புதன், 21 செப்டம்பர், 2022

அறம் அனைவருக்குமானது!

அறம் பிறழ்ந்த சமுதாயத்தில் வாழ்கின்றோம் நாம்!

கூர்மையாக சீவப்பட்ட கலர் பென்சில் படத்தைப் பகிர்ந்து, “தமிழில் கூறு கெட்ட என்ற வார்த்தையே இல்லை, கூர் கெட்ட என்பதே மருவி…” என்றொரு வியாக்கியானம்! ஆர்வக்கோளாறால், அப்படி இல்லை, கூறு என்பது சங்க இலக்கியங்களில் எங்கெல்லாம் இருக்கிறது என மெனக்கெட்டு தரவுகளை எடுத்துப்போட்டு ஒரு விளக்கம் சொல்ல, அடுத்த கரணம், “இருக்கலாம், ஆனால் எளியோர் அந்த அர்த்தத்தில் சொல்வதில்லைமறுத்து ஏதோ சொல்ல, “நீர் எந்த கல்லூரியில் இலக்கணம் படித்தீர், ஒப்பிலக்கணம் அறிவீரோஎன்று அபத்தப் பிதற்றல்!

சரி, ஏதோ தவறான மனநிலையில் இருக்கின்றார்போல என்று அப்போதைக்கு மௌனமாக விலகிவிட்டேன்!

சில பல இணக்கமான உரையாடல்களுக்குப்பின், சில மாதங்களில் இன்னொரு பதிவு, “பிருத்விராஜன் என்றால் மண்ணாங்கட்டி அரசன் என்று பொருள்!”

மறுபடி, அது மண்ணாளும் அரசன் எனப் பொருள்படும் என்பதை தரவுகளோடு விளக்க,

நீர் சமஸ்கிருதம் அறிவீரோ, எந்த பல்கலைக்கழகத்தில் பயின்றீர்? நான் அனைத்து மொழியும் அறிவேன்…” என்று ஆரம்பித்து சகட்டுமேனிக்கு வசைபாடல்! உடனே ப்ளாக் வேறு

இப்படித்தான் அறிமுகம் அந்தத்தமிழ் அறிஞரை”.

அவர் எழுதியதாக சொல்லிக்கொள்ளும் அறியப்படாத புத்தகத்தின் அபத்தங்களை தர்க்க வாதத்தோடு பட்டியலிட்ட வேறொருவரை, அவர் பிறப்புவரை விமர்சித்து ஒரு பதில்!

அதில் ஒரு வார்த்தைகூட அந்த தர்க்கவாதத்துக்கு பதில் இல்லை!

எப்போதுமே தன்னை வியந்து போற்றிப் பாடும் சிறுமை!

அது அவரது இயல்பு

இங்கேயே ஒரு தம்பதியரை அப்பா, அம்மா என்று புகழ்ந்து, கருத்து மாறுபட்டதும், அவர்கள் சாதியை பிரதானமாக வைத்து, அவனே அவளே என்று, ஓரளவு நாகரீகமாகப் பேசக்கூடிய யாரும் பகிரத் தயங்கும் வார்த்தைகளால் வசைபாடிய வரலாறு ஊரறியும்!

மடிசார் கட்டும்போது அவாள்ளாம் ஜட்டி போடுவாளா?”

மீசை எடுத்ததும் எங்காத்துப் பிள்ளை போல இருக்கேடா அம்பி, இனி பாப்பாரக்குட்டியெல்லாம் உன்னை ஈஷிண்டு நிக்கப்போறதுன்னு மாமியெல்லாம் என்கிட்ட வழியறா!”

இது உள்ளதற்குள் ஓரளவு நாகரீகமான விமர்சனங்கள், இன்று தமிழுக்கு தன்னைத்தானே அத்தாரிட்டி என்று சொல்லிக்கொள்ளும் பேரறிஞர் கண்ணபிரானின் பதிவுகளில் இருந்து!

அவர் மற்றவர்களைச் சொல்வதுபோல் தமிழ் அறிவே அற்றவர் என்று வசைபாடவில்லை! அவரது பல பதிவுகள் உயர்தரம்- அதன் வேரைத் தேடிப் போகும்வரை! தான் தேடித்தேடிப் படித்தவற்றை, தன் கருத்தாகப் பதிவதும், பாராட்டுப் பெறுவதும் எல்லோரும் செய்வதே! (Poster of the day போல)

இங்கு பலரும் ஓரளவேனும் தமிழ் அறியக் காரணமானவர் அவர்!

ஆனால், தற்சமயம் விவாதம் அவரது தமிழ் வாசிப்பையோ, அதைப் பகிர்வது பற்றியோ அல்ல!

அவர் தன்னை முனைவர் என்று சொல்லிக்கொள்வதும் யாரையும் பாதிக்கப்போவதுமில்லை! அதை சரிபார்ப்பதும் தேவையற்றது!

ஆனால், UC Berkeley university யில் தான் முனைவர் பட்டம் பெற்றதாய் அவர் பகிர்ந்ததோடு, அதை அடிப்படைத் தகுதியாகவைத்து அரசியல் ஆதாயமும், பதவியும், அங்கீகாரமும் பெற முயலும்போது, அதன் உண்மைத்தன்மையை ஆராய அனைவருக்குமே உரிமை உண்டு!

நானே சொன்னாலும் அதைக் கேள்வி கேள் என்று சொன்ன பெரியார் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகம், எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறது!

இப்போது அவர் அதிகாரப்பூர்வமான முனைவர் ஆகிவிட்டார்! வெகு சிறப்பு! ஆனால் அது ஒரு மகத்தான பொய்யின் அடிப்படையில்!

அதோடு நில்லாமல், அவர் முதல்வரின் நம்பிக்கைக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவர் உதவியோடு முதல்வரை சந்திக்கிறார்! தன்னை வந்து சந்திக்கும் எல்லோருடைய பின்புலத்தையும் முதல்வர் ஆராயவேண்டிய அவசியம் இல்லை, அது நடைமுறை சாத்தியமும் இல்லை! தன்னை சார்ந்தவர்கள் அந்த வேலையை செய்தபிறகே தன்னிடம் அழைத்துவருவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை சந்திக்கவும், தன்னோடு புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கிறார் முதல்வர்!

அப்படி சந்தித்து முதல்வருக்கு வழங்கிய புத்தகத்தின் அட்டை முதற்கொண்டு பித்தலாட்டம்!

இது முதல்வருக்கும் தன் கட்சிக்கும் எத்தனை பெரிய ஊறு என்பதைக்குறித்து அழைத்துப்போன பெரிய மனிதருக்கு அக்கறை இல்லை! நாளை இந்தப். புகைப்படமும் இந்த முனைவர் பட்டமும் அந்தப் போலியால் தவறாக உபயோகிக்கபட்டால் அவர் பொறுப்பேற்றுக்கொள்வாரா?

இதையே வேறொரு சிறிய உதாரணத்தோடு பார்ப்போம்!

யாரோ ஒருவர், சில மருத்துவக் கட்டுரைகளை ஆய்ந்து படித்து, அவற்றை இங்கு தொடர்ந்து பகிர்வதன்மூலம், தன்னை ஒரு மருத்துவராகவே நிறுவமுடியும்!

அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு மருத்துவப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை மருத்துவராக பட்டம் பெற்றதாகக் கூறினால் யாரும் அதை ஆராயப்போவதில்லை!

ஆனால், அவருக்கு அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் பதவி வழங்குமேயானால், அவரது தகுதியின் உண்மைத்தன்மையை பரிசீலிப்பது அவசியமாகிறது

அதுதான் இப்போது இவர் விஷயத்திலும் நடக்கிறது!

அழைத்துவந்த கல்வித் தந்தையோ, தான் அவர் சான்றிதழைப் பார்ப்பதுகூட அவரை அவமதிப்பது போலாகும் என்று பார்க்காமலே அழித்துவிட்டதாகவும், ஏன், மற்ற சாதியினர் கல்வித்தகுதியை மட்டும் பரிசீலிக்கவேண்டும் என்று வழக்கம்போல் சாதிக் கேடயத்தை தூக்கிப் பிடிக்கிறார்!

உண்மையும் நேர்மையும் எல்லா சாதிக்குமே அடிப்படைத் தேவை!

ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தொடர் தற்கொலைகள் குறித்து சந்தேகம் எழுப்பியபோது அந்தப் பகுதி காவல் ஆய்வாளர் திரு. … லஞ்சம் வாங்கிவிட்டார் என்று சொல்கிறீர்களா என்று வேர்வரை போய் உண்மையை காப்பாற்றியவர் என்பது இதில் அபத்த முரண்! (இப்போது மாறிவரும் காட்சிகளால், அவரே இனி கேள்வி எழுப்புவார் என்பது வேறு விஷயம்)

சில்க் சுமிதா உள்ளாடை வண்ணம் முதல், ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களின் மார்பக வடிவம் வரை தரவுகளோடு பக்கம் பக்கமாக விவாதிக்கும் அந்த தமிழறிஞர் தன் நேர்மையை நிரூபிக்க முயலாமல் ஓடி ஒளிந்துவிட்டார்!

முட்டுக் கொடுப்பவர்கள் கேள்வி கேட்பவரின் சாதியை தோண்டியெடுத்து வர்ணம் பூசிக்கொண்டிருக்கிறார்கள்!

பாவம், அதே கட்சி அன்பர் ஒருவர், தன் பெயர் காரணமாக, தான் பார்ப்பன சதிகாரனோ கைக்கூலியோ இல்லை என்று நிரூபிக்க, தன் சாதியை சொல்லி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்!

இதுவரை வந்த முட்டுகளிலேயே தரமானது, அவர் தன் சுயவிபரத்தை பொதுவெளியில் பகிரத் தயங்கி, பல்கலைக் கழகப் பெயரையும், தான் பட்டம் பெற்ற துறையையும் ஏன் மாற்றிச் சொல்லியிருக்கக்கூடாது என்பது!

அபாரம்!

இந்த அபார முட்டுக்கு விளக்கம் சொல்வது வீண் வேலை! அந்தப் போலி அடையாளத்தை பயன்படுத்தி ஆதாயம் அடைவதையும் அவர் முட்டுக்கொடுக்கக் கூடும்!

இதில் இன்னும் பேரவலம், அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே பெரும்பான்மை முட்டுக் கொடுப்பது!

ஆதாயம் தேடி கட்சியில் இப்போதைக்கு இணைந்த அந்தப் புதுமுகங்களுக்கு கட்சியின் வரலாறு தெரிய நியாயம் இல்லை!

தன் ஞானத் தந்தையின் செயலையே கேள்வி கேட்டு வெளியே வந்து ஆரம்பித்த இயக்கம் அது!

பல வருடங்களுக்கு அதன் செயற்குழு கூட்டத்தில் அனல் பறக்கும்!

அன்றைய முரசொலி கிடைத்தால் படித்துப் பாருங்கள்!

கலைஞரையே, அவரைவிட பல படிநிலைகள் கீழிருப்பவர்கள் முகத்துக்கு நேராக விமர்சித்ததும், அதில் உண்மை இருப்பின், மறுநாள் கலைஞர் அவர்களை பாராட்டி அறிக்கை விடுவதும் வாடிக்கை நிகழ்வு!

அப்படிப்பட்ட கட்சியை தாங்கிப்பிடிக்க வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் இன்று தாங்கள் கொடுக்கும் முரட்டு முட்டுக்கு வெட்கித் தலை குனிய வேண்டும்!

அப்படி நீங்கள் காப்பாற்றியே ஆகவேண்டிய அளவுக்கு அவர் ஒன்றும் உங்கள் கட்சிப் பற்றாளர் இல்லை

உங்களைவிட பெரிய ஆதாயம் தேடி இங்கே கரை ஒதுங்கியவர் அவர்!

சில வருடங்களுக்குமுன் அன்றைய அதிமுக அரசின் கல்வி அமைச்சரை ஒருமையில் விமர்சித்து பதிவிட்டு, அடுத்த வாரமே அந்த அமைச்சர் அமெரிக்கா சென்றபோது, அவர் காலடியில் மண்டிபோட்டு (literally) அமர்ந்து ஈயென இழித்து அதையும் பெருமையாக பதிவிட்டு மகிழ்ந்த நேர்மையாளர்தான் அவர்

அந்தக் கட்சிக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது, முதல்வர் நேர்மையாளர் என்பது மாற்றுக் கட்சியினரும் ஒப்புக்கொள்ளும் உண்மை!

அதை சில்லறைகளின் ஆதாயத்துக்கு பலி கொடுக்காதீர்கள்!

அறம் கட்சி சார்பற்றது!

அதிலிருந்து பிறழாதீர்கள்- யாருக்காகவும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக