவிர்க்கவும் செய்தார்? அவ்வளவு பெரிய ரணமா அவர் மனதில்?

அப்படி ரணம் சுமந்தவர் எப்படி மனைவியிடமும் குழந்தைகளிடமும் அத்தனை அன்போடும் அனுசரனையோடும் இருந்தார்?

கடைசிவரை ஒட்டாத ஒரு வாழ்க்கையையா வாழ சபிக்கப்பட்டார் அவர்?

அப்பாவின் எந்தப் பயணத்திலும் தலையிடாத அம்மா, அவர் தியாகய்யர் ஆராதனைக்குப் போகும்போது மட்டும் முகம் மாறுவதை வழக்கமாக வைத்துக்கொண்டார்? எனில், அம்மாவுக்கு இது எவ்வளவு தூரம் தெரியும்? இப்போது அவரிடம் இதைப்பற்றி விசாரிப்பது சரிதானா?

இதனால்தான் அப்பா தனக்கென்று ஒரு நட்பு வட்டமே இல்லாமல் தனித்தே இருந்தாரா?

அப்பாவுக்கு நேர்ந்த பல விஷயங்கள் ஏன் ரவிக்கும்?

அத்தனை நண்பர் கூட்டத்தோடு கொண்டாட்டமாக சுற்றிய ரவி எப்படி தொழில்முறை நட்பு தவிர வேறு ஏதும் இல்லாது போனான்?

வெகு சமீபத்தில்கூட அமைந்த ஒரே நட்பும் ஏன் நிரந்தரமாக விலகிப்போனது? 

எனில் இது அந்தப் பெண்ணின் சாபம் என்று கொள்ளலாமா? 

அதே நம்பிக்கையின்படி தீராத ஆசைகளோடே மரித்துப்போன அப்பாவின் ஆன்மா இன்னும் சாந்தி அடைந்திருக்காதா?

ரவிக்கு அப்போதைக்குத் தோன்றியது ஒரே வழிதான்!

வரும் வழியில் அப்பாவின் அஸ்தி கரைத்த பவானி ஆற்றில் ஒரு புல்லாங்குழலை மிதக்கவிட்டு கண் மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்!

என்ன செய்ய? பல பழைய விடுகதைகளுக்கு விடைகள் எந்நாளும் கிடைக்கப்போவதே இல்லை

ஏனோ, கல்லூரித் தோழி அழைப்பு வர, மொபைலை எடுத்துக்கொண்டு மாடிக்கு நகர்ந்த மகனைப் பார்க்கும்போது அப்பா நியாபகம்வருவதை தவிர்க்க முடியவில்லை ரவிக்கு!