புதன், 31 ஆகஸ்ட், 2022

ஒற்றை வாக்கியம்

இருள் சூழ் மாலைவேளையில் அருவிபோல் கொட்டும் மழையில் பெசண்ட் நகர் கடற்கரை ஏகாந்தத்தில் தனித்திருக்கையில் உள்ளுணர்வுந்தத் திரும்பிப் பார்க்க, தன் போலவே மழையருந்திக் கடலாடிக்கொண்டிருந்த தேவதையைக் கண்ட கணத்தில் மழைக்குளிரை மீறி சிலிர்த்த தேகமும் ஆர்வமும் உந்த, அறிமுகக் குலுக்கலுக்கு நீண்ட கரத்தை தயக்கமின்றிப் பற்றிய குளிர்ப்பூ விரல்கள் இனி ஆயுளுக்கும் பிணைப்பை விடுவதில்லை என்பது உணராமலே கதைபேசி மழையில் கரைந்து நின்றபோது உள் முகிழ்த்த காதல் மலர அதிகநாள் ஆகவிடாமல் இரு மனமும் சந்திப்பின் காரணங்கள் தேடி தற்செயலும் தற்செயல்போன்ற பாவனையுமான சந்திப்புகளில் ஒத்த ரசனைத் தேர்வுகளை வியந்து காதல் வளர்க்க வழமைபோல் குறுக்கே விழுந்து மறித்த சாதியும் அந்தஸ்தும் கலாசாரமும் என்ற கற்பிதக் காரணிகளோடு இருதரப்பிலும் பெற்றோரும் உற்றோரும் அன்பாகவும் மூர்க்கமாகவும் தந்த இடைஞ்சல்கள் எல்லாமே கல்வி தந்த தெளிவும் காலூன்றி நிற்க உதவிய வேலையும் துணிந்து எதிர்த்து நிற்கத் தெறித்தோட அதானியின் செல்வ வளம்போல் அயராமல் பிணைப்பு வளர்ந்து தழைக்க, ஆயிரம் ஆலோசனைகளுக்குப்பின் பதிவுத் திருமணம் செய்யக்கூட மறுத்த அலுவலர்களை சம்மதிக்கவைக்க உள்ளூர் வழக்கறிஞர்கள் உதவ வராத சூழலில் தேடியலைந்து பிடித்துவந்த முற்போக்கு வழக்கறிஞர் உதவியோடு சட்டப்படி மணம் புரிந்தும் அலுவலகம் வெளியிடம் யாவற்றும் கேலியும் கிண்டலும் நையாண்டியும் புறங்கை வீசிக் கடந்தாலும் வீடு கிடைப்பது இன்னொரு பெருந்தடையானபோது தவிர்க்கமுடியாது மாதத் தவணையில் துணிந்து வாங்கிய சொந்த வீடும், அதன்பின் சில ஆண்டில் தத்தெடுத்த பிள்ளையும் என மகிழ்ச்சிப் பூ மலராத நாளே இல்லா அதன்பின் வந்த ஆண்டுகள் யாவிலும் நில்லாதோடிக்கொண்டிருக்கிறது காதல் நதி முற்றுப்புள்ளியே இல்லாத இத்தொடர் வாக்கியம்போல் மைதிலி மலர்விழி வாழ்வில்!

பிகு:

கலாசாரம் காக்கத் துடிப்போர் மட்டும் பெயர்களை மைதிலி ரகுராமன் என்று மாற்றிக்கொள்ளலாம்😊