வியாழன், 8 செப்டம்பர், 2022

மன்றோ சிலையும் நள்ளிரவு சுயதொழில் முனைவோரும்!

நடைப் பயிற்சியும், சுயதொழில் முனைவோரும்!

ரவிக்கு சாப்பாட்டுக்கப்புறம் பிடித்த விஷயம், நடக்கறது!

ஒரு டீ குடிக்க ராத்திரி பத்து மணிக்கு ஆறு கிலோமீட்டர் நடக்கறது டெய்லி ருட்டீன் ஒரு காலத்துல!

பத்து மனுஷங்க, ஆறு வீடு, எட்டு மாடு இருக்கற குக்கிராமத்திலேயே ..ன்னு வேடிக்கை பார்த்துட்டு நடக்கறவனுக்கு, சென்னை சொர்க்கபுரி!

பிசுபிசுக்கும் கடல் காத்து, கூவத்து சுகந்தம், கொஞ்சம் அசந்தால் கால் சந்துக்குள்ள பூந்துபோற ஆட்டோ, எதுவுமே பொருட்டில்லை!

நுங்கம்பாக்கம் டு திருவல்லிக்கேணி, தினசரி பாதயாத்திரை- அதுவும், ராதாகிருஷ்ணன் ரோடு, பீச் ரோடுன்னு அகண்ட யாத்திரை!

பார்த்து கண்ணா, பீச்ல சுயதொழில் முனைவோர்கள் அதிகம், கண்ட நேரத்துக்குப் போறே, சட்டையைக் கழட்டிக்கிட்டு ஓடவிடப்போறாளுக- இது ரேவதி!

எனக்கு கராத்தே தெரியும், போடின்னு வெட்டி உதார் வேறு!

சம்பவத்தன்னைக்கு சௌகார்பேட்டைல சேட்டுக்குட்டிகளை அந்தப் பட்டிக்காட்டான் லட்டுருண்டையை பார்க்கறமாதிரி பார்த்துக்கிட்டே, பழக்கடை அக்காகிட்ட ஓசில லிட்சி வாங்கி தின்னுக்கிட்டே கதை பேசிட்டிருந்ததில் நேரம் போனதே தெரியல!

அப்பவும் அக்கா சொல்லுச்சு

எட்டு மணிக்கெல்லாம் மயானம் மாதிரி ஆயிடும் ஊரு! மரியாதையா 1சி புடிச்சு பெல்ஸ் ரோடு போய் எறங்கிக்க! பீச் ஸ்டேஷன் தாண்டினா வரிசை கட்டி நிப்பாளுக, அதுவும் அந்த மன்றோ சிலை, ஜிம்கானா க்ளப்பாண்டல்லாம் இந்நேரத்துக்கு நடந்து போறது ரிஸ்க், வேணாம், நடந்து போகாதே!”

ரெண்டு நாள் முன்னாடிதான் மணிஆர்டர் வந்துச்சு! கை நிறைய சில்லறைக்கு பஞ்சமில்லை!

டாக்ஸி பிடிச்சுக்கூட போயிருக்கலாம்தான்!

உள்ளூற, இவங்க சொல்ற ஆட்கள் எப்படித்தான் இருப்பாங்க பார்ப்போமே என்ற ஒரு ஆர்வம், என்ன, வேண்டாம்ன்னா விட்டுடப்போறாங்க, இது ரொம்பத்தான் மிரட்டுது! நாலு நாள் கராத்தே க்ளாஸை வேடிக்கை பார்த்த தைரியம் வேற! நமக்குத்தான் கராத்தே தெரியுமே!

பிரகாஷ் பவன்ல நெய் ரோஸ்ட்டும் ரவா இட்லியும் சாப்பிட்டு வெளியே வரும்போது மணி ஒன்பதரை! சாப்பிட சாப்பிடவே டேபிள் எல்லாம் கவிழ்த்துப்போட்டு ஸட்டர் பாதி இறக்கியாச்சு!

அந்தக் கால மௌண்ட் ரோட்டில் சோடியம் வேப்பர் லேம்ப் கூட போடாம அழுது வடியும்!

இப்போ மாதிரி இல்லாம எட்டு மணிக்கெல்லாம் கூடடைஞ்சு பிரஜாவிருத்தில மும்முரமாயிடுவாங்க சென்னைவாசிக!

வீடு போய் கழட்டற வேலை ஒன்னும் இல்லை! அதனால, அப்படியே மெதுவாக நடை!

எம்எம்சி கிரவுண்ட் தாண்டி பாலம் இறங்கி, வலதுபுறம் திரும்பும்போதே, மௌண்ட்ரோடு ஓமன் படத்துல வர்றமாதிரி இருளோன்னு கிடக்குது!

கூவம் தாண்டி ஒரு நாலடி நடந்ததும்,

தம்பி, மணி என்ன?”

ரேடியம் டயல் ஹெச்எம்டி வாட்ச்

பத்தரைக்கா!”

பத்து ரூபாய்தான், வர்றியா?

என்ன்னாது

இல்லை, இல்லை, வேணாம்க்கா!

வேகமாக நடக்க, இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு சுய தொழிலதிபர்!

தம்பி..

இல்லக்கா, வேணாம்!

என்ன நோணாம், இன்னைக்கு கிராக்கி ஏதும் இல்லை, பத்து ரூபா கொடுத்துட்டுப்போ!

சீ, கைய விடுன்னு சொன்னதுதான் தப்பாப்போச்சு!

என்னடா சீ, எடு காசை!

மேல் பாக்கெட்ல இருந்த இருபதும் சில்லறை அக்காவே எடுத்துக்கிச்சு!

கை கால் உதறலும், பட்டிக்காட்டு திருட்டு முழியும் கொடுத்த தைரியம்,

வாட்ச் நல்லா இருக்கே, கழட்டு!

குதிரைமேல இருந்து வெறிச்சுப் பார்த்த மன்றோ தவிர காக்கா இல்லை!

மரியாதையா கை மாறிய வாட்ச்!

நீ ஒன்னும் சும்மா கொடுக்கவேணாம், இதையாவது  தொட்டுப் பார்த்துட்டுப் போ!

அது வரைக்கும், அதிகபட்ச போர்ன் சரோஜாதேவியும் அதில் வரும் ப்ளாக் அண்ட் ஒய்ட் ஃபோட்டோக்களும்தான்!

கண்ணெதிரில் கழட்டிக் காட்டியதைப் பார்த்த அதிர்ச்சில உடம்பெல்லாம் உதற, கையை உருவிக்கொண்டு கண்ணீர் வழிய ஓடிய வேகம் அநேகமா பென்ஜான்சனுக்கு பக்கத்தில் இருக்கும்!

ஜிம்கானா க்ளப் தாண்டி, ராஜாஜி ஹால் கேட் சந்துக்குள்ள பூந்து கவர்மெண்ட் எஸ்டேட்க்குள்ள நுழைய வரைக்கும் ஓட்டமும் கண்ணீரும் நிக்கல!

மறுநாள் ரேவதிஎங்கடா வாட்ச்?”

ரிப்பேர்டி!

இன்னைக்கு வரைக்கும் வாட்ச் கட்டாம இருக்க ஆயிரம் காரணம் சொல்லியாச்சு!

சிஏ பாஸ் பண்ணா வாட்ச் கட்றதில்லைன்னு வேண்டிக்கிட்டேன்ங்கறது உட்பட!

ஒரு வாரம் கழிச்சு நோண்டி நோண்டிக் கேட்ட ரேவதிக்கு மட்டும் உண்மை தெரியும், என்ன, கூடவே கராத்தே கத்துக்கிட்ட லட்சணமும்!

திங்கள், 5 செப்டம்பர், 2022

ஆசிரியர் தின நினைவலைகள்!

ஆசிரியர் தின நினைவலைகள்!

என்னைச் செதுக்கிய உளிகள் எழுதியபோதே ஏதோ ஒருவகையில் என்னை உருவாக்கிய ஆசிரியர்களைப்பற்றி ஒரு இழை எழுத எண்ணியது, அடுத்த வருடம் யாருக்குமேவநிச்சயம் இல்லை என்ற நினைவு உறுத்த, இன்று


1. ஜெயா டீச்சர்

நானே உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன், என்னை விட்டுப் போகாதீர்கள் என்று கட்டிப்பிடித்து அழுத என் நெற்றியில் முத்தம் கொடுத்துக் கண்ணீரோடு பிரிந்த அன்புரு! வர்க்க வேறுபாடுகளாலும், பொருந்தா இணையாலும் வாழ்க்கையைத் தொலைக்க நேர்ந்த அந்த தெய்வம் கற்றுக்கொடுத்த பாடம் இன்றுவரை என் வழித்துணை! இன்றும் ஏதோ ஒரு வகையில் என்னை பாதிக்கும் ஒருவரை அவரோடு ஒப்பிட்டே தொழவைக்குமளவு என்னை பாதித்த என் முதல் குரு.


2. சாமிநாத ஆசிரியர்

பிறப்பால் பிராமணன். தனக்கான சனாதனக் கடமைகளில் நல்லதை மட்டும் தெளிந்து கடைப்பிடித்து வாழ்ந்த பேரன்புச் சுரங்கம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதில் அயராத நம்பிக்கையோடு, கேடில் விழுச்செல்வம் சேரிக்கும் சென்றடைய தன்னாலியன்றதற்கு மேலும் முயன்ற புரட்சிக்காரன். அரை நூற்றாண்டுக்கு முன்பே அந்தச் சிற்றூரில் சாதிப் பாகுபாடுகளை எந்த ஒரு இயக்கப் பின்புலமும் இன்றி உறுதியாக மறுதலித்து எதிர்த்த முண்டாசு கட்டாத பாரதி! படிப்பின் அவசியத்தை, அதை பரவலாக்குவதை என்னுள் விதைத்த ஆலவிருட்சம்.


 3. திருமால்

அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். தலைமைப் பண்பு எப்படி இருக்கவேண்டும் என்பதன் இலக்கணம். டக் இன் செய்த ஒய்ட் அண்ட் ஒய்ட் சீருடையில் ஒரு பொம்மை போல் வருவார். தினசரி ப்ரேயரில் கொடியேற்றி அவர் ஆற்றும் சிற்றுரை ஒரு உற்சாக டானிக். அவர் சம்பளத்தில் பாதியை எங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக மாற்றிய ஆண் சரஸ்வதி.


4. முத்துக்கிருஷ்ணன்

கணக்குப் புலி. சொல்லிக்கொடுப்பதை மறக்கமுடியாமல் மனதில் விதைக்கத் தெரிந்த வித்தைக்காரர். நேர்மைக்கு ஒற்றை மானிட உருவம். அறைந்தால் கன்னத்தில் இரண்டு நாள் அதற்கான தடம் இருக்கும். அந்த அறைக்கான காரணம் ஆயுளுக்கும் மனதுக்குள் பதியும். கண்டிப்போடு கணக்கைக் கரைத்துப் புகட்டிய தாய்.


5. இப்ராஹிம்

பூகோள ஆசிரியர், கூடவே பாடத்திட்டத்தில் இல்லாத பலவும் சொல்லிக்கொடுத்த பேராசான். கண்டிப்பில் இவர் தனி ரகம். தவறு செய்தவர்களை, பாடம் எழுத மறந்தவர்களை, வகுப்பறையின் கடைசியில் நிற்கவைத்து, கடைசி ஐந்து நிமிடங்களில் பிரம்பை எடுத்தால் ருத்ரதாண்டவம்தான். அந்தப் பிரம்புதான் எங்களை நெறிப்படுத்திய குரு.


6. தமிழய்யா

எத்தனை யோசித்தும் பெயர் நியாபகம் வரவில்லை- தமிழய்யா என்றே மனதில் பதிந்தவர். இலக்கண, இலக்கியக் கடல்! செய்யுள், துணைப்பாடங்களோடு நீதிபோதனையை பருப்பு சோற்று நெய்யாய் கலந்து பிசைந்து ஊட்டியவர். ஒரு பேரழகு மகளைப் பெற்றவர். லீவ் வேகன்ஸியில் பாடம் நடத்த வந்த அவர் மகள் அழகு பற்றி நான் பேசியதறிந்து, எப்போ பொண்ணு கேட்க வரப்போறீங்க மாப்பிள்ளை என்று வகுப்பறையில் சிரித்துக்கொண்டே கேட்டு ஊசி இறக்கிய மருத்துவர். என் ஞானத் தோழன்.


7. அனந்த பத்மநாபன்

கல்லூரி என்னும் பெரும் கனவுத் தொழிற்சாலைக்குள் காலெடுத்து வைத்தபோது அன்பால் அரவணைத்த கல்லூரி முதல்வர். ஓட்டை சைக்கிளிலேயே இறுதிவரை வந்த எளிமையானவர். எனக்கு எந்த வகுப்பும் எடுத்ததில்லை என்றாலும், படிபரபு சாராத மற்ற காரணங்களுக்காக எனக்கு உற்ற தோழமையானவர். கேண்டீனில் உன்னி தரும் பூனை மூத்திரம் போன்ற தேநீரைக்கூட ரசித்துப் பருகுமளவு வானக்கூரைக்குக் கீழிருக்கும் எல்லா விஷயங்களையும் என்னோடு விவாதித்த ஞானாசிரியன். தோழமை என்பதன் மானிட உரு.


8. சக்திவேல்

வேதியியல் விரிவுரையாளர். கண்டிப்பின் சிகரம். கல்லூரி மாணவனை கை நீட்டி அடிக்க பெரும் துணிவு வேண்டும். எங்களைவிட சில வயதே மூத்தவரான அவருக்கு அந்தத் துணிவு இருந்தது. கற்பிப்பதில் அவருக்கு இருந்த அபாரத் திறமை தந்த துணிவு அது. அந்தக் கண்டிப்போடு, மாணவர்களின் எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய அக்கறை சரிவிகிதத்தில். வேதியியல் பேராசிரியரோடு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட உரசலில் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து, செமஸ்டர் தேர்வில் எனக்கான சால்ட் வேறொரு வேதிப்பொருளோடு கலந்து வைக்கப்பட்டதை அறிந்து, பிஜி லேபில் தானாக செய்து ப்ரெசிபிடேட்டை தேர்வு நடக்கும்போது என்னிடம் கொண்டுவந்து கொடுத்த தைரியசாலி! தன் வேலையையே பணயம் வைத்து மாணவனுக்கு உதவிய அந்த நேர்மையும் துணிவும் அவர் கற்றுத் தந்தது.


9. ஆங்கிலப் பேராசிரியர்

பட்டப் பெயரே மனதில் பதிந்து போனதில் பெயர் மறந்துபோன இன்னொரு உன்னதன். இவரிடம் ஆங்கிலமும் இலக்கியமும் கற்றதைவிட உயர்வான வேறொரு விஷயத்தை கற்றேன்.

காதல்!

மனைவியை எப்படி நேசிப்பது என்பதை!

நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது அவர் மனைவி இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அந்தப் பதினைந்து ஆண்டுகளும் வெண்ணிற ஆடை தவிர வேறு ஏதும் அணிந்ததில்லை! அவர் அட்டைக் கரி நிறத்துக்குப் பொருந்தாத அந்த பிடிவாத உடைக் காரணத்தை தனித்து மடக்கிக் கேட்டதில், யாருக்கும் தெரியாத அந்த ரகசியக் காரணம் தெரிந்தது. அந்த முரட்டுப் பனிமலை உருகி உடைந்து கண்கள் கசியச் சொன்ன காதல் கதை அத்தனை உயர் ரகம்


10. ஞானதேசிகன்

இன்னொரு ஆங்கில விரிவுரையாளர். ஆண் பெண் உறவு பற்றிய மகத்தான தெளிவை சொல்லிக் கொடுத்தவர். கல்லூரியில் படித்த அவர் மகள் எனக்கு நெருக்கமான தோழியானபோது, அந்தக் கால வழக்கம்போல (இன்னுமே அதுதான் நிலை என்பது வேறு விஷயம்) என்னை அண்ணா என்று கூப்பிட, அவர் கொடுத்த அறிவுரை அபாரமானது.

ஆணும் பெண்ணும் காதலர்களாகவோ அண்ணன் தங்கையாகவோதான் இருந்தாகவேண்டும் என்பதில்லை. சாகும்வரை நட்போடும் தொடரமுடியும். செயற்கையாக உறவுமுறை வேண்டாம், தெளிவான நட்போடு பழகு!”

அவர் வீட்டு சமையலறை வரைக்கும் எனக்கு அனுமதி! கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது, பிள்ளையார்பட்டி போன அந்த மொத்தக் குடும்பம் மூன்றுபேரும் சாலை விபத்தில் பலியானது இறை என்ற கற்பிதத்தை கேள்விக்குறியாக்கிய கொடூர தருணம்.


11. ஞானசௌந்தரி

உள்ளூரில் இருந்த பெண்களுக்கு மட்டுமான கல்லூரியில் உயிரியல் பேராசிரியை. கல்லூரி பேச்சுப் போட்டியில் அப்துல் ரகுமானும் மு மேத்தாவும் இணைப்புப் பாலமாக, தொலைதொடர்பு எட்டாக் கனியான அந்தக் காலகட்டத்தில் நேரில் சந்திப்பது ஒன்று உரையாடலுக்கான வழி. ஶ்ரீவைகுண்டத்திலிருந்து வந்து கல்லூரி விடுதியில் தங்கிப் பணி புரிந்துவந்த அவருடனான நட்பு வார இறுதியில் விடுதியிலிருந்து வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுமளவு வளர்ந்தது. அம்மா வைக்கும் மீன் குழம்பில் அவருக்கு அத்தனை மையல்! கூடுதுறை ஆற்றங்கரை பிள்ளையார் எங்களை உற்றுப் பார்த்திருக்க, நள்ளிரவில் சலசலக்கும் காவிரியின் பாஷையை மொழிபெயர்த்துக்கொண்டிருப்போம் மீன் குழம்பு செரிக்கும்வரை!

அந்தி வானச் சிவப்பு, பாலத்தில் ஓடும் குதிரை வண்டி சத்தம், சுழித்தோடும் நீரின் குளுமை அப்துல் ரகுமானின் உவமை, நா காமராசனின் சந்தம் என்று அவரின் ரசனை எல்லைகள் விஸ்தீரமானவை!

மொட்டை மாடியில் பாய்விரித்து நட்சத்திரங்களோடு கதை பேசி எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் கழிந்த சனி, ஞாயிறு இரவுகள் அத்தனை ஒளிமயம்!

கலரயாணம் முடிந்து வேலையை ராஜினாமா செய்து போகும்போது கையைப் பிடித்துக் கதறி அழுத சௌந்தரி அக்கா கால ஓட்ட இட மாறுதல்களில் நான் தவறவிட்ட இன்னொரு முத்து!


12. ராஐமாணிக்கம் - பெரியப்பா

வேலூர், நாமக்கல் மாவட்டங்களில் பெண்களின் கல்வி மேம்பட்டதில் இவரது பங்கு அசாத்தியமானது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய எந்தப் பள்ளியிலும் மாணவிகளின் இடைநிற்றல் இல்லாது பார்த்துக்கொண்ட அக்கறை, வீடுவீடாகச் சென்று பெண் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் சொல்லி, மாணவிகளின் விழுக்காடு மாணவர்களுக்கு நிகராக உயர்த்தியது, பள்ளியில் ஆளில்லா பண்டகசாலை என இவரைப்பற்றி சொல்ல ஏராளம். இன்றுவரை உறுதியான இறை மறுப்பாளர், தூய தமிழ் விரும்பி. எங்கள் குடும்பத்தின் பெருமைமிக்க முன்னேர்!

கடைசியாக,


ஆசிரியர் சுப்பிரமணியம் - அப்பா

இறுதிவரை எனக்கு ஏதாவது சொல்லிக்கொடுக்க முயன்று தோற்றுப்போன ஆத்மா. தீவிர இறை மறுப்பாளர்- திருக்குறளை படிக்கவைத்து திருமணம் செய்துகொண்டு என் பொருட்டு கொள்கையை தளர்த்திக்கொண்ட பாசக்காரர். வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு தனி தட்டு விவாதப்பொருளாகும் இன்றைய காலகட்டத்துக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, அன்றைய மனிதர்கள் சுத்தம் செய்யும் கழிவறையை சுத்திகரிக்க வருபவரை வீட்டுக்குள் உட்காரவைத்து காஃபி கொடுப்பதோடு, அவரை அண்ணா என்றழைத்து உரையாட ஊக்குவித்த உண்மையான சமத்துவவாதி!

என் எல்லா சோதனை முயற்சிகளும் அவர் இருக்கிறார் என்ற முரட்டு தைரியத்தின் விளைவு. என்னைக் கடைசிவரை காத்துநின்ற காவல் அரண்! அரசு உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர். மாவட்ட அளவிலான டென்னிஸ் சேம்பியன், சட்டென்று முடிவெடுத்த கணத்தில் அரசு வேலையை உதறி மேல்சபை பட்டதாரிகள் தொகுதி வேட்பாளரான தைரியசாலி! அபாரமான அரசியல் தொடர்புகளை சுயநலத்துக்கு உபயோகித்துக்கொள்ளாத கொள்கைத் தெளிவு!

கடைசி மூச்சுவரை என் நலனுக்காக உருகிய அன்புச் சுடர்!

என்னைப்பற்றி நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரே விஷயம், ஆசிரியர் சுப்பிரமணியம் மகன் என்பதும், வாழ்க்கைப் பயணம் முழுக்க அற்புதமான ஆசிரியப் பெருமக்களோடு உறவாட ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதும்தான்!