செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ஓயாத விவாதங்களுக்கு ஒரு பதில்!

நீயா நானா விவாதங்களும் ஒப்பீடுகளும்!

முதலில் ஒரு டிஸ்கி!

இதுவரை அந்த நிகழ்ச்சி ஒரு எபிசோட் கூடப் பார்த்ததில்லை- எல்லாமே இங்கு பார்க்கும் பிட்டுக்கள்தான்!

அந்த நிகழ்ச்சி பற்றிய விவாதங்கள் இன்னுமே டிஎல்லில் ஓயாததால்….

பட்டிமன்றத்தில் மனைவியை/ கணவனை தாழ்த்திப்பேசுவதில்லையா என்பதிலிருந்து ஏகப்பட்ட ஒப்பீடுகள்!

அந்தப் பட்டிமன்ற விவகாரம் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட விகாரம்!

அங்கே உளறுவது எல்லாமே கைதட்டலுக்கான அபத்தம் என்பது எல்லோருக்குமே தெரிந்தது!

அடுத்து அந்த 200 கிமீ விவகாரம்! அதையும் எல்லோருமே கண்டித்திருக்கிறார்கள்! ஆனால் அந்தப் பெண்ணுக்கு விழுந்த அடியின் உக்கிரம் இதில் இல்லை !

காரணம் வெகு எளிது

நான் பார்த்த க்ளிப்பிங்கில் அந்த மனிதரின் பேச்சில் அத்தனை வன்மமும் நக்கலும் இல்லை!

அது அந்தப் பெண்ணிடத்தில் ஏராளமாக கொட்டிக்கிடந்தது! அதை பொது இடத்தில், முகத்துக்கு நேராக எக்ஸிபிட் செய்தது கொடூரம்!

மேலும், ஆண் சமைப்பதைக்கூட ஓரளவு நக்கலோடு ஏற்றுக்கொள்ளும் சமூகம், பாத்திரம் தேய்ப்பதையும், வீடு கூட்டுவதையும் எப்படி விமர்சிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்!

அந்தப் பொதுப்புத்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பலர் வெளியே வருவது நல்ல விஷயம்!

இன்னொன்று அந்தப் பெண்ணை குறை சொல்லி நானெல்லாம் அப்படி இல்லை என்று நிரூபிக்கவே இத்தனை விமர்சனமும் என்பது!

இருக்கலாம்! நானெல்லாம் அப்படி இல்லை என்பதே நல்ல விஷயம்தானே

மேலும், ஒப்பீடுதானே நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? ஒப்பீடற்ற எதுவுமே நல்லதுமல்ல, கெட்டதுமல்ல, வெறும் நிகழ்வு!

உதாரணங்களை என்போன்ற சிலர் வெளியிலிருந்து எடுப்பதில்லை!

மனைவி கொஞ்சம் பின் தூங்கி, பின் எழுபவர் என்பது எனக்கு வசதி! சமையலில் இருக்கும் மையல் என்பதைவிட, வீட்டிலிருக்கும் மூன்று நண்பர்களைத்தவிர வெளியே யாரோடும் ஒட்டாத ஒரு செமி இண்ட்ரோவர்ட்க்கு சமையல்தான் சரியான பொழுதுபோக்கும் கவலை கொல்லியும்!

அதிகாலை எழுந்து காஃபி கடமை முடிந்ததும், கல்லூரிக்கு ஏழு மணிக்குக் கிளம்பும் மகனுக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்கு தினமும் ஏதாவது ஒன்றை செய்து ஊட்டிவிட்டு அனுப்புவது நானாக இழுத்துவிட்டுக்கொண்ட சந்தோஷம்!

வீராவுக்கு முட்டை வேகவைப்பதும், காய்கறி சாதம் குக்கரில் வைப்பதும் இன்னொரு ருட்டீன்!

பிள்ளைகள் ஏதாவது கேட்டால் லஞ்ச்சுக்கும் ஏதாவது செய்துவைத்துவிட்டே அலுவலகம் கிளம்புவது நடைமுறை!

இதில் இருவருக்குமே ஒருமாதிரி உடன்பாடு!

ஆனால், தினசரி ஒரு விஷயத்தில் வாக்குவாதம்!

நீங்க என்னவோ சமையுங்க, நான் வேண்டாம்ன்னு சொல்லல, ஆனால் தயவுசெய்து பாத்திரம் மட்டும் தேய்க்காதீங்க, அதை சிங்க்கில் போட்டுவெச்சுடுங்க, எனக்கு கஷ்டமா இருக்கு!”

அவருக்கு கையில் கொஞ்சம் பிரச்னை, கூடவே எனக்கும் சமைத்த பாத்திரம் கழுவாமல் வைத்திருப்பது பிடிக்காத விஷயம்

எனவே, தினசரி அவர் இதை சொல்வது நடைமுறை

ஒருவேளை அவர் அப்படி சொல்வதை நிறுத்தினால் நான் பாத்திரம் தேய்ப்பதை நிறுத்திவிடுவேனோ என்னவோ!

இது பெண்ணுக்கான வேலை என்று பிரித்தால், ஆணின் வேலை என்ன

குழந்தைகள் படிப்பும், உறவினர்களோடு நட்புறவும், விசேஷங்களுக்கு தவறாமல் கலந்துகொள்வதும்

இந்த இரண்டுமே நான் ஃபெயில் மார்க் வாங்குமிடம்! அதை அவர் மிகத்திறமையாக, எனக்கு தொந்தரவில்லாமல் பார்த்துக்கொள்வதற்கு இது ஒரு சின்னக் கைமாறு!

காதல் ஒருவனை/ஒருத்தியை கைப்பிடித்து, அவர் காரியம்யாவினும்கை கொடுத்து என்பது இப்போது ஓரளவு பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கும்போது, அந்த இன்னொரு ஆணின் வாதம் அபத்தம், அந்தப் பெண்ணின் நக்கலும் வன்மமும் குற்றம் - அவ்வளவே!

கடைசியாக:

விஜய் டிவி நிகழ்ச்சிகள் எல்லாமே ஸ்க்ரிப்டட் என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்!

அந்த நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்றால் அந்தக் கண் கலங்கிய கணவனும், நையாண்டி செய்த மனைவியும் அவார்டுக்கான நடிகர்கள்!🌹🌹

ஆனால், அதிலும் அந்தப்பெண்ணின் சிரிப்பு கொஞ்சம் அருவெறுக்கத்தக்க மிகை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக